வைரமாளிகை - தமிழரசன் பெர்லின்

வைரமாளிகை என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையைப் பின்புலமாய்க் கொண்ட ஒருவரின் பெரிய நகைக்கடையின் பெயராகும். ஆனால் வைரமாளிகை என்பது அந்த நகைக்கடையைவிட ஒரு மனிதனின் பெயராகவே யாழ்குடாநாடு எங்கும் அறியப்பட்டு இருந்தது. வைரமாளிகை (Diamond House)என்று தனது ஆடைகளில் முன்னும் பின்னுமாகப் பொறிக்கப்பட்ட எழுத்துக்களுடன் சுவிப் டிக்கற், பத்திரிகை விற்பனை என்பவற்றுடன் விளம்பரமும் செய்யும் மனிதரான வைரமாளிகையையே எமது பேசுபொருள். உயர்ந்த கறுத்த தோற்றமுடைய 60 வயதுக்கு மேற்பட்ட வைரமாளிகை "22 கரட் தங்க நகைகள் நயம் நம்பிக்கை நிறைந்தது" என்ற உரத்த குரலோடு இவர் யாழ் பஸ் நிலையத்தைச் சுற்றி வருவார். கஸ்தூரியார் வீதி ஸ்டான்லி வீதி ஆஸ்பத்தியடி என்று காணப்படுவார். கிட்டத்தட்ட 1960 முதல் 1987வரையில் யாழ் மக்களுக்கு மட்டுமல்ல வன்னி உட்பட மற்றைய பிரதேசங்களில் இருந்து வருபவர்களும் பஸ் நிலையத்தில் அவரைக் கட்டாயம் கண்டிருப்பார்கள். நல்லூர்த் திருவிழாவா சென் பற்றிக்ஸ் பெரிய கோவில் விசேடமா அங்கெல்லாம் அந்த நீலநிற வைரமாளிகை விளம்பரம் எழுதப்பட்ட உடையுடன் எங்கும் தென்படுவார். பெரும்பகுதியாக வைரமாளிகை யாழ் பஸ்நிலையத்தையே சுற்றி வருவார். உரத்த குரலில் திடுக்கிடும்படி பேசுவார். சத்தமிட்டு சிரித்து பற்களை நற நற என்று சத்தம் வரும்படி நெருமி நிமிர்ந்து ஆமிக்காரன் போல நடப்பார். ஓடுவார். ஆடுவார். பாடுவார். வெயில் மழைக்கு ஒதுங்காத ஓய்வெடுக்க சற்று குந்தியிருக்க ஒத்துக்கொள்ளாத இடைவிடாத இயக்கமுடையவர் வைரமாளிகை.
தன்னை வியப்புடனும் பயத்துடனும் பார்க்கும் குழந்தைகட்கு அருகே சென்று வைரமாளிகை விளையாட்டுக் காட்டுவார். மேஜிக் காட்டி பொக்கற்றிலிருந்து இனிப்பு வரவழைத்து தருவார். நகருக்குப் புதியவர்களுக்கு போகவேண்டிய இடங்களை விளக்க நேரம் எடுத்துக் கொள்வார். முதியவர்கள், அங்கவீனர்கள், பெண்களுக்கு உதவி செய்வார். தெருக்களைக் கடக்க உதவுவார். வழிகாட்டுவார். யாழ் பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் பஸ்கள் செல்லும் நேரம் இடம் திசை, எந்தெந்தக் கிராமம் தெருக்கள் ஊடாகச் செல்கிறது என்பதெல்லாம் விளக்கிச் சொல்வார். "பருத்தித்துறை 750 இலக்க பஸ் வெளிக்கிடுகிறது. 577 இலக்க தெல்லிப்பழை பஸ் வெளிக்கிடுகிறது ஏறுகிறவர்கள் எல்லாம் ஏறுங்கள்" என்ற அவரின் குரல் யாரும் வேதனம் தராமலே ஒலிக்கும். யாழ் பஸ்நிலையத்தில் பஸ்ஸிற்குக் காத்திருக்கும் மக்களுக்கு வைரமாளிகை சிறந்த பொழுதுபோக்கு. எல்லோரும் அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். வைரமாளிகை நகைக்கடை விளம்பரத்துடன் சுவிப் டிக்கற் விற்பார். சிலசமயம் பத்திரிகைகள் சஞ்சிகைகள் கொண்டு திரிவார். பத்திரிகைகளில் வரும் செய்திகளை உரக்கச் சத்தமிட்டு சொல்வார். அந்தக் காலத்தில் கோகிலாம்பாள் வழக்கு நடைபெற்ற சமயம் அமிர்தலிங்கம் கோகிலாம்பாளுக்காக வாதாடியபோதும் அவளுக்குத் தண்டனை கிடைத்தது. அப்போது தீப்பொறி பத்திரிகை அமிர்தலிங்கத்தை கோகிலாம்பாள் புகழ் அமிர்தலிங்கம் என்று எழுதியது. ஆங்கில மோகமும் மிதப்பும் கொண்ட ஜீ ஜீ பொன்னம்பலத்தை சீ சீ பொன்னம்பலம் என்று எழுதியது. இச்செய்திகளை வைரமாளிகை சத்தம் போட்டுச் சொல்வார். வைரமாளிகைக்குப் பின்னால் திரிந்தால் பேப்பர் வாசிக்கத் தேவையில்லை என்று பகிடியாய்ச் சொல்லப்படுவதுண்டு.
அக்காலத்தில் தொலைக்காட்சிகள்; வராத காலம். ஒரு பேப்பரை வாங்கிப் பலர் படிப்பார்கள். வாசிக்கும் பழக்கம் வளரத் தொடங்கிய காலம். அக்காலத்தில் வைரமாளிகை ஊர் உலக நடப்புகளையும் தன் சொந்தக்கதைகளையும் ஒன்றுசேரப் பேசும் மனிதராக மக்கள் தொடர்பாளராக இருந்தார். அவர் ஒரு விளம்பரம் செய்யும் ஆளாக பேப்பர் சுவிப் டிக்கற் விற்கும் ஒரு அலைந்து திரியும் வியாபாரியாக இருந்தார் என்பதையும் மீறி அவருள் மனிதர்களிடம் பேசும் உரையாடும் மக்களை விட்டுப் பிரிந்து வாழ்ந்துவிட முடியாத பண்பு இருந்தது. தனது வியாபார, விளம்பர விடயங்களுக்கு வெளியேதான் அவர் அதிக விடயங்களைப் பேசுவார். வேடிக்கை, சிரிப்பு, முரட்டுத்தனம் இடையறாப் பேச்சுக் கொண்ட உணர்வுபூர்வமான தீவிரமான மனிதன் வைரமாளிகை. பினாட்டு, கூழ், சிவப்புக் குத்தரிசியின் பெருமை பேசி முருங்கைக்காய் கறியோடு தன் தாயிடம் சோறு தின்ற கதை, சனிக்கிழமை உடம்புக்கு எண்ணை தேய்த்து சீயக்காய் அரப்பு வைத்து குளிக்கும் அவசியம் என்பதெல்லாம் யாரும் கேளாமலே அவரின் விபரிப்புகளில் இடம் பிடிக்கும். நல்லூர் கொடியேறி விட்டது சன்னிதியானின் திருவிழா பாசையூர் அந்தோனியார் திருவிழா சென் பற்றிக்ஸ் பெரிய கோயில் கொண்டாட்டம் எல்லாம் அவரிடம் செய்தியாக மக்களுக்கு வரும்.
அவரின் சொந்த இடம் மானிப்பாய். குடும்பம் எதுவும் கிடையாது. கொஞ்சக்காலம் மறியலிலும் இருந்தவர் என்று சனங்கள் அவரைப்பற்றி பேசிக் கொண்டார்கள். அவருக்கு வைர மாளிகை நகைக்கடையிலிருந்து விளம்பரம் செய்வதற்கு கூலியாக மாதம் 60 ரூபாவும் புதுவருடம் தீபாவளி விசேடங்களுக்கு கொஞ்சக் காசும் கிடைத்து வந்தது. அவர் பகல் பொழுதில் கிடைத்ததைச் சாப்பிட்டு பழைய மாக்கற்றுக்கு அருகில் உள்ள ஒரு கடையில் தானே வாங்கி வைத்திருக்கும் தேயிலை, பால்ரின்னைக் கொண்டு பால் தேத்தண்ணி போட்டுக் குடிப்பார். இரவு படுக்க வைரமாளிகை நகைக்கடைக்குப் போவார். 1980களில் யாழ்ப்பாணம் மாறத் தொடங்கிவிட்டது. பலர் வெளிநாட்டுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். தொலைக்காட்சிகள் விளம்பர சேவைகள் தோன்றத் தொடங்கிவிட்டன. வைரமாளிகையின் தொடர்ச்சியாக யாழ் பஸ்நிலையத்தில் மணிக்குரல் விளம்பரச் சேவை தொடங்கிவிட்டது. போர் வந்தபோது வைரமாளிகையினால் பழைய தன் வாழ்வைத் தொடர முடியவில்லை. சுவிப் டிக்கற் பத்திரிகை விற்பனைகள் இல்லை. நகை வாங்குவோர் குறைந்ததுடன் புலிகள் வைரமாளிகை நகைக்கடை பொறுப்பாளர் முருகமூர்த்தியிடம் 50 இலட்சம் ரூபா காசும் வெருட்டி வாங்கிவிட்டார்கள். எனவே வைரமாளிகைக்கு நகைக்கடையான வைரமாளிகையின் ஆதரவும் நெருக்கடியாகிவிட்டது. அவர் 1987ம் ஆண்டில் இந்திய இராணுவத்திடம் உணவுப் பொருட்களை விலைக்கு சிறிய அளவில் வாங்கி விற்பனை செய்து தனது வயிற்றுப்பாட்டைத் தீர்த்துக் கொள்ள முயன்றார்.

இதனால் புலிகள் அவரை யாழ் ஆரியகுளச் சந்தியில் பொருட்கள் விற்பனை செய்துகொண்டு இருந்தசமயம் பிடித்து சுட்டுக் கொன்றனர். இப்படித்தான் யாழ்ப்பாணத்தில் ஒருவர் தன்னிடமிருந்த மாட்டை இந்தியன் ஆமிக்கு கொடுத்துவிட்டு நன்கு பால் கறக்கக்கூடிய ஒரு விடக்கன் மாட்டை வாங்கிய குற்றத்திற்காக புலிகள் அவ் விவசாயியைச் சுட்டிருந்தனர். அதேசமயம் புலிகள் இந்தியாவிடமிருந்து தாம் மாதாமாதம் 5 மில்லியன் ரூபா பணத்தை பெற்று வந்தனர். வைரமாளிகை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத வெளிப்படையான மனிதன். அவரிடம் இரகசியங்கள் இருந்ததில்லை. மனிதர்களுடன் உறவாடி வாழ்ந்த மனிதன். வைரமாளிகைளை ஒரு மனிதப் பெறுமானம் அறியாத ஒரு புலிக் கொலைஞன் சுட்டான். வைரமாளிகை யாழ் பிரதேச மக்களின் விகடகவி. அவர்களின் தெனாலி ராமன். யாழ் பிரதேச மக்களின் நினைவுகளோடு கலந்தவன். யாழ்ப்பாண நகரின் உயிருள்ள பொது அடையாளங்களில் ஒருவன். யாழ் பஸ் நிலையமும் நூல் நிலையமும் திரும்பி விட்டன. ஆனால் வைரமாளிகையையோ உடைத்தெறியப்பட்ட யாழ்ப்பாண கோட்டையைப் போல என்றும் திரும்பாதவன். 

No comments: