பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி – நூல் நயப்பு இலங்கை வானொலிக்கு வயது 95

 

கானா பிரபா


இதே தினம் டிசெம்பர் 16, 1925 ஆம் ஆண்டு இலங்கை வானொலி ஆரம்பித்து வைக்கப்பட்டு இன்று 95 வயதைப் பிடித்திருக்கின்றது.

ஆசியாவின் முதல் வானொலி நிலையம் என்ற பெருமையோடு, ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலி யுகம் என்று ஈழம் தாண்டி இந்தியா வரை கடல் கடந்து புகழோச்சியது வரலாறு.

இலங்கை வானொலி உலக ஜாம்பவான்கள் ஒரு பக்கம், இந்த வானொலி படைத்திட்ட நிகழ்ச்சிகள் இன்னொரு பக்கம் என்று “றேடியோ சிலோன்” காலத்துப் பசுமை நினைவுகளோடு வாழ்பவர்கள் பலர் இன்னும் அவற்றைச் சிலிர்ப்போடு அசை போடுவர்.

“நான் கண்ட சொர்க்கம்” படத்தில் நடிகர் கே.ஏ.தங்கவேலு எமலோகம் செல்லும் காட்சியில் “ரேடியோ சிலோன் மயில்வாகனன் இங்கேயும் வந்துவிட்டாரா?” என்று குறிப்பிடுவார்.
காணொளி


இலங்கை வானொலியின் பொற்கால நினைவுகளை அங்கு பணிபுரிந்த வானொலிக் கலைஞர்கள் தனித்தனியே நூலாக வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். அந்த வகையிலும் ஒரு வானொலிக் கலையத்தை மையப்படுத்தி எழுந்த எண்ணற்ற நூல்கள் என்ற வகையிலும் இலங்கை வானொலியின் தனித்துவம் இங்கே பதிவாக்கப்பட வேண்டும். இயன்றவரை இலங்கை வானொலி குறித்துத் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்த புத்தகங்களைத் திரட்டி வைத்திருக்கின்றேன். இவை தவிர இன்னோர் முக்கியமான ஆவணமாகக் கொள்ளப்பட வேண்டியது “பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி” என்ற நூல்.

தங்க ஜெய்சக்திவேல் அவர்களால் ஏப்ரல் 2016 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட இந்த நூல் 232 பக்கங்களுடன், 31 கட்டுரையாளர்களால் இலங்கை வானொலியின் நேயர் வழி அனுபவங்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஊடகவியலாளர்களின் பார்வைகள் என்ற பிரிவுகளோடு வெளிக்கொணரப்பட்டிருக்கின்றது.
இந்த நூலைப் படித்து முடித்த பின்னர் ஒரு வானொலிப் பல்கலைக்கழகத்தில் இருந்து படித்து விட்டுத் திரும்பிய பெரு நிறைவும், இன்றைய தமிழ் ஊடகங்களின் போக்கு குறித்த பெருமூச்சுமே வெளிப்படுகின்றது.

“புதிய வானொலிப் பெட்டி வாங்கும் போது இதில் சிலோன் ரேடியோ வருமா?” என்று பாமரத்தனமாகக் கேட்கும் ரசிகர் சூழலை இந்த வானொலி வளர்த்தெடுத்திருக்கிறது என்று தமிழக நேயர் முனுகப்பட்டு ப.கண்ணன் சேகர் தன் கட்டுரை வழியே சொன்னது வெறும் சேதி அல்ல, இந்த ஊடகம் எவ்வளவு தூரம் தமிழகத்து மூலை முடுக்குகளில் தன் செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம்.
ஒரு வானொலி நிகழ்ச்சி நிரல் காலை முதல் இரவு வரை, தவிர விடுமுறை நாட்களில் எத்தகைய பாங்கோடு நிகழ்ச்சிகளைத் தயார் பண்ணிக் கொடுக்க வேண்டும் என்பதை நேயர்களின் கட்டுரைகளில் அவர்கள் சிலாகித்த நிகழ்ச்சிகளால் உய்த்துணர முடிகின்றது.
வெறும் பொழுது போக்கு என்று தள்ளாமல் திரையிசைப் பாடல்களிலும் கவி நயம் தேடிப் படைத்த நிகழ்ச்சிகள், ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுக்கும் ஈரடிப் பொழிப்புரைகள் இவற்றை இலக்கிய அரங்குக்கு உயர்த்தியிருப்பதைக் காண முடிகின்றது. நம்மில் பலர் இவற்றை அனுபவித்துமிருக்கின்றோம்.

“இலக்கியம் துலக்கும் இலங்கை வானொலி” என்ற கட்டுரையில் கவிஞர் மா.உலகநாதன் இதையே மைய்யப்படுத்தித் தனிக் கட்டுரை கூட வரைந்திருக்கின்றார்.
“இலங்கை வானொலி ஆங்கில சேவை” சில செய்திகளும் நானும் என்ற கே.எஸ்.சிவகுமாரன் அவர்களது கட்டுரை இந்தத் தொகுப்பில் தனித்து நிற்கின்றது, இலங்கை வானொலியின் தமிழ் தேசிய, வர்த்தக ஒலிபரப்புகளில் நான் பெற்ற அனுபவங்களைக் குறிப்பிடவில்லை என்று சொல்லும் சிவகுமாரன் அவர்கள், ஆங்கிலச் சேவையின் பணிப்பாளர்கள், படைப்பாளர்களை உள்ளடக்கியதாக ஆவணப்படுத்தியிருக்கின்றார்.


பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் இல்லாத சூழலில் அவர் எழுதிய “வர்த்தக ஒலிபரப்பின் தமிழ் வேர்: காலஞ்சென்ற சி.பொ.மயில்வாகனன் பற்றிய ஒரு நினைவஞ்சலிக் குறிப்பையும் சேர்த்தது வெகு சிறப்பு.
இலங்கைத் தமிழ் சினிமாவின் வரலாறு குறித்த நூல்கள், சிங்கள சினிமாவின் வரலாறு, ஈழத்துச் சினிமா ஆளுமைகள் என்றெல்லாம் எழுதிப் படைத்த நம் வாழும் வரலாறு அன்புக்குரிய தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் எடுத்துக் கொண்ட தலைப்பு “இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளர்கள் எழுதிய நூல்கள்” அவருக்கான தனித்துவம் கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றது. எதிர்காலத்தில் இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை குறித்து ஆய்வு செய்யப் போகும் ஆராய்ச்சி மாணவனுக்கான ஒரு பெரும் உசாத்துணைத் திரட்டைத் தன் கட்டுரையில் கொணர்ந்திருக்கிறார்.
திரு தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் மூத்த ஊடகராக இன்றும் இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் இயங்கி வருவது சிறப்பாகச் சொல்லி வைக்க வேண்டியது.

வானொலி ஊடகங்கள் தம் ஒலிபரப்போடு மட்டும் நின்றுவிடாது வானொலி ஒலிபரப்பு தாங்கிய நிகழ்ச்சி நிரல்கள், தகவல் துணுக்குகளையும் கொண்டு சஞ்சிகைகளை வெளியிட்டு வரும் மரபில் இலங்கை வானொலியும் “வானொலி மஞ்சரி” என்ற மாத இதழை நடத்தியதன் பாங்கினை ஆய்வு செய்திருக்கின்றார் சி.யமுனைச் செல்வன்.

சுமார் 36 வருடங்களுக்கு முன்பிருந்தே இலங்கை வானொலி கேட்டு வருகின்றேன் என்ற முத்தாய்ப்போடு கட்டுரை வரைந்த நேயர் எஸ்.ஆர்.ஹரிஹரன் (இன்றைய கணக்கில் 40 ஆண்டு கால நேயர்) இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னான நிகழ்ச்சிகள், படைப்பாளர்களை முன்னிலைப்படுத்தி எழுதியிருக்கின்றார்.

இலங்கை வானொலியின் சிறப்புகள் என்ற பொதுமையான தலைப்பிட்டிருந்தாலும் பத்தமடை எஸ்.கந்தசாமி அக்காலத்தில் நிகழ்ச்சி படைத்த ஒலிபரப்பாளர்கள் குறித்த தகவல் திரட்டோடே தன் கட்டுரையை நகர்த்தியிருக்கின்றார். அது போல் வழக்கறிஞர் முத்துக்குமார் தமிழகத்துக்கு வந்த இலங்கை வானொலிப் படைப்பாளிகளைச் சந்தித்த அனுபவங்கள், அவர்களுக்கு அந்தச் சூழலில் வழங்கப்பட்ட பாராட்டுகள், கெளரவங்களை எடுத்தியம்புகின்றார்.

பொங்கும் பூம்புனல், பொங்கி வரும் புது வெள்ளம், பாட்டுக்குப் பாட்டு உள்ளிட்ட இலங்கை வானொலியின் தனித்துவமான நிகழ்ச்சித் தலைப்புகளோடு கிருஷ்ணாபுரம் எஸ்.புன்னைவனம் தன் பார்வையை முன் வைக்கின்றார்.
பழ தங்கவேல் அவர்களின் “நெசவுத் தொழிலும் இலங்கை வானொலியில்” ஒரு தனிமனித வாழ்வில் வானொலி ஊடகம் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தி அந்த வாழ்வியலோடு ஒன்று கலந்திருக்கின்றது என்பதை அனுபவங்களின் துணையோடு வெகு ஆழமாகக் கொடுத்திருக்கும் படைப்பு.

இலங்கை வானொலி நிகழ்ச்சிகளின் ஆவணக் காப்பகமாகத் திகழும் சேலம், ஆத்தூரைச் சேர்ந்த விஜயராம் ஏ.கண்ணனின் கட்டுரை கூடத் தன் அனுபவமும், இலங்கை வானொலியின் வரலாற்றுப் பயணமுமாகக் கலந்த மிக முக்கியமானதொரு கட்டுரை.
பெருமதிப்புக்குரிய மூத்த ஊடகர் அப்துல் ஜபார், மறைந்த ஜோர்ஜ் சந்திரசேகரன், போன்றோர் கட்டுரைகளில் இலங்கை வானொலியின் நாடகப் படைப்புகள் குறித்து விரிவாகப் பேசப்படுகின்றன.
மேலும் ஆய்வுக் கட்டுரைகளில் “நெல்லை நேயர்களின் பார்வையில் இலங்கை வானொலி: முக்கியத்துவமும் தாக்கமும் (அபிநயா), ஹெரால்ட் இன்னீஸ் கருத்தாக்கப் பார்வையில் இலங்கை வானொலியின் வண்ண அட்டைகள் (தங்க ஜெய்சக்திவேல்) போன்ற பன்முகப்பட்ட ஆய்வுத் தேடல்கள் இலங்கை வானொலியின் பங்களிப்பு தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு கூறுகளிலும் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை நடத்தியிருப்பதை அனுபவிக்க முடிகின்றது.
இந்த நூலை வாசித்து முடித்த பின்னர் இன்னும் மனதில் தங்கி, நெகிழ வைக்கும் ஒரு நிகழ்வை இங்கே குறிப்பிட வேண்டும்.

இலங்கை வானொலிக் கலையகம் சென்று பார்த்த தமிழக நேயர் அந்த வானொலிக் கலையகத்தின் மண்ணை அள்ளிக் கொண்டு வந்து பூஜிக்கும் நிகழ்வைப் படித்த போது இந்த வானொலி ஒரு காலத்தில் நம் எல்லோரையும் ஆட்கொண்டதன் வீரியத்தை உள்ளத்துக்கு உரைத்தது.


No comments: