மல்லிகை ஜீவாவின் மறைவில் இன்னுமொரு வரலாறு எழும் ! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகர் அனுதாபச் செய்தி


 “ சிறு வயதிலேயே தானும் தனது சமூகமும் முடக்கப்படுகிறோம் என தான் உணர்ந்த நாளில் இருந்து தான் இறக்கும் நாள் வரை ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் குரலாக ஒலித்தவர் 'மல்லிகை' இலக்கிய இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா. அன்னாரின் மறைவில் இருந்து இன்னுமொரு வரலாறு எழும்  “ என்று  எழுத்தாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் விடுத்திருக்கும்

அஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கிய உலகில் வலம் வந்த எழுத்தாளரும் இலக்கிய செயற்பாட்டாளருமான டொமினிக் ஜீவா தனது 94 வது வயதில் கடந்த வியாழன் அன்று கொழும்பில் காலமானார். அன்னாரின் மறைவை அடுத்து விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பிலேயே எம். திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“  ஜீவா என்றதும் ஈழத்து இலக்கிய பரப்பில் முதலில் நினைவுக்கு வரும் தோற்றம் அந்த வெள்ளைக் கதராடையும் வேட்டியும் அணிந்த கம்பீரத்தோற்றம். அவரது நடையில், உடையில், பேச்சில் என எல்லாவற்றிலும் ஒரு கர்வம் கலந்த கம்பீரம் இருந்து கொண்டே இருக்கும். 

இலக்கிய உலகில் சிறு சஞ்சிகைக்கு என தனி வரலாறு உண்டு. தொடங்கி இரண்டு மூன்று இதழ்களில் நின்று போவதுதான் அந்த வரலாறு. ஆனால்,  தான் தொடங்கிய               ' மல்லிகை' எனும் இலக்கிய இதழை பல ஆண்டுகாலம் வெளியிட்டு சாதனை படைத்தவர் டொமினிக் ஜீவா.

தனது சிறுகதைத்தொகுதிக்காக இலங்கை அரசின் சாகித்ய பரிசு முதல் சாகித்ய ரத்ன, தேசத்தின் கண் போன்ற விருதுகளை வென்றதுடன் கனடா இலக்கிய தோட்டத்தின் இயல் விருது வரை வென்று ஒடுக்கப்பட்டோர் என்று யாரையும் ஒதுக்கி வைக்க முடியாது,  போராடி முன் சென்றால் சாதியக் கட்டமைப்புகளை உடைத்து சமூகத்தில் முன் செல்லலாம் என சாதித்துக் காட்டிய சாதனையாளர் டொமினிக் ஜீவா. 

இவரது வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு நிச்சயமான ஒரு முன்னுதாரணமாக அமையும். சிறு வயதிலேயே தானும் தனது சமூகமும் முடக்கப்படுகிறோம் என தான் உணர்ந்த நாளில் இருந்து தான் இறக்கும் நாள் வரை ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் குரலாக ஒலித்தவர் இவர்.  அன்னாரின் மறைவில் இருந்து இன்னுமொரு வரலாறு நிச்சயம் எழும். 

தோழர் ஜீவாவுக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவிப்பதுடன் அவரது  பிரிவால் துயருற்று இருக்கும் அன்னாரது குடும்பத்தார், கலை இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”    எனவும்  திலகராஜ் தெரிவித்து உள்ளார்.


 

No comments: