'நன்றே நமக்குமோர் காலம்வரும்' என்று நறுந்தமிழ் வளர்த்திடக் காத்திருப்பீர்!.

 .


.................. பல் வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்



('தங்கத் தாத்தா'வின் 'கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா? -- நித்தம்

காவல் புரிகின்ற சேவகா! ' ...என்ற பாடலின் மெட்டு) 












தாத்தா:- 

பள்ளிக் குச்சென்றிடும் பாப்பாவிடம் நானும்

       'படிக்கவா தமிழ்'என வரிந்தழைத்தேன்- தமிழ்

       'படிக்கவா தமிழ்'என வரிந்தழைத்தேன் 

துள்ளி நின்றேயவள் ஆங்கிலமொழி தன்னில்

       சொன்னசொல் நெஞ்;சினிற் சுட்டதம்மா!- பதில்

       சொன்னசொல் நெஞ்சினிற் சுட்டதம்மா!












பாப்பா :- 

தாத்தாவே உனக்கென்ன பைத்தியம் பிடித்ததா?

   தமிழ்தனை ஏனோ படிக்கவேணும்?-- சொல்லு 

   தமிழ்தனை ஏனோ படிக்கவேணும்?

'வாத்தி'யார் படிப்பித்த தமிழுந்தான் புரியலை

   வந்திடும் எனக்குத் தலையிடியே! - தினம்

   வந்திடும் எனக்குத் தலையிடியே!


தமிழைநான் படித்திட்டால் சோறேதும்  போடுமோ?

   தரமான வேலைதான் வாய்த்திடுமோ? - இங்கு

   தரமான வேலைதான் வாய்த்திடுமோ? 

அமிழ்தமே என்றாலும் தமிழைநான் பேசிட

   அனைவரும் சிரிப்பரே என்செய்குவேன்! - நண்பர்

   அனைவரும் சிரிப்பரே என்செய்குவேன்! 


வெட்கம் மிகவெட்கம் தலையைநான் குனியவா?

   விருப்பொடு  ஆங்கிலம் பேசுவோர்முன் - எங்கும்

   விருப்பொடு  ஆங்கிலம் பேசுவோர்முன்

'பட்டிக் காடாநீ' எனைக்கேலி செய்திடப்

   பகலிர வாக அழுதிடவா? - தினம் 

   பகலிர வாக அழுதிடவா?


தாத்தா :- 

'தப்பு'  நீ சொல்வது அத்தனையும் தப்பு

   சற்றேநான்  சொல்வதைக் கேட்பாயடீ! - நீயும்

   சற்றேநான்  சொல்வதைக் கேட்பாயடீ! 

எப்பநீ தமிழ்பேசும் பெற்றோரின் பிள்ளையோ

   இனிய தமிழேயுன் தாய்மொழியே! - என்றும்

   இனிய தமிழேயுன்  தாய்மொழியே!


போலிக் கௌரவமுன் கண்களை மறைத்ததோ?

   புரிந்திடு உண்மையைத் தெரிந்திடுவாய்! - நீயும் 

   புரிந்திடு உண்மையைத் தெரிந்திடுவாய்! 

வாலைக் குமரியாய் வளர்ந்திட்ட பின்னரே

   வண்டமிழ்ப் பெருமையை அறிந்திடுவாய்! - எங்கள்

   வண்டமிழ்ப் பெருமையை அறிந்திடுவாய்;!


சீனப் பெருநாட்டின் சிறுவர்களைப் பார்த்துச்

   செல்வமே நீயும் திருந்திடுவாய்! - என்தன்

   செல்வமே நீயும் திருந்திடுவாய்!

வானமே இடிந்தாலும் கூடிடும்போ தென்றும்

   வணங்கியே சீன மொழிபேசுவர்!  - தாயை

   வணங்கியே சீன மொழிபேசுவர்!


சீனரின் செய்கையைப் பார்த்தாகிலும் எங்கள்

   செம்மை மொழிதனைக் கற்றிடுவாய்! - தமிழெனும்

   செம்மை மொழிதனைக்; கற்றிடுவாய்!

ஏனடீ 'தமிழர்தன் மானம்' உனைவிட்டு; 

   எங்கு தொலைந்ததோ சொல்லுவாயா? - அது 

   எங்கு தொலைந்ததோ சொல்லுவாயா?


அன்பே தமிழைநீ அறவே மறந்திட்டால்

   ஆர்உனைத் தமிழனென்(று) அழைத்திடுவார்? - கண்ணே

   ஆர்உனைத் தமிழனென்(று) அழைத்திடுவார்? 

தொன்மைத் தமிழைநீ புறந்தள்ளி மறந்தபின்

   தொடருமுன் சந்ததி இனமுமேது? - பின்னர்

   தொடருமுன் சந்ததி இனமுமேது?


பாரினை ஆண்டிட்ட செம்மொழித் தமிழதன்

   பரந்தநற் புகழெலாம் சொல்லிவிட்டேன் - கண்ணே

   பரந்தநற் புகழெலாம் சொல்லிவிட்டேன்

யாரினித் தடுத்தாலும் தமிழைநீ கற்றிட

   தயங்க மாட்டேனென்று உறுதிசொல்வாய் - என்றும்

   தயங்க மாட்டேனென்று உறுதிசொல்வாய்!


பாப்பா:-

இப்போ எனக்கெல்லாம் மிகநன்றாய்ப் புரிந்ததே

  என்றுந் தமிழ்தனை வாழவைப்பேன் - இனி

  என்றுந் தமிழ்தனை வாழவைப்பேன்

எப்பவும் என்னப்பா என்சொல்லைக் கேட்டிடார்

  இதற்கோர் உபாயமும் சொல்லிடுவாய் - தாத்தா

  இதற்கோர் உபாயமும் சொல்லிடுவாய்!



தாத்தா:-

தென்புடன் அப்பாவைப் பார்த்தின்று சொல்லுவாய்!

   தேன்தமிழ் கற்கவுன் சம்மதத்தை! - நல்ல

   தேன்தமிழ் கற்கவுன் சம்மதத்தை! 

அன்புடன் மறுத்திட்டால் ஆதங்கமும் வேண்டாம்!

   அடுத்த தலைமுறை உனதல்லவா? - வரும்

   அடுத்த தலைமுறை உனதல்லவா?; 

 

பாப்பா:-

புலம்பெயர் நாட்டில்நாம் செல்வத்துடன் வாழப்

  பொன்னான ஆங்கிலம் போதுமென்றார் - அப்பா

  பொன்னான ஆங்கிலம் போதுமென்றார்

கலங்கா திருபிள்ளை! நல்லாய்ஆங் கிலமதைக்

  கற்பிக்க நண்பரும் வருவரென்றார் - வீட்டிற்குக்

  கற்பிக்க நண்பரும் வருவரென்றார்


தாத்தா:-

அருமைப்  புகழ்கொண்ட தமிழ்தனையே உன்றன்

   அடுத்த தலைமுறைக்(கு) எடுத்திடுவாய்! - நன்றே

   அடுத்த தலைமுறைக்(கு) எடுத்திடுவாய்!

பெருமைச் சிறப்பெல்லாம் உணரும் வயதில்லை

   பேதையே நானொரு வழிசொல்லுவேன்  - கேட்பாய்

   பேதையே நானொரு வழிசொல்லுவேன் 

 

வளர்ந்ததும் கரம்பற்றும் மாப்பிளையிடம்  நீயும்

   'வரம் ஒன்றுதா' வெனக் கேட்டிடுவாய்! - நல்ல

   'வரம் ஒன்றுதா' வெனக் கேட்டிடுவாய்!

குழந்தை பிறந்திட்டால் அதற்குத்தேன் தமிழையும்

   கொடுத்து வளர்த்திட வேண்டிடுவாய்! - மறுக்காது

   கொடுத்து வளர்த்திட வேண்டிடுவாய்!

தாத்தா தமிழ்ப் பிள்ளைகளுக்கு :-


இன்றெங் கும்வாழ்தமிழ்ப் பிள்ளைகளே நீவிர்

   ஏற்ற வழியென அறிந்திடுவீர்! - இதுவுமோர்

   ஏற்ற வழியென அறிந்திடுவீர்!

'நன்றே நமக்கும்நற் காலம்வரும்' என்று

   நறுந்தமிழ் வளர்த்திடக் காத்திருப்பீர்-  பெற்றோராய்

   நறுந்தமிழ் வளர்த்திடக் காத்திருப்பீர்!



தமிழ் மொழியைப் பிள்ளைகள் விரும்பிக் கற்று வந்தபோதும் அவர்கள் அதைத்    தொடர்ந்து கற்கவிடாது அவர்களை நிறுத்தவேண்டிய சூழ்நிலை பெற்றோர் சிலருக்கு ஏற்படுகிறது. சிலருக்குத் தமிழைப் படிப்பிப்பதனால் இந்நாட்டிலே ஏது பயன் என்று கருதிப் பிள்ளைகளைத் தமிழ் படிப்பிக்காது 'பாதுகாத்து' வருகிறார்கள். இதிலே ஒரு ஆச்சரியம் என்னவென்றால தமிழிலே மிகுந்த ஆர்வமுடைய பெற்றோர் பலரும் தங்களின் பிள்ளைகளையோ அல்லது தங்கள் பிள்ளைகளை மணமுடித்த மருமக்களைகளையோ தக்கபடி உணரவைத்து அவர்களின் பிள்ளைகளுக்குத் தமிழைப் படிக்கவைக்கத் தயங்குகிறர்கள். அவுஸ்திரேலியாவின் கலாசாரப்படி தங்களின் பிள்ளைளிடம் உரிமையுடன் பேரப்பிள்ளைகளுக்குத் தமிழைக் கட்டாயம் படிப்பியுங்கள் என்று சொல்லும் உரிமைகூட இல்லாது பிள்ளைகளின் 'சுதந்திரத்தில்' தலையிடாது வாழாவிருக்கிறார்கள்.  பெற்றபிள்ளைகளின் 'தனித்துவத்திலே'தலையிட இங்குள்ள கலாசாரம் இடம் கொடுக்கவில்லை! அவர்களின் பேரப்பிள்ளைகளோ ஒரு சொல்கூடத் தெரியாது 'தமிழன்' என்ற போலிப் போர்வையைப் போர்த்தியவண்ணம் வளருகின்றார்கள். பிள்ளைகள் சிலர் தாங்களாகவே தமிழ் தேவை இல்லையென்று கருதிப் படிக்காது விடுகின்றனர். இத்தகையோர் எல்லோரும் தாய்மொழியை மறப்பது தங்களின் பெற்ற தாயை மறப்பதுபோன்றதென்பதை என்றுதான் உணரப் போகிறார்களோ?. அவர்களின் சிந்தனையிலே மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது  தமிழ் ஆர்வலர்களின் காலத்தின் கடமை அல்லவா?.

............................................................................................. 

பாரதி நான்சொன்ன  யோசனையைக் கேட்டுப்

  பரவசங் கொண்டாளென் சோதரியே! - மெத்தப்

  பரவசங் கொண்டாளௌ சோதரியே!

வாரம் ஒருமுறை மலரும்நல் முரசிலே

   'வரச்செயப்  பயனுண்டு என்றனளே - நாளை

  வரச்செயப்  பயனுண்டு என்றனளே!'

 ..........................................................................................


No comments: