அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின் போது...
நிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு
கொரோனா வைரஸ் தீவிரம் மேலும் மூவர் நேற்று மரணம்
சபாநாயகர் கையொப்பம்; 20ஆவது திருத்தம் இன்று முதல் அமுல்
பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உலருணவு
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்
முஹம்மது நபி மனித குலத்திற்கு செய்த அர்ப்பணிப்புகள் ஏராளம்
மானிட அன்பை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்த உத்தமர் நபி
இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயார்
20க்கு ஆதரவளித்த 09 எம்.பிக்களும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கம்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின் போது...
நிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு
இலங்கையின் இறைமை, ஜனநாயகம், சுதந்திரத்துடன்
சீனாவின் நோக்கம் அதுவல்ல என்கிறார் USA செயலாளர் மைக் பொம்பியோ
இலங்கையின் நிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு எனவும் சீனாவின் எதிர்பார்ப்பு அதுவல்ல என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அபிவிருத்தி தொடர்பில் முழுமையான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு பிராந்திய ரீதியில் முன்னோக்கி பயணிக்கும் இலங்கையின் இறைமை, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான முன்னேற்றமே இலங்கையின் நட்பு நாடான அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமைதி, இறைமை மற்றும் சுதந்திரத்தை மதிக்கும் நாடாக இலங்கையை நோக்குவதாக குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையின் நிலையான அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமது நாட்டின் எதிர்பார்ப்பு சீனாவின் எதிர்பார்ப்பல்ல என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அமெரிக்க ஐக்கிய இராஜ்ஜியம் தயாராகவுள்ளதுடன் அபிவிருத்திக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்றும்தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அமெரிக்கா இலங்கையின் கொள்கைகளுக்கு மதிப்பளித்து செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர், நேற்றைய தினம் வெளிநாட்டமைச்சுடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு அவர் நேற்றுமுன்தினம் இரவு இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க தூதுவராலயத்தின் அதிகாரிகளும் வரவேற்றனர்.
நேற்றைய தினம் அவர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதனையடுத்து அவர் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடனும் விசேட பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். அதனையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியுடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தை இரு நாடுகளினதும் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் மூலம் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதுடன் அதற்கான உடன்படிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகளும்
நிறைவுற்று வருகின்றன. சிறந்த அரச நிர்வாகம், வினைத்திறன் நிலையான கொள்கைக்கிணங்க இங்கு அமெரிக்காவின் முதலீடுகளை முன்னெடுக்க முடியும்.
உலகின் முக்கியத்துவம் வாய்ந்த கடற் பகுதியை திறப்பது தொடர்பில் அதன் அவசியத்தை வெளிநாட்டமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது ஆராயப்பட்டது. வெளிநாட்டமைச்சர் அதற்கான இணக்கத்தை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான இணைந்த பயிற்சி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் இலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உடைகள், பாதுகாப்பு உடைத் தொகுதிகள் தமது நாட்டுக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் இலங்கைக்கு ஆறு மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கமுடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவானது இலங்கையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தியுள்ளது. ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் நாடு என்ற வகையில் இலங்கை மீது சமமான பார்வையுள்ளதாகவும் இலங்கையும் அமெரிக்காவும் ஜனநாயகத்தை மதிக்கும் நாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தை முடித்துக்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் நேற்று பிற்பகல் மாலைதீவை நோக்கிப் பயணமானார். நேற்றைய இந்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளிநாட்டமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே, முன்னாள் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, அமெரிக்க தூதுவர் எலைனா பி டெப்ளிஸ் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம் நன்றி தினகரன்
கொரோனா வைரஸ் தீவிரம் மேலும் மூவர் நேற்று மரணம்
இறந்தோர் தொகை 19 ஆக அதிகரிப்பு; தொற்றாளர் தொகையிலும் திடீர் அதிகரிப்பு
நாட்டில் நேற்றைய தினம் மேலும் மூன்று கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. நேற்றுக்காலை ஜா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரும் அதனையடுத்து நேற்றுப் பிற்பகல் கொழும்பு வாழைத் தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் மற்றும் கொழும்பு 2, கொம்பனித்தெரு பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நேற்றுக்காலை மரணமடைந்த ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஐடிஎச் வைத்தியசாலையிலும் ஏனைய இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
19 வயதுடைய கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் இயல்பாகவே பிறந்தது முதல் விசேட தேவையுடையவராகக் காணப்பட்டவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மரணமடைந்துள்ள கொழும்பு கொம்பனி வீதியைச் சேர்ந்த 87 வயது பெண்மணி ஏற்கனவே காலில் நோயுடையவராக காணப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த ஒரு வார காலமாக நோயுற்று சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இலங்கையில் நேற்றுவரை 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் ஒரே தினத்தில் 3 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் உயிரிழந்துள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
அதே வேளை, நாட்டில் இதுவரை 8,870 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதுடன் நேற்று மாத்திரம் 457 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகள் 4043 பேர் பூரணமாக குணமடைந்து ஆஸ்பத்திரிகளிலிருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அதற்கிணங்க வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ள 4354பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளிலும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட மேலும் 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 162 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன் நேற்றுவரை 19 பொலிசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர்களில் 10 பேர் அதிரடிப் படையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த மேலும் 300 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன்
சபாநாயகர் கையொப்பம்; 20ஆவது திருத்தம் இன்று முதல் அமுல்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.
இதன்மூலம், இன்று முதல் (29) 20ஆவது திருத்தம் அமுலுக்கு வருவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதி இடம்பெற்ற இரு நாள் விவாதத்தை தொடர்ந்து, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதற்கு ஆதரவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பிக்கள் உள்ளிட்ட 156 பேரும் எதிராக 65 பேரும் வாக்களித்திருந்தனர். வாக்களிப்பின் போது மைத்திரிபால சிறிசேன சமூகமளித்திருக்கவில்லை.
இன்று (29) முற்பகல் 11.30 மணியளவில் சபாநாயகர் குறித்த திருத்தத்தில் கையெழுத்திட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது பாராளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளர் நாயகமும், பணிக்குழாமின் பிரதானியுமான நீல் இத்தவலவும் பங்கேற்றிருந்தார்.
இதேவேளை, மருத்துவ கட்டளை திருத்தங்கள் குறித்தான விவாதத்தை எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி மாத்திரம் எடுத்துக் கொள்ள, இன்று (29) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி தினகரன்
பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உலருணவு
பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுகாதார பிரிவினரின் ஆலோசனையுடன் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் என்பன வீடுகளுக்குச் சென்று பொத்துவில் பிரதேச செயலக அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருவதாக, பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுடைய 7 நபர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பொத்துவில் பிரதேசத்தில் ஜந்து கிராமங்கள் முடக்கப்பட்டு சுகாதாரப் பிரிவினர் பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், பொத்துவில் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 35க்கும் மேற்பட்ட வறிய குடும்பங்களுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் கண்காணிப்பின் ஊடாக உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் தேவை ஏற்படும் குடும்பங்களுக்கு குடிநீரும் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(திருக்கோவில் தினகரன் நிருபர் - எஸ்.கார்த்திகேசு) நன்றி தினகரன்
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்
கடன்களுக்கு சலுகை, 5000 ரூபா, உலர் உணவு;
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்குப் பொருட்களைப் பொதி மூலமாக விநியோகிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதோடு கடன் தவணைகளுக்குச் சலுகை காலம் வழங்குவது தொடர்பாகவும் ஒரு வார காலம் முழுமையாக மூடப்பட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுத் தலைவர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொவிட்- 19 வைரஸ் மீண்டும் தோன்றியுள்ள இந்த நேரத்தில், அத்தியாவசிய சேவைகளை கடந்த காலங்களைப் போலவே திறமையாகவும், சரியான முறையில், தொடர்ச்சியாக பராமரிக்க வேண்டும் என பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது சூழ்நிலையில் மின்சாரம், நீர் விநியோகம், எரிபொருள், எரிவாயு, போக்குவரத்து, சுகாதாரம், அதி வேக வீதியில் வசிக்கும் மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய சேவைகளை சரியான முறையில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
முதியவர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து
நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், பொதுமக்களின் உதவி தொகை மற்றும் ஓய்வூதியங்களை அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க அரசாங்க முகவர்கள் மற்றும் தபால் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
முஹம்மது நபி மனித குலத்திற்கு செய்த அர்ப்பணிப்புகள் ஏராளம்
முன்னுதாரணமாக கொண்டு செயற்படுவோம்
முஹம்மது நபியவர்கள் மனித குலத்திற்காக செய்த அர்ப்பணிப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வது சிறந்ததோர் அபிவிருத்தியடைந்த சமூகத்திற்கான அத்திவாரமாக அமையுமென்பது எனது நம்பிக்கையாகும். இலங்கை வாழ் முஸ்லிம்கள், உலகெங்கிலும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து சகோதரத்துவத்துடன் முஹம்மது நபியவர்களின் மீலாத் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
மனிதர்களுடனான எமது உறவு நபிகளார் போதித்த ஒழுக்கப் பெறுமானங்களை மதித்து குரோதங்கள் மற்றும் சந்தேகங்களை ஒழிக்கும் வகையிலேயே அமைய வேண்டும் என ஜனாதிபதி தனது மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
முன்னெப்போதுமில்லாத வகையில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்து உலகெங்கிலும் பரவிவரும் கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் முழு மனித சமூகமும் பாரிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ளது. இத்தகையதொரு கால சூழ்நிலையில் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு முதலிடமளித்து வாழ்வது எமக்கு உள அமைதியை பெற்றுத்தரும். அதேபோன்று பரஸ்பர
நலன்பேணல், சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் மற்றும் பொது நலனை அடைந்துகொள்வதற்காக நபிகளாரின் வாழ்வியலில் இருந்து பெற்றுக்கொண்ட நன்நெறிகளை நாம் சமூகமயப்படுத்த வேண்டியுள்ளது.
நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாடும் இச்சந்தரப்பத்தில் அவர்கள் காட்டித் தந்த பெறுமானங்களுக்கு ஏற்ப வாழ்ந்து அனைத்து வகையான தீவிரவாதங்களையும் தோற்கடித்து சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான திடவுறுதியுடன் இஸ்லாமியர்கள் ஒன்றுபடுவார்கள் என நான் நம்புகின்றேன்.
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியான மீலாதுந் நபி தினத்திற்கு எனது பிரார்த்தனைகள் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
மானிட அன்பை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்த உத்தமர் நபி
பிரதமர் மஹிந்த மீலாத்தின வாழ்த்து
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற இலங்கையில் வாழ்கின்ற சகல இஸ்லாமிய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மனிதத்துவத்தில் நிறைந்த கௌரவமான மானிட அன்பை கட்டியெழுப்புவதற்காக தம்மை அர்ப்பணித்த நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் இன்றாகும். உலகெங்கும் வாழ்கின்ற இஸ்லாமியர்கள் இன்று மிகவும் உற்சாகமாக நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை சமய அனுஷ்டானங்களுடன் கொண்டாடுகின்றனர். மற்றவர்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்பிய அவர் அல் அமீன் என்ற பெயரிலும் பிரபல்யமானார்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நற்குணங்கள் ஏனையவர்கள் மத்தியில் பிரயல்யமடைந்ததுடன் இஸ்லாமிய மதத்தை உலகெங்கும் பரப்பி அவரது 40வது வயதில் அல்ஹாவின் தூதராக கூடிய வரத்தை அவர் பெற்றார். பின்பு அரேபிய மக்களை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு வழிகாட்டிய அவர், 23 வருடங்களாக இறைவனிடமிருந்து கிடைத்த ஏவல்களை நிறைவேற்றினார்.
வாழ்நாள் முழுவதும் அவர் பேணிய குணநலன்கள் , மனிதர்களுக்காக செய்த அர்ப்பணிப்புகள் அளவற்றவை. புரிந்துணர்வு சகோதரத்துவம் ஒருவருக்கொருவர் உபகாரம் செய்தல் மற்றும் நியாயம் ஆகியவை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அடிப்படை பண்புகளாகும். அதுபோல் மானிட சமுகத்திற்குள் சிறந்த குணநலன்களை வளர்ப்பதும் அஹிம்சையை பேணுவதும் நபி (ஸல்) அவர்களின் நோக்கமாகும்.
இஸ்லாமிய நாடுகள் சர்வதேச அமைப்புகளூடாக இலங்கைக்கு நிபந்தனை அற்றவிதத்தில் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. இந்நாடுகள் எங்களுக்கு வழங்கிய அந்த ஒத்துழைப்புகளுக்கு மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த நாடுகள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
அவ்வாறே கொவிட் -19 நிலைமைக்கு மத்தியில் பாரிய நெருக்கடிக்கு நாங்கள் முகம் கொடுத்துள்ளோம். அதனால் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கமைய இந்த பிறந்த தினத்தை அனு|ஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அனதை்து மனிதர்களுக்கும் சமமான உரிமைகள் கிடைக்கவேண்டும் என்று இந்த உலகத்திற்கு போதித்த நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டலுக்கமைய சிறந்த ஒழுக்கமுடைய சமுகமொன்றை கட்டியெழுப்புவதற்கு பாடுபடுகின்ற இலங்கைக்கு கைகொடுக்குமாறு உலக மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதுடன் இந்த நோயிலிருந்து பாதுகாக்க பிரார்த்தனை செய்யுமாறு அனைத்து இஸ்லாமிய மக்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்து நபி (ஸல்) அவர்களின் போதனைக்கமைய முஹம்மது ஸல் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற இலங்கை வாழ் இஸ்லாமியர்களுக்கும் உலகிலுள்ள இஸ்லாமயர்களுக்கும் சிறந்ததொரு நன்நாளாக மீலாதுன் நபி தினம் அமைய பிரார்த்தனை செய்கின்றோம். நன்றி தினகரன்
இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயார்
அமெ.இராஜாங்க செயலாளர் உறுதி
சர்வதேச தொடர்புகளில் நாட்டின் சுயாதீனத்திற்கும் இறைமைக்கும் முதலிடம் – ஜனாதிபதி
*முதலீட்டு மேம்பாட்டுக்கு முன்னுரிமை
*போதைப்பொருள் ஒழிப்புக்கு உதவி
*இந்து சமுத்திரம் சமாதான வலயமாக இருக்க வேண்டும்
பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு இலங்கையுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயற்பட தயாரென அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ விடம் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையில் தற்போது நிலவிவரும் வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது தனது நாட்டின் நோக்கமாகுமென்றும் இராஜாங்க செயலாளர் தெரிவித்தார்.
நாட்டுக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, தலைமையிலான உயர் மட்ட தூதுக்குழு (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர். இரு தரப்புகளுக்குமிடையிலான சுமுகமான கலந்துரையாடலில் இருதரப்பு மற்றும் வலய முக்கியத்துவம் வாய்ந்த பல துறைகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
உயர் அபிவிருத்தி மட்டத்தை அடைந்துகொள்வதற்கான முயற்சியில் இலங்கையுடன் தொடர்ச்சியாக இணைந்திருப்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்ட இராஜாங்க செயலாளர் பொம்பியோ, நாட்டினுள் அமெரிக்க முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அதிக முன்னுரிமையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
சுற்றுலா துறை தொழில்கள் மற்றும் அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டுவதற்கு உதவும் முக்கிய துறையாகும். முறையான திட்டத்தின் கீழ் அதன் முன்னேற்றத்திற்கு உதவ தனது நாடு தயாராக இருப்பதாகவும் இராஜாங்க செயலாளர் தெரிவித்தார்.
இலங்கையின் தேவை தொடர்ந்தும் கடன் பெறுவதல்ல. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் அதிக பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதே எமது தேவையாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீட்டுக்கு தடையாக அமையும் அதிகாரத்துவ மைய நடைமுறைகளை நீக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை அதிக விவசாய வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கு தேவையான வளங்களை கொண்ட நாடாகும். எமது விவசாயத் துறையை நவீனமயப்படுத்த வேண்டும். அதற்காக அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக எமக்கு உதவுங்களென ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை விளக்கிய ஜனாதிபதி, அது நடுநிலைமையை அடிப்படையாக கொண்டதாகும் எனத் தெரிவித்தார்.
இலங்கை ஏனைய நாடுகளுடன் பேணி வரும் உறவுகள் பல அம்சங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுவதாக தெரிவித்தார். வரலாற்று, கலாசார உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு அவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றது. சர்வதேச தொடர்புகளின் போது நாட்டின் சுயாதீனத்தன்மை, இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை விட்டுக்கொடுப்பதற்கு தான் ஒருபோதும் தயார் இல்லை என ஜனாதிபதி தெரிவித்தார். பிரிவினைவாத யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனா உதவியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன் விளைவாக இலங்கை கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்ளவில்லையென்றும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்தன.
இலங்கையின் பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு அமெரிக்கா வழங்கும் பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பொருள் உதவிகளும் இதில் அடங்கும். போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு கரையோரப் பாதுகாப்பு சேவையை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, அதற்கு உதவ அமெரிக்காவுக்கு முடியுமென இராஜாங்க செயலாளர் பொம்பியோ தெரிவித்தார்.
இந்து சமுத்திரம் ஒரு சமாதான வலயமாக இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் என்று இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் நட்புறவு குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டார். இந்து சமுத்திரம் சமாதான வலயமாக இருக்க வேண்டும் என்பதே இலங்கையினதும் எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சர்வதேச மன்றங்களில் மனித உரிமைகள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்பட இருதரப்பும் இணக்கம் தெரிவித்தன.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைனா டெப்லிட்ஸ், உதவி இராஜாங்க செயலாளர் பிரியன் புலதாவோ, தெற்கு மற்றும் மத்தியாசிய நடவடிக்கைகளுக்கான பணியகத்தின் தலைமை பிரதி உதவிச் செயலாளர் டீன் தொம்ஸன் மற்றும் இராஜாங்க செயலாளரின் சிரேஷ்ட ஆலோசகர் மேரி கிசல் ஆகியோர் அமெரிக்க தூதுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாகும்.
வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள ரவிநாத் ஆரியசிங்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். நன்றி தினகரன்
20க்கு ஆதரவளித்த 09 எம்.பிக்களும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கம்
ஆளும் கட்சி பக்கம் ஆசனம் ஒதுக்க பிரதம கொறடா கோரிக்கை
20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை வழங்கியிருந்தனர்.
டயனா கமகே, அருணாசலம் அரவிந்தகுமார், இஷாக் ரஹ்மான், பைசல் காசிம்,H.M.M.ஹாரிஸ், M.S.தௌபீக், நசீர் அஹமட்,A.A.S.M. ரஹீம்,M.M.M. முஷாரப் ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவளித்தனர்.
இந்த உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வரிசையிலிருந்து நீக்கி, ஆளும் கட்சியின் ஆசன வரிசையில் ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கோரிக்கை விடுத்துள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment