அற்பாயுளில் உதிர்ந்த மலர்கள் : வருண்ராஜ் ஞானேஸ்வரன் - கிசோபன் ரவிச்சந்திரன் இதய அஞ்சலி ! முருகபூபதி


நான் அவுஸ்திரேலியா  மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல்லிலிருந்து  சுமார் 65 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் மற்றும் ஒரு புறநகரமான சேல் என்ற ஊருக்கு கனத்த மனதுடன் சென்றுகொண்டிருக்கின்றேன்.

அந்தப்பாதையால் அதற்கு முன்னர் பலதடவைகள் அவுஸ்திரேலியாவின் மாநிலத்தலைநகரம் கன்பராவுக்கு  சென்றிருந்தபோது இருந்த மனநிலையில்  கடந்த செவ்வாயன்று  மேற்கொண்ட  அந்தப்பயணம் அமைந்திருக்கவில்லை.

இந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தது முதல்  எனக்குத் தெரிந்த சில கலை


, இலக்கிய ஆளுமைகள் மறைந்ததையடுத்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதியிருக்கும் நான், எதிர்பாராதவகையில் எனக்கு என்றைக்குமே அறிமுகமில்லாத ஒரு தமிழ் இளைஞன் குறித்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதநேர்ந்துவிட்டதும்  விதிப்பயனா ? அல்லது  உலகெங்கும் அகதிகளாக அலைந்துழலும்  மனித குலத்தின் சோகக்குரலின் எதிரொலியா..? 

இலங்கையில் நீடித்த போரின் முடிவுடன், அங்கிருந்து இந்தியாவுக்கும் பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கும் படகேறி வந்து குவிந்த மக்கள் திரளின் ஒரு பிரதிநிதியான செல்வன் வருண்ராஜ் ஞானேஸ்வரன் இம்மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில்  ஒரு உயரமான கட்டிடத்திலிலிருந்து குதித்து தற்கொலைசெய்துகொண்டார்.

அவருடைய இறுதி நிகழ்வுக்குத்தான்  அவருடையதும் அவரது தாயார் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் அவரது தங்கையினதும்  புகலிடக்கோரிக்கை விண்ணப்பத்தில் கவனம் செலுத்தும் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் மற்றும் அவருடை துணைவியார் ஜெஸி ரவீந்திரன், புதல்வன் அரூரண் ரவீந்திரன் ஆகியோருடன்  அவர்களின் காரில் சென்றுகொண்டிருக்கின்றேன்.

தற்கொலை செய்துகொண்ட செல்வன் வருணின் இறுதி நிகழ்வுகள் நடக்கும் சேல் என்ற புறநகர், நான் வதியும் மோர்வல் நகரிலிருந்து 65 கிலோ மீற்றல் தொலைவு. ஆனால், சட்டத்தரணி ரவீந்திரன் குடும்பத்தினருக்கு அதில் மும்மடங்கு தொலைவு. அவர்கள் குடும்ப சமேதராக இந்த இளைஞனின் இறுதி நிகழ்வில் அவனை வழியனுப்ப வருகிறார்கள் என்றால், அவனதும் அவனது தாய் மற்றும் தங்கையுடனும் அவர்களுக்கிருந்த நேசம் புரிந்துகொள்ளத்தக்கது.


இதுவரையில் அவுஸ்திரேலியாவிற்கு  படகுகளில் வந்த  புகலிடக்கோரிக்கையாளர்களின்  தற்கொலை வீதம் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை.

இங்குவந்து தற்கொலை செய்வதற்கு அகதியாக மாத்திரம் இருக்கவேண்டுமென்பதில்லை.  அகதியாக வராமல் தொழில் நிமித்தமும்,  குடும்ப உறவுமுறையில்  அழைக்கப்பட்டு  குடியேற வந்தவர்களின் மத்தியிலும் தற்கொலைகள் நடந்திருக்கின்றன.

இந்தப்பதிவை எழுதும்போதும் உலகில் எங்காவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் ஏதோ ஒரு காரணத்துக்காக தற்கொலைசெய்துகொள்கிறார்.

அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

தற்கொலைகளை தடுப்பது எவ்வாறு என்ற விளக்கம் தரும் நூல்களும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், தற்கொலைகளையோ, தற்கொலை முயற்சிகளையோ தடுக்கமுடியாதிருக்கிறது.

செல்வன் வருண்,  தமது தாயருடனும் தங்கையுடனும்   Safe Haven Enterprise Visa ( SHEV)  என்ற விசா  அனுமதியுடன் சேல்  என்ற புறநகரில்  வசித்தவர்.  இவரது தந்தையாரும் மற்றும் ஒரு சகோதரியும் தமிழ்நாட்டில் தொடர்ந்தும் அகதியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். வருண்,  சேல் நகரத்திற்கு வருமுன்னர், தாய் தங்கையுடன் Dandenong


என்ற மாநகரில் இருந்து பாடசாலையில் கற்றவர் என்றும்  மொடலிங் துறையில் ஆர்வம் மிக்கவர் என்றும் அதற்காக தன்னை அழகாக வடிவமைத்து பல கோணங்களில் படம் எடுத்து அதற்கென பிரத்தியேக அல்பமும் தயாரித்தவர் எனவும், எதிர்காலத்தில்  ஒரு சிறந்த மொடலாகவேண்டும் என்ற கனவுடனும் வாழ்ந்திருப்பவர் என்பதும் தெரியவருகிறது.

நேற்று    15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் சேலில் நடந்த வருணின் இறுதி நிகழ்வில் காண்பிக்கப்பட்ட காணொளிகளில்  வருணின்  அழகிய பலகோணங்களைப்பார்க்க முடிந்திருந்தாலும்,  பிரேதப்பெட்டகத்தில் அவரது உயிரற்ற உடலைப்பார்த்தபோது  மனம் நிலைகுலைந்துவிட்டது.

 “ எத்தனை கனவுகளை சுமந்துகொண்டு பெற்றதாயுடனும் உடன் பிறந்த அருமைத்தங்கையுடனும் ஆழ்கடல் கடந்து வந்திருப்பாய் மகனே…  அந்தக்கனவுகளையெல்லாம் சிதைத்துகொண்டு,  உனது உடலை சிதைத்து இன்னுயிரைப்போக்குவதற்காகவா  சேலிலிருந்து  இருநூறுக்கும் மேற்பட்ட கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் அதியுயர்ந்த கட்டிடத்தை  நோக்கிச்சென்றாய்..? “ 

உனக்கு உயிரும் உருவமும் கொடுத்துச்சுமந்து பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்குவதற்காகவும்  உன்னுயிரை  ஆயுத அரக்கர்களிடமிருந்து காப்பதற்காகவும்  முன்பின் தெரியாத கடல் சூழ்ந்த கண்டத்திற்கு உன்னையும் அழைத்துவந்து சேர்த்து அரவணைத்து,  நீ கேட்டதெல்லாம் பெற்றுக்கொடுக்க இரவு பகல் என்று பாராமல்  உழைத்துழைத்து தனது வாழ்நாளை செலவிட்ட அருமைத்தாயின் கதறல்  உனக்கு கேட்குமோ தெரியாது. ஆனால்,  அங்கிருந்து உனக்கு மலரஞ்சலி செலுத்திய ஏனையவர்களுக்கு கேட்டது.  தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த அழுகுரலையும் நாம் கடந்து சென்றுவிடலாம்.  ஆனால், உனது திடீர் மறைவு அந்த பெற்றமனதை  என்றைக்கும் ஆற்றுப்படுத்தாது.  எந்தப்பக்கம் திரும்பினாலும் உனது முகம்தான் முன்னால் தோன்றும்.  அவள் காணும் கனவுகளிலும்  நீதான் நிறைந்திருப்பாய்.

உன்னைப்போன்று படகுகளில் வந்த ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினரில் குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்கள் தமக்கு கிடைக்கும் சொற்பமான வாய்ப்பு வசதிகளை பயன்படுத்தி கற்கின்றனர். பல்கலைக்கழகத்திற்கும் பிரவேசிக்கின்றனர். பகுதி நேர வேலை செய்து,  தொடர்ந்தும் படிக்கின்றனர்.  

தமிழ் ஈழம்கோரி போராடியதனால்,  அழிக்கப்பட்டும்  அகதிகளாக அலைந்துழலவும் நேர்ந்தபின்னரும், புகலிடம் பெற்ற அந்நிய நாட்டிற்கு வந்து தாய்மொழி தமிழையும் தொடர்ந்து கற்றுத்தேர்ந்து பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையிலும் தமிழை ஒரு பாடமாகக்கற்றுத்தேறிய  பிள்ளைகளும் உன்னைப்போன்று ஆழ்கடலில் உயிரைப்பணயம் வைத்து வந்தவர்களில் அடக்கம்.  இந்தசெய்திகளை நீ அறியவில்லையா..? அல்லது உனக்கு அறிவிக்கப்படவில்லையா..?

கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இந்த கொரோனோ வைரஸ் தொற்று நீ புகலிடம் பெற்ற நாட்டிற்குமாத்திரம் உரித்தானதா,  நீ பகுதிநேரமாக வேலை செய்த இடத்தில் வேலையை இழக்கநேரிட்டால், மாற்றுவழியைக்காணுவதை விடுத்து, தற்கொலைதான் அதற்கு மாற்றுத்தீர்வு என்ற  முடிவுக்கு எப்படி வந்தாய்..?

உனக்கும் கீழே வாழ்பவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற வரிகளை ஒவ்வொருவரும் மனதில் தேக்கவேண்டிய காலகட்டத்தைத்தான் கடந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்துவிட்டாயா..?

------

கடந்த செவ்வாய்க்கிழமை 15 ஆம் திகதி   சேலில் நடந்த செல்வன் வருணின் இறுதிநிகழ்விற்கு  என்னை அழைத்துச்சென்ற சட்டத்தரணி ரவீந்திரன் குடும்பத்தினரையும்,  விக்ரோரியா தமிழ்ச்சங்கத்தைச்சேர்ந்த அன்பர் திரு. முருகேசு பரமநாதனையும் தவிர அங்கிருந்த எவரையும் எனக்குத் தெரியாது.

செல்வன் வருணும் அவனது தாயும் தங்கையும்  இந்த நாட்டிற்குள் வந்த சில வருடங்களிலேயே  பலரை நண்பர்களாகவும்  தேடிக்கொண்டு  குடும்ப சிநேகிதர்களாக்கியுமிருப்பதையும்  அவர்கள் வழங்கிய தார்மீக ஆதரவிலும் அரவணைப்பிலும் தேறுதல்களிலும் தெரிந்துகொள்ளமுடிந்தது.

வருணின் இறுதிநிகழ்விற்குச்சென்று அவனது நல்லடக்கம் வரையில் நின்று பின்னர் அவன் இல்லத்திற்கும் சென்று திரும்பினோம். 

பல இளைஞர்கள் வந்தவர்களை வரவேற்பதிலும் வருண் நினைவாக வழங்கிய உபசரிப்பிலும்  அக்கறை காண்பித்தார்கள். 

ஆயிரம் சொந்தம் நம்மைத்தேடிவரும். ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்தான்.

நண்பர்கள் பலரை சம்பாதித்த வருண், தற்கொலைக்காக அந்த உயர்ந்த கட்டிடத்தில் ஏறும்போது ஒரு கணம் அந்த நண்பர்களையும்  தனக்கு பாலூட்டி உணவூட்டி சீராட்டி வளர்த்த தாயையும் நினைக்கத்தவறியது கொடுமைதான்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவலும்  அவுஸ்திரேலியாவுக்கு படகில் வந்த  மனிதர்களின் கதைதான்.

அதில் வரும் காந்தன் என்ற இளைஞனின்  தற்கொலை முயற்சியுடன் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணியில் சுற்றிச்சுழல்கிறது, வன்னிபெருநிலப்பரப்பும்  ஆழ்கடல் பயணமும்.  அகதிகளை ஆற்றுப்படுத்தக்கூடிய   சீர்மிய படைப்பு உயிர்வாசம்.   

இந்த நாவலை இங்கிருக்கும் படகில்வந்துள்ள இளைஞர்கள் அவசியம் படிக்கவேண்டும் என்றும் பரிந்துரைசெய்கின்றேன்.

அகதியாக வந்து பல துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களின் பட்டியல் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் ஒரு தன்னார்வத்தொண்டு நிறுவனம்,  நடத்திய அரங்கில் காண்பிக்கப்பட்ட ஆவணப்படத்தையும் பார்த்திருக்கின்றேன். அதனைத்தயாரிப்பதற்கு முன்னர் அந்த அமைப்பினைச்சேர்ந்த சிலர் என்னையும் வந்து சந்தித்து பேட்டி கண்டனர்.

அத்துடன் நான் இந்த நாட்டுக்கு 1987 இல்  அகதியாக வந்தபின்னர் தொடங்கிய ஈழப்போர்க்காலத்தில் பெற்றவர்களை இழந்த  தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தைப்பற்றியும் கேட்டறிந்துவிட்டு தங்கள் பங்களிப்பையும் வழங்கினர்.

இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 32 வருடங்களுக்கும் மேலாக தங்கு தடையின்றி இயங்கிவருகிறது.

அது தொடங்கப்பட்ட காலத்திற்குப்பின்னர் இந்த நாட்டில் பிறந்த  தமிழ் குழந்தைகள் வளர்ந்து, தற்போது அதன்  நிருவாகப்பணிகளில் முக்கிய பங்கேற்றுள்ளனர்.

அவர்களின் பெற்றோரும் அகதியாக வந்தவர்கள்தான். 

இந்த நாட்டில் இயங்கும் தமிழ் அமைப்புகளும் , படகுகளில் வந்துள்ள  புகலிடக்கோரிக்கையாளர்களும் பரஸ்பரம் தொடர்பாடல்களையும்  மேற்கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடல்வேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்குத்தான்.

செல்வன் வருண்ராஜ் ஞானேஸ்வரனின் தற்கொலைபோன்று கடந்த காலத்திலும் புகலிடக்கோரிக்கையாளர்களின் தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ளன எனச்சொல்லிக்கொண்டு  அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சும், ஊடகங்களும் சமூகமும் கடந்து சென்றுவிடலாம்.

ஆனால், தற்கொலைகளும் ஒரு வகையில் சமூகத்தொற்று நோய்தான். அதனை மேலும் பரவவிடாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் ஆக்கபூர்வமாகத் தொடரவேண்டும்.

தொடர்பாடல்கள் பல்கிப்பெருகவேண்டும்.

கொரோனாவால் சமூக இடைவெளி தோன்றலாம்.  ஆனால் மனித உணர்வுகளுக்கு இடைவெளி இல்லை.

செல்வன் வருணுக்கு எமது இதய அஞ்சலி செலுத்திய பின்னர், மற்றும் ஒரு அதிர்ச்சியான செய்தி  குவின்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து வந்தது.

  படகு மூலம்  அவுஸ்திரேலியா வந்திருக்கும் மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதி மண்டூரைச் சேர்ந்த கிசோபன் ரவிச்சந்திரன் என்ற 25 வயது இளைஞரும்  இம்மாதம் 02 ஆம் திகதி  தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியா அரசும்,  தமிழ் சமூக அமைப்புகளும்  படகு மக்கள் தொடர்பாக   தற்கொலைகளைத் தடுக்கும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த விரைந்து செயல்படல் வேண்டும் என்பதையே இந்தத்  தொடர் தற்கொலை மரணங்கள் உணர்த்துகின்றன.

 


1 comment:

Spin B3 said...

Thanks forr the post