“தைப்பூசம்” விசேஷமாக கொண்டாடப்படுவதற்கு காரணம் என்ன? நல்ல காரியங்கள் தொடங்கலாமா? சாஸ்த்திரம் கூறும் உண்மைகள்

தை மாதம் பிறந்து விட்டாலே வரிசையாக தெய்வ வழிபாட்டிற்கு உரிய நாட்களும் வந்து பக்தி பரவசத்தை ஏற்படுத்தும். அந்த வரிசையில் வியாழக்கிழமை இன்று பூச நட்சத்திரத்தில் முருகனுக்கு விசேஷ வழிபாடுகள் செய்யப்படும். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் இந்த தைப்பூசம் அனைத்து முருகன் கோவில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

நாள் முழுவதும் பூச நட்சத்திரம் இருப்பதால் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடுகள் செய்தால் வறுமை நீங்கி செல்வமும், வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். இந்த நாளில் குரு பகவானையும், சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுவது விசேஷம்.

மேலும் இறைவன் ஒளி வடிவில் இருக்கிறார் என்பதை உணர்த்திய மற்றும் மக்களின் பசி தீர்க்க இன்றும் அவர் பெயரில் அன்னதானம் நடந்து கொண்டிருக்கும் ஜீவ ஜோதியில் இரண்டர கலந்த வள்ளலார் பெருமானையும் தைப்பூசத்தில் வணங்குபவர்களுக்கு, அவர் பெயரை சொல்லி உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்வதும் நோயற்ற, வறுமை இல்லாத ஆரோக்கியமான வாழ்வை தரும்.

தைப்பூசம் விசேஷமாக கொண்டாடப்படுவதற்கு என்ன காரணம்? சிவ பார்வதியின் மகனாக பிறந்த முருகன் வைகாசி விசாகத்தன்று தோன்றியதால் அந்த நாளை வைகாசி விசாகம் என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆறுமுகனாக பிறந்த முருகன் ஆறு ரூபங்களையும், ஒரே ரூபமாகிய கார்த்திகை திருநாள் கார்த்திகை தீபம் என்றும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

அது போல் அன்னையிடம் வேலை வாங்கி வேல்முருகனாக நின்ற தைப்பூசம் வெகுவிமரிசையாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐப்பசி சஷ்டியில் அந்த வேலைக் கொண்டு அசுரர்களை அழித்தார். இதனால் வேல் வழிபாடு செய்வது நம் துன்பங்கள் எல்லாம் நீங்கி, எதிர்மறை ஆற்றல்கள் ஒழிந்து நல்வாழ்வு கிடைக்க செய்யும் என்று நம்பப்படுகிறது. வள்ளியை திருமணம் புரிந்த பங்குனி உத்திரமும் முருகனுக்கு விசேஷமான நாளாகும்.

பார்வதி தேவியிடம் முருகன் வேல் வாங்கிய நாள் தான் தைப்பூசம். இந்த நாளில் கோவில்களுக்கு சென்று காவடி எடுப்பது, பால்குடம் தூக்குவது, தீ மிதிப்பது, வேல் வழிபாடு செய்வது என்று பக்தர்களின் அலைமோதல் அதிகமாக இருக்கும். இவ்வருடம் இருக்கும் சூழ்நிலையில் நம் வீட்டிலேயே எளிதாக இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். அன்று அதிகாலையில் எழுந்து நீராடி திருநீறு பூசிக் கொள்ள வேண்டும்.

பூஜை அறை மற்றும் வீட்டை முந்தைய நாளில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். சுத்தமான ஆடை உடுத்தி, பூஜை அறையில் எல்லா படங்களையும் அலங்காரம் செய்து முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

வேல் என்பது முருகனுடைய அம்சமாகவே பாவிக்கப்படுவதால் வேல் வைத்திருப்பவர்கள் கட்டாயம் வேல் வழிபாடு செய்யுங்கள். வீட்டில் பஞ்சலோக வேல் வைத்திருப்பது வீட்டிற்கு காவல் தெய்வமாக அமையும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இல்லாதவர்கள் முருகனுடைய பிரசித்தி பெற்ற கோவிலுக்கு செல்லும் பொழுது இதனை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

வேல் வைத்திருப்பவர்கள் அதனை கங்கை நீர் இருந்தால் கங்கை நீரால் அபிஷேகம் செய்து கொள்ளலாம். அல்லது சாதாரண தண்ணீரால் அபிஷேகம் செய்து கொண்டு, பின்னர் காய்ச்சப்பட்ட சுத்தமான பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் பன்னீர் கொண்டு சுத்தம் செய்து விட்டு, செம்பு, பித்தளை அல்லது வெள்ளிக் கிண்ணத்தில் ஏதாவது ஒன்றில் பச்சரிசியை நிரப்பி அதில் மலர்களை அலங்காரம் செய்து நடுவில் இந்த வேலை சொருகி வையுங்கள்.

வேலிற்கும் மஞ்சள், குங்குமம் இரண்டு புறமும் இட்டு கொள்ள வேண்டும். பின்னர் முருகனுக்கு பிடித்த நைவேத்தியங்கள் படைத்து, தீப, தூப ஆராதனைகள் காண்பிக்கப்பட வேண்டும். அன்றைய நாள் முழுவதும் ஓம் சரவண பவ என்று உச்சரிக்கலாம். முருகனுடைய பக்தி பாடல்களை பாடி பூஜையை செய்யலாம்.

நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உபவாசம் இருப்பவர்கள் மாலையில் பூஜையை முடித்து விட்டு முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

தைப்பூச விரதம் இருப்பவர்களுக்கு கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும். ஆரோக்கியமான திடகாத்திரமான உடல் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடும். தைப்பூசத் திருநாள் அன்று நல்ல காரியங்கள் எதுவானாலும் துவங்க சிறந்த பலனை கொடுக்கும் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.       நன்றி  

No comments: