உலகச் செய்திகள்

அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி பற்றி உலக சுகாதார அமைப்பு ஆய்வு

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை நெதர்லாந்தும் இடைநிறுத்தியது

வைரஸ் உருமாற்றங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு

அமெரிக்க புதிய நிர்வாகத்திற்கு வட கொரியா கடும் எச்சரிக்கை

மியன்மாருக்குள் நுழைய அனுமதி கோருகிறது ஐ.நா

அமெரிக்க மசாஜ் நிலையங்களில் துப்பாக்கிச் சூடு: எண்மர் பலி

புட்டினுக்கு பைடன் எச்சரிக்கை: ரஷ்ய - அமெ. உறவில் முறுகல்

அஸ்ட்ராசெனக்கா மருந்தின் பயன்பாடு மீண்டும் ஆரம்பம்

ஆங் சான் சூச்சி மீது புதிய குற்றச்சாட்டு


அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி பற்றி உலக சுகாதார அமைப்பு ஆய்வு

ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தை பல ஐரோப்பிய நாடுகளும் இடைநிறுத்திய நிலையில் உலக சுகாதார அமைப்பின் தடுப்பு மருந்து பாதுகாப்பு நிபுணர்கள் அது பற்றி மீளாய்வு செய்ய நேற்று கூடினர்.

இந்த தடுப்பூசியை பெற்றவர்களிடம் இரத்தம் உறையும் சம்பவங்கள் ஐரோப்பாவில் பதிவான நிலையிலேயே இதன் பாதுகாப்புப் பற்றி அச்சம் அதிகரித்துள்ளது.

எனினும் இந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே எதிர்பார்க்கப்படுவதை விடவும் குறைவான அளவிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் பிரிட்டன் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம் குறிப்பிட்டுள்ளன.

இது பற்றி பேசுவதற்கு ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் நேற்றுக் கூடியது. அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்து பற்றி தமது முடிவை அந்த நிறுவனம் வரும் வியாழக்கிழமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனில் சுமார் 17 மில்லியன் பேர் தடுப்பு மருந்தை பெற்ற நிலையில் 40 க்கும் குறையான இரத்தம் உறைவுச் சம்பவங்களே பதிவாகி இருப்பதாக அஸ்ட்ராசெக்கா நிறுவனம் கடந்த வாரம் கூறி இருந்தது.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதை இடை நிறுத்தியுள்ளன. இந்த வரிசையில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் புதிதாக இணைந்தன.

எனினும் பெல்ஜியம், போலந்து, செக் குடியரது மற்றும் உக்ரைன் அஸ்ட்ராசெனக்காவை பயன்படுத்துவதை தொடரப்போவதாக தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இரத்தம் உறைவு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறித்து கிடைக்கப் பெற்றுள்ள தரவுகள் மூலம் ஆய்வு செய்யப்படும் எனவும், ஐரோப்பிய மருத்துவ அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, தற்போதைக்கு தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த வேண்டியது இல்லை என தெரிவித்துள்ளது.

தற்போது கிடைக்கும் தடுப்பூசிகளில் அஸ்ட்ராசெனக்கா மிக மலிவானது. ஓர் ஊசியின் விலை 3 டொலர். ஏழை நாடுகளுக்கான கொவக்ஸ் திட்டத்துக்காக அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியே பெருமளவு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் அஸ்ட்ராசெனக்கா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், தெளிவான அரசியல் சான்றுகளின் அடிப்படையில் தங்களது மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மக்களின் பாதுகாப்பே முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ள அஸ்ட்ராசெனக்கா, அதனைக் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களது தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட 17 மில்லியன் மக்களின் தரவுகளை கவனமாக பரிசீலித்து வருவதாகவும், அவர்களின் வயது, பாலினம், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் ஆராய்ந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 15 பேருக்கு நரம்பில் இரத்தம் உறைதல் காணப்பட்டதாகவும், 22 பேருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், எதிர்பார்த்த நிகழ்வை விட இது மிகவும் குறைவு என்றும் கூறியுள்ளது. மேலும் ஏனைய தடுப்பூசிகளிலும் இதுபோன்ற சிக்கல் காணப்படுவதாகவும் அஸ்ட்ராசெனக்கா கூறியுள்ளது.  நன்றி தினகரன்  

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை நெதர்லாந்தும் இடைநிறுத்தியது

பக்க விளைவு பற்றிய அச்சம் காரணமாக ஒக்ஸ்போர்ட்–அஸ்ட்ராசெனகா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பயன்பாட்டை நெதர்லாந்தும் இடைநிறுத்தியுள்ளது.

இந்தத் தடுப்பூசிக்கும் இரத்தம் உறையும் பிரச்சினைக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பாவின் மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பு குறிப்பிட்டுள்ளன.

எனினும் முன்னெச்சரிக்கையாக இந்தத் தடுப்பூசி பயன்பாடு குறைந்தது மார்ச் 29 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக நெதர்லாந்து அரசு குறிப்பிட்டுள்ளது.

நோர்வேயில் இரத்த உறைவு பற்றிய செய்தி வெளியானதை அடுத்து அயர்லாந்தும் இவ்வாறான நடவடிக்கையை எடுத்தது.

இதில் நோர்வேயில் அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசிகளை அண்மையில் போட்டுக்கொண்ட மூன்று சுகாதார ஊழியர்கள் இரத்தப்போக்கு, இரத்த உறைவு, குறைந்த இரத்த பிளேட்லட் அணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தவிர, டென்மார்க், நோர்வே, பல்கேரியா, ஐஸ்லாந்து, கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் தாய்லாந்து நாடுகள் ஏற்கனவே அஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்து போடுவதை இடைநிறுத்தியது. இத்தாலி மற்றும் ஆஸ்திரியா உட்பட மேலும் சில ஐரோப்பிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு மருந்தின் ஒருசில வகைகளை பயன்படுத்துவதை இடைநிறுத்தியது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனில் சுமார் 17 மில்லியன் பேர் தடுப்பு மருந்து பெற்றிருக்கும் நிலையில் 40க்கும் குறைவான இரத்த உறைவு சம்வங்களே பதிவாகி இருப்பதாக அஸ்ட்ராசெனகா தெரிவித்துள்ளது.

இரத்த உறைவு சம்பவங்கள் தொடர்பில் மீளாய்வு செய்திருக்கும் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம், தடுப்பு மருந்தை தொடர்ந்து வழங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களில் இந்த இரத்த உறைவு சம்பவங்கள் சாதாரண பொதுமக்களிடம் காணப்படும் எண்ணிக்கையை விடவும் அதிகமாக இல்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்தால் இரத்தம் உறையும் சம்பவம் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று பிரிட்டன் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் நிறுவனமும் குறிப்பிட்டுள்ளது. மக்கள் தடுப்பு மருந்தை போட்டுக்கொள்ளும்படியும் அது வலியுறுத்தியுள்ளது.  நன்றி தினகரன் 
வைரஸ் உருமாற்றங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு

உலகம் முழுவதும் கொவிட்–19 வைரஸ், புதிய புதிய வகையில் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வைரஸின் புதிய உருமாற்றத்தைக் கண்காணிக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருவதாக அந்த அமைப்பு கூறியது. தொற்று நோய் இயல் கண்காணிப்பு, பரிசோதனை முறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளன.

உலக அளவில் வைரஸின் உருமாற்றத்தைத் தெரிந்து கொள்ள பிராந்திய அளவிலான அலுவலகங்களுடன் பணியாற்றி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போதுள்ள தடுப்பூசிகள் புதிய வகை வைரஸை முறியடிக்கும் ஆற்றல் கொண்டவையா என்பதை விஞ்ஞானிகள் மும்முரமாய் ஆராய்ந்து வருகின்றனர்.   நன்றி தினகரன் 


அமெரிக்க புதிய நிர்வாகத்திற்கு வட கொரியா கடும் எச்சரிக்கை

வட கொரியா, தனது பக்கத்து நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தற்போது நடத்தப்படும் கூட்டு இராணுவப் பயிற்சி குறித்து பியோங்யாங் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வட கொரிய அணுவாயுத முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் ஆசியப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் அந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் புதிய நிர்வாகம் அமைதியை விரும்பினால், தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்ப வேண்டாம் என்று வட கொரியத் தலைவரின் சகோதரி கிம் யோ ஜோங் கூறியுள்ளார். இரு கொரியாக்களின் எல்லையில் பதற்றத்தைக் குறைப்பதற்காக, இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உடன்பாட்டை ரத்துசெய்யப் போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். வட கொரியாவைத் தொடர்பு கொள்ள முயன்றதாவும், ஆனால் அங்கிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜென் சாக்கி முன்னர் கூறியிருந்தார்.    நன்றி தினகரன் 


மியன்மாருக்குள் நுழைய அனுமதி கோருகிறது ஐ.நா

ஐக்கிய நாடுகள் சபை தனது சிறப்புத் தூதர் ஒருவரை மியன்மாருக்குள் அனுமதிக்கும்படி அந்நாட்டு இராணுவத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மியன்மாரில் நிலவும் நெருக்கடியைத் தணித்து, பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்கி ஜனநாயகம் திரும்ப, அது உதவியாக இருக்கும் என்று ஐ.நா குறிப்பிட்டது.

மியன்மாரில் அதிகரித்து வரும் வன்முறையைக் கண்டு ஐ.நா தலைமைச் செயலாளர் அதிர்ச்சியுற்றதாக அவரது பேச்சாளர் கூறினார். கொலை, உரிய காரணமின்றி ஒருவரைத் தடுத்துவைத்தல், கைதிகள் சித்திரவதை செய்யப்படுதல் ஆகியவை பற்றி வெளிவரும் தகவல்களை அவர் சுட்டிக்காட்டினார்.

கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்படி பாதுகாப்புச் சபை விடுத்த வேண்டுகோளை, அப்பட்டமாக மீறும் செயல்கள் அவை என்று பேச்சாளர் கூறினார். இதற்கிடையே, யங்கூனில் உள்ள 32 சீனத் தொழிற்சாலைகள் கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து சீனா தனது குடிமக்களின் பாதுகாப்புக் குறித்து அக்கறை தெரிவித்துள்ளது.

2 ஊழியர்கள் காயமுற்றதோடு, 37 மில்லியன் டொலர் மதிப்பிலான நட்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களே அந்தத் தீவைப்புச் சம்பவங்களுக்குக் காரணம் என்று மியன்மாரிலுள்ள சீனத் தூதரகம் குற்றஞ்சாட்டியது.

இதேவேளை, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை 138 பேர் பலியாகி உள்ளனர் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

“ மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் முதலே அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இதுவரை மியன்மார் போராட்டத்தில் 138 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்ட்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து யங்கூன், மண்டேலா போன்ற பகுதிகளில் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது” என்று ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 

அமெரிக்க மசாஜ் நிலையங்களில் துப்பாக்கிச் சூடு: எண்மர் பலி

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் மூன்று வெவ்வேறு மசாஜ் நிலையங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு ஆசிய நாட்டு பெண்கள் உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் அட்லாண்டாவின் வடக்கு புறநகர் பகுதியில் இருந்து மசாஜ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர். மேலும் இரு நிலையங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் பலியாகினர்.

இந்த மூன்று தாக்குதல்களையும் நடத்திய சந்தேகத்தில் 21 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தத் தாக்குதலுக்கான பின்னணி பற்றி உறுதி செய்யப்படவில்லை.

கொரோனா தொற்றை பரப்புவதாக ஆசிய அமெரிக்கர்கள் மீதான வெறுப்புப் பிரசாரம் அண்மைய மாதங்களில் அமெரிக்காவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் ஆற்றிய உரை ஒன்றிலும் இந்த வெறுப்புப் பிரசாரங்களை கண்டித்திருந்தார். “ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிராக கொடிய வெறுப்புக் குற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. அவர்கள் தாக்குதல், தொந்தரவு, குற்றச்சாட்டு மற்றும் பழி சுமத்தலுக்கு முகம்கொடுக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.  நன்றி தினகரன் 

புட்டினுக்கு பைடன் எச்சரிக்கை: ரஷ்ய - அமெ. உறவில் முறுகல்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகக் கூறப்படுவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

பைடனுக்கு எதிராக ரஷ்யா, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களைத் தூண்டியதாக அமெரிக்க உளவுப் பிரிவின் அறிக்கை ஒன்று கூறியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யாவைத் தண்டிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்றும் பைடன் குறிப்பிட்டார்.

இதன்போது ரஷ்ய ஜனாதிபதியை கொலைகாரர் என்று பைடன் சாடி இருந்தார்.

டிரம்ப் நிர்வாகத்துடன் ஒப்பிடும்போது, பைடன் நிர்வாகத்தின் கீழ் ரஷ்யாவுடனான உறவுகள் மிகவும் மாறுபட்டிருக்கும் என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த உளவுப் பிரிவு அறிக்கை தவறானது என்று ரஷ்யா கூறியது. தன் மீதான குற்றச்சாட்டுகளையும் அது மறுத்தது. அவற்றுக்கு எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லை என அது குறிப்பிட்டது.

இதன் எதிரொலியாக அமெரிக்காவுக்கான தனது தூதர் அனடோலி அன்டனோவை ரஷ்யா திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவுடனான உறவுகளின் பின்னணியில் என்ன செய்ய வேண்டும் என்பதை பகுப்பாய்வு செய்யும் நோக்கத்துடன் ஆலோசனை நடத்துவதற்காக ரஷ்ய தூதர் மொஸ்கோவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறும்போது, “ரஷ்ய - அமெரிக்க உறவுகள் மேலும் மோசமடைவதற்கான பொறுப்பு அமெரிக்காவிடம்தான் முழுமையாக உள்ளது” என்றார்.

ஏற்கனவே ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு வி‌ஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி புட்டினுக்கும், அவரது நிர்வாகத்துக்கும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்சி நவால்னியை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.   நன்றி தினகரன் 

அஸ்ட்ராசெனக்கா மருந்தின் பயன்பாடு மீண்டும் ஆரம்பம்

ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்து 'பாதுகாப்பு மற்றும் செயல்திறன்' கொண்டது என ஐரோப்பிய மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம் உறுதி அளித்ததை அடுத்து ஐரோப்பாவின் முன்னணி நாடுகள் அந்த மருந்தை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

இந்த மருந்தினால் இரத்தம் உறையும் அச்சம் காரணமாக 13 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மருந்தை பயன்டுத்துவதை இடைநிறுத்திய நிலையிலேயே ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் இது பற்றி மீளாய்வு செய்தது.

உயிராபத்துக் கொண்ட இரத்தம் உறையும் சம்பவங்களுடன் இந்த கொரோனா தடுப்பு மருந்துக்கு தொடர்பு இல்லை என்று இதன்போது கண்டறியப்பட்டது. இந்த தடுப்பூசியை பயன்படுத்துவது பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிப்பட்ட நாடுகளே முடிவெடுக்க வேண்டி இருக்கும் நிலையில், இது பற்றி முடிவெடுக்க இன்னும் சில நாட்கள் எடுத்துக்கொள்வதாக சுவீடன் தெரிவித்தது.

இந்நிலையில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த தடுப்பூசியை மீண்டும் மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளில் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது தெளிவாகியிருப்பதால், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தை பயன்படுத்தும்படி உலக சுகாதார அமைப்பு நாடுகளைக் ஏற்கனவே கோட்டுக் கொண்டது.      நன்றி தினகரன் 
ஆங் சான் சூச்சி மீது புதிய குற்றச்சாட்டு

மியன்மாரில் இராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பதவி கவிழ்க்கப்பட்ட ஆளும் கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி கையூட்டு பெற்றதாகப் புதிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சொத்து மேம்பாட்டாளரான பிரபல தொழிலதிபர் மோங் வேக், சூச்சியிடம் சட்டவிரோதமாக அரை மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைக் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

அந்தப் பணத்தைக் கறுப்பு உறைகளில் வைத்து, சூச்சியிடம் அவரின் வீட்டில் கொடுத்ததாக மோங் கூறினார். ஒரு முறை 100,000 டொலரையும், 2019ஆம் ஆண்டில் வேறோரு முறை 150,000 டொலரையும் கொடுத்ததாக அவர் கூறினார்.

இந்த புதிய கையூட்டுக் குற்றச்சாட்டைத் தவிர்த்து, சூச்சி மீது சட்டவிரோதமாகத் தொலைத்தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்ததாகவும், வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதிகளை மீறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாடெங்கும் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

கடந்த புதனன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் மேலும் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் சுமார் 220 பேர் பலியாகியுள்ளனர்.

இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும்படி கோரி, மியன்மார் மீது பிராந்திய அளவிலான நெருக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   நன்றி தினகரன் 


No comments: