அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 48 – புர்கி மற்றும் மாயக்குழல் – சரவண பிரபு ராமமூர்த்தி



புர்கி/புகிரி அல்லது புகிர்:
குழல் வகை கருவிகளின் மிகவும் திருந்தாத ஆதி வடிவம் எனலாம் இதை. மலை மூங்கிலில் வெட்டி எடுத்து துளைகளிட்டு செய்யப்படுவது. இதில் 6 துளைகள் உள்ளன. நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள். குரும்பர்கள் தான் இதை முதலில் பயன்படுதினார்களாம். கோத்தர் (புகிர்), இருளர் (புகாரி), ஆலு குரும்பர் (புகுரி) மற்றும் பாலு குரும்பர் (புகிரி) ஆகியோரால் வாசிக்கப்படும் ஒரு தொன்மை இசைக்கருவி. பொது சடங்குகள் மற்றும் திருவிழாக்களுடன் தொடர்பு இல்லாது ஏகாந்தமாக வாசிக்கப்படும் கருவி இது. முன்பு ஆண்களும் பெண்களும் இசைத்தனர். தற்பொழுது பெண்கள் இசைப்பதில்லை. ஒருவர் பயன்படுத்திய இந்த கருவி அவர் இறந்தவுடன் அவருடன் சேர்த்து புதைக்கப்படும் வழக்கம் மேற்கண்ட பழங்குடி மக்களிடம் உள்ளது. குழலின் ஒரு முனையில் வாய் வைத்து துளைகள் வழியே கட்டுப்படுத்தி இசைக்க வேண்டும்.

https://player.vimeo.com/video/99626374

மாயக்குழல்: மூங்கிலில் செய்யப்படுவது. ஒரு மீட்டர் அளவுகூட இருக்கும். குறுக்காக வைத்து இசைக்கப்படாமல்.


நிமிர்வாக்கில் வைத்து குழலின் நடுவில் இருக்கும் துளைவழியே பொருத்தப்பட்ட சிறிய மூங்கில் குழல் மூலம் மூச்சை உள்ளே செலுத்தி இசைக்கப்படுவது. இந்த நடுவில் உள்ள ஒட்டையின் இருபுறமும் துளைகள் இருக்கின்றன. தருமபூரி மாவட்ட (மாதேசுவரன் மலைப்பகுதி, அஞ்செட்டி) பழங்குடிகள் மத்தியில் காணப்படுகிறது. கால்நடை மேய்ச்சல் முதல் குழந்தையை தூங்க வைப்பது வரை இதை பயன்படுத்துகிறார்கள். முதன் முதலில் மகுடம் வல்லிசை நிகழ்ச்சி மூலம் இக்கருவி வெளியுலகிற்கு வந்தது. இம்மக்கள் இதை மகுடி என்று அழைக்கின்றார்கள். லம்பாணி மலை மக்களின் சொத்தாக நீண்ட நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது இக்கருவி. இம்மக்களின் வழிபாட்டில் இடம்பெற்றது. திரு.இராஜு என்பவர் இதை தற்காலத்தில் இசைக்கிறார்.

https://youtu.be/N3uGuhPYGZI

மலையாளி பழங்குடியினர் குழல்: தமிழக மலையாளி பழங்குடியினர்(இவர்கள் கேரள மலையாளி அல்ல, மலை ஆள்பவர் என்ற பொருளில் தமிழ்நாட்டு மலைகளில் வசிப்பவர்) மத்தியில் குழல்கள் புழக்கத்தில் உள்ளது. இக்குழுவினர் ஆடும் சேவையாட்டத்தில் குழல் முக்கிய இசைக்கருவியாக இசைக்கப்படுகிறது. மலையாளி பழங்குடிகளின் குழல் சுமார் 15 செமீ அளவில் மிகச் சிறியதாக இருக்கும். இனிய இசை தரவல்லது.

மேற்கண்ட தமிழக பழங்குடியினரின் குழல்கள்


அனைத்தும் அழிவின் விளிம்பில் உள்ள குழல் இசைக்கருவிகள். இவை தவிர நாம் எல்லோரும் அறிந்த புல்லாங்குழல், சீங்குழல், வேய்ங்குழல் ஆகிய குழல் வகை இசைக்கருவிகளும் பரவலாக பயன்படுவதை நாம் அறிவோம்.

-சரவண பிரபு ராமமூர்த்தி

 நன்றி:

  1. பல்லடம் திரு க.பொன்னுசாமி அவர்கள்வரலாற்று ஆய்வாளர்பல்லடம்
  2. The Kotas of South India, Richard K Wolf
  3. திரு திருமூர்த்தி அவர்கள், பழங்குடி ஆய்வாளர், நீலகிரி 

 

 

 

 

No comments: