சாதுரிய மாகநாமும் வாழ்வில் உயரச் சத்தியமே எமைக்காக்துத் தருமே வெற்றி!

               


 ...........பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்.



வானிலொளி பரப்பத்தினம் கதிரவன் உதிப்பான்!

   வயதான அவன்வாழ்வில் ஒளியே இல்லை

மேனியிலே ஆடையில்லை! மானங் காக்கும்

   மிகக்கிழிந்த பழுப்புநிறக் கந்தல் துண்டு!

ஏனின்னும் வாழ்கின்றேன் என்று தின மேங்கி

   இறைவனையே துதித்தவண்ணம் வீதி யோரம்

கூனிநின்று வாய்பொத்திப் பிச்சை ஏற்கக்

   கொண்டபொருள் ஒன்றேதான் தகர 'டப்பா'!


வழமைபோல வீதியெலாம் சுற்றிச் சுற்றி

   வந்தகளைப்(பு) ஆறிடவோர் சாலை ஓரம்

நிழலைமட்டும் தந்தஎழில் மரத்தின்  அடியில்

   நீட்டியகை யுடனமர்ந்து பகற்கனாக் கண்டான்!

மழமழவென்(று) அப்பாதை செல்வோரக்(கு); அவனின்

   வறுமைநிலை கண்களிலே தோற்ற வில்லை!

'இளமுருகா! இன்றும்நான் வெறும்வயிற் றுடனே

   இங்கேதான் தூங்குவதா? என்றழுத வேளை...


பார்த்தவர்கள் மயங்கிடுமோர் தோற்றம் கொண்ட 

   பருவத்து மேல்நாட்டுப் பாவை ஒருத்தி    

வேர்த்தபடி மரத்தின்மேற் சாய்ந்தி ருந்து

   விழிபிதுங்க ஏங்குமவன் தோற்றம் ஈர்க்கக்

கூர்ந்தவனைப் பார்த்திரக்கம் கொண்டே மெல்லக்   

   குதியுயர்ந்த பாதணிகள் தாளம்; போட 

வார்த்தையேதும் பேசாது அருகே மெல்ல

   வந்துநின்று பையதனைத் திறந்தே அவளும்....


புதுக்காசின் மணம்வீசும் மூன்று நூறு

   புத்தம்புதுத் தாள்களைத்தன் கையால் எடுத்தாள்

எதுக்கிந்தப் பெண்தனக்கு அருகில் வந்தாள்

   என்றவளை நோக்குமுன்னர் சற்றே குனிந்து

'இதுவுனக்கே' என்றந்த 'டப்பா' விற்குள்

   இட்டாளே மெதுவாக இடும்போ தவளை

வதுவைசெய்தோன் விரலிலிட்ட வைரமோ திரமோ

   வழுவிக் காசுடன் 'டப்பா' தனில்விழுந் ததம்மா!



கண்டிராத பெரும்புதையல் கண்டவன் போலக்

   கரங்கூப்பி நன்றியொடு அவளைப் பார்த்து

'பெண்ணேயேன் இவ்வளவு பணத்தைத் தந்தாய்?

   பெரும்பேறு பெற்றேனே நல்லாய் இருப்பாய்

எண்ணியென் பக்கம்வந்து பணமும் தந்த

   இன்னரிய உன்மனது யார்க்கு வருமோ?

மண்ணினிலே உன்போன்றோர் வாழ்வ தாலே

   மனிதகுலம் அழியாது நிலைக்கு' தென்றான்



நீரெப்போ வற்றிவிட்ட நிலையிலும் அவன்விழி

   நீர்சொரியக் கைகூப்பி வணக்கஞ் செய்து

'யார் அம்மா நீபெரிய மனது வைத்தாய்

   நல்லபெருந் தொகைபணத்தை  ஏனோ தந்தாய்!

பேர் தன்னைக் கூறாயோ?' என்றவன் வினவப்

   பேதையவள் மனமகிழ்ந்து 'பிறேமா' என்றாள்

'ஊரில்வாழ் ஏழைகட்கு அளித்தாற் செல்வம்

   உருண்டுமீண்டும் அவர்க்குவரும்' என்று சிரித்தாள்.



'பணிமனைக்கு இவ்வழியே தினமும் செல்வேன்

   பார்த்துனக்கு உதவிசெய மீண்டும் வருவேன்

அணிவதற்கு உடுப்பதனை இன்று வாங்கி

   அழுக்கடைந்த கந்தல்தனைக் கழை'யென அவளும்

மணிமொழியாற் சொல்லிவிடை பெற்ற போது

   மகிழ்ந்தவனும் மாதவளை நோக்கி நின்று

'தணியாத பசிபோக்கத் தந்தாய்; உதவி

   தாயேநீ யோர்மனித தெய்வம் ' என்றான்


'சாவையெதிர் பார்த்துநாளைக் கழித்தோ னுக்குச்

   சரியான நேரமதில் இறைவன் அருளால்

தேவைக்குப் போதியபணம் கிடைத்த தாலே

   திருப்தியுடன் காசையெண்ணி எடுத்த போது

பூவையர்கள் அணியுமொரு மோதிரம் கண்டான்

   புதுத்தாள்கள் தனையெடுத்து 'டப்பா' விற்குள்

பாவையவள் போடுகையில் நழுவி விழவே

   பார்க்காது போய்விட்டாள் எனவுறுதி செய்தான்


விடைகொடுத்த மறுகணமே அவளும் மறைந்தாள்

   விட்டுவிட்ட மோதிரத்தைத் துணியிற் சுற்றி

இடைதனிலே விழாதபடி செருகி வைத்தான்

   எங்கதற்குள் சென்றாளோ என்றே எங்கும்

கடைகடையாய்த் தேடியோடிக் காணா தேங்கிக்

   கால்சோர அருகிருந்த கடையிற் புதிய

உடையொன்றைப் பெற்றணிந்தான்!  உணவைத் தேடி

   ஒருகடையிற் பசியாற உண்டு மகிழ்ந்தான்!


பேதலிக்கும் அவன்மனதிற் சலனம் தோன்றப்

   பெரியதொரு நகைக்கடையைத் தேடி அந்த 

மாதவளின் மோதிரத்தின் விலையை அறிந்தான்

   மதித்தவனும் 'ஐயாயிரம் தரவா' என்றான்

'மீதநாளைக் கழிப்பதற்கு இந்தப் பணமே

   மிகநல்ல மூலதனம் சரி! தா' என்று

ஆதங்கத் துடன்பணத்தைப் பெற விழைந்து

   ஆசையுடன் இருகையை நீட்டும் போது....


பெண் 'பிரேமா' பேசியநல் வார்த்தை யோடு

   பெருமனத்தோ டவள்செய்த தருமச் செயலும்

கண்களின்முன் தோன்றியவன் மனதை உறுத்தக்

   கணநேரச் சலனமெங்கோ மறைந்த தம்மா!

எண்ணமதை மாற்றியவன் மோதி ரத்தை

   எடுத்துக்கொண் டெங்கெல்லாம் அலைந்த லைந்தபின்

வண்ணமயில் 'பிரேமா'வோர்  பணி மனையின்

   வாசல்வழி வரக்கண்;டு மகிழ்ச்சி யுற்றான்.


நேராக அவளைத்தன் அருகில் அழைத்து

   'நீயெனக்குப் பிச்சையிட்ட போது நீயெதிர்

பாராதுன் மோதிரமும் நழுவி எனது 

   பாத்திரத்தில் விழுந்;ததம்மா! எடுத்தே அதைநான்

ஆராத ஆசையுடன் விற்கப் பார்த்தேன்!

   அற்பனெனை மன்னித்திதை ஏற்பாய்' என்றான்.

தீராத பேராசை தனைவிட் டுயர்ந்தோன்

   செம்மைமனம் உண்மைசொன்ன திறத்தை வியந்தாள்!

 








இரவெல்லாம் தூங்காது முகநூல் மூலம்

   இந்நிகழ்ச்சி தனைவிரிவாய்ப் பகிர்ந்தே உதவி

தரக்கோரிப் பணவுதவி கேட்டாள் அதுவோ

   தரணியெலாம் பரவியதால்; கோரிக் கைக்குச்

சிரமமின்றிப் பலலட்சம் சேர்ந்த தம்மா!

   சேர்ந்;தபணம் அத்தனையும் சேர்த்துப் பிரேமா

பரந்தமனத் தோடந்தப் பிச்சைக் காரன்

   படுத்துறங்க வீடொன்றை வாங்கிக் கொடுத்தாள்!.


சூதுவாது தெரியாதோர் அன்பு நெஞ்சில்

   துணைநின்று காப்பவனும் இறைவன்; அன்றோ?

போதுமென்ற பொன்மனந்தான் சிறப்பே என்று

   புரிந்தவனின் வாழ்க்கையென்றும் அமைதிப் பூங்கா!

ஏதுமின்றி வீதியோரம் பிச்சை எடுத்தும்

   என்றுமுண்மை பேசிடுவோர் பெறுவர் நன்மை!

சாதுரிய மாகநாமும் வாழ்வில் உயரச் 

   சத்தியமே எமைக்காக்துத் தருமே வெற்றி!  


--------------------------------------------------------------------------

பின் குறிப்பு -  ஆங்கில அறிஞர் ஒருவரின் 

கதை தந்த கருப்பொருளின் விரிவாக்கம். 

 

No comments: