பொங்கலது வாழ்வில் புதுப்பாதை காட்டிடட்டும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

 

பட்டாசு சத்தமும் பளிச்சிடும் மத்தாப்பும்

புத்தரிசி புதுப்பானை பொங்கிவரும் வெண்பாலும் 

புத்துணர்வு சுமந்துவர பூரிப்பாய் பொங்கல்வர

அத்தனைபேர் அகங்களுமே ஆனந்தம் பெருகிடுமே  ! 

 

பட்டதுன்பம் அத்தனையும் பஞ்சாகப் பறந்துவிட

பார்பிடித்த பெருநோயும் படுகுழியில் வீழ்ந்துவிட 

மட்டற்ற மகிழ்சியது மனமெல்லாம் நிறைந்துவிட

மங்கலமாய் பொங்கலது வந்துமே அமையட்டும்     !

 

வீண்வாதம் விலகட்டும் வெறுப்புமே மடியட்டும்

மாண்பற்ற செயலெல்லாம் மங்கியே மழுங்கட்டும்

காண்கின்ற அத்தனையும் கண்ணியமாய் ஆகட்டும்

கனிவுதனை பொங்கலது காட்டிடவே வந்திடட்டும்   ! 

 

வறுமையெனும் வாசகமே வெறுமையாய் ஆகட்டும்

வள்ளலெனும் நல்லார்கள் வளமுடனே வாழட்டும் 

தருமமெனும் நல்வார்த்தை தரணியெங்கும் பரவட்டும்

தலைநிமிரப் பொங்கலது தான்வழியைக் காட்டட்டும் ! 

 

வயலுழுவார் வாழ்வில் மாற்றங்கள் நிறையட்டும்

வயோதிபர்கள் இல்லம் வழக்கின்றிப் போகட்டும்

மங்கலமாம் வெளிச்சம்  மனையெங்கும் பரவட்டும் 

பொங்கலது வாழ்வில் புதுப்பாதை காட்டிடட்டும்  ! 

 

மதுவென்னும் நினைப்பு மனம்விட்டு அகலட்டும்

மங்கையரின் நினைப்பு மாண்நிறை ஆகட்டும் 

வாலறிவன் நினைப்பு மனம்முழுக்க நிறையட்டும் 

வரும்பொங்கல் நல்ல வரமெனவே அமையட்டும் 

No comments: