எழுத்தும் வாழ்க்கையும் --- அங்கம் 23 முருகபூபதி முதல் மாதச்சம்பளம் 230/= ரூபா ! கற்றதும் பெற்றதும்தான் புத்திக்கொள்முதல் ! !



ஜே.ஆர். ஜெயவர்தனா 1977 இல் பிரதமராக பதவியேற்றதும்  அவரது அரசியல் வாழ்வில் ஒளிவீசத்தொடங்கியது. அதுவரையில்  நாடாளுமன்ற உறுப்பினராகவும், இறுதியாக டட்லிசேனாநாயக்கா 1965 முதல் 1970 வரையில் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இராஜாங்க அமைச்சராகவும், பின்னர் அந்த அரசு தேர்தலில் தோல்விகண்டதும் எதிர்க்கட்சித்தலைவராகவும்  பதவியிலிருந்த  ஜே.ஆரின் அரசியல் வாழ்வு திசைதிரும்பியதைப்போன்று, எனது வாழ்வும் திசைதிரும்பியது.

அவர் பிறந்து தவழ்ந்த கொழும்பு – 14  கிராண்ட் பாஸ் வீதியில் அமைந்த இல்லத்திலேயே எனக்கும் ஒரு வேலை நிரந்தரமாக கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்திருக்கமாட்டேன்.  எனது இந்த வாழ்க்கைத் தொடரில்  ஜே.ஆர். அடிக்கடி வருவார்.  அது தவிர்க்கமுடியாது.

அவரது சோதிடக்குறிப்பை நான் பார்த்ததும் தற்செயல்


நிகழ்வுதான்! எங்கள் ஊருக்கு அவர் அரசியல் கூட்டங்களுக்கு பேச வந்தசந்தர்ப்பங்களில், மேடையருகில் நின்று கேட்டிருக்கின்றேன்.  நீர்கொழும்பு பிரதேச வீரகேசரி நிருபராக அவரது உரையை எழுதியுமிருக்கின்றேன்.

பின்னர் காலிமுகத்திடலில் பணியாற்றியபோது, அவர் தினமும் பவனிவரும் காரை மாத்திரமல்ல, ஶ்ரீமாபண்டாரநாயக்கா, மற்றும் பல அரசியல் தலைவர்கள் பயணிப்பதையும் மேலும் ஒரு சிலர் காலிமுகத்திடலுக்கு நடைப்பயிற்சிக்கு வருவதையும் பார்த்து ரசித்திருக்கின்றேன்.

வீரகேசரி பத்திரிகை தற்போது 90 வயதையும் கடந்து வெளியாகிறது.  அங்கே ஆசிரியபீடத்திலும் ஒப்புநோக்காளர் பிரிவிலும் பல ஆளுமைகள் பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை அங்கு சிரேஷ்ட துணை ஆசிரியர்களாகவிருந்த எழுத்தாளர்கள் ( அமரர் ) கார்மேகம், மற்றும் இலக்கிய சகோதரி அன்னலட்சுமி இராஜதுரை ஆகியோரின் வாயிலாக முன்னரே அறிந்திருக்கின்றேன்.

பிரதேச நிருபராகவிருந்தபோது, மலையகத்தில் அட்டனில் நடந்த மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின்  மாநாட்டிலும் பார்வையாளராக கலந்துகொண்டமையால், அங்கே முழு வீரகேசரி குடும்பத்தினரையும்  சந்தித்திருக்கின்றேன்.


அந்த மாநாட்டில்தான்  முதலாவது வீரகேசரி பிரசுரமாக  வெளியான கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை நாவல்  வெளியிடப்பட்டது.

இம்மாநாட்டில் மலையகத்தின் மூத்த எழுத்தாளர் என்.எஸ். எம். ராமையா  மன்றத்தின் தலைவராகத் தெரிவானார்.  இரவு நடந்த நிகழ்ச்சியில்  அன்றைய நியமன எம்.பி.யும் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஏ. அஸீஸ், தமிழக கம்யூனிஸ்ட் எம்.பி. தோழர் பாலதண்டாயுதம், இலங்கை அமைச்சர் செல்லையா குமாரசூரியர் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

ஶ்ரீமாவின் அரசில் அங்கம் வகித்த அஸீஸும், குமாரசூரியரும் தோட்டத் தொழிற் சங்கம் விவகாரத்தில் மேடையில்


நேருக்குநேர் வாய்த்தர்க்கம் புரிந்ததும் அந்த மாநாட்டு மேடையில்தான்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அவசியமில்லை, அவர்கள் நேரடியாக அரசுடன் பேசி தங்கள் தேவைகளை பூர்த்திசெய்யலாம் என்பதே அரசியலில் நேற்றுப்பெய்த மழைக்கு முளைத்த காளானாக விளங்கிய குமாரசூரியரின் வாதமாக இருந்தது.

அதனை எதிர்த்து அஸீஸ் ஆவேசமாக குரல் கொடுத்தார்.  இந்த வேடிக்கைகளை வீரகேசரி குடும்பத்தினருடன் நானும் பார்த்து ரசித்தேன்.  கார்மேகம், டேவிட் ராஜூ, அன்னலட்சுமி இராஜதுரை, சொலமன்ராஜ்,  கோவிந்தராஜ், எச். எச். விக்கிரமசிங்கா, நிர்மலா மேனன்,  எஸ். என். தனரத்தினம், உட்பட பலர் வீரகேசரியிலிருந்து வந்திருந்தனர்.


இவர்களுடன் மலையக எழுத்தாளர்கள் இர. சிவலிங்கம்,  வாமதேவன், தெளிவத்தை ஜோசப், என். எஸ். எம். ராமையா மாத்தளை கார்த்திகேசு,  மலரன்பன், மாத்தளை வடிவேலன்,  திருச்செந்தூரன், , மல்லிகை சி. குமார், வத்துமுல்லை நேசன்,  உட்பட பலரும் கலந்துகொண்டனர்.  

அதுவரையில் வடபுலத்தைச்  சேர்ந்த எழுத்தாளர்களுடனும், தென்னிலங்கையைச்சேர்ந்த எழுத்தாளர்களுடனும்  அறிமுகம் பெற்றிருந்த எனக்கு மலையக படைப்பாளிகளின் அறிமுகமும் நட்புறவும் கிடைப்பதற்கு அந்த அட்டன் மாநாடு பெரிதும் உதவியது.

நீர்கொழும்பில் எமது இலக்கிய வட்ட நண்பரும் மலையகத்தைச்சேர்ந்தவருமான பவானிராஜா என்பவருடன் இந்த நிகழ்ச்சிக்குச்சென்றிருந்தேன்.  இவர்கள்


அனைவருடனும் எனக்கு தொடர்ச்சியான நட்புறவு நீடித்தது. இவர்களில் சிலர் இன்று இல்லை. எனினும் எனது மனதில் நினைவுகளாக வாழ்கிறார்கள்.

நினைவிலிருக்கும் இவர்கள் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கின்றேன். 

02-08-1977 ஆம் திகதி வீரகேசரி ஒப்புநோக்காளர் பணிக்கு விண்ணப்பித்து, அதன்பிறகு நடந்த நேர்முகத்தேர்வுக்குச்  சென்று திரும்பியிருந்த வேளையில்,   கலவரம் வந்தது.  நேர்முகத்தேர்வின் முடிவுக்காக காத்திருந்தேன்.

இக்கலவரவேளையில்  அந்த வேலையும் கிடைக்குமா..?  என்ற சந்தேகம் மனதில் துளிர்விட்டது.   அவ்வாறு கிடைக்காதுபோனால்,  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வேலையும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வேலையும் இருக்கிறதுதானே ..? என்ற ஆறுதலும் மனதை தேற்றினாலும், ஒரு நிரந்தரமான வேலையின் தேவையை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

எனது தங்கையின் திருமணத்திற்கு நாள் குறித்துவிட்டார்கள். அதற்கான செலவுகளுக்கு வீட்டில் என்னையே நம்பியிருந்தார்கள். அதற்குள் கலவரம் வந்துவிட்டது. காலை எழுந்ததும் தபால்சேவகர் வரும் வரையில் வழிமேல் விழிவைத்து காத்திருந்தேன்.


நாட்கள் ஆமைவேகத்தில் நகர்ந்தன. நம்பிக்கை இழந்துவிட்டிருந்தேன். ஒருநாள்  வெளியே நண்பர்களை பாரக்கச்சென்றுவிட்டு மதியத்திற்கு மேல் வீடு திரும்பியபோது, தங்கை எதிர்ப்பட்டு,   “ அண்ணா… நேரேபோய் முகம் கழுவிவிட்டு வாருங்கள். சுவாமி அறையில் உங்களுக்கு ஒரு நற்செய்தி இருக்கிறது  “  என்றாள்.

 “ சொல்லு…சொல்லு…. “ஆர்வம்மேலிடக்கேட்டேன். அவளே என்னைத்தள்ளிக்கொண்டு  தண்ணீர் தொட்டியருகே அழைத்துவந்து  நீர்வார்த்துவிட்டு துடைப்பதற்கு டவலும் தந்தாள். அவளது முகத்தில் பூரிப்பு.  சிலவேளை அவளது திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்துவிட்டதோ..?  அவ்வாறு வந்தால் முதலில் அதனை சுவாமி அறையில்தான் வீட்டில் வைப்பார்கள் என்பதை 1966 இல் அக்காவின் திருமணம் நடந்தகாலத்தில் பார்த்திருக்கின்றேன்.

முகத்தை துடைத்துக்கொண்டு தங்கை பின்னால் சென்றேன்.  அவளே ஒரு கடிதத்தை சுவாமி அறையிலிருந்து எடுத்து காண்பித்தாள் அதன் உறையில்  EXPRESS NEWS PAPERS ( Ceylon ) LIMITED என அச்சிடப்பட்டிருந்தது.

உறையை பிரித்துப்பார்த்தேன்.

நான் வீரகேசரியில் ஒப்புநோக்காளர் பதவிக்கு தெரிவாகியிருப்பதாகவும், 01 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் 1977 ஆம் திகதி வந்து பணியை பொறுப்பேற்கவும் என ஆங்கிலத்தில்   தட்டச்சில் எழுதப்பட்டிருந்தது.

எனக்கு நேர்முகத்தேர்வு நடத்திய வீரகேசரி ஆக்கத்துறை மேலாளர் (Administrative Officer) எஸ். பாலச்சந்திரனிடமிருந்து அக்கடிதம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி எழுதப்பட்டிருந்தது.  அக்கடிதம் கிடைத்தது மறுநாள் 31 ஆம் திகதி.

அம்மாவிடம் காண்பித்தேன்.  மாலையில் அப்பாவிடமும் காண்பித்தேன்.

இருவரும் கேட்ட ஒரே கேள்வி:  “ என்ன சம்பளம் தருவார்கள்..?  “

 “ நாளை செப்டெம்பர் முதலாம்  திகதி போனால்தானே தெரியும்  “  என்பது எனது பதிலாக இருந்தது.

சென்றேன்.  என்னுடன் தெரிவான வீரகத்தி தனபாலசிங்கம்  சில நாட்களில் கரவெட்டியிலிருந்து  வந்துசேர்ந்தார். செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி எமது வீரகேசரி அலுவலக சிற்றூழியர் ஒருவர்,  எமது ஒப்புநோக்காளர் பிரிவுக்கு வந்து என்னிடமும் தனபாலசிங்கத்திடமும் கடித உறைகளை கொடுத்துச்சென்றார். 

மூன்று பக்கங்களில் ஆங்கிலத்தில் தட்டச்சுசெய்யப்பட்டிருந்த அக்கடிதத்தில்  நிர்வாகத்தின் சட்ட விதிமுறை  ஒழுங்குகள் பற்றியும் எழுதப்பட்டிருந்தது.  மாதச் சம்பளம் 220 ரூபா !

தினமும் பஸ் பயணத்திற்கும் கைச்செலவிற்கும் போனால் எஞ்சுவது எவ்வளவு..? மனம் கணக்குப்போடத் தொடங்கியது.  வீரகேசரி அப்போது  பகல்பொழுதில்  மறுநாளுக்கான வடக்கு – கிழக்கு – மலையகப்பதிப்புகளுடனும்  இரவில் நகரப்பதிப்புடனும் அச்சாகியது.  அத்துடன் மித்திரனும் அச்சானது.  வார இறுதியில் மித்திரன் வார மலரும், வீரகேசரி வாரவெளியீடும் அச்சானது.  வார இதழ்கள் சனிக்கிழமைகளில் அச்சானது.

வீரகேசரியில் பணியாற்றிய ஆசிரிய பீடத்தினர் , ஒப்புநோக்காளர்கள், மற்றும் அச்சுக்கோப்பாளர்களுக்கு  கடமை நாள்  மனதில் இருக்கவேண்டியது  மிக மிக முக்கியம். அதாவது, அவர்கள்  திங்கட்கிழமை பணியாற்றினால், அன்றைய தினம் அவர்களது மனதில் செவ்வாய்க்கிழமையாகவே பதிவாகியிருத்தல் அவசியமானது.  இதனைப்படிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.

திங்களில்  செய்திகள் எழுதப்பட்டு,  அச்சுக்கோர்க்கப்பட்டு  அச்சாகும் பத்திரிகை,  மறுநாள் செவ்வாய்க்கிழமைதானே வெளியாகிறது.  எனவே திங்கட்கிழமை நடந்த சம்பவம் பற்றிய செய்தியை இன்று என எழுதாமல், நேற்று நடந்தது என்றுதான் எழுதவேண்டும். அவ்வாறே அச்சுக்கோர்க்கவும் வேண்டும்.

நான் அங்கே கற்ற முதல் பாடம் அதுதான்.

இந்த நேற்று என்ற சொல்தான்  நேற்று முன்தினம் என மாறநேர்ந்து, அந்த நேற்று சனிக்கிழமையாகவிருந்து, அதனை அச்சுக்கோர்த்தவர்,  பக்க வடிவமைப்பில் நேர்ந்த நெருக்கடியினால், நேற்று முன்தினம் என்ற வரிக்குப்பதிலாக சனியன்று என எழுத்துக்கோர்க்கப்போய்,  அதில் வரவேண்டிய று எழுத்து தவறி,  அது சனியன்  என்று வந்தது..!

அந்தச்  சனிபகவான்தான்  தேசத்தின் அதிபரிடமிருந்து வீரகேசரியை காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டாயிரம் பிரதிகளை எரிக்கச்செய்தார்.

அச்சுப்பிசாசு என்னவெல்லாம் செய்யும் என்பதை அங்கே நானும்  இதர ஒப்புநோக்காளர்களும்  அனுபவித்தோம்.

சங்கிலி மன்னன்  சிலையருகில்தான் தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஒரு கூட்டம் நடந்தது.  சங்கிலி என்ற சொல்லில் ங் வராமல் க் வந்தால் என்னவாகும்..?

பழைய மாணவி என்று வரவேண்டிய வசனத்தில் பழைய மனைவி என்று வந்தால் என்னவாகும்…?

கல்வி அமைச்சர் என வரவேண்டிய வசனத்தில்,   ல் எழுத்து எழுத்தாக மாறியிருந்தால் என்னவாகும்…?

இவையெல்லாம் நிகழ்ந்தன.!

சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம்,  கண்ணதாசன், ஜெயகாந்தன், விந்தன் முதலான எழுத்தாளர்களும் தமது எழுத்து வாழ்க்கையை ஒப்புநோக்காளர்களாகவிருந்துதான் ஆரம்பித்தார்கள்.

அறிஞர் அண்ணாத்துரை   நடத்திய திராவிட நாடு என்ற பத்திரிகையிலேயே பாரதூரமான எழுத்துப்பிழை வந்ததாக சொல்லப்படுவதுண்டு.  கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு முதலான கொள்கைகளை பற்றிப்பிடிக்கவேண்டும் என்ற வசனத்தில்  ள் என்பதற்குப் பதிலாக  வேறு எழுத்துவந்து விபரீதம் நேர்ந்ததாக சொன்னார்கள் !

இந்த கணினி யுகத்தில் வெளியாகும் பத்திரிகைகள், இதழ்களிலும் பாரதூரமான எழுத்துப்பிழைகள் வந்துகொண்டிருக்கின்றன.

அதனை அச்சுப்பிசாசு என்றும்  நம்காலத்தில் அழைத்தார்கள்.

பத்திரிகைளில்  பணியாற்றுபவர்களில்  ஆசிரிய பீடத்தினர், அச்சுக்கோப்பாளர்கள் – ஒப்புநோக்காளர்கள் மத்தியில் புரிந்துணர்வும் பொறுப்புணர்வும் மிக மிக அவசியம் என்பதையும் எனது கடமையின்போது  உணர்ந்துகொண்டேன்.

ஆசிரிய பீடத்தில் ஆனந்த திஸ் டீ அல்விஸ் என்று வரவேண்டிய செய்தியில் நீல் டீ அல்விஸ் என்று எழுதித்தரப்பட்டிருந்தால், அதனை சரியாக திருத்தும் அரசியல் அறிவும் ஒப்புநோக்காளருக்கு தேவைப்படும் !

ருஷ்ய ஜார் மன்னரை ஜோர்ஜ் மன்னர் என்று எழுதித்தந்தால், அதனையும் திருத்துவதற்கு தெரிந்திருக்கவேண்டும்.

அந்தத்தவறுக்கு அதனை எழுதியவர்தான் பொறுப்பு என்று சொல்லி கூட்டுப்பொறுப்பிலிருந்து தப்பிவிடக்கூடாது !

 ஊடகம் என்பது உண்மைக்கானது. 

220 ரூபா  மாதச் சம்பளத்துடன்  இவ்வாறு பலதையும் கற்றுக்கொண்டேன்.

வீரகேசரி ஒப்புநோக்காளராக இருந்தகாலப்பகுதியில்  கற்றதையும் பெற்றதையும் எனது புத்திக்கொள்முதலாக்கினேன்.

அக்கொள்முதல்தான் நான் பெற்ற எழுத்துலக வாழ்வின் முதல் அங்கம்.

( தொடரும் ) 

No comments: