உலகச் செய்திகள்

ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்தது தேர்தல் சபை

ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கிய துருக்கி மீது அமெரிக்கா தடை

கொவிட்–19: அதிக உயிரிழப்பு பிராந்தியமானது ஐரோப்பா

மொடர்னா தடுப்பு மருந்துக்கும் அமெரிக்காவில் பச்சைக்கொடி

தினசரி கொரோனா தொற்றில் அமெரிக்காவில் புதிய உச்சம்

எளிமையாக நடைபெறும் ஜோ பைடன் பதவியேற்பு


ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்தது தேர்தல் சபை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தேர்தல் சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மக்களின் விருப்பம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்தல் சபையின் அறிவிப்பு வெளியான பின் உரையாற்றிய அவர், “அமெரிக்க ஜனநாயகம் தள்ளப்பட்டது, பரிசோதிக்கப்பட்டது மற்றும் அச்சுறுத்தப்பட்டது,” என்று கூறினார்.

ஆனால், அது “மீண்டு வரக்கூடியது, உண்மையானது மற்றும் வலிமையானது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது “ என்றும் தனது உரையில் பைடன் குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு தேவையான சில இறுதி கட்ட நடவடிக்கைகளில் தேர்தல் சபை உறுப்பினர்கள் கூடிப் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதும் ஒன்றாக இருந்தது. இந்த நகழ்வு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

கடந்த நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பைடன் 306 தேர்தல் சபை வாக்குகளை வென்றதோடு குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் 232 இடங்களையே வென்றிருந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாக 270 தேர்தல் சபைகளை வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த தேர்தல் சபை வாக்கெடுப்பின் முடிவுகள் அனைத்தும் தலைநகர் வொஷிங்டன் டி.சிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு வரும் ஜனவரி 16ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தேர்தல் சபை வாக்குகள் எண்ணப்படும்.

இந்தக் கூட்டுக் கூட்டத்துக்கு தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தலைமை வகிப்பார்.

இந்த நடவடிக்கை வரும் ஜனவரி 20ஆம் திகதி ஜோ பைடன் ஜனாதிபதியாகவும், கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாகவும் பதவி ஏற்க வழிவகுக்கும். தேர்தல் சபை உறுப்பினர்களால் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால் தாம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறப் போவதாக நவம்பர் மாதம் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் ஆதாரங்கள் எதையும் முன்வைக்காமல், தேர்தலில் மோசடி நடந்தது என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார் டிரம்ப்.    நன்றி தினகரன் 


ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கிய துருக்கி மீது அமெரிக்கா தடை

ரஷ்யாவிடம் இருந்து வான் பாதுகாப்பு முறை ஒன்றை வாங்கிய நேட்டோ கூட்டாளியான துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

துருக்கி வாங்கி இருக்கும் ரஷ்யாவின் தரையில் இருந்து வானை தாக்கும் ஏவுகணை அமைப்பான எஸ்–400 நேட்டோ தொழில்நுட்பத்திற்கு எதிரானதாக இருப்பதோடு யூரோ–ஆட்லாண்டிக் கூட்டணிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் துருக்கி ஆயுதக் கொள்வனவுப் பிரிவை இலக்கு வைத்தே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த திங்கட்கிழமை இந்தத் தடையை விதித்துள்ளது. இதற்கு துருக்கி மற்றும் ரஷ்ய தரப்புகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. இந்த ஆயுதக் கொள்வனவு காரணமாக அமெரிக்கா தனது எப்–35 போர் விமானங்களை துருக்கிக்கு விற்பதற்கு ஏற்கனவே தடை கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் கொவிட்–19: அதிக உயிரிழப்பு பிராந்தியமானது ஐரோப்பா

உலகில் கொவிட்–19 நோயால் மிக அதிகமான மரணங்கள் நேர்ந்துள்ள பிராந்தியமாக ஐரோப்பா உருவெடுத்துள்ளது. அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியுள்ளது. அதில் பாதிக்கும் மேற்பட்ட மரணங்கள் 5 நாடுகளில் பதிவாகின.

நோய்ப்பரவலால் அதிக பாதிப்படைந்த முதல் மேற்கத்திய நாடான இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின் ஆகியவை அந்த 5 நாடுகளாகும்.

ஐரோப்பாவில் புதிய நோய்த்தொற்றுச் சம்பவங்களின் தினசரி எண்ணிக்கையும் மிக அதிகமாகப் பதிவாகி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் பதிவான புதிய சம்பவங்களின் தினசரி எண்ணிக்கை, 240,000க்கும் அதிகம்.

அது உலகம் முழுவதும் பதிவான சம்பவங்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதி. இந்நிலையில் மொடர்னா தடுப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு அவசர அனுமதி வழங்குவது பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு முன்கூட்டியே முடிவெடுக்கவுள்ளது.

அடுத்த மாதம் 6ஆம் திகதி அது பற்றி முடிவெடுக்கப்படும்.     நன்றி தினகரன் 


மொடர்னா தடுப்பு மருந்துக்கும் அமெரிக்காவில் பச்சைக்கொடி

அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத்திற்கான ஆலோசனைக் குழு மொடர்னா நிறுவனத்தின் கொவிட்–19 தடுப்பு மருந்தைப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மொடர்னா தடுப்புமருந்தைப் பயன்படுத்துவதால் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு அபாயங்களைக் காட்டிலும், நன்மைகளே அதிகம் என ஆலோசனைக் குழு தெரிவித்தது.

அதன் மூலம் வைரஸ் பரவலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் இரண்டாவது தீர்வு அமெரிக்காவுக்குக் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது.

கடந்த வாரம் கொவிட்–19 நோய்க்கான பைசர் - பயோஎன்டெக் தடுப்பு மருந்துக்கு அந்த ஆலோசனைக் குழு அங்கீகாரம் அளித்தது. அதையடுத்து அந்த மருந்துக்கான அவசரப் பயன்பாட்டு அனுமதியை அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் வழங்கியது.

அமெரிக்கா 200 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. மொடர்னா மருந்துக்கு உணவு, மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்த விரைவில் இந்த மருந்துகளின் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

மொடர்னா தடுப்பு மருந்து -20 செல்சியஸ் தட்பவெப்பநிலையில் எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலையில் அது  -75 தட்பவெப்பநிலையில் எடுத்தச் செல்ல வேண்டி உள்ள பைசர் தடுப்பு மருந்தை விட விநியோகிப்பது இலகுவானதாக உள்ளது.  எனினும் பைசர் தடுப்பு மருந்து போன்று மொடர்னாவும் இரு முறை போட்டுக் கொள்ள வேண்டி உள்ளது. அந்த ஊசி 28 நாள் இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் கேம்ப்ரிட்ஜ், மசசுட்ஸை தளமாகக் கொண்ட மொடர்னா நிறுவனத்திலேயே அதிக அளவான இந்தத் தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

எனினும் பைசர் தடுப்பு மருந்து ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் உட்பட பல நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.  
மொடர்னா தடுப்பு மருந்தை 30,400 பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டதில், இந்த மருந்து 94.1 வீதம் செயல்திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா அரசு மொத்தம் 56 மில்லியன் டோஸ் அளவு மொடர்னா தடுப்பு மருந்தை பெற திட்டமிட்டிருப்பதோடு அதில் முதல் இரண்டு மில்லியன் மருந்துகளை வரும் மார்ச் மாதம் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளது. 

பிரிட்டன் ஏற்கனவே இரண்டு மில்லியன் அளவு மொடர்னா தடுப்பு மருந்துகளுக்கு முன் பதிவு செய்துள்ளது.  80 மில்லியன் டோஸ்களை பெற ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதில் இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் மேலும் மருந்துகளை பெறும் சாத்தியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

50 மில்லியன் மொடர்னா தடுப்பு மருந்துகளை பெற ஜப்பானும் 20 மில்லியனைப் பெற தென் கொரியாவும், 7.5 மில்லியனுக்கு சுவிட்சர்லாந்து ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.    நன்றி தினகரன் 


தினசரி கொரோனா தொற்றில் அமெரிக்காவில் புதிய உச்சம்

250,000 பேர் பாதிப்பு, 3,784 பேர் பலி

அமெரிக்காவில் கொவிட்–19 நோய், கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 250,000க்கும் அதிகமானோரிடம் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 3,784 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவை இரண்டுமே, முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையா கும். அந்தத் தகவல்களை ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

அமெரிக்காவில் கடந்த வாரத்தில் இருந்து 3,000க்கும் அதிகமானோர், ஒரே நாளில் உயிரிழப்பது இது மூன்றாவது முறையாக உள்ளது.

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் நோய்ப்பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் இன்னும் சுமார் 113,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது அங்கே, தடுப்பூசிகள் போடும் பணி ஆரம்பமாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 17 மில்லியனை நெருங்கி வருகிறது. 307,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் பைசர் மருந்தகம் மற்றும் அதன் ஜெர்மனி நாட்டு கூட்டாண்மையான பயோஎன்டென் நிறுவனம் மேம்படுத்திய தடுப்பு மருந்தின் 2.9 மில்லியன் டோஸ்களை இந்த வார இறுதிக்குள் வழங்கி முடிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.    நன்றி தினகரன் எளிமையாக நடைபெறும் ஜோ பைடன் பதவியேற்பு

கொரோனா நெருக்கடி காரணமாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு விழா பொதுமக்கள் வருகையின்றி எளிமையாக நடைபெறவுள்ளது.

இது குறித்து அந்த விழாவை நடத்தவிருக்கும் பாராளுமன்ற கூட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடனும் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் விழா எளிமையாக நடைபெறவுள்ளது.

அந்த விழாவுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எம்.பிக்களே அழைக்கப்படுவார்கள். விழாவின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எனவே, பதவியேற்பை நேரில் பார்ப்பதற்காக யாரும் வர வேண்டாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக, ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு 2 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.  நன்றி தினகரன் 

No comments: