காணாமல் போனோருக்காக யாழ் வந்து போராட்டம்
பசிலுக்கு ஆதரவளிக்க தயாராகும் சுமந்திரன்
சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டத்துக்கு 17 நாட்கள்...
பங்களாதேஷில் பிரதமர் மஹிந்தவுக்கு மகத்தான செங்கம்பள வரவேற்பு
காணாமல் போனோருக்காக யாழ் வந்து போராட்டம்
நீதி கேட்டு கண்டி டீமன் ஆனந்த போர்க்கொடி
யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்கா முன்றலில் கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் குறிப்பாக வடக்கில் பல இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
கடத்தல்கள், படுகொலைகள் என்பவற்றில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களை ஜெனிவாவிலும் சமர்ப்பிக்க உள்ளேன்.
கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத்தன்மை எதிர்கால இளைய சமுதாயத்திற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமலாக்கப்பட்ட உறவுகள் சில காலங்களில் இறந்து விடுவார்கள். ஆனால் எதிர்கால சந்ததியினருக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள், எதற்காக அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு படுகொலைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது பாராளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
அவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார். மேலும் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு நீதி வேண்டும். எனினும் நான் தமிழ் மக்களுக்கு எதிராக இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் உண்மை விடயம் தொடர்பில் சரியான தெளிவுபடுத்தல் வேண்டும் என்பதற்காகவே நான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். இந்த போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் என நினைக்காதீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படுகொலைகள் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளதாகவும் அதனை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்காக அவரை சந்திப்பதற்கு கோரியிருந்த போதிலும் இன்றுவரை எனக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். நன்றி தினகரன்
பசிலுக்கு ஆதரவளிக்க தயாராகும் சுமந்திரன்
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க உறுதியளிக்க வேண்டுமாம்
TNA பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் அதிரடி
"2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த தெளிவான வேலைத்திட்டம் இருந்தது.
அதேபோல் சஜித்துடன் பேச்சுகளை நடத்தியவேளை வடக்கு, கிழக்கு மக்களின் பிரதான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதனால் அவரை ஆதரித்தோம். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் வெற்றிபெறவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து நாம் பேச்சுகளை நடத்தியிருந்தோம்.
இதன்போது உங்களால் மட்டுமே தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை நான் நேரடியாகக் குறிப்பிட்டிருந்தேன்.
ஏனெனில், சிங்கள மக்கள் எதிர்க்காத ஒரே தலைவர் என்ற காரணத்தால் அவர் எடுக்கும் தீர்மானங்கள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாது. நான் கூறியதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டபோதும், இன்னமும் தீர்வுகளை வழங்க அவர் முன்வரவில்லை" - என்றார். நன்றி தினகரன்
சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டத்துக்கு 17 நாட்கள்...
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 17வது நாளாக நேற்றும் தொடர்கின்றது.
நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் - நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். நன்றி தினகரன்
பங்களாதேஷில் பிரதமர் மஹிந்தவுக்கு மகத்தான செங்கம்பள வரவேற்பு
பிரதமர் ஹசீனா விமான நிலையம் வந்து வரவேற்றார்
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயமாக நேற்று(19) முற்பகல் பங்களாதேஷ் பயணித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு, பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் திருமதி ஷெய்க் ஹசீனாவினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இராணுவத்தினரின் கௌரவ அணிவகுப்பும் பிரதமரை வரவேற்கும் முகமாக நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷெய்க் ஹசீனா , வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பங்களாதேஷ் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிமுகப்படுத்தியதுடன், இலங்கை பிரதமரினால் இலங்கை தூதுக்குழுவினர் அந்நாட்டு பிரதமருக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை பங்களாதேஷ் நோக்கி பயணமானார்.
பிரதமர் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் யூஎல் 189 ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பங்களாதேஷ் சென்றடைந்தனர்.
இந்த இரண்டு உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது பிரதமர், பங்களாதேஷ் குடியரசின் 'தேசத்தின் தந்தை'யாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்து கொள்ளவுள்ளார். பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்ட 'முஜிப் ஆண்டு' தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிற்பகல் சிறப்புரையாற்றினார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இவ்விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி முஹமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment