பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 27- எங்க மாமா - சுந்தரதாஸ்

 .



இன்று உள்ள நட்சத்திர நடிகர்கள் ஆண்டிற்கு ஒரு படம் மட்டுமே நடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள் ஆனால் அன்று உள்ள நட்சத்திர நடிகர்கள் ஆண்டிற்கு பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்கள் அந்த வகையில் 1970-ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 8 படங்கள் வெளிவந்தன அவற்றில் ஒன்றுதான் எங்க மாமா.

ஜெ ஆர் மூவிஸ், ஏவிஎம் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்தார்கள் இந்தியில் ஜிம்மி கபூர் நடித்து வெற்றிபெற்ற பிரம்மச்சாரி படத்தை 19 ஆயிரம் ரூபாய் கொடுத்து பட உரிமையை வாங்கி தமிழில் படமாக்கினார்கள்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த குகநாதன் என்ற இளைஞர் பிரம்மச்சாரி படத்தின் வெற்றியைப் பற்றி ஏவிஎம் செட்டியார் ஜே ஆர் மூவிஸ் இடமும் எடுத்துச்சொல்லி தமிழில் அதை படமாக்க உறுதுணை ஆனார். படத்தின் வசனங்களையும் அவரே எழுதினார். சிவாஜிக்கு குகநாதன் வசனம் எழுதிய முதல் படமும் இதுதான்.


பேரில் மட்டும் கோடீஸ்வரனான கதாநாயகன் புகைப்படங்கள் எடுத்தும் ஹோட்டல்களில் பாடியும் கிடைக்கும் வருமானத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கிறார். ஒருநாள் தற்கொலை செய்ய முயற்சிக்கும் சீதாவை காப்பாற்றி அவளை அவளின் அத்தை மகன் முரளிக்கு கல்யாணம் செய்து கொடுக்க பல முயற்சிகளை மேற்கொள்கின்றான். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்குள்ளேயே காதல் அரும்புகிறது.

எந்தவிதமான படத்திலும் நடிக்கக் கூடிய சிவாஜி இந்தப்படத்தில் ஜாலியாக நடித்திருந்தார். குழந்தைகளுடன் வேடிக்கை செய்வதாகட்டும், கதாநாயகிக்கு உதவுவதாகட்டும் , ஒரு குழந்தையை தத்து கொடுக்கும்போது ஆகட்டும் ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்தார் சிவாஜி.

சீதாவான ஜெயலலிதாவும் தன் திறமையை வெளிப்படுத்தினார் ஆரம்பத்தில் கிராமத்து பெண்ணாக வருவதாகட்டும், பின்னர் நாகரீகப் பெண்ணாக மாறுவதாகட்டும் நிறைவாக செய்திருந்தார் அவர். சோ, தேங்காய் சீனிவாசன், ரமா பிரபா , கருணாநிதி அவர்களின் நகைச்சுவை காட்சிகள் கலகலப்பாக அமைந்தன வெண்ணிற ஆடை நிர்மலா கவர்ச்சி பதுமையாக வருகிறார் பின்னர் கண்ணீர் சிந்துகிறார். வில்லனாக நடிக்கும் பாலாஜி அதற்கு அருமையாக பொருந்துகிறார் .பேபி ரோஜாரமணி மாஸ்ட்டர் பிரபாகர் என்று பல குழந்தை நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர்.

படத்திற்கு இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன், பாடல்கள் அனைத்தும் சூப்பர். நான் தன்னந்தனி காட்டு ராஜா, செல்ல கிளிகளாம் பள்ளியிலே, எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் என்று கண்ணதாசன் வாலியின் பாடல்கள் அனைத்தும் தேனாக இனித்தது. அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் மாருத்திராவ் அருமையாக படத்தை ஒளிப்பதிவு செய்திருந்தார். சிவாஜியின் பல படங்களை தொடர்ந்து டைரக்ட் செய்த ஏசி திருலோகச்சந்தர் இப்படத்தையும் டைரக்ட் செய்து, படம் எட்டு லட்ச ரூபாய் லாபத்தை பெற்றுக்கொடுத்தது.

அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம்