வீதிக்கு இறங்க நேரிடும் - ராஜபக்ஷ அரசை எச்சரிக்கும் தேரர்


27/01/2021  கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க வீதிக்கிறங்கி போராடவும் தயார் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்துமைத் அவர்,

நல்லாட்சி அரசாங்கம் மக்களது ஆணைக்கு முரணாக செயற்பட்டதால் தான் ஜனநாயக ரீதியில் புறக்கணிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சி மீது நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளார்கள்.

மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும்.

தேசிய வளங்களை பிறநாட்டவர்களுக்கு தாரை வார்ப்பது தேசதுரோக செயற்பாடு என சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே அரசாங்கம் கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும்.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தைக் கொண்டு ஒரு தரப்பினர் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

கடந்த அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியபோது வீதிக்கிறங்கி போராடினோம். அப்போது இருந்த வலிமை தற்போதும் உள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கப்படுவதற்கு மகாசங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

பௌத்த மத தலைவர்களின் ஆலோசனைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும்.

அரசாங்கம் தவறான வழியில் செல்லும் போது நல்வழிப்படுத்தும் பொறுப்பு எமக்கு உண்டு என்றார்.   நன்றி  

No comments: