உணர்ச்சிக்கவிஞர் காசி. ஆனந்தனின் வருகைக்கு எதிராக எங்கள் ஊரில் ஆர்ப்பாட்டம் நடத்தியதனால் எழுந்த அதிர்வலைகளின் பின்னர், இந்து வாலிபர் சங்கத்தின் தலைவரும் நீர்கொழும்பு மாநகர சபையின் 03 ஆம் வட்டாரத்தின் உறுப்பினருமான ( அமரர் ) ஜெயம் விஜயரத்தினமும் செயலாளர் ( அமரர் ) மருத்துவர் பாலசுப்பிரமணியமும் என்னையும் சங்கத்தில் அங்கத்தவனாக இணைந்துகொள்ளுமாறு உறுப்பினர் விண்ணப்ப படிவம் தந்து சேர்த்துக்கொண்டனர்.
அப்போது எனக்கு 21 வயது. என்னைப்போன்ற இளைஞர்களை
சங்கம் அக்காலப்பகுதியில் உள்வாங்கியதற்கு காரணமும் இருந்தது.
ஒரு அமைப்பினை நடத்தும்போது தோன்றும் சிக்கல்கள், வரும் கருத்துமுரண்பாடுகளை அதில் இணையும் இளம்தலைமுறையும் தெரிந்துகொண்டு கூட்டுப்பொறுப்பினையும் உணரும்.
அவ்வாறு இணையாமல் வெளியே நின்றால், தங்களுக்கும் பிரச்சினை மற்றவர்களுக்கும் பிரச்சினை என்பதை உணர்ந்த மூத்த தலைமுறையினர், தம்மைக் குடைந்து கும்மியடிப்பவர்களை அழைத்து பதவி கொடுத்து “ செய்து பார்… உள்ளே வந்து சொல்லவேண்டியதை சொல் “ என்று பொதுப்பணிகளில் இழுத்துவிடுவார்கள்.
“இலக்கியத்தில், அது என்ன சோஷலிஸ யதார்ப்பார்வை ? “ என்று ஒரு நாள் நான், என்னை படைப்பு இலக்கியத்திற்குள்
அறிமுகப்படுத்திய மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவிடம் கேட்டதன் விளைவுதான், அவர் என்னை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு அறிமுகப்படுத்தி இணைத்துவிட்டதன் தாற்பரியம்.
“ நீ… என்ன தெருவில் நின்றா ஆர்ப்பாட்டம் செய்கிறாய். வா உள்ளே , உள்ளே வந்து பார் அதன்பிறகு தெரியும் எங்களது நிலைமை “ என்ற எண்ணத்துடன் வாலிபர் சங்கத்தின் தலைமைப்பீடம் என்னை உள்ளிழுத்தது.
நான் உறுப்பினராகி கலந்துகொண்ட முதலாவது ஆண்டுப்பொதுக்கூட்டத்திலேயே எனது குரலை ஓங்கி ஒலிப்பதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.
சங்கம் அமைந்துள்ள அதே கடற்கரை வீதியில் ஶ்ரீ சிங்கமாகாளி அம்மன் கோயிலுக்கு பக்கத்தில் தென்னோலையால் வேயப்பட்ட சிறிய வீட்டில் வசித்தாள் எனது ஆரம்ப பாடசாலையில் என்னுடன் அரிவரி ( பாலர் ) வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புவரையில் படித்த அன்னம்மா என்ற தோழி. அவளுக்கு தந்தை இல்லை. தாயார் இராசாத்தி தோசை சுட்டு விற்று அவளை படிக்கவைத்தார்.
எனது அம்மாவின் பால்யகால சிநேகிதிதான் அந்த ராசாத்தி.
அன்னம்மாவின் வீட்டுக்கு முன்னால் இருந்த கேட்தோட்டம் என்ற குடியிருப்பில்தான் நான் பிறந்தேன். அன்னம்மாவுக்கும் எனது வயதுதான்.
இருவரும் காலையில் ஒன்றாக பாடசாலை செல்வோம். மாலையில் விளையாடுவோம். அவள் எனக்கு தனது தாய் செய்துகொடுக்கும் தோசை, வடை சிற்றுண்டிகளும் தருவாள்.
ஒரு சமயம் எனது செருப்பு காணாமல்போனபோது அவள்தான் தேடி எடுத்து தந்தாள். இப்போதும் அவள் இருக்கிறாள். அவளது பேரப்பிள்ளைகளும் திருமணம் முடித்துவிட்டனர். இலங்கை செல்லும்போதெல்லாம் அவளை சந்திப்பேன். சகோதர வாஞ்சையோடு என்னை அணைப்பாள்.
ஒரு சமயம் தினகரன் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்கியபோதும் எனது பால்யகால சிநேகிதி அன்னம்மா பற்றி சிலாகித்துசொல்லியிருக்கின்றேன்.
அவளது மகன் வெங்கடேசன் தற்போது எங்கள் பாடசாலையின் பழைய மாணவர் மன்றத்திலும் இந்து இளைஞர் மன்றத்திலும் முக்கிய பொறுப்புகளை வகிக்கிறார். என்னை ஊரில் எங்கே கண்டாலும் பூபதி மாமா என்பான்.
அன்னம்மா தனது தாயாருடன் வாழ்ந்த அந்த ஓலைக்குடில் 1972 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தீப்பற்றி எரிந்துவிட்டது. நான் அச்சமயம் ஊரில் இல்லை. அக்கா திருமணம் முடித்துச்சென்ற மலையகம் பலாங்கொடைக்கு சென்றிருந்தேன்.
வந்த பின்னர் கேள்விப்பட்டு அவளுக்கு ஆறுதல் சொல்லச்சென்றபோது, எனக்கு முன்பின் தெரியாத வேற்று இனத்து - மதத்து இளைஞர்கள் வந்து சிரமதான அடிப்படையில் அவளது வீட்டுக்கு கூரைபோட்டு செப்பனிட்டுக்கொண்டிருந்தனர்.
அருகில் ஒரு இந்து வாலிபர் சங்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது. எங்கிருந்தோ சமயப்பிரசங்கிகளை வரவேற்று பேசவைத்து சன்மானமும் கொடுத்து உபசரிக்கிறது. தமிழரசுக்கட்சியினர் தேர்தலில் வென்றால், அவர்களுக்கு வாழை மரம் தோரணம் கட்டி நிறைகுடம் வைத்து ஆலாத்தி எடுத்து வரவேற்கிறது. ஆனால், அருகிலே ஒரு ஏழை இந்துக்குடும்பம் வாழ்ந்த குடில் தீயினால் எரிந்தபோது எட்டியும் பார்க்கவில்லையே என்ற தார்மீகக்கோபம் எழுந்தது.
நான் சங்கத்தின் உறுப்பினரானதும் முதல் ஆண்டுப்பொதுக்கூட்டத்திலேயே இது பற்றி உரத்து குரல்கொடுத்து பேசினேன்.
அதற்கும் தலைமைப்பீடம் ஒரு மருந்து வைத்திருந்தது.
அன்றைய கூட்டத்தில் அவர்களே என்னையும் செயற்குழு உறுப்பினராக்கிவிட்டார்கள். பதவி கொடுத்து வாயை மூடும் கைங்கரியம் நீண்ட நெடுங்காலமாக எமது சமூகத்திலும் நீடிக்கிறது.
அதற்கு அடுத்த வருடம் நடந்த ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கு
சங்கத்தின் செயலாளர் பேரின்பநாயகம், கொழும்பில் கடற்றொழில் அமைச்சில் பணியாற்றிக்கொண்டிருந்தவரும், இலங்கை பூராவும் இந்து இளைஞர் மன்றங்களை உருவாக்குவதற்கு பாடுபட்டு, இந்து இளைஞர் பேரவை தோற்றம்பெறுவதற்கும் காரணமாக இருந்தவருமான மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் அவர்களையும் அழைத்துவந்துவிட்டார்.
அன்றைய கூட்டத்தில் எமது நீண்ட நெடுங்கால பழைமைவாய்ந்த இந்து வாலிபர் சங்கத்தின் பெயரை இந்து இளைஞர் மன்றம் என்று மாற்றும் ஒரு தீர்மானமும் இருந்தது.
சங்கத்தின் அனுமதியின்றி வெளியிலிருந்து சச்சிதானந்தனை செயலாளர் அழைத்து வந்து ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் அவரையும் வைத்துக்கொண்டு அந்தத் தீர்மானத்தை பற்றிப் பேசுவது முறையும் அல்ல, நாகரீகமும் அல்ல என்று நான் பேசநேர்ந்தது.
வாதப்பிரதிவாதங்கள் முற்றியபோது, “ தான் வெளியே செல்கிறேன் “ என்று சொல்லிக்கொண்டு சச்சிதானந்தன் எழுந்தார்.
வந்தோரை வரவேற்று வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பில் விருந்தினர்களை மதிக்கும் மரபும் பண்பும் இருந்தமையால், அன்று அவர் அழைக்கப்பட்ட விதம்தான் தவறு என்று சொல்லிவிட்டு, கூட்டத்தை தொடர்ந்து நடத்துமாறு எனது தரப்பில் பேசியவர்கள் சொன்னார்கள்.
இறுதியில் சச்சிதானந்தன், இந்து இளைஞர் மன்றத்தின் பெயரில் எமது இந்து வாலிபர் சங்கம் இயங்கும் பட்சத்தில், அகில இலங்கை இந்து இளைஞர்பேரவையை பலப்படுத்தலாம் என்றார்.
அதற்குப்பின்னால் ஏதோ அரசியல் இருப்பதாக எனக்கு அந்த வயதிலேயே புலப்பட்டது.
இறுதியில் பெரும்பாலானவர்களின் வாக்குப்பலத்தினால், இந்து வாலிபர் சங்கத்தின் பெயர் , இந்து இளைஞர் மன்றமாகியது.
அந்த சச்சிதானந்தன்தான் தற்போது காவி உடை அணிந்து இலங்கையில் சிவசேனை என்ற இந்துத்துவா அமைப்பினை வளர்த்துவருகிறார்.
அவரை அன்று அழைத்துவந்து அந்தத் தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய பேரின்பநாயகம், பின்னர், அரசாங்க தமிழ் ஊழியர் தொழிற்சங்கத்தின் செயலாளராகவும், அதன்பின்னர் எதிர்க்கட்சித்தலைவராக அமிர்தலிங்கம் வந்ததும், அவருக்கும் செயலாளராகவும், அதன்பின்னர் அநுரா பண்டாரநாயக்கா எதிர்க்கட்சித்தலைவராக வந்ததும் அவருக்கும் செயலாளராகவும் இருந்தவர்.
2003 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடமிருந்து எனக்கு தேசிய சாகித்திய விருது கிடைத்தபோது, பேரின்பநாயகம் அவர்களை அந்த நிகழ்ச்சியில் நீண்ட காலத்தின் பின்னர் சந்தித்தேன்.
அவர் எனக்கு வாழ்த்துக்கூறிவிட்டு, தனது விசிட்டிங் கார்டை தந்தார். அதில் அவர் இந்து சமய விவகார அமைச்சின் ஆலோசகர் என்ற விபரம் இருந்தது.
சச்சிதானந்தனையும் நீண்ட நெடுங்காலத்தின் பின்னர்,
மெல்பனில் எனக்கு இந்த நாட்டில் புகலிட அந்தஸ்தும் பெற்றுத்தந்து குடும்ப நண்பராகவும் விளங்கும் சிரேஷ்ட சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் வீட்டு விருந்தில் சந்தித்தேன்.
இவர்கள் இருவரும் அன்று 1972 இல் கண்ட இளைஞனாக என்னைப்பார்க்காமல், ஒரு படைப்பிலக்கியவாதியாகவே பிற்காலத்தில் பார்த்தனர்.
காலம் இத்தகைய அனுபவங்களையும் பெற்றுத்தந்துள்ளது.
எமது இந்து வாலிபர் சங்கம் எந்தப்பெயருக்கு மாற்றப்பட்டாலும், அதன் பணி முழுக்க முழுக்க சமயம் சார்ந்து மாத்திரம் இயங்காமல், சமூகம் சார்ந்தும் இயங்க வேண்டும் என்பதை ஒவ்வொரு செயற்குழுக்கூட்டத்திலும் வலியுறுத்திவந்தேன்.
ஊர் மக்களின் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து ஏற்றும் மருத்துவ முகாம்கள் அதன்பின்னர் நடந்தன. அனைத்துலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. அதற்காக எங்கள் ஊர் தமிழ் – சிங்கள மாணவர்கள் மத்தியில் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது.
சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் பகல் பொழுதில் கருத்தரங்கு நடத்தினோம். பௌர்ணமி விழாக்களை ஒழுங்குசெய்தோம். கவியரங்கு – கருத்தரங்கு நடத்தினோம். அவற்றில் பாடசாலை மாணவர்களை பேசவைத்தோம்.
வருடந்தோறும் கலைமகள் விழாக்களை நடத்தி, அகில இலங்கை ரீதியில் பேச்சுப்போட்டிகள் நடத்தினோம். முதல் பரிசாக தங்கப்பதக்கமும் ஏனைய பரிசுகளாக திருக்குறள், பாரதியார் கவிதைகள் முதலான நூல்களையும் பணப்பரிசில்களும் வழங்கினோம்.
காசி. ஆனந்தனை அழைப்பதில் முன்னின்ற நீர்கொழும்பு இந்து வர்த்தகர் இளைஞர் அமைப்பினரும் அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் எம்முடன் இணைந்து சிநேக பூர்வமாக இயங்கினர்.
எனது முதலாவது கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் நூலுக்கு தேசிய சாகித்திய விருது கிடைத்ததும், அதே வர்த்தக இளைஞர்கள் என்னை மன்றம் பாராட்டி கௌரவிக்கவேண்டும் என்று கடிதம் மூலம் மன்றத்தை வேண்டினர். ஒரு நிகழ்வுக்காக அங்கு வருகை தந்த சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் தலைமையில் எனக்கு பாராட்டு நிகழ்வு நடந்தது. பிறிதொரு ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் என்னையே பொதுச்செயலாளராக்கினர்.
மூன்று ஆண்டுகள் பொதுச்செயலாளராகவும், அதன்பின்னர் மூன்று ஆண்டுகள் நிதிச்செயலாளராகவும் மன்றத்தில் அங்கம் வகித்தேன். விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றத்திலும் , பொதுப்பணி மன்றத்திலும் இணைந்து சிரமதானங்கள் உட்பட பல சமூகப்பணிகளுக்கும் பலரையும் இணைத்துக்கொண்டு பயணித்தேன்.
அன்று 1972 – 1977 காலப்பகுதியில் நாம் நடத்திய நிகழ்ச்சிகள் போட்டிகளில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர் பின்னாளில் கலை, இலக்கிய ஊடகத்துறையில் மிளிர்ந்தனர். பிரபலமடைந்தனர். ஆசிரியர்களாயினர்.
இந்து இளைஞர் மன்றத்தின் செயலாளரக நான் இருந்த காலத்தில் நடைபெற்ற அனைத்திலங்கை போட்டியில் முதல் பரிசுபெற்ற கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மாணவன் பாலசிங்கம் பிரபாகரன் பின்னாளில் இலங்கை வானொலியிலும் பணியாற்றிவிட்டு, அதன் பிறகு அவுஸ்திரேலியா வந்து சிட்னியில் 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் வானொலியின் இயக்குநராக இன்றளவும் பிரகாசிக்கிறார்.
எமது இந்து இளைஞர் மன்ற மேடையில் சிறுமியாகத் தோன்றிய செல்வி கனகலதா கிருஷ்ணசாமி அய்யர் சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆசிரிய பீடத்தில் பணியாற்றுகிறார். சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டு வாரியம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கும் தேசிய விருதை - சிறந்த நூல்களை எழுதியவர் என்ற வரிசையில் அடுத்தடுத்து மூன்றுதடவை பெற்றுள்ளார்.
சிறுவயதில் அதே மேடையில் தோன்றிப்பேசிய செல்வன் பஞ்சநாதன் விக்னேஸ்வரன் பின்னாளில் கவிஞரானார். சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் படித்தவாறு கண்ணதாசன் குடும்பத்தினருக்கும் நெருக்கமாகி, அவர்களின் கண்ணதாசன் பதிப்பகத்திலும் பணியாற்றி, தென்றல் விடு தூது , பலரது பார்வையில் கண்ணதாசன் முதலான நூல்களையும் எழுதினார். அத்துடன் கலைவாணன் கண்ணதாசனின் இயக்கத்தில் வெளியான சில படங்களில் துணை இயக்குநராகவும் பாடலாசிரியராகவும் மாறியதுடன், வா அருகில் வா என்ற திரைப்படத்திலும் நடித்தார்.
பாடல்களை இயற்றி தமிழகத்தின் சில முன்னணிப்பாடகர்கள் பாடிய மனமொட்டுக்கள் இருவட்டையும் வெளியிட்டார். தனது பெயரை இலக்கியத்திற்காக காவ்யன் முத்து தாசன் என்றும் மாற்றிக்கொண்டார்.
பின்னாளில் இதே விக்னேஸ்வரனின் அக்கா மாலதியை நான் மணம்முடிக்க நேர்ந்ததும் விதிப்பயன்தான்.
மற்றும் ஒருவர் கார்மேகம் நந்தா என்பவர் தற்போது வெளிநாடொன்றில் இருந்தவாறு அவ்வப்போது இலக்கியம் படைக்கிறார்.
செல்வி சுசீலகுமாரி நீதிராஜா என்பவர் தொடர்ந்தும் நடந்த பேச்சுப்போட்டிகளில் தங்கப்பதக்கங்களும் வென்று பணப்பரிசில்களும் பெற்றதுடன் ஒரு தடவை எமது மன்றத்திற்கு அமைச்சர்கள் தொண்டமான், இராசதுரை வருகை தந்தபோது அவர்களின் முன்னிலையிலும் பேசி அசத்தினார்.
தற்போது சட்டமும் பயின்று நான் கற்ற அதே விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் ஆசிரியையாகவும் பணியாற்றுகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு எங்கள் ஊரில் நடந்த எனது இலங்கையில் பாரதி நூல் வெளியீட்டிலும் சுசீலகுமாரி உரையாற்றினார்.
முழுக்கமுழுக்க சமயம் சார்ந்து நாயன்மார் குருபூசைகளும், நாவலர் விழக்களும் நடத்திக்கொண்டிருந்த இந்து இளைஞர் மன்றத்தில் சர்வதேச சிறுவர் தின விழா, பாரதி நூற்றாண்டுவிழா, இலக்கிய கருத்தரங்குகள் உட்பட பல நிகழ்வுகள் நடக்கத்தொடங்கின.
கலைஞர்கள் எம். ஏ. குலசீலநாதன், அம்பிகா தாமோதரம், அமுதன் அண்ணாமலை, சில்லையூர் செல்வராசன், எழுத்தாளர்கள் பிரேம்ஜி ஞானசுந்தரன், மல்லிகை ஜீவா, ஈழவாணன், மு. கனகராஜன், பூரணி மகாலிங்கம், தகவம் இராசையா, அநு.வை நாகராஜன், வேல் அமுதன், ராஜஶ்ரீகாந்தன், சோமகாந்தன், தெளிவத்தை ஜோசப், நவாலியூர் கே. எஸ். நடராஜா, கவிஞர் அம்பி, எச். எம்.பி. மொகிதீன், எம். ஶ்ரீபதி, சகுந்தலா சிவசுப்பிரமணியம், மு. நித்தியானந்தன், கைலாசபதி, கவிஞர் முருகையன், தெணியான், இர. சிவலிங்கம், லக்ஷ்மண அய்யர், கே. எம். வாசகர், வரணியூரான், தமிழகத்திலிருந்து தொ.மு. சி. ரகுநாதன்…. இவ்வாறு பல ஆளுமைகள் அந்த மேடைகளில் தோன்றினர்.
1987 ஆம் ஆண்டு, நாட்டை விட்டு வெளியேறும் வரையில் நீர்கொழும்பு வெகுஜன அமைப்புகளில் அங்கம் வகித்தேன். புறப்பட்ட பின்னர் அவற்றின் ஆயுள்கால உறுப்பினருக்குரிய சந்தாப்பணத்தை செலுத்திவிட்டு, இன்றளவும் அந்த அமைப்புகளுடன் தொடர்பிலிருக்கின்றேன்.
தற்போது நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் அன்பர் பொ. ஜெயராமன் தலைமையிலும் நிதிச்செயலாளர் அன்பர் ஏகாம்பரம், பால்யகால நண்பர் நவரத்தினராசா எனது மனைவியின் மாணவர் சுதாகரன் உட்பட பலரது ஒருங்கிணைப்பில் சிறப்பாக இயங்கிவருகிறது.
1972 காலப்பகுதியில் நாம் அங்கு நடத்திய பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற எனது தங்கை பரிமளஜெயந்தி தற்போது, இந்து மன்றம் வாராந்தம் நடத்தும் அறநெறிப்பாடசாலையின் அதிபராக பணியாற்றுகிறாள்.
எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடர் எனது கதை மட்டுமல்ல, எங்கள் ஊர் தமிழ் சமூகத்தின் கதையுமாகும்.
( தொடரும் )
letchumananm@gmail.com
No comments:
Post a Comment