ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பைடன் முதல்முறை தொலைபேசி உரையாடல்
ட்ரம்ப் மீதான விசாரணைக்கு குடியரசு உறுப்பினர் எதிர்ப்பு
ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கு பிரிட்டனின் சிறப்பு 'விசா' அறிமுகம்
ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இணைய அமெரிக்கா நிபந்தனை
ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பைடன் முதல்முறை தொலைபேசி உரையாடல்
தேர்தல் தலையீடு பற்றி எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் முதல்முறை தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தேர்தல் தலையீடு பற்றி எச்சரிக்கை விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் தற்போது இடம்பெறும் எதிர்க்கட்சியனரின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமெரிக்கா–ரஷ்யாவுக்கு இடையே கடைசியாக எஞ்சியிருக்கும் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பிலும் இந்த உரையாடலில் பேசப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கும் ஜோ பைடனுக்கு புட்டின் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டதாக இந்த தொலைபேசி உரையாடல் பற்றி ரஷ்யா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தொடர்ந்தும் தொடர்புகளை முன்னெடுத்துச் செல்ல இருவரும் இணங்கியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவிக் காலத்தில் அவரது நிர்வாகம் ரஷ்யாவுக்கு எதிராக கடும் நிலைப்பாடுகளை எடுத்தபோதும் டிரம்ப் சிலநேரம் சுமுகமான போக்கையே கடைப்பிடித்து வந்தார். புட்டினை பாதுகாத்து பேசுவதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டன.
எனினும் ரஷ்ய எதிர்த்தரப்பு அரசியல்வாதி அலெக்சே நேவல்னி அண்மையில் கைதுசெய்யப்பட்டது குறித்து, பைடன் அக்கறை தெரிவித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
பெரிய அளவிலான இணைய ஊடுருவல் இயக்கத்தில் ரஷ்யாவின் ஈடுபாடு குறித்தும் பைடன், புட்டினுக்கு நெருக்குதல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அணுவாயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கை அடுத்த மாதம் காலாவதியாகும் முன்னர், அதனை நீடிப்பதற்கான பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதுவே அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கொண்டுள்ள கடைசி, ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையாக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துபேசினர்.
"எங்களுக்கு அல்லது எங்கள் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக செயல்படும் என்பதை ஜனாதிபதி பைடன் தெளிவுபடுத்தினார்" என்று அமெரிக்க அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பைடன் எழுப்பியதாக வெள்ளை மாளிகையால் குறிப்பிடப்பட்ட எந்த ஒரு விடயமும் கூறப்படவில்லை.
"ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதன் மூலம் இரு நாடுகளின் நலன்களையும் உறுதிசெய்வது குறித்தும், உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் இருநாடுகளுக்கும் உள்ள சிறப்பு பொறுப்பு குறித்தும் பேசினர்" என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி தினகரன்
ட்ரம்ப் மீதான விசாரணைக்கு குடியரசு உறுப்பினர் எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அந்நாட்டு செனட் சபையில் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விசாரணையை முன்னெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிட்டத்தட்ட அனைத்து குடியரசு கட்சி வேட்பாளர்களும் வாக்களித்துள்ளனர்.
எனினும் இந்தத் தீர்மானத்திற்கு 50 ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர்கள் மற்றும் ஐந்து குடியரசு கட்சியினர் ஆதவை வெளியிட்டதால் இந்த விசாரணையை நிறுத்தும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
எனினும் இந்தத் தீர்மானம் வெற்றிபெற தேவைப்படும் மூன்றில் இரண்டு வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு 17 குடியரசுக் கட்சியினரின் ஆதரவை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்க பாராளுமன்றக் கட்டத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்தது தொடர்பில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டியதாகவே அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையால் செனட் சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தில் தோல்வி அடைந்தால் ட்ரம்புக்கு எதிர்காலத்தில் அரச பதவிகளை வகிப்பதற்கு தடைவிதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கு பிரிட்டனின் சிறப்பு 'விசா' அறிமுகம்
300,000 மக்கள் வெளியேற வாய்ப்பு
ஹொங்கொங்கை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் புதிய திட்டத்தை பிரிட்டன் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவிருக்கும் நிலையில் அதனைக் கொண்டு சுமார் 300,000 பேர் வரை அந்த நகரை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹொங்கொங்கின் பிரிட்டன் நாட்டு கடவுச்சீட்டை கொண்டவர்கள் மற்றும் அவர்களின் நேரடி உறவினர்களுக்கு திறன்பேசி செயலி ஒன்றை பயன்படுத்தி பிரிட்டன் விசாவுக்கு விண்ணப்பிக்க வசதி செய்துகொடுக்கப்படவுள்ளது.
முன்னாள் பிரிட்டன் காலனியுடன் வரலாற்று பிணைப்பு மற்றும் நட்பை கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங்கில் சீனா புதிய பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்தே இந்த புதிய விசா நடைமுறை அறிவிக்கப்பட்டது.
இதனை உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்று சீனா முன்னதாக பிரிட்டனை எச்சரித்திருந்தது. இந்த விசாவை பெறுபவர்கள் ஐந்து ஆண்டுகளின் பின் பிரிட்டனில் குடியிருக்க விண்ணப்பிக்க முடியும் என்பதோடு மேலும் 12 மாதங்களில் அவர்களுக்கு பிரிட்டன் குடியுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி பிரிட்டனில் குடியேற 2.9 மில்லியன் பேர் மற்றும் அவர்களில் தங்கியிருக்கும் 2.3 மில்லியன் பேர் தகுதி பெறுவதோடு இந்த வாய்ப்பை சுமார் 300,000 பேர் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் காலனித்துவ பகுதியாக இருந்த ஹொங்கொங் 1997 ஆம் ஆண்டு சீனாவிடம் கையளிக்கப்பட்டது. நன்றி தினகரன்
ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இணைய அமெரிக்கா நிபந்தனை
அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் பின்பற்றினால் மட்டுமே, அந்த ஒப்பந்தத்தில் தங்கள் நாடு மீண்டும் இணையும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் கூறியதாவது:
அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ஜோ பைடன் தயாராக உள்ளார். ஆனால், அந்த ஒப்பந்த நிபந்தனைகள் அனைத்தையும் ஈரான் மீண்டும் பின்பற்றினால் மட்டுமே அமெரிக்காவும் மீண்டும் தனது பழைய நிலைப்பாட்டுக்கு வரும்.
தற்போதைய நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் பல நிபந்தனைகளிலிருந்து ஈரான் வெகுதொலைவு விலகிச் சென்றுள்ளது என்றார்.
2015 ஆம் ஆண்டு ஈரான் மற்றும் உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விலகிக் கொண்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளில் சிலவற்றை மீறி செயற்பட்டு வருகிறது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment