இரண்டு இலக்கிய போராளிகளுக்கு எமது அஞ்சலி - செ.பாஸ்கரன்


 


புதிய வருடத்தில் நெஞ்சு கனக்கும் படியான இரண்டு செய்திகள். இலக்கிய போராளிகள் இரண்டு பேருடைய இறப்புச் செய்திகள் தான் அந்த இரண்டு செய்திகளும். நீண்டகாலமாக தேனி என்ற இணையதளத்தை கொடுத்துக்கொண்டிருந்த நண்பர் ஜெமினி கங்காதரன் அவர்களுடைய இறப்பு அதைத் தொடர்ந்து வெளிவந்த முற்போக்கு இலக்கியவாதி, இலக்கிய ஆளுமை மல்லிகை பந்தல் தந்த டொமினிக் ஜீவா அவர்களுடைய இறப்புச்செய்தி வந்து சேர்கிறது.

ஜெமினி சமுதாய நலனுக்காக, பத்திரிகை சுதந்திரத்திற்காக ,காத்திரமான பங்களித்தவர்.  மாற்றுக்கருத்துக்கள் கூற நினைப்பவர்களுக்கு எழுத்து சுதந்திரத்தை கொடுத்து நன்மை தீமைகளை அலசி ஆராய களம் அமைத்துக் கொடுத்த தேனீ இணையத்தளம் நடத்தியவர்.கருத்துக்கள் முரண்பாடாக இருந்தாலும் அதை கருத்து முரண்பாடாக வே பார்க்கின்ற ஒரு மனிதர். தனிமனிதரோடு எந்த விதமான முரண்பாடும் இல்லை கருத்தோடுதான் முரண் படுகின்றேன் என்ற ஒரு மனிதன் அவர் இறந்துவிட்டார், இவ்வுலகை விட்டு சென்று விட்டார்.





அதைத்தொடர்ந்து 46 ஆண்டுகள் தனிமனிதனாக ஒரு இலக்கியச் சஞ்சிகையை

தந்த டொமினிக் ஜீவா அவர்கள். முற்போக்கு இலக்கியம் படைத்துக் கொண்டிருந்த ஒருவர். யாழ்பாணம் சாதித் தீண்டாமையில் மூழ்கடிக்கப்பட்டுக் கிடந்த காலத்தில் ஒரு புரட்சி போராளியாக, எழுத்து போராளியாக, இலக்கிய போராளியாக, சமூகப் புரட்சி புரிந்த ஒரு மனிதன். இவருடைய மல்லிகை பந்தல் எத்தனை எழுத்தாளர்களை உருவாக்கி இருக்கிறது. இன்று பிரபலமாக இருக்கும் பல எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது இந்த மல்லிகை பந்தல்.


எழுத்தாளர் தளையசிங்கம் அவர்கள் இறந்தபோது " ஒரு உலக எழுத்தாளனை கொன்றுவிடடார்கள்" என்று ஆவேசக் குரலில் ஜீவா அவர்கள் உரையாற்றியது இன்றும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.


இந்த இரண்டு எழுத்து போராளிகளுக்கும் எமது அஞ்சலிகள், துயரத்தால் வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலிய தமிழ்முரசின் ஆறுதல்கள்.


No comments: