இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஆரம்பகாலத்து சுதந்திர வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை, செக்கிழுத்த செம்மல் என்று பாராட்டப்படும் இந்த தியாகியின் வாழ்க்கையை பிரபல தயாரிப்பாளரும் டைரக்டருமான பிஆர் பந்துலு 1961இல் படமாக்கினார். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர்களின் வரலாறு என்பதால் அவர்களின் பாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் கவனமாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
வ உ சியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிக விரும்பி வேடம் பூண்டார். மகாகவி பாரதியாராக எஸ் வி சுப்பையா , சுப்பிரமணிய சிவாவாக டி கே சண்முகமம் நடித்தார்கள். நடித்தார்கள் என்பதை விட அந்த நாயகர்களாக வாழ்ந்தார்கள் என்று கூறலாம்.
ஏற்கெனவே வரலாற்று நாயகனான வீரபாண்டிய கட்டபொம்மனின் கதையை படமாக்கி மாபெரும் வெற்றி கண்ட பந்துலு மிகுந்த நம்பிக்கையோடு இந்தப் படத்தையும் தயாரித்தார். அவரின் இலட்சிய படமாக இது உருவானது. எஸ் டி சுந்தரம் படத்தின் வசனங்களை எழுத சிலம்புச் செல்வர் ம பொ சிவஞானம் படத்தின் கதையை படத்திற்கு ஏற்றாற்போல் அமைத்திருந்தார். மிகை நடிப்பு எட்டிப் பார்க்காத விதத்தில் எல்லோரும் நடித்திருந்தார்கள்.
சுதந்திரப் போருக்கு வலுசேர்க்கும் விதமாக சொந்தமாக கப்பல் ஒன்றை வாங்கி வாணிபத்திற்கு பயன்படுத்த வ உ சி முனைகிறார் இதனால் தங்களது வருமானம் பாதிக்கப்படும் என கருதும் பிரிட்டிஷ் அரசு வ உ சி, சுப்பிரமணிய சிவா இருவரையும் பல ஆண்டுகள் சிறையில் தள்ளுகிறது. இறுதியில் சிறை மீண்டு வரும் வ உ சியை மக்கள் மறந்துவிடுகிறார்கள். சுதந்திர போராட்ட தியாகி என்ற பெயர் மட்டுமே மிஞ்சுகிறது. நலிவுற்ற நிலையில் அவர் மறைகிறார்.
ஜெமினிகணேசன், சாவித்திரி, டி எஸ் துரைராஜ் , ரங்கராவ் என்று பலர் நடித்திருந்தார்கள். தீவிரவாதி வாஞ்சிநாதனாக பாலாஜி தோன்றினார். அவரால் சுட்டுக் கொல்லப்படும் ஆஷ் துரையாக அசோகன் நடித்தார்.
படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தது பாரதியாரின் பாடல்கள் படம் முழுவதும் அமரகவியின் பாடல்களே பயன்படுத்தப்பட்டன. இசை மேதை ஜி ராமநாதன் அருமையாக அவற்றிற்கு இசையமைத்திருந்தார். காற்று வெளியிடை கண்ணம்மா வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம், நெஞ்சில் உரமுமின்றி, ஓடி விளையாடு பாப்பா உட்பட அனைத்து பாடல்களும் நெஞ்சில் நிறைந்தன. ஆர் சுப்பராவ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தான் நடித்த படங்களிலேயே தனக்கு மிகப் பிடித்த படம் கப்பலோட்டிய தமிழன் என்று சிவாஜி ஒருமுறை என்னிடம் கூறியிருந்தார். சிவாஜி மிக விருப்பமுடன் நடித்து மிகுந்த நம்பிக்கையுடன் உருவாக்கிய கப்பலோட்டிய தமிழன் ரசிகர்களின் போதிய ஆதரவின்றி தோல்விப் படமானது. கப்பலோட்டிய தமிழனை தமிழன் கைவிட்டு விட்டான்
No comments:
Post a Comment