இருளில் இருந்து மக்களுக்கு பேரொளி

இயேசுவின் பிறப்பு இருளில் இருந்த மக்களுக்கு பேரொளி. மரணத்தின் நிழல் சூழ்ந்துள்ள மக்களுக்கு உயிர்ப்பின் ஒளி. அமைதியற்ற மக்களுக்கு அமைதியின் தூதுவனாக பிறந்தவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

இறைசாயலிலே படைக்கப்பட்ட மனுக்குலம் தீமையின் பிடிக்குள்ளும் கொடிய நோய்க்குள்ளும் ஆட்கொள்ளப்பட்டு துன்புற்ற போது, தீமையும் கொடுங்கோன்மையும் தலைவிரித்தாடிய போது அதிலிருந்து மனுக்குலத்தினை விடுவிக்க கடவுள் மனிதனாக வந்த அதி உன்னத நிகழ்வே கிறிஸ்து பிறப்பு.

கடவுள் மானிடரை தேடி வந்து மனிடராக பிறந்து தன்னை முழுதுமாக தியாகம் செய்து மனுக்குலத்தை தீமையின் பிடியில் இருந்து விடுவிப்பதற்கான தியாகத் திருநாளாகவும் கிறிஸ்மஸ் திகழ்கிறது.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாக ஆண்டவராகிய மெசியா நமக்காக தாவீதின் ஊரில் மரியாளுக்கு பிறந்த மாபெரும் நிகழ்வை நினைத்து, மகிழ்ந்து உலக மக்கள் இப்பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்.

இயேசுவின் பிறப்பு இருளில் இருந்த மக்களுக்கு பேரொளி. மரணத்தின் நிழல் சூழ்ந்துள்ள மக்களுக்கு உயிர்ப்பின் ஒளி. துன்புறும் ஒவ்வொருவரையும் அதிலிருந்து மீட்டு நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாக தூய்மைப்படுத்தும் இறை மகனாக இவ்வுலகில் இயேசு பிறந்தார்.

உலகம் பூராவும் கிறிஸ்து பொருமானின் பிறப்புத் திருநாளை கொண்டாடுகின்ற இவ்வேளையில் முழு உலகமும் கொரோனா எனும் வைரஸ் தொற்று பேரவலத்திற்கு முகம்கொடுத்து பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்தநேரத்தில் ஒட்டுமொத்த மனுக்குலத்தின் எதிர்கால நம்பிகை சிதறடிக்கப்பட்டு அச்சம் சூழ்ந்திருக்கின்றது. எமது நாட்டிலும் கொரோனாவின் அச்சம் ஒருபுறம் இயற்கையின் சீற்றம் இன்னொருபுறம். வறுமை, வேலையின்மை உழைப்பாளிகள் சுரண்டப்படுகின்றமை, உள்நாட்டுப் பிரச்சினைகள் எனத் தொடர்கின்ற நிலையில் கிறிஸ்து பிறப்பு விழாவில் ஆலயம் சென்று நிம்மதியாக வழிபட முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டவர் இயேசு பெத்லகேமில் பிறந்த பொழுது ரோமப் பேரரசின் கொடுங்கோன்மையினாலும் சமய, சமூக ஒடுக்குமுறையினாலும் அந்நாட்டின் மக்கள் துன்புற்றுக் கொண்டிருந்தனர்.

அன்று இயேசு பிறந்த பொழுது அவர் வளர்ந்து தன்னுடைய எதேச்சதிகாரத்திற்கு சவாலாக இருப்பார் என்று எண்ணிய ஏரோது குழந்தை இயேசுவை கொலை செய்யும் நோக்கோடு பெத்தலகேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழ்ந்த இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் படுகொலை செய்கின்ற நிலைமை காணப்பட்டது.

இதிலிருந்து தனது பெற்றோரால் காப்பாற்றப்பட்ட குழந்தை இயேசு வளர்ந்த பின் மனுக்குலத்தினை அச்சுறுத்திய தீமை கொடுங்கோன்மை ஒடுக்குமுறை என்பவற்றில் இருந்து மனுக்குலத்தினை விடுவிக்க கொண்டு வந்த வழிமுறைகள் அன்பு, மன்னிப்பு, நீதி, சத்தியம், சமாதானம், ஒப்புரவு,சகோதரத்துவம் சமத்துவம் என்பவையாகும்.

இந்த உன்னத உயர் விழுமியங்களை மானுட வாழ்வின் ஆதாரமாக்கி தன் வாழ்வாலும் செயலாலும் உலக மனுககுலத்தின் வழ்வில் மிகப் பெரும் மாற்றத்தினையும் புரட்சியையும் ஏற்படுத்தி உலகில் அமைதி கலசாரத்திற்காக வித்திட்டவர் இயேசு. தன்னை தியாகம் செய்து அன்பினை மையமாக வைத்து செயல்பட்டவர்.

இன்று நிலவும் சூழ்நிலையில்அச்சம் நிறைந்த வாழ்க்கையாக இருந்தாலும் கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை எடுத்தியம்பும் நாளாக இந்த கிறிஸ்மஸ் விழா அமைகிறது.

கிறிஸ்து ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளை உணர்ந்தவராக வன்முறைக்கு மாற்றீடாக சமாதானத்தை கொண்டு வந்தவர். நம்பிக்கையும் விசுவாசமும் எம் உள்ளத்தில் குடிகொள்ளும் போது கிறிஸ்துவின் உண்மை சாட்சிகளாக நாம் மாறி அர்த்தமுள்ள நத்தாரை நாம் அனுபவிக்க முடியும்.

வாஸ் கூஞ்ஞ 

நன்றி தினகரன்