இலங்கை தமிழ் இதழியலில் பேராசிரியர் கைலாசபதியின் வகிபாகம் அங்கம் -02 முருகபூபதி


லங்கைத்தலைநகரை எடுத்துக்கொண்டால், அங்கிருந்து வெளியான அனைத்து தமிழ், சிங்கள, ஆங்கில நாளேடுகள் மற்றும் வார இதழ்கள் அனைத்துக்கும் பின்னால் அரசியல் இருந்தது.

லேக்வுஸ், ரைம்ஸ் ஒஃப் சிலோன், தவஸ குரூப், வீரகேசரி, ஐலண்ட், விஜய  முதலான அனைத்துக்கும் பின்னால் அரசியலும் அரசியல் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களும் இருந்தனர்.

கொழும்பு கிரேண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்கத்திலிருந்து வெளிவரத்தொடங்கிய  வீரகேசரி பத்திரிகை அமைந்த இல்லத்தில்தான் முன்னாள் அதிபர் ஜே. ஆர். ஜெயவர்தனா, 1906 ஆம் ஆண்டு பிறந்தார்.  பின்னாளில் அவரும் அவரது சகாவான டட்லி


சேனாநாயக்காவும் அதனை வாங்கி ஆங்கில – சிங்கள பத்திரிகைகளும் வெளியிட்டனர்.

அதே ஜே. ஆர். ஜெயவர்தனாவின் நெருங்கிய உறவினரான அவருக்கு முன்னர்   1886 ஆம் ஆண்டு பிறந்த டொன் ரிச்சர்ட் விஜேவர்தனாதான் 1909 இல் ஆரம்பிக்கப்பட்ட தினமின தினசரி பத்திரிக்கையை 1914 இல் சொந்தமாக வாங்கி அதனை அவரே விநியோகிக்கத் திட்டமிட்டார். 1918 ஆம் ஆண்டில் Ceylonese என்ற ஆங்கில பத்திரிக்கையை வாங்கி அதனை Daily News  என்று பெயர் மாற்றி நாட்டின் மிகவும் பிரபலமான ஆங்கில செய்தித்தாளாக உருவாக்கினார். 1923 ஆம் ஆண்டில் ஐரோப்பியர்களுக்கு சொந்தமான  Observer பத்திரிக்கையை வாங்குவதற்கான சந்தர்ப்பம் அவருக்கு அமைந்தது.


Ceylonese
என்ற பத்திரிகையை சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களிடம் இருந்து அப்போது என்ன விலைக்கு அவர் வாங்கினார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

 அன்றைய அதன் விலை பதினாறாயிரம் ரூபாதான்.

லேக்வுஸின் நிறுவனர், டீ. ஆர். விஜயவர்தனாவின் நெருங்கிய இரத்த உறவினர்தான் மூத்த பத்திரிகையாளர் எஸ்மண்ட் விக்கிரமசிங்கா.

இவரது மகன்தான் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா.

The Island – திவயின,  சித்ரமித்ர  முதலான பத்திரிகைகளை ஆரம்பித்த உபாலி விஜேவர்தனாவும் ஜே.ஆர். ஜெயவர்தனாவின் மருமகன் முறையானவர்தான்.

தவஸ, SUN , தினபதி, சிந்தாமணி, ராதா, சுந்தரி  உட்பட 16 இற்கும் அதிகமான பத்திரிகைகளை வெளியிட்ட எம். டீ. குணசேனா நிறுவனர் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் நெருங்கிய நண்பர்தான்.

இதிலிருந்து இலங்கை தலைநகரிலிருந்து வெளியான  மும்மொழிபத்திரிகைகளுக்கும் பின்னாலிருந்த அரசியல் தெளிவாகும்.


இந்தத் தெளிவுடன்தான் எங்கள் கைலாசபதி அவர்களும்,  1959 காலப்பகுதியில்  டீ. ஆர். விஜேவர்தனாவின் லேக்வுஸ் என்ற ஏரிக்கரை  இல்லத்திற்குள் பிரவேசிக்கிறார்.

 "நாட்டின் தேசிய அடையாளமாக உருவாகிக்கொண்டு வரும் தேசியவாத எழுச்சியின் வீச்சை  பத்திரிகைகள் கண்ணாடி போல் பிரதிபலிக்கும்."  என்பதுதான் டீ. ஆர். விஜயவர்தனாவின்  அன்றைய 1914 ஆம் ஆண்டில் வாக்குமூலமாக இருந்தது.

இது இவ்விதமிருக்க,  கைலாசபதி தினகரன் ஆசிரியராக இருந்த காலப்பகுதியில் எழுதியிருக்கும் இந்த வரிகளைப் பாருங்கள்:

 “ தேசிய உணர்வுவெள்ளம் வடிந்தபின்னும் அந்த இலக்கியம் அந்த நாட்டில் மட்டுமன்றி, உலகமெங்கும் மதிக்கப்படுவதற்கு சில நிரந்தர இலட்சியங்களே உதவுகின்றன. அந்த நிரந்தர உண்மைகளை தேசிய உணர்வு மூலம் கண்டுகொள்வதே தேசிய இலக்கியம் படைப்பவனின் பெருஞ்சோதனையும் பொறுப்புமாகும்  “

( மரகதம் இதழ் 1961 ஓகஸ்ட் )

கைலாசபதி,  தினகரனை பொறுப்பேற்பதற்கு முன்னர் அதில் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட்டது.

அத்துடன் அவர்களுக்கு சன்மானமும் வழங்கப்பட்டது.  ஈழத்து எழுத்தாளர்கள் மட்டுமல்ல கலைஞர்கள் மீதும் அங்கே புறக்கணிப்பு நடந்திருக்கிறது.

ஒரு சிறிய உதாரணம் மாத்திரம் சொல்கின்றேன்.


இலங்கை வடபுலத்தில் வாழ்ந்த நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் ஒளிப்படத்தை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள்.  அது மட்டுமல்ல,  ஈழநாடு முதல் இதழ் வெளியானதும்  அதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டு, இதனை ஏசுவார்கள் எரிப்பார்கள் என்று சொன்ன  யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இருந்த துறவி  யோகர் சுவாமிகள் பற்றியும் அறிந்திருப்பீர்கள். இவர்கள் இருவரையும் நீங்கள் இன்றும் காண்கின்ற அந்த ஒளிப்படங்களை  எடுத்தவர் ஓவியர் கே. ரி. செல்வத்துரை. இவர் யாரென்றால் அவுஸ்திரேலியாவில் மறைந்த எழுத்தாளர் அருண். விஜயராணியின் தந்தையார், யாழ்ப்பாணத்தில்  வாழ்ந்த மூத்த எழுத்தாளர் முனியப்பதாசனின் தாய் மாமனார்.

அவர் நேருக்கு நேர் சந்தித்து நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் படத்தை எடுத்துக்கொண்டு தினகரனில் பிரசுரத்திற்கு வழங்கினார்.   எந்தவொரு ஒளிப்படக்கலைஞனும் தனது பெயரை அதில் பதிவுசெய்து கொடுப்பது வழக்கம்.  இன்றும் நீங்கள் பத்திரிகைகளில் வெளியாகும் படங்களின் கீழே அதனை எடுத்தவரின் பெயர் இருப்பதை அவதானிப்பீர்கள்.

ஆனால், அன்று தினகரனில் இருந்த ஒரு ஆசிரியர், அந்தப்படத்தின் கீழே இருந்த, அதனை எடுத்தவரின் பெயரை கத்திரித்துவிட்டு பிரசுரித்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க,

தினகரனில் அவ்வேளையில் கதைகள் படைத்தவர்கள் சென்னை


மவுண்ட் ரோட்டையும் மெரீனா பீச்சையும் பகைப்புலமாகக் கொண்டு எழுதினார்கள். இதனால் அன்றைய ஈழத்து தமிழ்த் தேசிய படைப்பிலக்கியம் தேக்கம் கண்டது. அதனை உடைத்தெறிந்தவர்தான் கைலாசபதி.

அவர் ஈழத்து எழுத்தாளர்களுக்கு தினகரனில் களம் தந்து ஊக்கமளித்தார்.  ஈழத்தமிழ்ப்பத்திரிகையின் செல்நெறியை வகுத்தார்.

கைலாசபதிக்குப் பின்னர், தினகரன் ஆசிரியராக பொறுப்பேற்ற இ. சிவகுருநாதன், யாழ்.பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டம் பெறுவதற்காக சமர்பித்த ஆய்வில்,         " தேசிய இலக்கியம் உருப்பெற்று வளர்ச்சி காண கைலாசபதி களம் அமைத்துக் கொடுத்தார்" என்று குறிப்பிட்டிருப்பதையும் நாம் அறிகின்றோம்.

கைலாசபதி, தான் மாத்திரம் வளராமல், தன்னைச் சூழ இருந்தவர்களையும் வளர்த்தெடுத்தார். அவர்கள் பத்திரிகையாளர்களாயினும் படைப்பாளிகளாயினும் கலைஞர்கள், ஓவியர்கள், கார்டூனிஸ்ட்டுகளாயினும் சிற்றிதழ்காரர்களாயினும் அவர்கள் அனைவரும் தத்தமது துறைகளில் ஆரோக்கியமாக வளர்வதற்கு உற்றதுணையாக விளங்கியவர்.

பாரதியாரைச் சுற்றியும் எப்பொழுதும் நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் இருக்குமிடத்தில் வாதங்களும் இடம்பெறும். யார் யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது பற்றிய கலந்துரையாடல்கள் நிகழும். மொழிபெயர்ப்புகள் தொடர்பாக பேசப்படும். கைலாசபதியும் பாரதியைப் போன்றே தமக்கு நெருக்கமான இலக்கிய நண்பர்களிடம் கருத்துப் பரிமாறி பணிகளையும் ஒப்படைப்பார். யார் யார் தினகரனில் என்ன என்ன எழுத வேண்டும், எத்தனை நாளில் அவற்றை ஆசிரிய பீடத்தில் கொடுக்கவேண்டும் என்று அந்த மின்னஞ்சல் யுகமில்லாத காலத்திலேயே பத்திரிகை ஆசிரியர் பாரதியைப் போன்றே இயங்கினார்.

தமிழ் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய பாரதி சிந்தித்த கிருத யுகம் தொடர்பாக எழுதியிருக்கும் மு. தளையசிங்கத்திற்கு கைலாசபதியின் மார்க்ஸீய சிந்தனைகளில் அபிப்பிராய பேதங்கள் இருந்தன. கைலாசபதியை விமர்சித்தவர்களில் மு.தளையசிங்கம் முக்கியமானவர்.  எனினும்  மு. தளையசிங்கம் தமது ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற தொடரை கண்டியிலிருந்து வெளியான செய்தி இதழில் எழுதும்போது, 

                                                                      “கைலாசபதி, வர்த்தகத்தையே  பிரதான   நோக்கமாகக்கொண்டு இலக்கியத்தைப்பற்றி  அக்கறைப்படாது,  அதுவரையும்         வெறும் புதினத்தாளாக  இயங்கிவந்த  ஒரு  முதலாளி வர்க்கப்பத்திரிகைக்குள்  இலக்கியத்தைப்பற்றிய ஓரளவுக்குத்தரமான  பொதுவுடமைக்கருத்துக்களை  மட்டும் புகுத்தவில்லை.  கூடவே  அதே வண்டியில் கா. சிவத்தம்பி,  ஏ.ஜே. கனகரத்னா போன்ற இலக்கியம் பற்றிய தரமான கருத்துக்களையுடைய  வேறு  பலரின்  செல்வாக்கையும் பக்கபலத்தையும்  சேர்த்துக்கொண்டு  வந்தார்."

கைலாசபதியை  தமது  எழுத்துக்களில்  விமர்சித்துவந்த மு.தளையசிங்கமும்  கூட  தினகரனை  இலக்கியத்தரமாக வெளியிடுவதற்கு  அவர் மேற்கொண்ட  ஆக்கபூர்வமான முயற்சிகளை விதந்து பாராட்டியிருக்கிறார்.

தினகரன்,   தலைநகரின்  மத்தியில்  ஏரிக்கரையிலிருந்த லேக்வுஸ் கட்டிடத்திலிருந்து   1932ஆண்டு மார்ச் 15 ஆம் திகதியன்று  தனது முதலாவது இதழை இலங்கை தமிழ் வாசகர்களுக்கு வழங்கியது.   1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியானது.

தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே. மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி. ராமநாதன், எஸ். ஈஸ்வர ஐயர், எஸ். கிருஷ்ண ஐயர், ரி. எஸ். தங்கையா, வீ. கே. பீ. நாதன்,   ஆகியோருக்குப்பின்னர்தான்  பேராசிரியர் க. கைலாசபதி அந்த ஆசிரிய பீடத்திற்கு வருகிறார்.

1959 ஆம் ஆண்டில் பேராசிரியர் க. கைலாசபதி காலத்தில் கொழும்பில்  தினகரன் பத்திரிகை மாபெரும் முத்தமிழ் விழாவை நடத்தியது.

யாழ்ப்பாணத்திலும் தினகரன் விழா நடந்தது.  இவ்விழாவில் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம், எழுத்தாளர் அகிலன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  ஆகியேர்  கலந்து கொண்டனர்.

சிவாஜி கணேசன் அந்த விழாவில்தான் கலைக்குரிசில் பட்டமும் பெற்றுக்கொண்டு சென்றார்.

 

இதுபற்றியும் தற்போது கனடாவில் வதியும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய பதிவொன்றுள்ளது.

கைலாசபதி தமது  தொடக்க கால  இதழியல் பணியின்போது  கவசம் அணிந்திருப்பாரா..?  என்றும் பின்னாளில் நானும் ஒரு பத்திரிகையாளனாக வந்துபோது யோசித்திருக்கின்றேன்.

அவரின் பணி பிரதம ஆசிரியருக்குரிய பொறுப்பு மிக்க கடமை சார்ந்தது.  கத்தியின் மேல் நடக்கும் செயலுக்கு ஒப்பானது.

அவர் 1958 இல் நடந்த இனக்கலவரத்திற்குப்பின்னர் அந்தப்பதவியை பொறுப்பேற்றவர். 

1977 இல் கலவரம் மீண்டும் வந்தபோது,  கொழும்பு வெள்ளவத்தை 42 ஆம் ஒழுங்கை 29 இலக்க இல்லத்தில்தான் இருந்தார்.

அவ்வேளையில் அவரது பணி யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்தது.

1981 இல் மே மாதம் 31 ஆம் திகதி  யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு,  ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் தீ அரக்கனுக்கு இரையானபோதும், யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை  உட்பட கைலாசின் நண்பர் புத்தகக்கடை பூபாலசிங்கத்தின் பிரபல்யமான புத்தகக்கடை எரிக்கப்பட்டபோதும் அவர்  கொழும்பிலா, யாழ்ப்பாணத்திலா இருந்தார் என்பது எனக்குத் தெரியாது. 

மீண்டும் 1983 நடுப்பகுதியில்  தென்னிலங்கையை கலவர மேகம் சூழந்து ஏராளமானவர்கள் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக தமிழகம் செல்லத்தலைப்பட்டவேளையில் கைலாஸ் எம்மோடு இல்லை.

ஈழத்து இலக்கியம் பத்தாண்டுகள் பின்னிற்கிறது என்றும் ஈழத்து இலக்கியத்திற்கு அடிக்குறிப்புகள் வேண்டும் என்றும் தமிழகத்தின் எழுத்தாளர்கள்  கங்கை ஆசிரியர் பகீரதனும், கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதனும் சொன்னபோதும், அதற்கு முன்னர் மரபுப்பண்டிதர்கள் நடத்திய பிரசாரத்தின்போதும், கைலாஸ் அவற்றுக்கெல்லாம் முகம்கொடுத்து தனது கருத்துக்களினால் சமராடினார்.

தமிழ் நாவல் நூற்றாண்டு வந்தபோது  தமிழகத்தில்  முத்தமிழ் அறிஞர்   பல நாவல்களின் ஆசிரியர் முதல்வராக இருந்தும், மறந்திருந்தவேளையில்,  அதனை நினைவூட்டியதுடன், பாரதி   நூற்றாண்டு வந்தபோது, நாம் என்ன செய்யவேண்டும் என்று அது வருவதற்கு முன்பே ஈழத்து இலக்கிய சிற்றிதழ்களில் கட்டுரைகளை எழுதியவர்,

1983 இற்கு பிற்பட்ட காலப்பகுதியில்  தோன்றிய போர்க்கால இலக்கியம்,  அந்நியம் சென்றவர்களினால் படைக்கப்பட்ட புலம்பெயர்தோர் இலக்கியம்,  பனியும் பனி சார்ந்த பிரதேசமான ஆறாம் திணையிலிருந்து தோற்றம் பெற்றுள்ள புகலிட இலக்கியத்தின் செல்நெறியை பார்க்காமலேயே கண்களை மூடிவிட்டார்.

 

பேராசிரியர் தினகரன் பத்திரிகையில் பிரவேசித்த  காலத்தில் நாட்டில் ஏற்பட்டு வந்த மாற்றங்கள் பற்றியும் எழுதியிருப்பவர்.

 

1956 ஆம் ஆண்டுக்குப்பின்னர் தோன்றிய மாற்றங்களுக்குள்ளும் அரசியல் இருந்தது.  பிறப்பிலே கத்தோலிக்கரான எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அந்த மதத்திலிருந்து  பௌத்த சமயத்திற்கு மாறியதுடன், அதுவரையில் லண்டனில் படித்து  மோனாட்டு உடையை அணிந்த அவர்  சிங்கள  தேசிய உடையில் தோன்றி, அதுவே தனது இனம், அதன் மொழியே தனது மொழி என்று மக்களிடம் சிங்களத்தில் உரையாற்றினார். 

 

அத்துடன், சிங்களத்தை அரச கரும மொழியாகக்கி  பௌத்த மதமே அரச மதம் என்ற சட்டங்கள் இயற்றப்பட்டதும்,  அதன் எதிரொலியாக தமிழர்கள் தமது இனத்தேசியம் குறித்து சிந்திக்கத் தள்ளப்பட்டனர்.

 

தமிழ்த் தேசிய இலக்கியம், கோட்பாட்டு ரீதியான போராட்டங்களுடாக முன்னெடக்கப்பட்ட

சூழலில் இலங்கை தமிழ் இலக்கியத்தின் பாராம்பரியத்தையும் அதன் வளர்ச்சி போக்குகளையும் வெளிக் கொணரும் வகையில் ஆக்க இலக்கியங்களும் அது தொடர்பான கட்டுரைகளும் வெளிவருவதற்கு ஏற்றவாறு தினகரனை  அவர் மாற்றினார்.

 

( தொடரும் )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அவரது அன்றைய பணி குறித்து வெளியான ஒரு பதிவை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.

 

 இலங்கை தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை வலியுறுத்திய அதே சமயம் பொதுவான தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கினையும் கவனத்திலெடுத்து செயற்பட்டமை பேராசிரியரின் தனித்துவமான சிறப்புகளில் ஒன்றாகும்.

 

தேசிய இலக்கிய செல்நெறி காரணமாக ஒவ்வொரு பிரதேசம் சார்ந்த மண்வாசனையும் மக்களின் சமகால பிரச்சினைகளும் இலக்கியத்தின் பாடுபொருள்களாயின. அந்தவகையில் வடக்கு கிழக்கு மலையகம் சார்ந்து இலக்கிய படைப்புகளை தினகரன் பத்திரிகையின் ஊடாக வெளிக்கொணர்ந்ததில் பேராசியருக்கு முக்கிய பங்குண்டு.

 

பேராசிரியர் தினகரன் வாரப் பத்திரிகையில் பிதம ஆசிரியராக பதவியேற்ற காலத்தில்

பலதரப்பட்டோரை தன்னோடு இணைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கினார். தன்னுடன் ஒத்த கருத்துடையவர்களுடன் மாத்திரமின்றி  மாறுப்பட்ட கருத்துக் கொண்டவர்களும் தினகரனில் எழுதுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தார். 

 

செ. கணேசலிங்கன், சில்லையூர் செல்வராசன், அ.ந. கந்தசாமி. சுபைர் இளங்கீரன், என்.எஸ்.எம். இராமையா, சி.வி. வேலுப்பிள்ளை, வரதர், வ.அ. இராசரத்தினம், நந்தி, கனக. செந்திநாதன், சிற்பி சரவணபவன்,  தேவன், அ. முத்துலிங்கம், , என். கே. ரகுநாதன், கே.டானியல், எஸ். பொன்னுதுரை, டொமினிக் ஜீவா, பெனடிக்ற்பாலன், நீர்வை பென்னையன், ஏ.இக்பால், முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

சி.வி. வேலுப்பிள்ளையின்  வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம், பார்வதி, முதலியன தொடர்கதையாக வெளிவந்தன. இது தொடர்பில் பேராசிரியர் சி.தில்லைநாதன் பின் வருமாறு கூறுகின்றார்.

 

 “ பல புதிய அம்சங்களும் பரிசோதனைகளும் தினகரனில் இடம் பெற்றன. வாசகர்கள் பங்கெடுக்க கூடிய வகையில் திங்கட் கிழமைகளில் திங்கள் விருந்தும் புதன் கிழமைகளில் புதன் மலர் , வெள்ளிக் கிழமைகளில் முஸ்லிம் மஞ்சரி, சனிக்கிழமைகளில் மாணவர் உலகம் என்பன இடம் பெற்றன.  “

 

 

 

No comments: