வரலாறாக திகழும் இலக்கியக்குரல் மல்லிகை ஜீவா ---- முருகபூபதியாழ்ப்பாணத்தில் ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பிறந்திருக்கும் டொமினிக் ஜீவா,  மல்லிகை எனும் கலை, இலக்கிய மாத இதழை 1966 ஆம் ஆண்டுமுதல், 2012  ஆம் ஆண்டு வரையில்  வெளியிட்டார். அதன் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருந்து சுயமுயற்சியோடு  அதனை வெளியிடத்தொடங்கியதும்,  மல்லிகை ஜீவா என பரவலாக அறியப்பட்டார்.

அவரது இந்த நாமம் இலங்கையெங்கும் மட்டுமல்ல தமிழகத்தில் இலக்கியவாதிகள் மத்தியிலும் பரவியிருந்தது.

சாதாரண மத்திய தரக்குடும்பத்தில் பிறந்து,  உயர்கல்வியை பெறுவதற்கும் வாய்ப்பு வசதிகளை இழந்து,  அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே  படிக்காத மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா,   இம்மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் புறநகரமான மட்டக்குளியவில் காக்கை தீவில் ஏகபுதல்வன் திலீபனின் இல்லத்தில் தமது 93 வயதில் மறைந்தார். 

இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பின் நூறுவயதையும் எட்டியிருப்பார். 

ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளரகவே இலக்கிய உலகில் பிரவேசித்தவர். அவரது முதலாவது கதைத்தொகுதி தண்ணீரும்  கண்ணீரும். 

அதற்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்தது. அதுவே இலங்கையில் தமிழில் தேசிய மட்டத்தில்   இலக்கியத்திற்காக அவ்வாறு கிடைத்த முதல்விருதுமாகும்!

 

விருதை  வாங்கிக்கொண்டு  யாழ்ப்பாணத்துக்கு  ரயிலில்              திரும்பிவருகிறார்.  ஊர்மக்கள்  அச்சமயம்  யாழ்ப்பாண               மேயராக  பதவியிலிருந்த  துரைராஜாவின்   தலைமையில்    மாலை   அணிவித்து  அவரை  வரவேற்றனர்.


யாழ்ப்பாணம் கஸ்தூரியார்  வீதியில்  தந்தையாரின்  ஜோசப்சலூனை                         கவனித்துக்கொண்டே இலக்கியப்பிரதிகளும் எழுதினார். 

புத்தகக்கடை  பூபாலசிங்கமும்  ராஜகோபல்  என்ற  அன்பரும்  அவருக்கு  வாசிக்கும்                  ஆர்வத்தை  தூண்டியதுடன்                  சிறந்த  நூல்களையும் படிக்கக்கொடுத்தனர்.


கம்யூனிஸ்ட்  கட்சியிலும்    அங்கத்துவம்    பெற்றிருந்தார்.                      அடிநிலை      மக்களுக்காக நடத்தப்பட்ட பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.       


தண்ணீரும்  கண்ணீரும்   கதைத்தொகுப்பைத் தொடர்ந்தும் சிறுகதைகள் எழுதிய ஜீவா, பின்னர்   பாதுகை,   சாலையின் திருப்பம்,  வாழ்வின் தரிசனம்    முதலான   தொகுதிகளையும்   மேலும்  சில                    நூல்களையும்  இலக்கிய    உலகிற்கு   வரவாக்கியவர்.


சாலையின்   திருப்பம்   தொகுதிக்கு அவரது   நீண்ட கால நண்பர் ஜெயகாந்தன் முன்னுரை   எழுதியிருக்கிறார்.   தமிழகத்தின்   சரஸ்வதி (1958), தாமரை (1968) முதலான    இதழ்களும்    ஜீவாவின்   உருவப்படத்தை   அட்டையில்   பிரசுரித்து   அவரைப்பற்றி    எழுதி    கௌரவித்திருக்கின்றன.   குமுதம்    இலவச   இணைப்பாக   ஜீவாவின்                                   அனுபவமுத்திரைகள்   கட்டுரைகளை   மறுபிரசுரம்   செய்து  விநியோகித்திருக்கிறது.


