இலங்கைச் செய்திகள்

 இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்

ETI நிதி நிறுவன பணிப்பாளர்கள் நால்வருக்கும் பிணை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம்

அரசுடன் முட்டிமோதுவதால் சிறுபான்மைக்கு நன்மை கிடைக்காது

மருதமுனை சுனாமி வீட்டுத் திட்டம்; நிர்மாணித்து முடிக்கப்பட்ட போதிலும் கையளிக்கப்படாமல் கிடக்கும் வீடுகள்

இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கையில் நின்றவேளை பிரதமர் மகிந்த வெளியிட்ட அதிரடி கருத்து

யாழ்.உடுவில் பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது வெளியிட்டுள்ள தகவல்கள்


இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்-Indian External Affairs Minister Dr S Jaishankar Arrived in Sri Lanka

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்.

விசேட விமானம் மூலம் வந்தடைந்த அவரை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிராந்திய உறவு நடவடிக்கைகள்‌ இராஜாங்க அமைச்சர்‌ தார பாலசூரிய மற்றும் இலங்கை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரினால் வரவேற்கப்பட்டார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு இரு நாள் உத்தியோகபூர்வ  விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நாளை மறுதினம் (07) வரை இலங்கையில் தங்கியிருப்பாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இக்காலப் பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட தலைவர்களையும், வர்த்தக தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக, இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்-Indian External Affairs Minister Dr S Jaishankar Arrived in Sri Lanka

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்-Indian External Affairs Minister Dr S Jaishankar Arrived in Sri Lanka

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்-Indian External Affairs Minister Dr S Jaishankar Arrived in Sri Lanka






ETI நிதி நிறுவன பணிப்பாளர்கள் நால்வருக்கும் பிணை

ETI நிதி நிறுவன பணிப்பாளர்கள் நால்வருக்கும் பிணை-Former ETI Finance Directors Releases on Bail

ETI (எதிரிசிங்க நம்பிக்கை முதலீடு) நிதி நிறுவனத்தில் வைப்பீடு செய்யப்பட்ட பல பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட  அதன் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில், சுவர்ணமஹால் நகையகத்துடன் இணைந்த குறித்த நிதிநிறுவனத்தின் பணிப்பாளர்களில் நால்வரையும் கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய, நேற்றையதினம் (05) ஜீவக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, தீபா அஞ்சலி எதிரிசிங்க ஆகிய மூவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.  

இதில் 4ஆவது சந்தேகநபரான, நாலக எதிரிசிங்க இன்றையதினம் (06) CIDயில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நால்வரும் இன்று (06) பிற்பகல் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நால்வரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் தலா ஒரு மில்லியன் ரூபா கொண்ட இரண்டு பிணைகளில் விடுவிக்கப்பட்டதோடு,

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் CIDயில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டது.

அத்துடன், குறித்த சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதவான், அவர்களது கடவுச்சீட்டுகளை இரத்து செய்யுமாறும் உத்தரவிட்டார்.   நன்றி தினகரன்   






தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம்

மட்டக்களப்பில் காந்திபூங்கா முன்பாக ஆர்ப்பாட்டம்

சிறைச்சாலைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று (05) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அரசியல் கைதிகளின் உறவினர்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்கள் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்து, ஜனாதிபதியின் புத்தாண்டு பொங்கல் பரிசாக அரசியல் கைதிகளை விடுதலை செய், எமது உறவுகளை சிறைகளில் அடைத்து மரணமடைய வைக்காதே மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்குங்கள் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி கோஷமெழுப்பினர்.

கொவிட் - 19 வைரசைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், அருட்தந்தை ஜோசப் மேரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முண்ணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், இணையம் அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் மற்றும் சர்வ மத சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு இணைப்பாளர் எஸ் சிவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு விசேட நிருபர்   -   நன்றி தினகரன்   






அரசுடன் முட்டிமோதுவதால் சிறுபான்மைக்கு நன்மை கிடைக்காது

- அலி சப்ரி ரஹீம் எம்.பி

அரசாங்கம் இனவாதிகளின் நெருக்கடி காரணமாக இரு தலை கொள்ளி எறும்பின் நிலையில் இருப்பதால் நிலைமையை சமாளித்து விரைவில் உடல் தகனம் விவாகரத்துக்கு முற்று புள்ளி வைக்கும் என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். அலி சப்ரி ரஹீமின் வாழ்வாதாரம் அளிக்கும் திட்டத்தின் ஓர் அங்கமான பாலாவி கரம்பையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ப்ரதம எப்பரல்ஸ் தனியார் நிறுவனத்தினை (கரம்பை கார்மண்ட் ) திறந்து வைத்து உரையாற்றும் போதே அலி சப்ரி ரஹீம் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அலி சப்ரி ரஹீம்

அரசாங்கத்துடன் முட்டி மோதும் போக்கை தொடர்வதால் சிறுபான்மை சமூகத்துக்கு எதுவித நன்மையும் கிடைக்க போவதில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் . கடந்த தேர்தலில் எதிரணி சார்பாக களத்தில் நின்ற நீங்கள் ஏன் அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு வந்தீர்கள் என்று என்னிடம் கேட்கின்றனர். கோட்டாபய அரசாங்கம் முழுக்க முழுக்க சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே மூன்றில் இரண்டு என்னும் பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்துக்கு வந்தது. இது சிறுபான்மை மக்களை எங்கோ ஒரு மூலைக்கு தள்ளி வைக்கும் வாய்ப்பை இலகுவாக உருவாக்கும்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி - பாராளுமன்றம் என்னும் இரண்டும் கெட்டான் அதிகார போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் 20ஆவது திருத்த சட்டத்தை கொண்டு வந்தார்.

ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் குறிப்பிட்ட திட்டத்துக்கு ஆதரவளிக்காது விட்டிருந்தாலும் கூட அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே இருக்கும். ஆனால் எமது ஆதரவின் மூலம் ஜனாதிபதியின் அதிகார பலத்தில் முஸ்லிம்கள் எமது பங்களிப்பும் நிலை நாட்டப்பட்டுள்ளது. இது அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள அந்தஸ்தையும் அரச உயர் மட்டத்தினரோடு சம பந்தியில் உட்கார்ந்து பேசுவதற்கும், வேலை வாய்ப்பு, அதிகாரம், அபிவிருத்தி போன்றவற்றை பெறுவதற்கும் எமக்கு வாய்ப்பளித்துள்ளது.

மாறாக ஜனாஸா எரிப்பு போராட்டங்களில் கலந்து கொண்டு பத்தோடு பதினொன்றாகி மக்களுக்கான வாய்ப்புகளை வீணடிக்க நான் விரும்பவில்லை. தேர்தல் காலங்களில் நான் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப அரசியல் ஊடாகவும் தனிப்பட்ட ரீதியிலும் சேவைகளை இறைவன் துணையால் வழங்குவேன்.

புத்தளம் தினகரன் விசேட நிருபர் - நன்றி தினகரன்   






மருதமுனை சுனாமி வீட்டுத் திட்டம்; நிர்மாணித்து முடிக்கப்பட்ட போதிலும் கையளிக்கப்படாமல் கிடக்கும் வீடுகள்

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 16 ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனாலும் அதன் எச்சங்கள் இன்னும் அழிந்து விடவில்லை. அவற்றில் ஒன்றுதான் மருதமுனை (65 மீற்றர்எல்லை) மக்களது வீட்டுப் பிரச்சினையாகும்.

ஆழிப் பேரலையின் தாக்கத்தினால் இலங்கையில் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களுள் மருதமுனை முதன்மையானது. அக்பர் கிராமம் இருபத்தைந்து வீட்டுத் திட்டம், நாற்பது வீட்டுத் திட்டம்,சம்ஸ் மத்திய கல்லூரி, மஸ்ஜிதுல் குமைதி பள்ளிவாசல் உட்பட மருதமுனையின் பெரும்பாலான இடங்களை சுனாமி காவு கொண்டதுடன், ஐந்நூற்றுக்கும் அதிகமான உயிர்களையும் பல கோடி ரூபா பெறுமதியான உடைமைகளையும் சுனாமி அழித்தொழித்தது.

சுனாமியைத் தொடர்ந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பிறான்ஸ் சிற்றி, இஸ்லாமிக் றிலீப்-65 மீற்றருக்கு உட்பட்டோர் வீட்டுத் திட்டம் எனப் பல குடியிருப்புகள் உருவாகின. சிற்சில குறைபாடுகளுடன் மக்கள் தங்கள் இருப்பிடத் தேவை நிவர்த்திப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.

65 மீற்றரில் எஞ்சிய வீடுகளுக்கு நடந்தது என்ன என்பதுதான் முக்கிய வினா.சுனாமி அனர்த்தத்தின் போது பெரும் பாதிப்பைச் சந்தித்த 65 மீற்றருக்கு உட்பட்ட மக்களின் எஞ்சிய வீடுகளைக் கையளிப்பதில் உள்ள இழுபறி முடிவின்றித் தொடர்கின்றது. அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட 65 மீற்றருக்கு உட்பட்டோர்(கடற்கரையோரம்) ஒன்றிணைந்து அமைப்பொன்றை உருவாக்கினர்.சுனாமி ஏற்பட்டு மூன்று வருடங்கள் கழிந்தும் தங்களுக்கு எவ்வித நிவாரணங்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து 2007.01.20 ஆம் திகதி மருதமுனை பிரதான வீதியை மறித்து வீதி மறியல் போராட்டத்தை மூன்று நாட்களாக நடத்தியிருந்தனர்.

அதன் பின்னர் அன்றைய அம்பாறை அரசாங்க அதிபராக இருந்த சுனில் கன்னங்கராவுக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு பிரதேச செயலாளராக இருந்த ஏ.எச்.எம்.அன்ஸார் தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

உடனடியாகவே பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்ட போது பிரதேச செயலாளராக இருந்த அன்ஸார், தூர நோக்கின் அடிப்படையில் 186 பேருக்கு வீடுகள் தேவை எனத் தெரிவித்தார். பேச்சுவார்த்தை உடன்பாட்டின் பின்னர் மருதமுனை மேட்டு வட்டையில் வீடமைப்புத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் ஆமை வேகத்தில் வீடுகள் கட்டப்பட்டன.

186 வீடுகள் கட்டப்படுவதாகத் தெரிவித்து வீடமைப்பு அமைச்சு அதற்கான எண்ணிக்கைப் பலகையினைக் காட்சிப்படுத்திய போதும் 178 வீடுகளே கட்டப்பட்டன. எட்டு வீடுகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது?

178 வீடுகளையும் கையளிக்கும் படலம் ஆரம்பமான போது கடலோரம் இருந்து 65 மீற்றருக்கு உட்பட்டவர்களில் முழுமையாக வீட்டை இழந்தவர்கள், வீடு சேதமானவர்கள், காணி மட்டும் உள்ளவர்கள் என 143 பேர் அடையாளம் காணப்பட்ட போதும், பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் 2012 ஆம் ஆண்டு நூற்று ஒன்பது வீடுகள் மாத்திரமே கையளிக்கப்பட்டன.

மீதமான 69 வீடுகள் யாருக்கும் வழங்கப்படாத நிலையில் இருக்க பிற்பட்ட காலப் பகுதியில் இடம்பெற்ற நீதிமன்ற உத்தரவின் நிமித்தம் 111 வீடுகள் கையளிக்கப்பட்ட நிலையில் 74 வீடுகள் கவனிப்பாரற்று இன்றும் கிடக்கின்றன.

மருதமுனையில் சுனாமியால் பாதிக்கப்பட்டும் படாமலும் வீடுகளற்ற நிலையில் உள்ள வறியவர்களுக்கும், புதிதாக இஸ்லாத்துக்கு வந்தவர்களுக்கும் ஒப்படைக்கலாம் என 65 மீற்றருக்கு உட்பட்ட அமைப்பினர் உள்ளிட்ட பலர் பிரயத்தனங்களை மேற்கொண்ட போதும் அதனை ஒப்படைப்பதில் கல்முனை பிரதேச செயலகம் இழுபறியையே கடைப்பிடித்தது. இதற்கிடையில் பல தடவை நேர்முகப் பரீட்சையும் நடைபெற்று, மீதி வீடுகளை வழங்கவதற்கான முயற்சிகளும் நடைபெற்றன. அவ்வாறு நடந்த நேர்முகப்பரீட்சை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் புகார் தெரிவித்தே வந்தனர். சிலர் அத்துமீறிக் குடியேறியும் பார்த்தனர்.

எல்லாமே தொடராகத் தடுக்கப்பட்டன. அரச அதிகாரிகள் நினைத்திருந்தால் கொடுத்திருக்கலாமே என கோசங்கள் எழுந்தன. இந்த இழுபறியின் பின்னணியில் உள்ள மர்மம் இன்னும் புரியாததாகவே உள்ளது.

16 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடங்கி ஜனாதிபதித் தேர்தல் வரை பலவற்றை இம்மக்கள் கடந்து விட்ட நிலையிலும், இதுவரை இம்மக்களின் பிரச்சினை இழுபறி நிலையிலேயே உள்ளது. அரசியல்வாதிகளின் உதாசீனம் குறித்து மக்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர். தேர்தல் காலங்களில் இவர்கள் வழங்கியுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதேசமயம் குறித்த வீடுகள் உடைந்து விழும் நிலைமைக்கு வந்து விட்டன.

எஞ்சியுள்ள வீடுகள் யார் யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கப்பால் அதனைப் பெறப் போகின்றவர்கள் ஏழைகள் ஆவர். அவர்கள் இன்று அவ்வீடுகளைப் பெற்றால் அதனை இலட்சக்கணக்கான ரூபா செலவு செய்து திருத்தியமைத்தே அதில் குடியேற வேண்டும். அவ்வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன.

ஜன்னல் கண்ணாடிகள் கழற்றப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ளன. மிருகங்களின் சரணாலயமாகவும் போதைவஸ்துக்காரர்களின் மறைவிடமாகவும் அவ்வீடுகள் மாறியுள்ளன. அரசியல்வாதிகளின் அலட்சியமும், அரச அதிகாரிகளின் கவனமின்மையுமே இதற்குக் காரணமென மக்கள் கூறுகின்றனர்.

வீடுகள் இல்லாமல் அத்துமீறி குடியேறி வசித்து வருகின்ற சில குடும்பங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்தும் உள்ளனர். இவ்வீடுகள் மீண்டும் ஒப்படைக்கப்படும் நிலைமை வந்தால் அதற்கான புனர்நிருமாணப் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

ஜெஸ்மி எம்.மூஸா
(பெரியநீலாவணை தினகரன் நிருபர்)   -   
நன்றி தினகரன்   







இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கையில் நின்றவேளை பிரதமர் மகிந்த வெளியிட்ட அதிரடி கருத்து


06/01/2021 கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவில் கூட வெளிநாடுகளுக்கு வழங்கும் எண்ணம் தமக்கு கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உறுதிபட தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு துறைமுகம் எமக்கு மிகவும் முக்கிய கேந்திர நிலையமாகும்.எனினும் கடந்த நல்லாட்சி அரசில் கொழும்பு கிழக்கு முனைய அபவிருத்தி குறித்து 2017 இல் இந்தியாவுடனும் 2019 இல் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் இரண்டு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. அதன்பின்னர் நாம் பல நெருக்கடிக்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.

எனவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ அல்லது முகாமைத்துவத்தையோ வெளிநாட்டிற்கு கையளிக்கும் எண்ணம் கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் நின்றவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளமை முக்கியத்துவம் பெறுகின்றது.   நன்றி IBC Tamil







யாழ்.உடுவில் பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

கொரோனா காலத்தில் மக்களுக்கு நிம்மதியின்மை   

யாழ்.உடுவில் - அம்பலவாணர் வீதி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த ரவுடிக் கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் 07ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

வயோதிபப் பெண் ஒருவரும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டுக்குள் புகுந்தே இவ்வாறு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

05 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், முகங்களை மறைத்தவாறு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பெறுமதியான இலத்திரனியல் பொருள்கள் உட்பட வீட்டிலிருந்த பொருள்களை அடித்து நொருக்கிச் சேதமாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. கொழும்பிலிருந்து வந்து வாடகை வீட்டில் தங்கியிருக்கும் தாயும், மகனும் அங்கு நீண்டகாலமாக வசித்து வரும் நிலையில், அவர்கள் எந்தப் பிரச்சினைக்கும் செல்வதில்லையென்றும் அயலவர்கள் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பாகச் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - நன்றி தினகரன்   





போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது வெளியிட்டுள்ள தகவல்கள்

 யாழ்.பல்கலைக்கழக முன்றலில் உணவுத் தவிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களால் தற்போது ஊடக சந்திப்பொன்று இடம்பெற்று வருகிறது.

இந்த ஊடக சந்திப்பில் தமது தற்போதைய நிலைப்பாட்டினை அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8 ஆம் திகதி இடித்தழிக்கப்பட்டது.

இந்த செய்தியை அறிந்து மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் தற்போதைய கொரோனா அச்சநிலை காரணமாக மாற்றமடைந்த நிலையில், மாணவர்கள் சிலர் தொடர்ந்தும் உண்ணா விரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனால் நேற்றுப் பிற்பகலில் இருந்து மாணவர்கள் ஆரம்பித்துள்ள “தீர்வு கிடைக்கும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம்” இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.     நன்றி IBC Tamil


No comments: