இலங்கைச் செய்திகள்

மஹர அமைதியின்மை; 4 கைதிகளின் உடல்களை தகனிக்க உத்தரவு

மாலைதீவில் இலங்கையரின் உடல்கள் அடக்கம் செய்வதா?

அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் நடக்குமென நம்பிக்கை

முல்லைத்தீவு காட்டுக்குள் மன்னர் கால கல்வெட்டு

காங்கேசன்துறை அணைக்கட்டுகளுக்கு வவுனியாவிலிருந்து கற்கள்

 

மஹர அமைதியின்மை; 4 கைதிகளின் உடல்களை தகனிக்க உத்தரவு

மஹர அமைதியின்மை; 4 கைதிகளின் உடல்களை தகனிக்க உத்தரவு-Mahara Prison Shooting Court Ordered to Cremate 4 Bodies of Inmates

- குறித்த நால்வரும் துப்பாக்கிச் சூட்டிலேயே மரணம்

மஹர சிறையில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின்போது, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 11 பேர் மரணடைந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதற்கமைய, குறித்த நபர்கள் அனைவரும் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.

அதன் அடிப்படையில், அவர்களது உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் முடிவு செய்திருந்த நிலையில், உடல்களை எரித்து அழிப்பதன் மூலம் மஹர சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு விடும் எனத் தெரிவித்து, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எனவே இது தொடர்பில் குறித்த சடலங்களின் பிரேதப் பரிசோதனையை விரைவாக நிறைவு செய்யும் வகையில், ஐவரடங்கிய விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்க இணக்கம் காணப்பட்டது.

குறித்த விசேட நிபுணர் குழுவில், சட்ட வைத்திய விசேட நிபுணர்கள் 4 பேர் மற்றும் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தின் ஆயுதங்கள் தொடர்பான விசேட நிபுணர் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

குறித்த நபர்களின் சடலங்களை அடக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) வத்தளை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றையதினம் (16) குறித்த கைதிகள் 11 பேரில் நால்வரினது பிரேதப் பரிசோதனை அறிக்கை மன்றில் கையளிக்கப்பட்டது.

இதன்போது, மரணித்த கைதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட சடலங்களை அடக்கம் செய்வதற்காக உறவினர்களிடம் கையளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஆயினும், இதன்போது அரசாங்கம் சார்பில், CID திணைக்கள அதிகாரிகளுடன் சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி, நிஷாரா ஜயரத்ன, அதற்கு எதிர்ப்பை வெளியிட்டார்.

குறித்த சடலங்களால் சுகாதார பிரச்சினை ஏற்படலாம் எனவும், அவற்றை தொடர்ந்தும் உரிய முறையில் பேணிப் பாதுகாப்பதற்கான இடவசதிகள் தற்போது IDH வைத்தியசாலையில் இல்லை எனவும் தெரிவித்ததோடு, அவற்றை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் முறைமையொன்று ஏற்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

எனவே, 2020 ஏப்ரல் 11ஆம் திகதி சுகாதார அமைச்சினால்.. வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானிக்கு அமைய, உரிய வெப்பநிலையில், அவ்வுடல்களை தகனம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அதற்கமைய, இரு தரப்பு வாதங்களை கருத்திலெடுத்த வத்தளை நீதவான், அவற்றை இன்றும் (16) நாளையும் (17) தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, மஹர சிறையில் இடம்பெற்ற அமைத்தியின்மை தொடர்பில் CIDயினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, நேற்று (15) 35  பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதுவரை 344 பேரிடம் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டிய அவர், இவர்களில் சிறை அதிகாரிகள் 104 பேர், சிறைக்கைதிகள் 147 பேர், வைத்தியர்கள் 09  பேர், தாதியர் 17  பேர் உள்ளடங்குவதாக தெரிவித்தார்.

விசேடமாக குறித்த கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்த சந்தேகநபர்களை CID யினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, குறித்த 4 பேரும் துப்பாக்கிச்சூடு காரணமாகவே உயிரிழந்துள்ளமை, பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக, மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.   நன்றி தினகரன் 





மாலைதீவில் இலங்கையரின் உடல்கள் அடக்கம் செய்வதா?

முன்னாள் ஜனாதிபதி மமூன் அப்துல் கயூம் எதிர்ப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மமூன் அப்துல் கயூம் தெரிவித்துள்ளார். மதம் மற்றும் அவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதை பொருட்படுத்தாமல் மாலைதீவிற்கு வரும் வெளிநாட்டு விருந்தாளிகளை வரவேற்கின்றோம். அவர்கள் இங்கு மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கவேண்டும் என விரும்புகின்றோம் என முன்னாள் ஜனாதிபதி டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆனால் வெளிநாட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை இங்கும் புதைப்பதற்காக கொண்டுவருவதை என்னால் ஆதரிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு இலங்கை விடுத்த வேண்டுகோளை பரிசீலிப்பதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதை தொடர்ந்தே முன்னாள் ஜனாதிபதி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.     நன்றி தினகரன் 








அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் நடக்குமென நம்பிக்கை

1400 நாட்களாக தொடரும் சுழற்சி உண்ணாவிரதம்

நேற்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் உறவுகள் தெரிவிப்பு

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படப்போவதாக அறிகிறோமென வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.

கடந்த 1400 நாட்களாக வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டுவரும் இந்த உறவுகள் நேற்று அடையாள கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவிருந்தனர். அதற்கு வவுனியா நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

இந்நிலையில் நேற்றும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 2020 தேர்தலுக்கு பின்னர், பல்வேறு தமிழ் கட்சிகளுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர். அவர்களால் முன்மொழியப்பட்ட தங்கள் சொந்தக் கொள்கையை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்தால், தமிழர்கள் ஒரு புதிய அரசியல் கட்சியை கண்டுபிடிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

இதேவேளை அரசியல் கைதிகள் விடுவிக்கப்படப்போகிறார்கள் என்ற செய்தியே எமக்கு கிடைத்திருக்கிறது.

எமது போராட்டத்தில் ஈடுபடும் சில தாய்மாரின் பிள்ளைகளும் விடுவிக்கப்படவுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. ஜெனிவா கூட்டத்தொடரும் உள்ளமையால் தெற்கில் அந்த விடயம் சலசலப்பை ஏற்ப்படுத்தாத வகையில் மெதுவாக அவர்களது விடுதலை அமையுமென அறிகிறோம்.

தாய்மாரின் போராட்டம் 1400 நாட்களை எட்டுகிறது. எங்கள் ஜனநாயக போராட்டத்துக்கு உலகத்தின் பார்வை உள்ளது.

இந்த நாளில், நாங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் உதவியை தொடர்ந்து நாடுகிறோம் . காணாமல் ஆக்கப்பட்ட நமது தமிழர் பிரச்சினை, தமிழ் இனத்தின் வாழ்வுரிமைக்கான பிரச்சினை. இதனை தீர்க்க இந்த 3 நாடுகள் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும் என்றனர்.    -    ஓமந்தை விஷேட நிருபர் -  நன்றி தினகரன் 






முல்லைத்தீவு காட்டுக்குள் மன்னர் கால கல்வெட்டு

- ஆராய்ச்சியில் தொல்லியல் சின்னங்கள் மீட்பு

அனுராதபுரக் காலத்தில் ஆட்சி செய்த மன்னனின் கல்வெட்டு, முல்லைத்தீவு காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் உள்ள நாகசோலை வனப்பகுதியில் வவுனியா தொல்பொருள் ஆய்வு மையம் அகழ்வாராய்ச்சி நடத்தியதாக அறிவித்துள்ளது.

இதன்போது 78 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பகுதியில் நடத்தப்பட்டதாகவும், இதன்போது பல தொல்லியல் சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கருங் கல்லால் செய்யப்பட்ட ஒரு ஸ்தூபம், உடைந்த சுவர்கள், கல் தூண் கட்டடங்கள், சந்தி வட்டக் கற்கள் மற்றும் செதுக்கப்பட்ட கல் கூரைகள் என்பன இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போர் மற்றும் புதையல் தோண்டுபவர்களால் இந்த இடம் மோசமாக சேதமடைந்துள்ளதாக தொல்பொருள் அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு மீட்கப்பட்ட கல்வெட்டு, அனுராதபுரக் காலத்தில் ஆட்சிபுரிந்த மன்னர் நான்காம் உதயவுக்கு (கி.பி 946- 954) சொந்தமானது எனவும் கூறப்படுகின்றது. மேலும் கல்வெட்டின் கிட்டத்தட்ட 100 வரிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 




காங்கேசன்துறை அணைக்கட்டுகளுக்கு வவுனியாவிலிருந்து கற்கள்

Saturday, December 19, 2020 - 6:22pm

- வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் தெரிவிப்பு

காங்கேசன்துறை பகுதியில் சிதைவடைந்துள்ள அணைக்கட்டுக்களை புனரமைப்பதற்கு தேவையான கற்களை வவுனியா மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையாடி அங்கிருந்து அதனைத் பெற்றுத் தருவதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்தார். காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலை மற்றும் துறைமுகம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று காலை வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் ஆளுநர், இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், காணி திணைக்கள அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போதே ஆளுநர் இவ்வறு குறிப்பிட்டார். கலந்துரையாடலில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அண்மையில் உள்ள நிலத்தின் உரிமம் தொடர்பான பிரச்சினை, காங்கேசன்துறைக்கும் காரைக்காலிற்கும் இடையில் படகுச்சேவை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாகவும் மற்றும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் அபிவிருத்தி மற்றும் இறங்கு துறை அபிவிருத்தி தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மேலும் யாழ்பாணத்தில் உற்பத்தியாகும் வெங்காயம், வாழைப்பழம் போன்ற பொருட்களை புகையிரத திணைக்களத்தின் உதவியுடன் சேமிப்பு திட்டங்களின் சாதகத் தன்மை பற்றி கலந்துரையாடி கொழும்பிற்கு ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியகூறுகள் பற்றியும் இங்கு ஆராயபட்டது.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் கருத்து தெரிவிக்கும்போது, காங்கேசன்துறை நிலப்பகுதியில் துண்டங்களாக காணப்படும் பகுதிகளின் உரிமை தொடர்பான பிரச்சினைகளை காணி நில அளவைத் திணைக்களத்தின் உதவியுடன், கள விஜயம் மேற்கொண்டு உறுதிப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும்.

காங்கேசன்துறைக்கும் காரைகாலுக்கும் இடையில் படகுச் சேவையை ஆரம்பிப்பதன் மூலம் மத மற்றும் கலாசார ரீதியான சுற்றுலாத்துறை விருத்தியை மேற்கொள்ளலாம். காங்கேசன்துறை பகுதியில் சிதைவடைந்துள்ள அணைக்கட்டுகளை புனரமைப்பதற்கு தேவையான கற்களை வவுனியாவிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு வவுனியா அரச அதிபருடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத்தருகின்றேன்.

இத் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பாக எடுக்கபட்ட நடவடிக்கையானது வடக்கு மக்களுக்கு கிடைத்த வரபிரசாதம். இராஜாங்க அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கின்றேன் என்றார்.









No comments: