உலகச் செய்திகள்

 பாகிஸ்தான் கோயில் இடிப்பு: 100 பேர் கைது

அதிகாரியை மிரட்டிய டிரம்பின் ‘ஒலிப்பதிவு’ அம்பலம்

சீன செல்வந்தர் மாயம்

2041 இல் இஸ்ரேலை அழிப்பதற்கு ஈரான் பாராளுமன்றில் பிரேரணை

சீனாவில் இதுவரை காணாமல் போன முக்கியஸ்தர்கள் பலர்

ஹொங்கொங்கில் ஐம்பது ஜனநாயகவாதிகள் கைது

டொனால்ட் ட்ரம்பின் சமூகவலைத்தள கணக்குகள் அனைத்தும் முடக்கம்

ஜுலியன் அசாஞ்ச்சுக்கு பிணை வழங்க மறுப்பு

ட்ரம்பை பதவியிலிருந்து நீக்க ஜனநாயகக் கட்சி கோரிக்கை

தேர்தல் தோல்வியால் வன்முறையை தூண்டிய ட்ரம்ப்


பாகிஸ்தான் கோயில் இடிப்பு: 100 பேர் கைது

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஹிந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது.

பல்லாண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை முஸ்லிம்கள் குழுவொன்று கடந்த வாரம் தாக்கி அழித்தது. இந்த சம்பவம் தொடர்பாக 350க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே 55 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை பொலிஸார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இவர்களுடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கோயில் தாக்கப்பட்ட சம்பவத்தில் கடமையைச் செய்ய தவறியதற்காக பொலிஸார் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் அரசு கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் 75 இலட்சம் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். எனினும் 90 இலட்சத்துக்கும் அதிகமான ஹிந்துக்கள் வசிப்பதாக அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர்.   நன்றி தினகரன் 





அதிகாரியை மிரட்டிய டிரம்பின் ‘ஒலிப்பதிவு’ அம்பலம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியா மாநில உயர் தேர்தல் அதிகாரிக்கு அழைப்பு விடுத்து, தமக்கு சாதமாக தேர்தல் முடிவுகளை மீண்டும் எண்ணும்படியும், அதனை செய்யாவிட்டால் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கின்ற ஒலிப்பதிவு அம்பலமாகியுள்ளது. இதனை வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அரை மணி நேரம் கொண்ட இந்த தொலைபேசி அழைப்பில், ஜோர்ஜியாவில் தேர்தல் முடிவை மாற்றும் டிரம்பின் முயற்சி வெளிப்படுகிறது. இங்கு ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் 11,779 வாக்குகள் இடைவெளியில் வெற்றி பெற்றார்.

நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தாம் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றபோதும், பைடனின் வெற்றியை ஏற்க டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். பல மாநிலங்களிலும் தேர்தல் முடிவை மாற்றும் டிரம்பின் முயற்சி தோல்வி அடைந்தது.

ஜோர்ஜியாவில் பல முறை தேர்தல் முடிவுகள் மீளாய்வுக்கும் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்மூலம் பைடன் அங்கு வெற்றியீட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அந்த முடிவை உறுதி செய்திருக்கும் நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் நாளை புதன்கிழமை அதற்கு ஒப்புதல் அளித்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

குடியரசுக் கட்டிசியைச் சேர்ந்த ஜோர்ஜியா மாநில செயலாளர் பிரெட் ரெபன்பெர்கருக்கு அந்த தொலைபேசி அழைப்பில், “இதனைச் செய்ய நான் எதிர்பார்க்கிறேன். ஒரு வாக்கு மாத்திரம் அதிகமாக, வெறும் 11,780 வாக்குகள் எனக்குத் தேவையாக இருக்கிறது. அது மாநிலத்தில் நாம் வெற்றிபெறப் போதுமானது” என்று டிரம்ப் குறிப்பிடுகிறார்.

எனினும் ஜோர்ஜியாவின் தேர்தல் முடிவுகள் சரியானது என்று அதற்கு ரெபன்பெர்கர் டிரம்புக்கு பதிலளித்திருப்பது அந்த ஒலிப்பதிவில் பதிவாகியுள்ளது.

மேலும், ஜோர்ஜியா மாநில தேர்தல் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் டிரம்ப் அந்த ஒலிப்பதிவில் கூறுகிறார்.

டிரம்பின் தொடர் அழுத்தம் மற்றும் மிரட்டல் தொனியிலான பேச்சுக்கு பதிலளித்த ரெபன்பெர்கர், “உங்களிடம் தகவல்களைச் சமர்ப்பிக்கும் நபர்கள் இருக்கிறார்கள். அதேபோன்று எங்களிடமும் இருக்கிறார்கள். எனவே, இந்த விவகாரம் குறித்து நீதிமன்றமே ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஏனெனில், நாங்கள் எங்கள் தரவுகள் சரியானவை என்று உறுதியாக நம்புகிறோம்” என்று பதிலளித்துள்ளார்.

அமெரிக்க அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஒலிப்பதிவு குறித்து இதுவரை வெள்ளை மாளிகை கருத்தேதும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடந்த கடந்த நவம்பர் 3ஆம் திகதி முதல், அதில் பெரியளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி வரும் டிரம்ப், அதற்குரிய எவ்வித ஆதாரத்தையும் இதுவரை அளிக்கவில்லை.

மறுவாக்கு எண்ணிக்கை, சட்டரீதியிலான முறையீடுகளுக்கு பின்னர், அமெரிக்காவின் 50 மாநில நிர்வாகங்களும் இறுதி தேர்தல் முடிவுகளை ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. மேலும், பைடனின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட 60 வழக்குகளை அந்த நாட்டு நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளன.

ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வரும் ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.   நன்றி தினகரன் 






சீன செல்வந்தர் மாயம்

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பொதுவெளியில் காணப்படாதது குறித்து சமூக ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஜாக் மாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது விசாரணைகளை நடத்தி வரும் வேளையில், அவர் மாயமாகிவிட்டாரா என்ற கோணத்தில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பல மாதங்களாக நடுவராக பங்கேற்று வந்த ஜாக் மா, அண்மையில் நடந்த அதன் இறுதி நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்ளாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆசிய கண்டத்தின் ஐந்தாவது மிகப் பெரிய பணக்காரரான அலிபாபா, கடந்த ஒக்டோபர் மாதம் ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற ஒரு நிதி தொழில்நுட்ப மாநாட்டில், சீன வங்கிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாகவும், அதனால் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னரே அவர் பொதுவெளியில் காணப்படவில்லை என்றும் ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 






2041 இல் இஸ்ரேலை அழிப்பதற்கு ஈரான் பாராளுமன்றில் பிரேரணை

20 ஆண்டுகளுக்குள் இஸ்ரேலை இல்லாதொழிப்பதற்கும் அமெரிக்க படைகளை பிராந்தியத்தில் இருந்து அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வதற்கும் ஈரான் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவால் ஈரான் குத்ஸ் படைத் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட ஓர் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டியே 16 சரத்துகளுடன் இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டிருப்பதாக ஈரானின் இஸ்னா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

2041 மார்ச் மாதத்தில் இஸ்ரேலை அழித்து ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஈரான் அரசு மேற்கொள்ள இந்தப் பிரேரணை வலியுறுத்தியுள்ளது. அதேபோன்று இஸ்ரேல் முற்றுகையில் இருக்கும் காசா பகுதிக்கு அத்தியாவசியப் பொருட்களை கட்டணத்திற்கு அல்லது இலவசமாக அனுப்பவும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2040இல் இஸ்ரேலின் எதுவும் மிஞ்சாது என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் அலி கமனெய் பிரகடனம் செய்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் இது சட்டமாவதற்கு ஈரான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை பெற வேண்டியுள்ளது.   நன்றி தினகரன் 






சீனாவில் இதுவரை காணாமல் போன முக்கியஸ்தர்கள் பலர்

சீனாவின் மிகப் பெரிய ஈகாமர்ஸ், டிஜிட்டல் சேவை நிறுவனமான அலிபாபா குழுமத்தின் முன்னாள் தலைவரும், நிறுவனருமான ஜாக் மா, சீனா அரசையும் சீன வங்கி அமைப்பையும் சில மாதங்களுக்கு முன்பாகக் கடுமையான கருத்துகளுடன் விமர்சித்தார். இதன் எதிரொலியாக அலிபாபா குழுமத்தின் டிஜிட்டல் நிதியியல் சேவை பிரிவான ஆன்ட் குரூப் நிறுவனத்தின் ஐ.பி.ஓ மீது தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக ஆன்ட் குரூப் மீது சீன அரசு 'மோனோபோலி' வழக்குத் தொடுத்தது. இப்படி அடுத்தடுத்து வர்த்தகத் தடைகளைச் சீன அரசு அலிபாபா மீது விதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாத காலத்தில் அலிபாபா குழுமத்தின் தலைவரான ஜாக் மா வெளியுலகத்திற்குத் தென்படாமல் மாயமாகியுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய ஜாக் மா, திடீரென வரவில்லை. இதனால் அலிபாபா குழுமத்தின் மற்றொரு அதிகாரி ஜாக் மாவின் இடத்திற்கு வந்தார். இதேவேளையில் இந்த நிகழ்ச்சி இணையத்தளத்தில் ஜாக் மா புகைப்படம் நீக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் மூலம் ஜாக் மா வெளியில் வருவதை விரும்பவில்லை எனக் கணிக்கப்பட்டது.

ஆனால் சீன அரசு தொடர்ந்து அலிபாபா, ஆன்ட் குரூப் நிறுவனங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை விதித்து விசாரணையைத் தொடங்கிய நிலையிலும் ஜாக் மா வெளியில் வரவில்லை. இது சீனர்கள் மத்தியில் மிகப் பெரிய சந்தேகத்தை எழுப்பியது. இதைத் தொடர்ந்து யாஹூ பைனான்ஸ் தளம் ஜாக் மா-வை கடந்த 2 மாதமாகக் காணவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வு சீனாவில் புதியது அல்ல, ஏற்கனவே பல தொழிலதிபர்கள், இதுபோன்று மாயமாகி உள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசு தவறவிட்டுள்ளது என மார்ச் மாதம் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான Ren Zhiqiang தனது சமுக வலைத்தள கணக்கில் பதிவிட்டார்.

இந்தப் பதிவிற்குப் பின் Ren Zhiqiang திடீரென மாயமானார். பல மாதங்களுக்குப் பின் சீன அரசு அவரை 18 வருடம் சிறையில் அடைத்துள்ளதாகத் தகவல்களை வெளியிட்டது. இதே போல் கொரோனா கட்டுப்படுத்த தவற விட்டுள்ளது எனக் கூறிய சட்டக் கல்லூரி பேராசிரியரான Xu Zhangrun, மனித உரிமை வழக்கறிஞர் Zhang Xuezhong ஆகிய இருவரும் திடீரென மாயமானார்கள். இன்று வரையில் இவர்களின் நிலைமை என்ன என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.

2017ல் இதேபோல் சொத்து மேலாண்மை நிர்வாகத் தலைவரான Xiao Jianhua 2017ஆம் ஆண்டு அரசுக்கு எதிராகக் கருத்து பதிவிட்ட காரணத்தால் ஹாங்காங் ஹோட்டலில் இருந்து திடீரென மாயமானார். பின் நாளில் சீன அரசு Xiao Jianhua-வின் டுமாரோ குரூப் நிறுவனத்தின் பங்குகளையும், சொத்துக்களையும் கைப்பற்றியது. மேலும் 2018இல் இண்டர்போல் முன்னாள் தலைவரான Meng Hongwei சீனாவிற்குச் சுற்றுலா சென்ற போது திடீரென மாயமானார். ஆனால் 2020 ஜனவரி மாதம் லஞ்ச வழக்கில் இவரைச் சீன அரசு சுமார் 13.5 வருடம் சிறையில் அடைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.

இப்படிச் சீன அரசுக்கு எதிராகவும், சீன தலைவர்களுக்கும் எதிராகவும் பேசிய, கருத்து பதிவிட்ட பலர் மாயமாகியுள்ளனர். குறிப்பாகக் கொரோனா குறித்து ஆரம்பக் கட்டத்தில் தகவல் வெளியிட்ட பல மருத்துவர்கள், வைரஸ் ஆய்வாளர்கள் பலர் மாயமானது குறிப்பிடத்தக்கது.

(OneIndiaTamil)  - நன்றி தினகரன் 





ஹொங்கொங்கில் ஐம்பது ஜனநாயகவாதிகள் கைது

புதிய தேசியப் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாகக் கூறி ஹொங்கொங்கில் 50 செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொங்கொங் கடந்த 1997ஆம் ஆண்டு வரை பிரிட்டன் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அதைத்தொடர்ந்து சுதந்திரம் பெற்ற ஹொங்கொங், சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக உள்ளது.

ஹொங்கொங்கின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளை மட்டுமே சீனா கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற அனைத்து துறைகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹொங்கொங் அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இருப்பினும், இந்த அரசு சீனாவின் கைப்பாவையாக மாறியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தேசிய பாதுகாப்பு சட்டம் இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக ஹொங்கொங்கின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் சட்டங்களைச் சீனா தொடர்ந்து இயற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் வலுத்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் முன்பு கூட ஹொங்கொங் தேசியப் பாதுகாப்பு சட்டத்தைச் சீனா நிறைவேற்றியது.

இதன் மூலம் ஹாங்காக்கின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளைச் சீனா விசாரிக்க முடியும்.

இந்நிலையில், ஜனநாயகவாதிகளுக்கு பெரும் பின்னடைவாகத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக ஹொங்கொங்கில் பல ஜனநாயகவாதிகள் 06 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முன்னாள் ஹொங்கொங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் டூ, லாம் சியூக் டிங் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களை ஹொங்கொங் காவல் துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

கடந்தாண்டு அரசின் எச்சரிக்கையையும் மீறி, ஒப்புதலின்றி ஹொங்கொங் நகரச் சட்டப்பேரவை தேர்தலை நடத்தி, அதில் வாக்களித்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன, ஜனநாயகவாதிகள் திட்டம் 70 இடங்களைக் கொண்ட ஹொங்கொங் நகரச் சட்டப்பேரவையைக் கைப்பற்றுவதன் மூலம், அரசின் நடவடிக்கைகளை முடக்க முடியும் என்று ஜனநாயகவாதிகள் கருதினர். மேலும், இதன் மூலம் ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அழுத்தத்தையும் அதிகரிக்க முடியும் என்று சில ஜனநாயகவாதிகள் அப்போது பொதுவெளியில் உரையாற்றினர்.

இவை அனைத்தும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக அரசு தற்போது தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 






டொனால்ட் ட்ரம்பின் சமூகவலைத்தள கணக்குகள் அனைத்தும் முடக்கம்

டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ @POTUS மற்றும் தனிப்பட்ட @realDonaldTrump ட்விற்றர் கணக்குகளை, ட்விற்றர் நிறுவனம் முற்றாக முடங்கியுள்ளது.

அப்பக்கங்களுக்கு செல்ல முடியுமாக இருக்கின்ற போதிலும், அதில் எவ்வித இடுகைகளை பார்வையிட முடியாதுள்ளது. அத்துடன் எந்தவொரு இடுகைகளையும் டொனால்ட் ட்ரம்பினால் புதிதாக இடமுடியாத வகையில் அது பேணப்பட்டு வருகிறது.

புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் ட்விற்றர் கணக்கான @POTUS, ஜோ பைடனுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் போது அதில் எவ்வித தொடருனர்களும் (Followers) இல்லாமலேயே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை கால வரையின்றி முடக்குவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் அறிவித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ட்ரம்ப்பின் தூண்டுதலால் அவரது ஆதரவாளர்கள் கடந்த புதன்கிழமை அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில்  4 பேர் உயிரிழந்தனர். 

இதனிடையே, சமூக வலைதளம் மூலம் டிரம்ப் விடுத்த அழைப்பின்பேரில்தான் அவரது ஆதரவாளர்கள் வொஷிங்டனில் திரண்டதுடன், பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டதால் ஜனாதிபதி ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஒரு நாளைக்கு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஜனவரி 20 வரை முடக்கப்படுவதாக அந்நிறுவனங்களின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் அறிவித்தார். இதனால், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் ஜனவரி 20ஆம் திகதி வரை டிரம்ப் பேஸ்புக், இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்த முடியாது என்பது உறுதியானது.  இந்நிலையில் ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை கால வரையின்றி முடக்குவதாக ஸக்கர்பர்க் அறிவித்துள்ளார்.    நன்றி தினகரன் 







ஜுலியன் அசாஞ்ச்சுக்கு பிணை வழங்க மறுப்பு

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ச்சைப் பிணையில் விடுதலை செய்ய லண்டன் நீதிமன்றம் மறுத்துள்ளது. அவ்வாறு விடுவித்தால் அசாஞ்ச் தலைமறைவாகக்கூடும் என்று நீதிபதி கூறினார்.

உளவுக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக அவரைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரிவருகிறது. அசாஞ்ச் அதற்கு எதிராக வாதிட்டு வருகிறார்.

மனநலப் பிரச்சினை இருப்பதால் அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என்று இந்த வாரத் தொடக்கத்தில் லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து அமெரிக்கா தற்போது மேன்முறையீடு செய்துள்ளது.

விக்கிலீக்ஸ் மூலம் அமெரிக்காவுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ரகசிய இராணுவ ஆவணங்கள் வெளியிடப்பட்டது குறித்து அமெரிக்கா விசாரணை மேற்கொள்ள எண்ணுகிறது.

அந்த ஆவணங்கள் கசியப்பட்டதால், பலரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.    நன்றி தினகரன் 






ட்ரம்பை பதவியிலிருந்து நீக்க ஜனநாயகக் கட்சி கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்பாக மக்களவை சபாநாயகர் நேன்சி பெலோசியும், செனட் சபையின் ஜனநாயகக் கட்சியினரின் தலைவர் சக் ஷூமரும் ட்ரம்ப் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 25ஆவது திருத்தத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்ஸை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

துணை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்ய அந்தத் திருத்தம் வகைசெய்யும்.

துணை ஜனாதிபதி அதற்குச் சம்மதிக்காவிட்டால், ஜனாதிபதி மீது அரசியல் குற்றச்சாட்டை முன்வைக்க முனைந்துள்ளனர் ஜனநாயகக் கட்சியினர். பாராளுமன்றக் கட்டடத்தில் அமெரிக்க நேரப்படி கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குழப்பத்துக்கு ட்ரம்ப் தான் காரணம் என்று அவர்கள் சாடினர்.

ட்ரம்பின் பதவிக் காலம் வரும் ஜனவரி 20 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. அன்றைய தினத்தின் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.

“இன்னும் 13 நாட்களே இருக்கின்றபோதும் அமெரிக்காவில் எந்த நாளேனும் ஆபத்தான நிலை ஏற்படலாம்” என்று ட்ரம்பின் எஞ்சிய பதவிக் காலம் குறித்து பெலோசி கூறினார். “ட்ரம்ப் மிக ஆபத்தான நபர்” என்று குறிப்பிட்ட அவைத்தலைவர் பெலோசி “இது மிகப் பெரிய அவசர நிலை” என்று கூறியுள்ளார்.

ட்ரம்பின் அமைச்சரவை சகாக்கள் 25ஆவது திருத்தத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், கண்டனத் தீர்மானத்தின் கீழ் ட்ரம்பை தண்டிக்க வேண்டுமானால், அதற்கு செனட்டில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். அதற்கு ஜனநாயக கட்சியினர் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றாக வேண்டும். தேவையான எண்ணிக்கையில் அப்படி குடியரசுக் கட்சி செனட்டர்களின் ஆதரவைப் பெறமுடியும் என்று இப்போது தோன்றவில்லை. அடம் கின்சிங்கர் என்பவரே 25ஆவது சட்டத் திருத்தத்தை பயன்படுத்தி ட்ரம்ப் பதவி நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த முதல் குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களான, மேரிலாந்து, வெர்மோன்ட் மாநில ஆளுநர்களும் ட்ரம்ப் பதவி நீக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். ட்ரம்பின் செயல்கள் இந்த திருத்தச் சட்டத்தை பயன்படுத்தப் பொருத்தமானவை என்று அவை நீதிக் குழுவில் ஜனநாயக கட்சியினர் கூறியுள்ளனர்.

ஆனால், செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை ஆகியவை ஜனவரி 20ஆம் திகதி பைடன் பதவி ஏற்கும் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமானால், இந்த இரு அவைகளையும் மீண்டும் கூட்ட வேண்டும்.

சிறப்புத் தூதர் மிக் முல்வானே, ஒரு மூத்த தேசியப் பாதுகாப்பு அதிகாரி, ட்ரம்பின் மனைவி மெலனியாவின் (முதல் சீமாட்டி) பத்திரிகை தொடர்பு செயலாளர் ஆகியோர் பாராளுமன்றத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து பதவி விலகியுள்ளனர். ட்ரம்ப் பதவியில் தொடரத் தகுதியற்றவர் என்று ட்விட்டரில் கூறிய வெளியுறவுத் துறை ஆலோசகர் ஒருவர் பதவி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 






தேர்தல் தோல்வியால் வன்முறையை தூண்டிய ட்ரம்ப்

தேர்தல் தோல்வியால் வன்முறையை தூண்டிய ட்ரம்ப்-US Capitol Hill Siege-4 Killed

- ஜோ பைடன் ஜனாதிபதியாக தெரிவானதாக அறிவிப்பு
- அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
- நாலவர் மரணம்; உலக நாடுகள் கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பே வன்முறையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது அவமானம் என உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வை தடுக்கும் வகையில், டொனால்ட் ட்ரம்ப் தமது ஆதரவாளர்களுக்கு நேற்று அறை கூவல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் கெபிட்டல் கட்டடத்தில் எல்க்டோரல் வாக்குகளை பரிசீலனை செய்து ஜோ பைடன் வெற்றியாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பணிகள் தொடங்கின.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.

இந்த பணிகளை தடுத்து நிறுத்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் கெபிட்டல் கட்டடத்திற்குள் நுழைந்தனர். அப்போது கட்டடத்தின் ஜன்னல்களை உடைப்பது, அங்கிருந்த பொருட்களை சூறையாடுவது என கலவரமாக மாறிய குறித்த போராட்டத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

அத்துமீறி உள்ளே நுழைந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாத நிலையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பெண் ஒருவர் பலியானார்.

சில கலவரக்காரரர்கள் பக்கச் சுவற்றைப் பிடித்து ஏறிச் சென்று நாடாளுமன்ற செனட் அவைக்குள் நுழைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கல் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்கு முன்னர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் இது போன்ற வன்முறை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தற்போது இடம்பெறும் வன்முறை தொடர்பில் உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

நார்வோஜியன் பிரதமர் எர்னா சோல்பெர்க் கூறுகையில், வாஷிங்டனில் நாம் பார்ப்பது முற்றிலும் ஏற்க முடியாதது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் எனத் தெரிவித்துள்ளார்.

கேப்பிடல் கட்டடம் மீண்டும் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்து, நிறுத்தப்பட்ட நாடாளுமன்றக் கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.

இச்சம்பவத்தில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்பாட்டக்காரர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கலவரம் குறித்து தெரிவித்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், தனது கண்டனைத்தை வெளியிட்டதோடு, டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்த வன்முறை வெளிப்பாடே இதுவென்றும், ட்ரம்ப் தனது கும்பலை போராட்டத்துக்கு தூண்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனநாயகம் கடுமையான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், நாட்டின் வரலாற்றில் இது ஒரு இருண்ட தருணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களை வீட்டுக்குத் திரும்புமாறு தெரிவித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள வீடியோவை, தேர்தல் விதிமுறை மீறல் மற்றம் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என ட்விற்றர் தளம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் மெட் பொட்டிங்கர் உள்ளிட்ட வெள்ளை மாளிகை நிர்வாக அதிகாரிகள் நால்வர் தங்களது இராஜினாமாவை அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத் தொகுப்பு...

 

அமெரிக்க கேபிடல் கட்டடத்தின் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த போராட்டக்காரர் ஒருவர் கையில் கான்ஃபெடரேட் கொடியை பிடித்திருக்கிறார்.
படக்குறிப்பு,

அமெரிக்க கேபிடல் கட்டடத்தின் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த போராட்டக்காரர் ஒருவர் கையில் கான்ஃபெடரேட் கொடியை பிடித்திருக்கிறார்.

நன்றி தினகரன் 





1 comment:

Dale Garner said...

Interesting thoughts I really enjoyed your blog.