வாழ் வெல்லாம் தொடர்வதற்கு வழி வகுப்போம் வாருங்கள் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


தமிழன்னை எனை ஈன்றாள்
தமிழ்ப்பாலை ஊட்டி நின்றாள்
தாலாட்டும் போதும் அவள்
தமிமிழினிலே பாடி நின்றாள்
தடுக்கி நான் விழுந்தாலும்
தமிழ் வார்த்தை எழுந்ததுவே
அமிழ்தாக நான் நினைத்தேன்
அதை எண்ணி மகிழுகிறேன் !

ஊட்டி வளர்த்த தமிழ்
உவந்து பாட்டி உரைத்ததமிழ்
நாட்டுப் புற இசையை
நன்றாகச் சொல்லுந் தமிழ்
போட்டி என வந்தார்க்கு
சாட்டை என நின்றதமிழ்
நாட்டையே ஆண்ட தமிழ்
நந்தமிழே என மகிழ்வேன்  !

மண்ணியலைச் சொன்ன தமிழ்
விண்ணியலைச் சொன்ன தமிழ்
நீரியியலைப் புகன்ற தமிழ்
நீள்கடலாய் விரிந்த தமிழ்
வாழ்வியலை வழங்கி நிற்க
வள்ளுவத்தை தந்த தமிழ்
ஆழ நிறை காப்பியங்கள்
அத்தனையும் அளித்த தமிழ்  !

இலக்கியங்கள் நிறைந்த தமிழ்
இலக்கணங்கள் ஈந்த தமிழ்
வழக் கொழிந்து போகாமல்
விளித்தெழுந்து வளருந் தமிழ்
விஞ்ஞானம் கண்ட தமிழ்
மெஞ்ஞானம் மிக்க தமிழ்
அஞ்ஞானம் அகம் அகல
அருந்துணையாய் ஆகும் தமிழ்  !

ஆண்டவனே ஏற்ற தமிழ்
அடியார்கள் வளர்த்த தமிழ்
அர்ச்சனையாய் ஆகுந் தமிழ்
அறவொழுக்கம் புகலுந் தமிழ்
நீண்ட நெடுங் காலமாய்
நிமிர்ந்து நிற்கும் எங்கள்தமிழ்
நினைத்துமே பார்த்து விட்டால்
நெஞ்ச மெலாம் நிறைகிறதே  !

அன்னியத்தை கண்டு விட்டு
அடிமை கொண்டு நிற்பதா
எண்ணரிய எம் மொழியை
இழுவு கொண்டு பார்ப்பதா
கண்ணான எம் மொழியை
காணாமல் நின்று விட்டால்
கண் இருந்தும் குருடராய்
ஆகிடுவோம் என வுணர்வோம் !

தாலாட்டி வளர்த்த தமிழ்
தான் எமக்கு உயிரன்றோ
வாலாட்டும் வரட்டு மொழி
வளர் தமிழை வாட்டுவதா
பாலோடு வந்த தமிழ்
பண்புதனைத் தந்த தமிழ்
வாழ் வெல்லாம் தொடர்வதற்கு
வழி வகுப்போம் வாருங்கள்  !
 

No comments: