மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் குடும்ப குதூகல தினம் 2021 - பரமபுத்திரன்

 .





கடந்த 2017ம் ஆண்டு தொடக்கம் மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையம்  ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் தமிழ்ப்  பாடசாலைச்  சமூகம் ஒன்றுகூடி மகிழும் தினமாக குடும்ப குதூகல  தினம் நிகழ்வினைச்  செயற்படுத்தி வருகின்றனர். இந்நிகழ்வில் கல்வி நிலையச்  சமூகத்தினர் அனைவரும் இணைந்து உணவு உண்டு மகிழ்ந்து அதனைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளை நிகழ்த்துவர். அந்த வகையில் இந்த ஆண்டு 13/03/2021 சனிக்கிழமை பகல் 12 மணி முதல் 5 மணிவரை குடும்ப குதூகல தினத்தினைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.  


 



அன்றைய தினம் மாணவர்கள், நிர்வாகத்தினர், பெற்றோர்கள், ஆசிரியர்கள்  அனைவரும் மதியம் 12 மணியளவில் ‘கொலிற்ரன்’ அரச பள்ளியில் ‘கொரோனா’ தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்து ஒன்று கூடினர். அனைவரும் ஒன்றுகூடி மதிய உணவு அருந்தி மகிழ்ந்தனர். சமகால வேளையில் நிர்வாகத்தினரும் பெற்றோரும் ஒன்றிணைந்து விளையாட்டு நிகழ்வுகளுக்கான மைதானத்தையும் ஒழுங்கு செய்தனர். சரியாக 1.30 மணிக்கு மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் தொடங்கின.  

 






கல்வி நிலையத்தின்  நிர்வாகத்தலைவர் கில்பேட் தேவதாசன் அவர்களின் நெறிப்படுத்தலில் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. உபஅதிபர் கோலின்தேவராசா சதீஸ்கரன் அவர்கள் நிகழ்ச்சிநிரல், விளையாட்டு நிகழ்வுகளுக்கு தேவையான பொருட்கள் என்பவற்றை ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைத்திருந்தார். கல்வி நிலைய  நிர்வாக உறுப்பினர்கள் விளையாட்டுக்களை நாடாத்துவதற்காக வருகை தந்திருந்தார்கள். ஒவ்வொரு வகுப்பு ஆசிரியர்களும்  தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு விளையாட்டுகளைத் தெரிவுசெய்து பயிற்றுவித்து விளையாட்டு அரங்குக்கு அழைத்து வந்திருந்தனர்.  அதிபர் பாலசுப்பிரமணியம் முரளீதரன் அவர்கள்  விளையாட்டுக்களை  தொடக்கி வைத்தார். தொடர்ந்து அனைத்து விளையாட்டுகளினதும்  தொடக்குநராக அதிபர் அவர்களே செயல்பட்டார்.

 

 

மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளாக ஓட்டம், தடையோட்டம், முயற்பாய்ச்சல், மூன்றுகால் ஓட்டம், எழுத்து இனம் காணல், கோப்பை அடுக்குதல், சோடி இனம் காணல், பந்து தட்டி ஓடுதல், நீர் நிரப்பல், குளம் கரை, கேட்டுக் கிரகித்து விளையாடுதல், குறி நோக்கி எறிதல், பந்து சேகரித்தல், பலூன் உடைத்தல், நாயும் எலும்புத்துண்டும், அஞ்சலோட்டம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்குபற்றும் நிகழ்வுகளாக  கிளித்தட்டு, ஈருளி ஆறுதலாக ஓடுதல், உறி அடித்தல், யானைக்குக்  கண் வைத்தல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளும் நடைபெற்றன. இறுதியாக மாணவர்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கலுடன் நிகழ்வுகள் யாவும் முடிவுக்கு வந்தன. அனைவரும் மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் குடும்ப குதூகல  தினத்தினைக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


No comments: