“தாயான இறைவன்” – “சிவத்தமிழ்ச் செல்வி” தங்கம்மா அப்பாக்குட்டி 🙏

கானா பிரபா


இன்று ஜனவரி 7, “சிவத்தமிழ்ச் செல்வி” தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 96 ஆவது பிறந்த தினமாகும். ஈழத்தில் ஆன்மிகப் பணியையும், அறப்பணியையும் கொண்டு நடத்திய பெருந்தகை அம்மாவின் வாழ்வியல் பணிகளைக் கண்டும், ஊர்கள் தோறும் சென்று அவர் நிகழ்த்திய ஆன்மிக உரைகளைக் கேட்ட வகையிலும். புண்ணியம் பெற்றவர்கள் நாங்கள்,

இங்கே பகிரும் ஒளிப்படம் எமது மடத்துவாசல் பிள்ளையார் (பரராஜசேகரப் பிள்ளையார்) ஆலயத்தில் இணுவையூர்ப் பெருமக்கள் சூழ அம்மா அவர்கள் நிகழ்த்திய ஆன்மிக உரை ஒன்றின் நினைவு கூறும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட இந்தச் சிவத்தமிழ்ச் செல்வியின் நினைவுப் படையலாக என் சேமிப்பில் இருக்கும் அவர் ஆற்றிய சொற்பொழிவுப் பேழையில் இருந்து "தாயான இறைவன்" என்னும் ஒலிப்பகிர்வைத் தருகின்றேன்.


டிசெம்பர் 1990ஆம் ஆண்டு மல்லிகையின் அட்டைப்படக்கட்டுரையாக செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி கலாநிதி நா.சுப்ரமணியன் அவர்கள் வழங்கிய கட்டுரையில் சில மாற்றங்களோடு மீள்படைப்பாகத் தருகின்றேன்.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
இது அறிமுகம் அல்ல.
இவருக்கு அறிமுகத்துக்கான அவசியமும் இல்லை.
தமது நாவன்மையால் நானிலம் அளந்த பெருமை இவருக்கு உண்டு.
செஞ்சொற் புலமையால் சிவம் பெருக்கித் தவம் பெருக்கும் சீலத்தால், அனைத்துக்கும் பல்லாண்டுகட்கு முன்பே அறிமுகமாகிவிட்டவர் இவர். தெல்லிப்பழைத் "துர்க்கா தேவி" தேவஸ்தானத்தின் அறங்காவற் பணிக்கு இவர் சட்டபூர்வமான தலைவர். ஆனால் ஈழத்தின் சைவாலயங்கள் பலவற்றின் அறங்காவற் பணிகளுக்கும் இவரே ஆதர்ச-மானசீகத் தலைவர்.

இவர் சொற்பெருக்காற்றிய மேடைகள் ஆயிரக்கணக்கில். இவர் முன்னின்று நிகழ்த்திய சமயப்பணிகள்-அறப்பணிகள் பல. இவர் எழுதியனவும்-இவரைப் பற்றி எழுதப்பட்டனவும் பலப்பல. இவரைக் கெளரவித்ததன் மூலம் தம்மைத் தாமே கெளரவித்துக் கொண்ட நிறுவனங்களும் பல.

சில பக்கங்களில் இவரை அறிமுகம் செய்து விடுவது உடன் சாத்தியமல்ல. இவரைப் பற்றியும், இவர் சார்ந்த பொது வாழ்வு பற்றியுமான சில எண்ணங்கள் இங்கே பதிவாகின்றன; அவ்வளவே.
தெல்லிப்பழைக் கிராமச் சூழலில், அப்பாக்குட்டி-தையற்பிள்ளை தம்பதிகளுக்கு, 1925-01-07 அன்று பிறந்தவர் 'தங்கம்மா'; சைவச்சூழல் இவரை வளர்த்தது. ஆசிரியப்பணி இவரை அழைத்தது. ஈழத்தின் பல பாகங்களில் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பணியோடு தொடர்புடைய சமய-சமூக சேவைகளில் நாட்டம் கொண்டார்; செயற்பட்டார். இவை அவரது பொது வாழ்வின் முதல் நிலை.

தமிழையும் சைவத்தையும் தனிக்கவனம் செலுத்திக் கற்றார். இக் கல்வி அவருக்கு 'பண்டிதர்', 'சைவப்புலவர்' ஆகிய தகுதிகளை ஈட்டிக் கொடுத்தது. இப்புலமைத் திறன்களின் துணையுடன் அவர் சைவத்தின் உயிர் நிலையை உணரத் தலைப்பட்டார்; அவ்வாறு உணர்ந்தவற்றைச் சாதாரண பொதுமக்களும் உணரும் வண்ணம் விரித்துரைக்கும் ஆர்வத்தால் தூண்டப்பெற்றார். இவ்விரிவுரை முயற்சியில் அவர் எய்திய தேர்ச்சியே அவரது பொது வாழ்வின் இரண்டாவது கட்டத்துக்கு அடிப்படையாயிற்று. சொற்பொழிவாற்றல் அவரது ஆளுமையின் முதன்மை அம்சமாயிற்று. சமூகம், பிரதேசம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவர் அறியப்படலானார். ஈழத்தின் பல்வேறு பிரதேச ஆலயங்களும், சமய-சமூக நிறுவனங்களும் அவரை வாழ்த்தி, வணங்கி, வரவேற்று அவரது உரைகளைச் செவிமடுத்து மகிழ்ந்தனர்; கெளரவங்கள் செய்து மனநிறைவடைந்தனர்.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பொதுவாழ்வின் மூன்றாவது நிலை அறங்காவற்பணியாகும். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் அறங்காவற் குழுவிலே 1966இல் பொருளாளராகப் பணி தொடங்கிய இவர் 1977 இல் அக்குழுவின் தலைமைப் பொறுப்பெற்றார்; அவ்வாலயத்தை ஓர் அறச்சாலையாக, ஈழத்தின் முதன்மை நிலைக்குரிய சைவத் தெய்வ நிலையமாக வளர்த்தார்; அங்கிருந்தவாறே ஈழத்துச் சைவாலயங்கள் பலவற்றின் அறப்பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும் வளர்த்து வந்தார்; அனைத்துலக சைவத்தமிழ்ப்ப் பண்பாட்டுக்கும் ஓர் ஆதர்ச தலைவியாகவும் திகழ்ந்தார்.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஒரு சொற்பொழிவாளர் என்ற வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மேடைகண்டவர். பாடசாலைப் பருவத்திலேயே மேடையேறத் தொடங்கிவிட்ட அவர் 1950-களின் ஆரம்ப ஆண்டுகளின் சமய-சமூக மேடைகளில் தனிச் சொற்பொழ்வுகளும், தொடர் சொற்பொழிவுகளும் நிகழ்த்தத் தொடங்கி விட்டார். திருமுறைகள், ஏனைய தெய்வத் தமிழ்ப் பிரபந்தங்கள் என்பன இவரது சொற்சுவையோடிணைந்து சுவைஞர்களின் செவிநுகர் கனிகள் ஆயின. மேற்படி ஆக்கங்களின் உயிர் நிலைகளான தத்துவங்களும் உணர்வு நிலைகளான இலக்கியச் சுவைகளும், சராசரி ,மனித அநுபவங்களுக்கு இவரால் வழங்கப்பட்டன. இவற்றை அநுபவத்தவர்கள் இவம்மையாருக்கு வழங்கிய கெளரவ விருதுகள் பின்வருமாறு:
'செஞ்சொற் செம்மணி' - மதுரை ஆதீனம் (1966)
'சிவத்தமிழ் செல்வி' - காரைநகர் மணிவாசகர் சபை(1970)
'சித்தாந்த ஞான கரம்' - காஞ்சி மெய்கண்டான் ஆதீனம் (1971)
'சைவ தரிசினி' - தமிழ்நாடு இராசேசுவரி பீடாதிபதி (1972)
'திருவாசகக் கொண்டல்' - சிலாங்கூர் இலங்கைச் சைவச் சங்கம் (1972)
'திருமுறைச் செல்வி' - வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானம் (1973)
'சிவமயச் செல்வி' - ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம் (1974)
'சிவஞான வித்தகர்' - அகில இலங்கை இந்து மாமன்றம் (1974)
'துர்க்கா துரந்தரி - துர்க்காதேவி தேவஸ்தானம் (1974)
'செஞ்சொற்கொண்டல்'- மாதகல் நூணசை முருகமூர்த்தி தேவஸ்தானம் (1978)
'திருமொழி அரசி' - இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் தேவஸ்தானம் (1983)
இவரது சொற்சுவைக்கு இவற்றை விட விளக்கம் அவசியமில்லை. மேற்படி விருதுகளிற் 'சிவத்தமிழ்ச் செல்வி', 'துர்க்கா துரந்தரி' என்பவை அவரது இயற்பெயர் எனத் தக்கவகையில் நிலைத்த வாழ்வு பெற்றுள்ளன.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சொற்பொழிவாளராக உருவான காலப்பகுதியின் வரலாற்றில் ஈழத்துச் சைவாலயங்களில் நிகழத் தொடங்கிய குறிப்பிடத்தக்க மாற்றமொன்றினை இங்கு சுட்டுவது அவசியம். 1960 களின் முற்பகுதி வரை சைவாலயன் விழாக்களில் 'சின்ன மேளம்' எனப்படும் சதிர்க்கச்சேரி முக்கிய கலைநிகழ்வாக இடம்பெற்று வந்தது. தெய்வீகச் சூழலுக்கு மாறான உணர்வோட்டங்களை அது தூண்டி நின்றது. அந்நிகழ்ச்சியை முற்றாக அப்புறப்படுத்தி அதன் இடத்தில் ஆத்மீக விருந்தாகச் சமயச் சொற்பொழிவை முதன்மைப்படுத்தி வளர்த்தெடுக்கும் எண்ணப்பாங்கு சைவ உலகில் முளை விட்டது. இவ்வெண்ணப்பாங்கிற்குச் செயல் வடிவம் தந்தவகையில் முதன்மையாக வைத்துக் கணிக்கப்படத்தக்கது சிவத்தமிழ் செல்வி அவர்களின் சொற்பொழிவுப்பணி.

இவரது வழிநடத்தலிலே தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் பெளதீக நிலையில் பல வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இராஜகோபுரம், தீர்த்தத் தடாகம், கல்யாண மண்டபம், எனப்பலவாக இவற்றின் பட்டியல் விரியும். ஆனால் ஆலயம் என்பது கட்டிடம், கோபுரம், மண்டபங்கள், தடாகங்கள் என்பன அல்ல; கிரியை முறைகள் என்பன கூட அதன் பிரதான அம்சங்கள் அல்ல. அவை யாவற்றுக்கும் அப்பாலான 'தெய்வ சாந்நித்தியம்' தான் ஆலயத்தின் அடிப்படை அம்சம். அத்தெய்வீகத்தை வெளிப்படுத்தும் துணைக்கூறுகளாகவே மேற்படி பெளதீக அம்சங்கள் அமைவன. தெய்வ சந்நிதனத்தின் உயிர் நிலையான கூறு அன்பு.
உயிர்களை நேசிக்கும் அன்பு. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பல்வேறு செயற்பாடுகளும் இந்த அன்பின் அடித்தளத்தில் அமைந்துள்ளன. உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்து குவியும் அத்தனை செல்வமும் பொதுநல நோக்கிலே உரிய வகையில் நிர்வகிக்கப்படுகின்றன. பண்பாட்டு வளர்ச்சிக்குப் பங்களிப்புக்களாகின்றன. தேவஸ்தானம் தானே ஒரு 'மகளிர் இல்லத்தை' நிர்வகிக்கிறது. இத்தனைக்கும் வழி சமைத்து ஆலோசனை வழங்கி செயற்படுத்தி நின்ற தலைமை 'துர்க்கா துரந்தரி'யுடையது.

சிவத்தமிழ் செல்வியவர்கள் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் பல மாநாடுகளிற் பங்கு பற்றி உரை நிகழ்த்தியவர்; பல அரங்குகளுக்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தவர்.
சமய சம்பந்தமாக எழும் பிரச்சனைகளிலே இவரின் கருத்துக்கள் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன.
'அம்மா என்ன சொல்கிறா' என்பது பொதுவாக எழும் வினா. தங்கம்மா அப்பாக்குட்டி சொன்னாற் சரி, இது சைவ மக்கள் அவரது கருத்துக்களுக்கு ஏகோபித்த அங்கீகாரம். இவை இந்த அறம் வளர்த்த அன்னையின் தலைமைத் தகுதிக்குச் சான்றுகள்.

நன்றி:
* "சிவத்தமிழ் ஓசை" ஒலிவட்டு (கிருபா போட்டோ & றெக்கோடிங் சென்றர், மல்லாகம்)
* "மல்லிகை முகங்கள்", மல்லிகைப்பந்தல் வெளியீடு ஜனவரி 1996


1 comment:

Shanthi said...

மீள் கேட்க செய்ய வழி செய்தமைக்கு நன்றி. மீள் பதிப்புகள் காலத்தின் தேவை.