 ஒரு   சிறுகதை    எழுத்தாளன்,    பெரிய   பொருளாதார   வசதிகளோ,  உயர்ந்த கல்விப்பின்புலமோ   இல்லாமல்   தொடர்ச்சியாக   45  ஆண்டுகளுக்கும்  மேலாக  மல்லிகை   இலக்கிய   இதழை   நடத்தியிருக்கிறார்  என்ற   சாதனையும்   இன்று காலம்   கடந்த   செய்திதான்.

 

 இலங்கை   நாடாளுமன்றத்தில்    விதந்து   பேசப்பட்ட   இலக்கியவாதியான  டொமினிக் ஜீவாவுக்கு   அந்தப்பெருமையை   பெற்றுக்கொடுத்ததும்                 அவரது அயராத முயற்சியினால்   வெளியாகிக்கொண்டிருந்த    மல்லிகைதான்.

யாழ்குடாநாட்டுக்குள்ளிருந்து முதலிலும் போர் நெருக்கடி தொடங்கிய 1990 இற்குப்பின்னர் கொழும்பிலிருந்தும் வெளியான அவரது மல்லிகை இதழில் இலங்கையின் அனைத்துப்பிரதேச எழுத்தாளர்கள் மட்டுமன்றி, தமிழகத்திலிருந்தும் புகலிட நாடுகளிலுமிருந்தும் பலர் எழுதினார்கள். 


  மாதாந்தம்   மல்லிகையை   வெளியிட்டவாறே                                         ‘மல்லிகைப்பந்தல்’   பதிப்பகத்தின் மூலம்   பல  படைப்பாளிகளின்   படைப்புகளையும்                                   நூலுருவாக்கி   விநியோகித்தார். அத்துடன் சில பிரதேச சிறப்பிதழ்களையும் வெளிக்கொணர்ந்து மண்வாசனை இலக்கியத்திற்கும்  வளம்சேர்ப்பித்தார்.

இலங்கையில் கலை, இலக்கியவாதிகளையும் இலக்கிய விமர்சகர்களாகத்திகழ்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்களையும் ஆழமாக நேசித்து அவர்களது ஆக்கங்களுக்கும் சிறந்த களம் வழங்கினார்.  அத்துடன் தமிழ்நாட்டில்  கண்ணதாசன், ஜெயகாந்தன்,  சிட்டி சுந்தரராஜன், ,  சிவபாதசுந்தரம்,  சுந்தா  சுந்தரலிங்கம்,  மேத்தா,  இன்குலாப், திலகவதி,  சிவகாமி,   ராஜம்கிருஷ்ணன்,   ரகுநாதன்,                     பாலகுமாரன்,  சு. சமுத்திரம், அக்கினி  புத்திரன்,  செ. யோகநாதன்,  பொன்னீலன்,   கண.முத்தையா,   அகிலன்  கண்ணன்,   ரங்கநாதன்,   நர்மதா  ராமலிங்கம்,   குணசேகரன்,                அறந்தை  நாராயணன்,  தி.க. சிவசங்கரன்,   பொன்னீலன்,               ஆ. குருசாமி ,  சலமன் பாப்பையா,  வைரமுத்து,   மீரா, மேத்தாதாஸன்,   இளம்பிறை                ரஹ்மான்,                                  கம்யூனிஸ்ட்  கட்சித்தலைவர்கள் தா. பாண்டியன், மகேந்திரன்,    நல்லகண்ணு,  உட்பட  பலருடன் நட்பையும் பேணியவர். 

மல்லிகை    இலங்கை மற்றும் புகலிட   தமிழக  எழுத்தாளர்கள் பலரது உருவப்படங்களையும் அட்டையில்   பதிவுசெய்து   அவர்களைப்பற்றிய   ஆக்கங்களையும் பிரசுரித்துவந்தது.  இதுவும்   பெறுமதிமிக்க   இலக்கியப்பணிதான்.


 தமிழக   படைப்பாளிகள்   ஜெயகாந்தன்,   சிதம்பர ரகுநாதன்,   தி;.க.சிவசங்கரன்,   வல்லிக்கண்ணன்,                              நீலபத்மநாபன்,   பேராசிரியர் நா.வானமாமலை,   பா.செயப்பிரகாசம்,   கவிஞர் அறிவுமதி,   ஓவியர்   மருது,   சுதந்திர போராட்ட   தியாகி சிந்துபூந்துறை   அண்ணாச்சி   சண்முகம் பிள்ளை, ஏ.ஏ. ஹெச். கே. கோரி  மற்றும்  வெளிநாடுகளில்  வாழும்  அ.முத்துலிங்கம்                 கவிஞர்  அம்பி ,  வவுனியூர் இரா  உதயணன்  பத்மநாப ஐயர் ,   கவிஞர் சேரன் ,   நிலக்கிளி  பாலமனோகரன் ,  க.பாலேந்திரா ,  எஸ்.பொ.   வ.ஐ.ச.ஜெயபாலன் , சுதாராஜ் ,      இளைய  அப்துல்லாஹ் ,  முருகபூபதி  ஆகியோரின்   உருவப்படங்களையும்                            அவர்களைப்பற்றிய   ஏனைய   எழுத்தாளர்கள்   எழுதிய                     ஆக்கங்களையும்  மல்லிகை கடந்த   காலங்களில்   பிரசுரித்து   அவர்களின் கலை, இலக்கிய, சமூகப்   பணிகளை   கௌரவித்திருக்கிறது.


குறிப்பிட்ட     அட்டைப்படக்கட்டுரைகளும்   பின்னர்                       தனித்தனி தொகுப்புகளாக மல்லிகைப்பந்தல்   வெளியீடுகளாக   நூலுருப்பெற்றன. அவை:-

       அட்டைப்பட   ஓவியங்கள் (1986)

       மல்லிகை   முகங்கள்    (1996)

       அட்டைப்படங்கள்        (2002)

       முன்முகங்கள்          (2007)

காலம்காலமாக மல்லிகையுடனும் ஜீவாவுடனும்    முரண்பட்டவர்கள்   கூட  மல்லிகையின்                அட்டைப்படங்களிலும் உள்ளடக்கத்திலும்    இடம்பெற்றுள்ளனர்.

 இந்தப்பண்பு   இலங்கை   இலக்கிய   உலகத்திற்கு மட்டுமல்ல தமிழகத்து இலக்கியவாதிகளுக்கும்    முன்னுதாரணமாகும். தனிப்பட்ட   விருப்பு   வெறுப்புகளுக்கு  அப்பால்                              இலக்கியவாதிகள்  இயங்கவேண்டும் என்பதற்கும்   மல்லிகை ஜீவா   முன்னுதாரணமாகியிருந்தார்.


இலங்கை   அரசின்   அதியுயர்   விருதான  சாகித்திய ரத்னா,    தேசத்தின் கண் விருதுகளும் கனடா இலக்கியத்தோட்டத்தின்  இயல்விருதும்  பெற்றவர். 


 ஜீவாவின்   சிறுகதைகள்   ஆங்கில,   சிங்கள   மொழிகளிலும்   பெயர்க்கப்பட்டுள்ளன.   இவரது   பல   கதைகளின் சிங்களமொழிபெயர்ப்பு   பத்ரே பிரசூத்திய.   (மொழிபெயர்த்தவர் இப்னு அஸுமத்)


 ஜீவாவின்    வாழ்க்கை   வரலாற்று   நூல்    எழுதப்படாத                        கவிதைக்கு வரையப்படாத சித்திரம்.    இதனை

Undrawn   Portrait   for  Unwritten   Poetry  என்ற   தலைப்பில் ஆங்கிலத்தில்   மொழிபெயர்த்தவர்    அவுஸ்திரேலியாவில்                  வதியும்  எழுத்தாளர் நல்லைக்குமரன் க. குமாரசாமி.

சோவியத்நாட்டுக்கும் பிரான்ஸ், ஜெர்மனி, லண்டனுக்கும் சென்று அங்கிருக்கும் கலை, இலக்கியவாதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டவர். 

2012இற்குப்பின்னர்    மல்லிகையின்  வரவு  தடைப்பட்டுவிட்டது 

மல்லிகை ஜீவா எழுத்தாளர், இதழாசிரியர், சமூகப்போராளி, முதலான அடையாளங்களுடன் மறையவில்லை.  வரலாறாகவே வாழ்ந்துகொண்டிருப்பார் !

letchumananm@gmail.com
No comments: