இலங்கைச் செய்திகள்

கொவிட் தடுப்பூசி முதல் தொகுதி ஜனாதிபதியிடம் கையளிப்பு

கிழக்கு முனையம் தொடர்பில் நெருக்கடி; நாளை முதல் சட்டப்படி வேலை செய்ய தீர்மானம்

இந்துக் கோவிலை காணவில்லை பொலிஸில் புகார் செய்த ரவிகரன்

துறைமுக சேவைகள் அத்தியாவசியமானவை; வர்த்தமானி வெளியீடு

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி ஊடக அமைப்புக்கள் போராட்டம்

புதிய சட்டம் நடைமுறையில்; பழைய வழக்குகளை மீளப்பெறவும்


 கொவிட் தடுப்பூசி முதல் தொகுதி ஜனாதிபதியிடம் கையளிப்பு

கொவிட் தடுப்பூசி முதல் தொகுதி ஜனாதிபதியிடம் கையளிப்பு-India's COVID19 Vaccine Officially Hands Over to President Gotabaya Rajapaksa

- நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படும்
- பிடிக்காதவர்கள் எடுக்காதிருக்கலாம்

இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் முதல் தொகுதி, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் இன்று (28) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய, குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசி முதல் தொகுதி ஜனாதிபதியிடம் கையளிப்பு-India's COVID19 Vaccine Officially Hands Over to President Gotabaya Rajapaksa

இங்கிலாந்தின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்த்தினால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஷெனகா கொவிஷீல்ட் (AstraZeneca COVISHELD) தடுப்பூசியை, மும்பையில் உள்ள சீரம் நிறுவனம் (Serum Institute of India) உருவாக்கியுள்ளது.

குறித்த தடுப்பூசிகளின் 500,000 dose (டோஸ்) உடன் AI 281 எனும் இந்தியன் எயார்லைன்ஸ் விமானம், இன்று முற்பகல் 11.45 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

கொவிட் தடுப்பூசி முதல் தொகுதி ஜனாதிபதியிடம் கையளிப்பு-India's COVID19 Vaccine Officially Hands Over to President Gotabaya Rajapaksa

விமானத்தின் விசேட குளிரூட்டப்பட்ட சேமிப்பகத்தில் வைக்கப்பட்ட தடுப்பூசியின் நிறை 1,323 கிலோகிராமாகும். தடுப்பூசிகள் விமான நிலையத்திலுள்ள விசேட குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதிகளில் சேமித்துவைக்கப்பட்டு 25 மாவட்டங்களுக்கும், குளிரூட்டப்பட்ட வாகனங்களில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த தடுப்பூசிகள் 2-8 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் சேமிக்கப்படுகின்றன.

தடுப்பூசி வழங்கலானது, மேல் மாகாணத்தின் 6 முக்கிய வைத்தியசாலைகளில் நாளை (29) ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொவிட் தடுப்பூசி முதல் தொகுதி ஜனாதிபதியிடம் கையளிப்பு-India's COVID19 Vaccine Officially Hands Over to President Gotabaya Rajapaksa

முதலில், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நின்று செயற்படும், சுமார் 150,000 சுகாதாரப் பணியாளர்கள், 120,000 முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில், சீன அரசாங்கமும் 300,000 டோஸ் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக, கொவிட் தடுப்பூசி கொள்வனவு தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்தார். தடுப்பூசிகளை பெறுவதானது, தனிநபர்களின் சுயாதீனமான முடிவாகும். அதை விரும்பாதவர்கள் அதை எடுக்காதிருக்க முடியும் என்றும் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசி முதல் தொகுதி ஜனாதிபதியிடம் கையளிப்பு-India's COVID19 Vaccine Officially Hands Over to President Gotabaya Rajapaksa

தடுப்பூசிகளை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொள்ளும் நிகழ்வை குறிக்கும் வகையில் இந்திய உயர் ஸ்தானிகர், ஜனாதிபதிக்கு நினைவு பரிசொன்றையும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கொவிட் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேகப், விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி உள்ளிட்ட அதிகாரிகள், அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவின் பிரதானிகள் கலந்து கொண்டனர்.   நன்றி தினகரன் 

 



கிழக்கு முனையம் தொடர்பில் நெருக்கடி; நாளை முதல் சட்டப்படி வேலை செய்ய தீர்மானம்

- துறைமுக தொழிற்சங்க நடவடிக்கை

சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுப்பதற்கு துறைமுக தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடியை தீர்க்குமாறு வலியுறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு, துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஏற்படுத்திகொள்ளப்படவுள்ள உடன்படிக்கை தொடர்பான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் தீர்மானிப்பதற்காக கொழும்பு கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய சபை கூடியுள்ளது.

முனையத்தின் உரிமை 51 சதவீத மின்றி 100 சதவீதமாக இருக்க வேண்டுமென அந்த சபை இதன்போது தீர்மானித்துள்ளது.

அதேநேரம், கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய சபையின் கூட்டத்திற்கு முன்னர் 23 துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூடியதுடன் கிழக்கு முனையத்தின் உரிமையை 100 சதவீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் இல்லாவிடின் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 




இந்துக் கோவிலை காணவில்லை பொலிஸில் புகார் செய்த ரவிகரன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதோடு இந்துக் கோவிலை காணவில்லையென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை முறைப்பாடொன்றினைப் பதிவு செய்துள்ளார்.

அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் மீண்டும் அவ்விடத்தில் நிறுவவேண்டும் எனவும், தொடர்ந்தும் தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று தமது வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் ரவிகரன் குறித்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளார்.

மேலும் முறைப்பாடு தொடர்பில் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

முச்சூலம் உள்ளிட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலமாகவும், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அங்குள்ள மக்கள் மூலமாக எனக்கு தகவல் தரப்பட்டது.

அதேவேளை குருந்தூர் மலைக்கு வழிபாட்டுக்குச் செல்லும் தமிழ் மக்களும் அங்கு செல்லவிடாமல் தடுக்கப்படுகின்றனர் எனவும் என்னிடம் கோவில் நிவாகத்தினர் முறையிட்டிருந்தனர்

இந் நிலையில் மக்களின் இந்த முறைப்பாடுகளுக்கமைய குருந்தூர் மலை ஆதிசிவன், ஐயனார் கோவிலுக்கு நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டவர்களுடன் நானும், சில பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்களோடும் சென்றிருந்தோம்.

அப்போது மக்களால் முறையிடப்பட்டதைப் போலவே, அங்கு சென்ற எங்களையே அங்கிருந்த இராணுவத்தினர் மலைப் பகுதிக்குச் செல்லவிடாது தடுத்திருந்தனர். பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமாநாயக்க மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய நிலையில் குருந்தூர் மலைப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டோம்.

இதனைவிட ஆலய நிர்வாகத்தினர், ஊடகங்கள் வாயிலாக அறிந்ததைப் போலவே அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச் சின்னங்களும் அகற்றப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.

மாங்குளம் குறூப் நிருபர்  - நன்றி தினகரன் 





துறைமுக சேவைகள் அத்தியாவசியமானவை; வர்த்தமானி வெளியீடு

துறைமுக சேவைகள் அத்தியாவசியமானவை; வர்த்தமானி வெளியீடு-All the Ports Authority Services are Declared As Essential Services

துறைமுக அதிகார சபையின் கீழ் காணப்படும் அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி, அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கமைய, ஜனாதிபதி செயலகத்தினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கருத்துவேறுபாடுகள் எழுந்தள்ள நிலையில், துறைமுக ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடலாம் என்பதன் அடிப்படையில் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள உடன்படிக்கை தொடர்பான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி ஊடக அமைப்புக்கள் போராட்டம்

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

ஊடக அமைப்புக்கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பு காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.

உழைக்கும் ஊடக தொழிற்சங்க சம்மேளனம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆகியவை இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர், உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, ‘காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும்’, ‘சர்வதேசமே பதில்சொல்’, ‘காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியளாளர் எங்கே?’, ‘படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடு’ போன்ற கோசங்களை எழுப்பி நீதி கோரினர்.  நன்றி தினகரன் 




புதிய சட்டம் நடைமுறையில்; பழைய வழக்குகளை மீளப்பெறவும்

புதிய சட்டம் நடைமுறையில்; பழைய வழக்குகளை மீளப்பெறவும்-Gama Samaga Pilisandara 8th Programme-Thanamalwila-President Order to Withdraw Old Cases

- ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு ...

-“கிராமத்துடன் உரையாடலில்” அடையாளம் காணப்பட்ட சிக்கலற்ற 17,000 காணி உறுதிகளுக்கு ஜனாதிபதி கையொப்பம்....
- கிராமப்புற பிரச்சினைகளை தீர்ப்பதில் மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகளுடனும் மக்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் ...
- ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு நிவர்த்திக்கப்படும்...
- ஏழு தசாப்த கால மக்கள் கனவுகளை நிறைவேற்றும் வகையில் கும்புக்கன் ஓயா திட்டம் ஆரம்பம் ...

பாரம்பரியமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலங்களை விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக பயிரிட அனுமதிக்கும் புதிய சட்ட திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் பழைய சுற்றறிக்கைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மீளப் பெறுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

புதிய சட்டம் நடைமுறையில்; பழைய வழக்குகளை மீளப்பெறவும்-Gama Samaga Pilisandara 8th Programme-Thanamalwila-President Order to Withdraw Old Cases

'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியின் போது பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து வரும் கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு, மக்களின் நலனுக்காக புதிய சட்டங்களை வகுக்க நடவடிக்கை எடுக்குமாறு வனவிலங்கு, வன பாதுகாப்பு, சுற்றாடல் மற்றும் காணி உள்ளிட்ட அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். தற்போதுள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு புதிய சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக அரச நிறுவனங்களுடன் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிக்கல்கள் தீர்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட 17,000 காணி உறுதிகளில் தான் கையெழுத்திட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய சட்டம் நடைமுறையில்; பழைய வழக்குகளை மீளப்பெறவும்-Gama Samaga Pilisandara 8th Programme-Thanamalwila-President Order to Withdraw Old Cases

நேற்று (30) மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில, அலுத்வெவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் குக்குல்கட்டுவ குளக்கரை வளாகத்தில் நடைபெற்ற எட்டாவது 'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை மற்றும்  களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.

புதிய சட்டம் நடைமுறையில்; பழைய வழக்குகளை மீளப்பெறவும்-Gama Samaga Pilisandara 8th Programme-Thanamalwila-President Order to Withdraw Old Cases

“கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் பங்கேற்க தனமல்விலவுக்குச் சென்ற ஜனாதிபதி, கொட்டவெஹர மங்கட மகா வித்யாலய வளாகத்தில் கூடியிருந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராமவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

மாணவர்களின் வேண்டுகோளின் பேரில் கொட்டவெஹர மங்கட மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகளை நாளைய தினமே (31) ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி இராணுவத்திற்கு பணிப்புரை விடுத்தார். கல்லூரியின் கேட்போர்கூடத்தை அமைப்பது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

மொனராகலை நகரத்திலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள அலுத்வெவ கிராமம் எட்டாவது "கிராமத்துடன் உரையாடல்" நிகழ்ச்சித்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டது. அலுத்வெவ கிராமம் கொட்டவெஹர மங்கட, வெல்லவாய, ஹம்பேகமுவ, வலவே கங்க மற்றும் கண்டியபிட வெவ ஆகிய கிராமங்களின் எல்லையில் உள்ளது. தலுக்கல, கொரட்டுவெவ, கிளிம்புண்ண, மில்லகல, தஹய்யாகல, நேபடபெலெஸ்ஸ மற்றும் பொகுனுதென்ன அலுத்வெவ கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்டதாகும். 790 குடும்பங்களைக் கொண்ட அலுத்வெவ கிராமத்தின் மக்கள் தொகை 2794 ஆகும். உடவலவை தேசிய பூங்காவுக்கு அண்மித்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் வேட்டை மற்றும் சேனைப் பயிர்ச்செய்கைக்காக இடம்பெயர்ந்ததால் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அலுத்வெவ ஒரு குடியேற்றமாக மாறியது. நெல் மற்றும் சேனைப் பயிர்ச்செய்கை இக்கிராமத்தில் உள்ள பலரின் முக்கிய வாழ்வாதாரமாகும்.

கிராமப்புற பிரச்சினைகளை தீர்ப்பதில் மக்களின் கருத்துகளும் பரிந்துரைகளும் முன்னுரிமை பெறுகின்றன. அதற்காக மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகளுடனும் கிராமப்புற மக்களுடனும் இணைந்து கிராமத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டின் பல பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறை இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வாக, குறித்த பாடசாலைகளுக்கு ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

தனமல்வில வலயக் கல்வி அலுவலகத்தை நிர்மாணிப்பதற்கான நிதி ஏற்பாடுகளை வழங்குவதற்கான பொறுப்பு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலிடம் ஒப்படைக்கப்பட்டது.

செவனகல, ஒக்கம்பிட்டிய, ஹம்பேகமுவ மற்றும் கொட்டவெஹர மங்கட பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கும், அலுத்வெவ மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முறையான வசதிகளுடன் ஒரு கல்வி மையத்தை நிறுவவும் முடிவு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

புதிய சட்டம் நடைமுறையில்; பழைய வழக்குகளை மீளப்பெறவும்-Gama Samaga Pilisandara 8th Programme-Thanamalwila-President Order to Withdraw Old Cases

மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அலுத்வெவ, கிளிம்புன்ன, கலுதொட்ட, கொட்டவெஹர மங்கட மற்றும் அலுத்வெவ வரையிலான வீதிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிறிய வீதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

அலுத்வெவ மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீரின் தேவை மற்றும் அதை விரைவாக நிவர்த்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 1952 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட ஆனால் இதுவரை செயற்படுத்தப்படாத கும்புக்கன் ஓயா திட்டத்திற்கான திட்டப் பணிகளை விரைவாக நிறைவுசெய்து, இந்த ஆண்டு பணிகளை ஆரம்பித்து துரித  அபிவிருத்தித் திட்டமாக நிறைவுசெய்யவும் நீர் வழங்கல் அமைச்சுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெஹரகல வெவ திட்டம் மற்றும் செவனகலை சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இப்பகுதியின் இயற்கை நீர் மூலங்களை சரியாக அடையாளம் கண்டு குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய அவசரத் தேவையை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஆர்.ஓ சுத்திகரிப்பு ஆலை மற்றும் குழாய் நீர் மூலம் அலுத்வெவ உள்ளிட்ட பல கிராமங்களுக்கு குடிநீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குக்குல்கட்டுவ குளம் உள்ளிட்ட 10 குளங்களை விவசாய நடவடிக்கைகளுக்காக புனரமைக்குமாறு மக்கள் முன்வைத்த கோரிக்கையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கிராமவாசிகளின் வேண்டுகோளின் பேரில், ஹம்பேகமுவ மருத்துவமனையில் சிறுவர் மற்றும் மகப்பேற்று சிகிச்சை நிலையமொன்றை நிறுவ சுகாதாரச் செயலாளர் ஜனாதிபதியுடன் இணக்கம் தெரிவித்தார். தனமல்வில மற்றும் மொனராகலை பகுதிகளை உள்ளடக்கி மாதத்திற்கு ஒரு முறையாவது ஒரு விசேட மனநல மருத்துவரின் மருத்துவ சேவையை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

ஹம்பேகமுவ பிரதேச மருத்துவமனை, மொனராகலை, தனமல்வில மற்றும் வெல்லவாய மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்டு செயலற்றிருக்கும் மாவட்டத்தில் உள்ள அனைத்து யானை வேலிகளையும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. போதாகம குள பாதுகாக்கப்பட்ட வனத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து விரைவான கள ஆய்வொன்றை மேற்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும், எந்தவொரு குள பாதுகாக்கப்பட்ட வன இருப்புக்களிலும் அங்கீகரிக்கப்படாத நிர்மாணப் பணிகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விவசாய நடவடிக்கைகளில் தரமற்ற களைக்கொல்லிகளைப் பயன்படுத்துவது குறித்து உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா டெலிகொம், மொபிடெல் நிறுவனம் அலுத்வெவ கணிஷ்ட வித்தியாலயம் மற்றும் செவனகல மகாநாக கல்லூரிகளில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு அன்பளிப்பு செய்த கணினிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் டயலொக் நிறுவனம் அன்பளிப்பு செய்த கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளை ரத்தம்பலாகல கணிஷ்ட வித்தியாலயம், ஹம்பேகமுவை மகா வித்தியாலய அதிபர்களிடம் ஜனாதிபதி கையளித்தார்.

குறைந்த வருமானம் பெறும் 100,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையில் பயிற்சி பெற்ற மூன்று பேருக்கு இதன் போது நியமனம் வழங்கப்பட்டது.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மில், இராஜாங்க அமைச்சர்கள் சஷிந்திர ராஜபக்ஷ, விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஷ்பகுமாரா, குமாரசிறி ரத்நாயக்க, தயஷான் நவநந்தன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜி. ஜயசேன, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.   நன்றி தினகரன் 





No comments: