மாறா - திரைவிமர்சனம்


முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வருவதை தொடர்ந்து, தற்போது திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் மாதவன், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் மாறா திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு மார்ட்டின் ப்ரக்காட்டின் இயக்கத்தின் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த 'சார்லி' படத்தின் ரீமேக் தான் மாறா.

கதைக்களம்

கதாநாயகி பார்வதி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) தனது பாட்டியிடம் கதை சொல்லுங்கள் என்று அடம் பிடிக்கிறாள். ஒரு ஊர்ல ஒரு ராஜா, நரிக் கதை என்றே பாட்டி கதை சொல்கிறார். அது பாருவுக்குப் பிடிக்கவில்லை. அருகில் அமர்ந்திருக்கும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர், சிப்பாயி கதையைச் சொல்கிறார். அது பாருவின் மனதில் ஆழமாக பதிவாகிறது.

பார்வதி வளர்ந்த பிறகும், அந்த கதையை மட்டும் மறக்கவில்லை. பழமையான கட்டிடங்களை அதன் தன்மை மாறாமல் மறு சீரமைத்துப் பாதுகாக்கும் கட்டிடக் கலை நிபுணராகப் பணிபுரிந்து வரும் கதாநாயகி பார்வதிக்கு, வீட்டில் திருமணப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அந்த வரன் பிடிக்காமல் குடும்பத்தை விட்டு விலகி வேறு ஊருக்கு செல்கிறார் பார்வதி. தோழியின் உதவியுடன் விடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்குகிறார்.

சிறுவயதில் தான் கேட்ட கதையின் காட்சிகள் அங்கே ஓவியமாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். அதற்கு காரணமானவர், கதாநாயகன் மாறா (மாதவன்) இருந்த வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் இருக்கும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் உண்மை கதையின் சித்திரம் இருப்பதைப் பார்க்கிறார். ஆனால், அந்த கதை பாதியிலேயே நிற்கிறது.

கதையின் முடிவை அறிந்துகொள் வேண்டும் என்று ஆவலுடனும், மாறாவை சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் அவரைப் பற்றிய தேடி வரும் பார்வதி, அவருக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு, தன் தேடல் பயணத்தைத் தொடர்கிறார்.

அந்த சித்திரக் கதை முழுமை அடைந்ததா, மாறாவைப் பார்வதி சந்தித்தாரா, சிறுவயதில் கேட்ட கதையை மாறா எப்படி ஓவியமாக வரைய முடிந்தது, அதற்கான இணைப்பு என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

வயதுக்கு மீறிய கதாபாத்திரம் என்பதை மாதவன் நடிப்பு காட்டிக்கொடுத்துவிடுகிறது. கொண்டாட்டம், ஆர்ப்பாட்டம், துள்ளல், உற்சாகம் என கதாபாத்திரத்தின் அசல் தன்மை இதில் இல்லை. மாறாக, பக்குவமும், முதிர்ச்சியும் மாதவனிடம் அதிகம் தென்படுகின்றன. நாடோடிக்கான இலக்கணத்தில் அது சுத்தமாக பொருந்தவில்லை.

அசல் சார்லி படத்தை விட இப்படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றம், நாயகியை மையமாகக் கொண்டே கதை செல்கிறது. தான் கேட்ட கதை ஓவியமாக ஒரு ஊரில் கண்முன் விரிவதைக் கண்டு ஆச்சரியப்படும் ஷ்ரதா அடுத்தடுத்து மாறாவின் மீதான ஆர்வத்தை நடிப்பால் நிறுவும் விதம் பாராட்டுக்குரியது.

இசையைக் குழைத்து ஸ்டேண்ட் அப் காமெடி மூலம் இணையத்தைக் கலக்கி வரும் அலெக்ஸாண்டர் பாபு இதில் திருடனாகத் திறமை காட்டியுள்ளார். மௌலி, அபிராமி, கிஷோர், குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கர் என்று அனுபவமிக்க நடிகர்கள் இருந்தும் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

ஷிவதா மட்டும் தன் குற்ற உணர்ச்சியை சரியாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார். நாயகன் தவிர்த்த கதாபாத்திரத் தேர்வில் மெனக்கெட்ட இயக்குநர், பாத்திரப் படைப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவும், கலை இயக்குநர் அஜயனின் உழைப்பும் படத்துக்குப் பலம் சேர்க்கிறது. ஜிப்ரான் இசையும், பின்னணியும் படத்தின் கதையோட்டத்துக்குப் பொருந்துகின்றன. அசல் படத்தை விட சுமார் 15 நிமிடங்கள் கூடுதலான படம் என்றாலும், அலுப்பு தட்டாத வகையில் நேர்த்தியான எடிட்டிங்கில் புவன் சீனிவாசன் கவனிக்க வைக்கிறார்.

க்ளாப்ஸ்

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பு

ஜிப்ரானின் இசை

சிறந்த ஒளிப்பதிவு

பல்ப்ஸ்

படத்தோடு ஒன்றினையதா சில கதாபாத்திரங்கள்

இயக்குனர் திலீப் குமார் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்

மாதவனுக்கு கதாபாத்திரம் பொருந்தவில்லை

திரைக்கதை பொறுமையாக உள்ளது

மொத்தத்தில் கதை சொல்லும் மாறா, சில இடங்களில் நம்முடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், முழு படமாக நம்மை அதில் மூழ்க செய்துள்ளார்.

நன்றி  CineUlagam 


No comments: