சுரேன் ராகவனுக்கு கனேடிய தமிழ் மக்களின் பகிரங்கக் கடிதம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிவகிக்கும் நீங்கள், 2005 ஆம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த விடயத்தில்முதுகலைமானிப் பட்டம் பெற்றுப் பின்னர் கனடா ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகப் பணியாற்றி, 2012 ஆம்ஆண்டு கெனட் பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளீர்கள். ஆகவே உங்களுக்குக் கடனா நாட்டின்நாடாளுமன்றம் எது கனடாவில் உள்ள மாகாணம் ஒன்றின் சட்டசபை எதுவெனத் தெரியாதா?

கனடா ஒன்ரோறியா மாகாண சட்டசபையில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் (Tamil Genocide Education Week) மே மாதம் 18 ஆம் திகதியில் இருந்து 25 ஆம் திகதி வரை அனுஷ்டிக்க வேண்டுமெனக் கோரித் தனிநபா் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் கனடா நாடாளுமன்றத்தில் (Parliament) அந்தப் பிரேரணைசமா்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதாக இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 4 ஆம் திகதி உரையாற்றும்போதுகூறியிருந்தீா்கள்.

இலங்கையின் இறைமைக்கும் மாண்புக்கும் அவமானம் என்ற தொனி உங்களின் அந்த உரையில் வெளிப்பட்டுமிருந்தது. அதுவும் சம்பந்தம் இல்லாத விவாதம் ஒன்றிலேயே ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டிருந்த அந்த உரையில், அவசர அவசரமாக இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் இல்லையென நீங்கள் கூறியிருந்தீர்கள். கனடாநாடாளுமன்றத்துக்கும் கனடாவில் உள்ள மாகாணத்தின் சட்ட சபை ஒன்றுக்கும் இடையேயான வித்தியாசம்கூடத் தெரியாத நீங்கள், இலங்கைத் தீவில் தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை என்று எந்த ஆதாரத்தோடு சொன்னீர்கள்?

அதுவும்சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில்.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டங்கள் நடந்த போது நீங்கள் எங்கிருந்தீர்கள்?

2015 ஆம் ஆண்டுமைத்திரி- ரணில் அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராகவும் பின்னர் வடமாகாண ஆளுநராகவும் பதவிவகித்திருந்தீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.அதாவது உங்கள் அரச விசுவாசமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குரிய நன்றிக் கடனும் உங்களோடு இருக்கட்டும். எழுபது ஆண்டுகள் அரசியல் விடுதலை கோரிப் போராடும் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள ஆட்சியாளர்களுக்கான உங்கள் விசுவாசத்தையும் நன்றியையும் வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவும்.

சந்திரிகா ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது வெளியுறவு அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிா்காமா் போன்று,பெயரில் மாத்திரம் தமிழராக இருந்து கொண்டு சிங்கள ஆட்சியாளர்களின் அதுவும் இலங்கை ஒற்றையாட்சி அரசைப்புனிதப்படுத்தி நியாயப்படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபடுவது உங்களுக்குப் பெருமையாக இருக்கலாம். சிங்கள ஆட்சியாளர்கள் உங்களுக்குப் பரிசும் தரலாம். உங்களுக்கு அமைச்சர் பதவியும் கிடைக்கலாம். ஏன் இராஜதந்திரிப்பதவியும் பெறலாம். ஆனால் உங்களைப் பிரதமர் பதவில் அமர்த்த சிங்கள பௌத்த தேசியவாதம் அனுமதிக்காது என்பது வரலாறு. லக்ஸ்மன் கதிர்காமர் தமிழ்க் கிறிஸ்தவராக இருந்து பௌத்த சமயத்துக்கு மாறிய பின்னர்கூட அவரைப் பிரதமர்பதவியில் அமர்த்த பௌத்த தேசியவாதம் விடவேயில்லை. ஆகவே உங்கள் விசுவாசத்தை சிங்களத் தேசியம் எந்தளவு தூரத்தில் வைத்திருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பிரகாரம் தமிழ் முஸ்லிம்கள் எவரும் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ பதவி வகிக்க முடியாதென்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்தமிழ்த்தேசியத் தரப்பின் தீர்மானங்களில் அல்லது கொள்கை வகுப்பு ஆவணங்களில் எங்கேனும் இன அழிப்பு என்ற பதம்நேரடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது ஆராயப்படவேண்டியதுதான். ஆனால், குறைந்த பட்சமாக 1956 ஆம் ஆண்டு திருகோணமலைத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டாலே, 2021 வரை இந்தத் தொடர் குற்றச்சாட்டுக்கு 65 கால வரலாறு இருக்கிறது.

அது தமிழ் இனப்படுகொலை அல்ல. அது தமிழ் இன அழிப்பு.

நீங்கள் விசுவாசிக்கும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகஇருந்தபோது, அதாவது 2015 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட முப்பது/ஒன்று (30/1) தீர்மானம் கூட தமிழ் இன அழிப்பை மூடி மறைத்து இலங்கை அரசு என்ற கட்டமைப்பையும் அதன் அரசியல் யாப்புச்சட்டங்களையும் காப்பாற்றும் நோக்கில் தான் என்பதைக் கூட நீங்கள் அறியாதவரல்ல.

ஒபாமாவின் காலத்து அமெரிக்க அரசினால், மேற்குலகின் இதர பத்து நாடுகளின் அனுசரணையுடன், மைத்திரி-ரணில்அரசாங்கத்துடன் இணைந்த வகையில் மொத்தம் பன்னிரண்டு நாடுகளால் 2015 ஒக்ரோபரில் முன்வைக்கப்பட்டதே முப்பது/ஒன்று (30/1) என்ற தீர்மானம்.

சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானம் அமெரிக்காவும் இலங்கையும் கருத்தொருமித்த கட்டமைப்பு(consensual framework) என்று அழைக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்குள் சாதித்திருக்க வேண்டியவற்றை மைத்திரி-ரணில் அரசு செய்து முடிக்கத் தவறியதால் 2017 ஆம் ஆண்டு மார்ச்சில் ஒரு முறையும் (34/1), 2019 மார்ச்சில் ஒருமுறையுமாக (40/1) ஏற்கனவே இரு முறை ரொல்-ஓவர் (roll-over) முறையில் இது நீடிக்கப்பட்டிருந்தது.

இரண்டு தரப்புக்களும் இழைத்த போர்க் குற்றங்களில் இருந்து நிலை மாறுகால நீதிக்கான (transitional justice) ஒரு நிலைபோரின் முடிவினால் இலங்கைத் தீவில் தோன்றியுள்ளதென்றும், போரின் முடிவே (அதாவது முடித்துவைப்பே) பிணக்கின்முடிவென்றும் (post-conflict situation), ஆகவே இரண்டு தரப்புகளும் இழைத்த போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுடன் (accountability) முன்னோக்கிப் பயணிப்பதே நல்லிணக்கமென்றும் (reconciliation) வல்லாதிக்கசக்திகள் சொல்லி வைத்த இணக்கப் பொறிமுறையே நீங்கள் விசுவாசிக்கும் மைத்திரிபால சிறிசேன செய்த கைங்கரியம்.

மறைமுகமாகவோ நேரடியாகவோ ராஜபக்ச குடும்பம் மாத்திரமல்ல, பௌத்த தேசியவாதிகள் அனைவருமே மைத்திரிக்கு நிச்சயம் நன்றி சொல்லியிருப்பர் என்பது கண்கூடு. ஏனெனில் சர்வதேச அரங்கில் இலங்கையையும் இலங்கைப்படைகளையும் காப்பாற்றியவர் என்ற பெருமூச்சோடு ரணில் விக்கிரமசிங்கவும் சேர்ந்து நன்றி சொல்லியிருப்பர்.

இப்போது அந்த விசுவாசத்தின் வழி வந்த நீங்கள் எடுத்த எடுப்பிலேயே இலங்கையைக் காப்பாற்ற இனப்படுகொலை நடக்கவில்லை என்று மறுதலிக்கின்றீர்கள்.அதுவும் தமிழர் என்ற அடையாளத்தோடும், வடமாகாண முன்னாள் ஆளுநர் என்ற பெருமையோடும் நீங்கள் தமிழ் இன அழிப்பு நடைபெறவில்லை என்று நாடாளுமன்றத்தில் உரத்துக் கூறினால் சா்வதேசம் கேட்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்திருக்கலாம்.

தமிழர் என்ற அடையாளத்துடன் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் பலர். ஆனால் சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநர் பதவிக்குத் தெரிவான போது தமிழர்கள் பலர் மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில்குறைந்த பட்சம் தமிழ் மொழியில் பேசி அடிப்படைத் தேவைகளையாவது செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை பலருக்கு இருந்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்த பல கல்வியாளர்கள், ஊடகங்கள் உங்களுக்கு அப்போது முக்கியத்துவம்கொடுத்திருந்ததை நீங்கள் மறுக்க முடியாது. ஆளுநா் பதவி ஜனாதிபதியின் விசுவாசத்துக்குரியது என்று தெரிந்திருந்தாலும் சுரேன் ராகவன் அந்தப் பதவியை வகித்திருந்தபோது குறைந்த பட்ச மரியாதை உங்கள் மீது வடமாகாணத்துக்கு இருந்தது.

ஆளுநராகப் பதவி வகித்திருந்தபோது உங்களில் வேறு சிலருக்கு விமர்சனங்கள் இருந்தாலும், நீங்கள் ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தமாட்டீர்கள்என்ற நம்பிக்கையும் கூடவே அவர்களுக்கு இருந்தது.

உங்கள் பதவிக்குரிய கடமையை மட்டும் செய்துவிட்டுப்போய்விடுவீர்கள் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சிங்களக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவானதோடு மாத்திரம் நின்றுவிடாமல், இனப்படுகொலை நடந்தமைக்கான ஆதாரங்கள் இல்லையென நீங்கள் அந்த நாடாளுமன்றத்தில்துணிவோடு கூறியமை எந்த அடிப்படையில்?

தமிழர் என்ற பெயரோடு சிங்கள ஆட்சியளர்களுக்காகப் பணியாற்றிய அடிமை விசுவாசிகளில் நீங்களும் ஒருவர் என்பதை நிறுவி விட்டீர்கள். வெகுசனங்கள் மீதான அட்டூழியக் குற்றங்கள் (Mass atrocity crimes) என்று புதிய பெயரிட்டு அதற்குள் போர்க்குற்றம் (War Crimes), மானுடத்துக்கெதிரான குற்றம் (Crimes against humanity), இனச் சுத்திகரிப்பு (Ethnic cleansing), இன அழிப்பு(Genocide) ஆகிய நான்கு குற்றங்களை உப குற்றங்களாக்கி, அவை அனைத்துக்கும் ஒன்றாகச் சேர்த்து நீதி கேளுங்கள். தனியே இன அழிப்பு என்று கேட்டால் ஒன்றும் கிடைக்காது என்ற கருத்தை மேற்குலக சக்திகள் சில புலம்பெயர் தமிழர்அமைப்புக்களிடம் ஒரு மிதவாதப் போக்காக விதைத்துவிட்டிருந்தன.

மிகவும் மோசமான அழிவுக்குரிய இச் செயலை நீங்கள் விசுவாசிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் போதுதான் மேற்குலக நாடுகளால் மிகவும் இலகுவாகச் செய்ய முடிந்தது. அதற்குக் காரணமே உங்களைப் போன்ற சில தமிழ்அடிமை விசுவாசிகள்தான்.

இந்தவொரு நிலையில் ராஜபக்ச அரசாங்கத்தில் நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இனப்படுகொலை இங்கு நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் அறிக்கை விடுவது உங்கள் இனத்தை நீங்களே விலைபேசுவதாக அமைந்துவிட்டது.

வேறு யாரும் அப்படிச் சொன்னாலும் சுரேன் ராகவன் ஏன் திடீரென இப்படியொரு கதையைச் சொல்கிறார்என்பதே இங்கு கேள்வியும் சந்தேகமும்.

இப்படிக்கு

உங்களை இப்பொழுதும் நேசிக்கும் கனேடிய தமிழ் மக்கள் -  நன்றி IBC தமிழ் 

No comments: