மல்லிகை ஜீவாவின் வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் --- அங்கம் 08 மல்லிகையின் சன்மானம் பெற்ற இளம்படைப்பாளி ! புலம்பெயர்ந்து ஓடியவர்கள் காகக்கூட்டமா..? முருகபூபதிமல்லிகை தொடங்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து,  ஜீவா அதனை தொடர்ந்து நடத்துவதற்கு பல்வேறு சிரமங்களை அனுபவித்தார்.

 

பொருளாதார ரீதியில் அவர் பட்ட கஷ்டங்கள் பற்றி, பல சந்தர்ப்பங்களில் பேசியும் எழுதியும் வந்தவர்.  தொடக்கத்தில் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூபாலசிங்கம், அ. வயித்திலிங்கம், ஐ. ஆர். அரியரத்தினம் முதலான இடதுசாரி தோழர்களும் பின்னாளில் பல  கலை, இலக்கியவாதிகளும் மல்லிகைக்கு நன்கொடை வழங்கினார்கள்.

 

ஜீவா தனது நன்றியை வெளிப்படுத்தும்வகையில்


மணிக்கரங்கள் என்ற பக்கத்தில், நன்கொடை தந்தவர்களின் பெயர்களையும் குறிப்பிடுவதற்கு தவறுவதில்லை.

 

ஒருசமயம் ஜீவா யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்கச்சென்றபோது,  அந்த வார்டிலிருந்த மற்றும் ஒரு நோயாளி அன்பர், ஜீவாவை தமது அருகில் அழைத்து, தனது தலைமாட்டிலிருந்த தனது பேர்ஸை எடுத்து, அதிலிருந்து சிறிது பணம் கொடுத்து,                        “ இதனை மல்லிகைக்கு வைத்துக்கொள்ளுங்கள்  “ என்று சொல்லியிருக்கிறார்.

 

 “ நீங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நிலையிலும் மல்லிகைக்கு உதவ முன்வந்தமை என்னை நெகிழச்செய்கிறது. இப்போது வேண்டாம். முதலில் நீங்கள் உடல் நலம்தேறி வாருங்கள் . அதன்பிறகு பெற்றுக்கொள்கிறேன்  “ எனச்சொல்லியிருக்கிறார்.

 

அதற்கு அவர்,  “ நாளை என்பது நிச்சயமில்லை. பெற்றுக்கொள்ளுங்கள்  “ என்று கூறி பணத்தை ஜீவாவின் கையில் திணித்துள்ளார்.

 

இதுஇவ்விதமிருக்க, கொழும்பு புறக்கோட்டையில்  ஓரியண்டல் சிகையலங்கார நிலையத்திற்கு ( இதன் உரிமையாளர் எஸ். வீ. தம்பையா பின்னாளில் ஜீவாவின் சம்பந்தியானவர்.  )  அருகில் அமைந்திருக்கும் கோல்டன் கஃபே ஊழியர்களும் பணம் சேகரித்து மல்லிகைக்கு வழங்கியிருக்கிறார்கள்.


 

மல்லிகைக்கு தரப்படும் நன்கொடைகள் மல்லிகை இதழ்களில் மணிக்கரங்கள் பக்கத்தில் தவறாமல் இடம்பெறும்.

 

இவ்வாறு பல கலை, இலக்கிய ஆர்வலர்களின் நன்கொடைகளுடன் வளர்ந்த மல்லிகை இதழ், அதில் எழுதும் படைப்பாளிகளுக்கு  என்றைக்குமே  சன்மானம் வழங்கியதில்லை.  அவ்வாறு வழங்கும் நிலைக்கு அதன் பணபலமும் அதிகரிக்கவில்லை.

 

அவ்வாறிருந்தும் ஜீவா ஒரு இளம் எழுத்தாளருக்கு ஐம்பது ரூபா சன்மானம் வழங்கியிருக்கிறார் என்ற ஆச்சரியமூட்டும் தகவல், ஜீவா மறைந்தபின்னர்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 1980 களில் மாணவியாகவிருந்த செல்வி கலாநிதி என்பவர், அங்கே பேராசிரியர்கள் மௌனகுரு, சித்திரலேகா மௌனகுரு ஆகியோரின் தூண்டுதலினால் அவ்வப்போது மல்லிகைக்கு எழுதிவந்துள்ளார்.

 


அவரைத்  தொடர்ந்தும் எழுதவைப்பதற்காக பேராசிரியை சித்திரலேகா, “  தொடர்ந்து எழுது, மல்லிகை ஆசிரியர் உனக்கு சன்மானம் தருவார்  “  என்று  வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறார்.

 

அதனையும் நம்பிக்கொண்டு அந்த மாணவி, தனது சகதோழிகளிடம் சொல்லியிருக்கிறார்.

 

அவர்களும், அந்த மாணவியை ஊக்கப்படுத்தி  “ எழுது… எழுது… கிடைக்கும் சன்மானத்தில் எமக்கு ஐஸ்கிறீம் வாங்கித்தா  “ என்று  சொல்லியிருக்கின்றனர்.

 

ஒருநாள், யாழ். பல்கலைக்கழகத்திற்கு மல்லிகை விநியோகிக்க வந்துள்ள ஜீவா, மாணவி செல்வி கலாநிதியை தேடிக்கண்டுபிடித்து, அவரது படைப்பு வெளியான மல்லிகை இதழையும் கொடுத்துவிட்டு,   “  நன்றாக எழுதுகிறீர்.  தொடர்ந்து  எழுதும். உமது எழுத்துக்கு இதோ என்னால் தரக்கூடிய சன்மானம் என்று சொல்லிவிட்டு, ஐம்பது ரூபாவை வழங்கியுள்ளார்.

 

இந்த அரிய தகவலை, அண்மையில் சுவிஸ் மானுடம் வாசகர் வட்டம் நடத்திய ஜீவா நினைவேந்தல் இணையவழி காணொளி அரங்கில் அன்று செல்வி கலாநிதியாகவிருந்த  திருமதி கலாநிதி ஜீவகுமாரன்  டென்மார்க்கில் இருந்து உரையாற்றும்போது  நன்றியோடு நினைவுபடுத்தினார்.

 

புலம்பெயர்ந்து ஓடியவர்கள் காகக்கூட்டமா..?

 

 “ யு.கே.க்குப்போக யூ.ரி.ஏ ஏறாமல்
ஏ.கே. தூக்கி இறந்தவர்கள் எத்தனைபேர்…..? 
இங்கே பற்பலர் பேசிக்களித்தனர்
எம்நாடு எரிகையில் ஓடிப்பறந்தனர்
சங்கமாடிய தமிழ் எனப்பேசிய
தம்பிமார் எல்லாம் கடலைக் கடந்தனர்  “

இந்தக்கவிதையை எழுதியவர் யார்..? என்பது வாசகர்களுக்கு நினைவுக்கு வருகிறதா..?

இதனை எழுதியவர் மார்க்ஸீயம்பேசிய  செ. கணேசலிங்கனின்  குமரன் இதழ்களில் வரதபாக்கியான் என்ற புனைபெயரிலும் எழுதியவரும் -  பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில்  இணைந்து அதன் ஆதர்ச கவிஞராகவும் விளங்கிய புதுவை இரத்தினதுரை.

இவ்வாறு புலம்பெயர்ந்து சென்றவர்கள் பற்றி எழுதிய புதுவை இரத்தினதுரையும் சமாதான காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் நடத்திய நிகழ்ச்சிகளுக்குச்சென்று திரும்பியவர்தான்.

பின்னாளில் அவரது ஒரே மகளும்  ஐரோப்பிய நாடொன்றுக்கு புலம்பெயர்ந்து செல்லநேரிட்டது.  

மல்லிகை ஜீவாவும் ஒரு சந்தர்ப்பத்தில் தூண்டில் கேள்வி – பதில் பகுதியில் ஒரு வாசகரின் கேள்விக்கு பதில் சொல்லியிருந்தார்.

கேள்வி: யாருக்காக நீங்கள் பச்சாதாபப்படுவதுண்டு..?

ஜீவாவின் பதில்: பிரச்சினைகளுக்குப் பயந்து பிறந்த நாட்டையும் வாழ்ந்த வீட்டையும் இனசனங்களையும் விட்டுப் பிறதேசம் ஓடும் காகக்கூட்டத்தைப்பற்றி நினைத்துத்தான் நான் அடிக்கடி பச்சாதாபப்படுவதுண்டு.

இந்தக்கேள்வி – பதில் ஒருபுறம் இருக்கட்டும்.

ஜீவாவின் இரண்டாவது மகள் பிரேமலதா, தான் மணம்முடிக்கவிருந்தவரிடம் சென்று சேர்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து  ஜெர்மனிக்குப் புறப்பட்டார். ஜீவா மகளை அழைத்துக்கொண்டு கொழும்பு வந்தார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ஜீவாவையும் மகளையும் வரவேற்று அழைத்துவருவதற்கு நண்பர் மேமன்கவி வாகனத்துடன் வந்தார்.

அன்று மாலை, அவர்கள் இருவரையும் நான் அழைத்துக்கொண்டு எமது நீர்கொழும்பூருக்கு வந்து எமது வீட்டில் தங்கவைத்து உபசரித்துவிட்டு, மறுநாள் விமான நிலையத்தில்  மகளை வழியனுப்பினோம்.

அந்த மகள் விமானம் ஏறுமுன்னர்,  “ அப்பா… நீங்கள்  உங்கள் சொந்த பந்தங்களை அதிகம் நேசிக்காமல், எழுத்தாளர்களுடன்தான் அதிகமாக நட்புறவு கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு எங்கள் குடும்பங்களில் இருக்கிறது. ஆனால், ரயில் நிலையத்திற்கு வந்த மேமன் கவியும், நீர்கொழும்புக்கு அழைத்துவந்து தங்கவைத்து உபசரித்து வழியனுப்பும் முருகபூபதியும் எமது சொந்த பந்தங்கள் இல்லை. ஜீவாவின் மகள் என்றவுடன் இவர்கள் ஓடிவந்து உதவியதைப்பார்த்து சிலிர்த்துப்போனேன் அப்பா. இதுதானப்பா நீங்கள் எமக்குத் தேடித்தந்த சொத்து! “  எனச்சொன்னார்.

 பின்னாளில்,  ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலக்கியவாதிகளினால்  நடத்தப்பட்ட  இலக்கியச்சந்திப்பு ஒன்றுகூடலுக்குச்  சென்று திரும்பிய ஜீவாவும்  முப்பெரும் நகரங்களில் முப்பது நாட்கள் என்னும் பயண இலக்கிய நூலை 2001 ஆம்  ஆண்டு  எழுதிவெளியிட்டார்.

அதன் முன்னுரையில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

 “ ஆரடா சொன்னது… தமிழ் இனி மெல்லச்சாகுமென்று… நிமிர்ந்து… நிமிர்ந்து… நிமிர்ந்து பார் ! உலகம் பூராவும் ஐந்து கண்டங்களிலும் நம்மவன் !  தமிழ்தான்  அவன் சிந்தனை. அங்கு தமிழை விதைப்பதற்கு என்னைப்போன்றவனை அழைத்து விழா எடுக்கிறான். தனது மூல ஆணிவேரான பண்பாடு மொழிபற்றி அவனுக்கு எந்தவிதமான தடுமாற்றமுமில்லை.  அவனைக்கடந்து இருப்பவர்கள்தான் அவனுடைய பரம்பரையின் எதிர்காலம்பற்றி இங்கிருந்து கவலைப்படுகின்றனர்.  நான் கவலைப்படவேயில்லை.  “

முன்பு புலம்பெயர்ந்தவர்களை காகக்கூட்டம் என்று வர்ணித்த ஜீவா, பின்னாளில்   வழங்கிய  வாக்குமூலம்தான் இது.  

ஜீவா மறைந்தபின்னர், அவரது நினைவுகளை பகிர்ந்துகொள்ளும்  இணையவழி நினைவேந்தல் காணொளி நிகழ்வுகள் புகலிட நாடுகளில் தொடருகின்றன.

( தொடரும் ) 

No comments: