நேதாஜி. சுபாஷ் சந்திரபோஸ் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்



இந்திய சுதந்திரப் போராட்டம் என்றால் எமக்கு உடனே நினைவுக்கு வருவது மகாத்மா காந்தியே. அவரையே தேசபிதா எனவும் கூறுவார்கள். உண்மையிலே வேறு சில தலைவர்களும் சுதந்திரத்திற்காகத் தலைமை தாங்கினார்கள். அவர்களில் முதன்மை பெறுபவர் நேதாஜி. சுபாஷ் சந்திரபோஸ். அவர் வங்க நாட்டின் வங்கச் சிங்கம் என்பார்கள்.


இவர் ஆயுதப் போராட்டமே வேண்டியது என்றார். இந்திய தேசிய இராணுவம் INA ஐக் கட்டி எழுப்பி அதற்குத் தலைமை தாங்கினார். இந்த இராணுவ அமைப்பு அப்போதிருந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கு தலைமறைவாகி அப்போது ஜப்பானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பர்மாவில் இருந்து தம் போராட்ட நடவெடிக்கைகளை மேற்கொண்டது. அன்றய ஜப்பானிய அரசு நேதாஜிக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தது.

நான் சென்னையில் படித்த காலத்தில் எனது Guardian ஆக இருந்த கண. முத்தையா அவர்கள் நேதாஜி. சுபாஷ் சந்திரபோஸ் பற்றி அடிக்கடி பேசக் கேட்டுள்ளேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திரு. கண. முத்தையா அவர்கள் பிற்காலத்தில் தமிழ் புத்தகாலயமென்ற நூல் வெளியீட்டு நிலையத்தை ஸ்தாபித்து நல்ல பல நூல்களை வெளியிட்டவர். இலங்கை எழுத்தாளர்கள் தில்லைநாதன், வேலுப்பிள்ளை போன்ற பலரது நூல்களும் இங்கு வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் Oxford Publication போல தமிழ் நாட்டில் சிறந்த நூல்களை வெளியிடும் புத்தகாலயம் என்ற பெயரை இந்த வெளியீட்டு நிறுவனம் பின்பு பெற்றது.

திரு. கண. முத்தையா அவர்கள் 40 களிலே பர்மாவில் தேக்கு மர வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாராம். யுத்தம் தொடங்கிய காலத்தில் நேதாஜியின் I.N.A Army யில் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய இணைந்த இளைஞர்களோடு இவரும் இணைந்து கொண்டார். செட்டிமார்கள் கணக்கு வழக்குகளில் மிக்க பரீட்சயம் உள்ளவர்கள் என்பதால் திரு. கண. முத்தையா Account Section ல் பணி புரிந்தார். ஆனாலும் இவருக்கு இராணுவப்பயிற்சியும் வழங்கப்பட்டிருந்தது.





நேதாஜி ஒரு சிறந்த Army General. போர்க்காலத்தில் இருந்த மற்றய Army General களுக்கு நிகரானவர் எனப் பெயர் பெற்றவர். போர் காலத்திலே நேதாஜி ஒவ்வொரு Regiment ஐயும் பார்வையிடப் போவது வழமை. இப்படியாக அவர் வரும் போது அவருக்கு வழமையான இந்திய பாணியில் மாலை மரியாதை நடக்குமாம்.

ஒருமுறை இவ்வாறாக நேதாஜி வரும் போது திரு. கண. முத்தையா தான் நடாத்தி வந்த Section வரும் போது மற்றய தனது சகாக்களிடம்,’ எதற்கு இந்த மாலை மரியாதைகள்? இங்குள்ள ஒவ்வொருவரும் நாட்டிற்காக உயிரைக் கொடுக்க வந்துள்ளோம். அதில் ஒருவர் தானே நேதாஜியும்!’ என்றாராம். அதனால் எல்லோருமே சேர்ந்து அவருக்கு மாலை போடத் தேவை இல்லை என்று தீர்மானித்தார்களாம். நேதாஜி வழமை போல வந்தார். எல்லாவற்றையும் பார்வையிட்டார்; போய் விட்டார்.

பின்பு ஏன் இப்படியான மாறுதல் என்று விசாரித்தாராம். காரணம் கூறப்பட்டதாம். உடனே இந்த பெரிய உள்ளம் படைத்த தலைவன், ’எனக்கு இனிமேல் மாலை மரியாதை செய்ய வேண்டாம்; நானும் மற்றவர்களில் ஒருவன் தான்’ என்றாராம். அது மட்டுமல்லாது, கண. முத்தையாவை அழைத்து தமிழ் இராணுவத்துக்கு அவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கும் அறிவதற்கும் அவரை நியமித்ததோடு அமையாது தனது செயலாளர்களிலும் ஒருவர் ஆக்கினாராம்.

வேறு ஒரு நாள் முக்கிய உறுப்பினர்களை அழைத்து நேதாஜி பல விஷயங்களைப் பேசினாராம். திரு.கண.முத்தையாவைத் தவிர மற்றவர்கள் யாவரும் வங்காளிகளே! இதனால் யாவரும் வங்காள மொழியிலேயே பேசினார்களாம். கூட்டம் பரபரப்பாகப் போனதில் திரு, கண முத்தையா இருப்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள். இருந்தாற்போல் இதனைக் கவனித்த நேதாஜி கூட்டத்தை நிறுத்தி விட்டு, இரண்டு மணி நேரமாக நடந்த கூட்டத்தில் யார் யார் என்ன பேசினார்கள் என்பதை முற்றாக விலாவாரியாக இவருக்கு விளக்கினாராம். உயர்ந்த பண்பாளர்கலள் மற்றவர்களின் உணர்ச்சிகள் சிறிதும் பாதிக்கப்படாது பார்த்துக் கொள்வார்கள்.

நேதாஜியின் மறைவு பற்றி பல கதைகள் பேசப்படுவதுண்டு. ஆனால் அவர் விமானம் தீப்பற்றி இறந்தார் என்பது தான் உண்மை.

இந்தியா சுதந்திரம் பெற்றது. பர்மாவில் இருந்த INA Army யைச் சேர்ந்த யாவரும் வங்காளத்துக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டார்கள். இவர்களிடம் இருந்த உடை எல்லாம் இராணுவச் சீருடை தான். வங்காள மக்கள் இந்த இந்திய இராணுவ இளைஞர்களை தமது வீட்டுப் பிள்ளைகள் போர் முடித்து வீட்டுக்கு வந்ததைப்  போல வரவேற்று, லட்டு முதலான தின்பண்டங்களைக் கொடுத்து உபசரித்தார்கள். இதனை  மறக்கவே முடியாத நிகழ்ச்சி என்பார் கண. முத்தையா. இந்த மக்கள் காட்டிய அன்பு அத்தகையது என்பார் அவர்!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இந்த இந்திய இராணுவத்தில் இருந்தது குறிப்பிடத் தக்கது.

சுதந்திரத்துக்குப் பின் சுதந்திரப்  போராளிகளுக்கு 2 ஏக்கர் நிலம் சன்மானமாக வழங்கப்பட்டதாம். ஆனால் இந்த INA Army யில் இருந்தவர்கள் மாத்திரம் இந்த 2 ஏக்கர் நிலத்தை வேண்டாம் என்று வாங்க மறுத்து விட்டார்களாம். அன்று நாம் அந்த மலைகளிலே போராடும் போது இந்த 2 ஏக்கர் நிலத்திற்காகவா போராடினோம்? எனக்கூறி அவர்கள் இந்த சன்மானத்தை ஏற்க மறுத்து விட்டார்கள்.

2 comments:

Unknown said...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றியும் எழுத்தாளர் – பதிப்பாளர் கண. முத்தையா பற்றியும் நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசர் எழுதியிருக்கும் ஆக்கம் சிறப்பானது. நாம் அறியாத பல செய்திகளை இந்த ஆக்கம் வெளிப்படுத்தியுள்ளது. இதனை எழுதிய கார்த்திகா அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.
முருகபூபதி

Thevakie Karunagaran said...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி பள்ளியில் படித்தது தான் இப்போது கார்த்திகாவின்
கட்டுரை நேதாஜியை நினைவுப் படுத்தியது மட்டுமில்லை நேத்தாஜியின் உயர்ந்த உள்ளத்தையும் எடுத்துக் கூறியிருக்கிறார்