மேல்மாடிப் படுக்கை அறையின் சன்னலின் இடுக்குகள் வழியே எட்டிப் பார்க்கிறேன். கீழே பரந்து விரிந்த முன் பக்க வீடுகளில் ஒன்றின் முன் நின்று கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள் அந்த நான்கு சிறுவர்களும். பேய், பிசாசு உடுப்பில் முகத்தில் ஒப்பனை வேறு செய்து கொண்டு, அவர்கள் கைகளில் ஆளுக்கொரு பை, அது நிறைய சொக்கிளேற் இனிப்புகளின் குவியல் என்று ரெலெஸ்கோப் வைக்காமலேயே ஊகிக்க முடிந்தது. ஒவ்வொரு வீடாகத் தட்டி இனிப்புப் பண்டங்களை வாங்கித் தம் பையில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக நடப்பது தான்.
எங்கள் வீட்டில் இருந்து ஒரு ஐந்து நிமிட நடை தொலைவில் வீதியின் முடக்கில் அடுக்கடுக்காக இருக்கும் மூன்று வீடுகளில் இருக்கும் பையன்கள் தான் அவர்கள். பள்ளிக்கூடம் முடிந்த பின் வீட்டுக்கு வெளியே வந்து பந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த அகண்ட பெரிய அந்த வீதியின் ஒரு பாதி அவர்களுக்குச் சில சமயம் உதைபந்தாட்ட மைதானம் போல. வாகனப் போக்குவரத்தும் அதிகம் இல்லாததால் அவர்களின் விளையாட்டுக்கு அது கை கொடுத்தது.
அரை மனதுடன் வீட்டுக்குள் வந்து விட்டேன். ஊரில் என்றால் இப்படி வீதியை மறித்து யார்ட், கிளித்தட்டு என்று எத்தனை விளையாட்டெல்லாம் விளையாடியிருக்கிறம். போன வாரம் கூட ஒரு காணொளியில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தான் எங்காவது பயணித்துக் கொண்டிருக்கும் போது ஏதாவது கிராமப்புறத்தில் வழியோரத்தில் கிறிக்கெட் விளையாடும் பையன்களைக் கண்டால் அப்படியே காரை நிறுத்தி விட்டுப் பார்த்துக் கொண்டிருப்பாராம். மனைவி கூடக் கிண்டலடிப்பாராம் "போய் அம்பயர் வேலை பார்க்கலாமே?" என்று. எனக்கும் இந்தச் சிறுவர்களைக் கண்டால் அப்படியொரு ஆசையும் தொற்றிக் கொள்ளும், ஆனால் வயது விடாது. இந்த நாட்டுச் சூழலில் அந்நியர் கிட்ட வந்து பேசுவது கூட வேறு அர்த்தத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விடும்.
இந்த ஹாலோவீன் திருவிழா இப்போது அமெரிக்கக் கண்டம் தாண்டி அவுஸ்திரேலியாவுக்கும் வந்து விட்டது. விடிகாலையில் கூடக் கடைகளில் கொரோனாப் பயம் இன்றி கூட்டம் கூட்டமாகக் கடைகளில் பேய் உடுப்பு, மந்திரவாதி முகம், இன்ன பிற படைக்கலங்களை வாங்கிக் கொண்டிருந்தது சனம். பல்லங்காடிகளில் கூட எல்லா சொக்கிளேற் நிறுவனத்தாரும் இந்த ஹாலோவீன் உறை போட்டுப் பொதி செய்த இனிப்புகளை அடுக்கி வைத்திருந்தார்கள். விசேடமாகக் குக்கீஸ் எல்லாம் செய்து வச்சிருப்பினம். சொக்கிளேற் பக்கற்றுகளை வாங்கி வைத்தால் இப்படிக் கதவைத் தட்டும் சிறுவர்களுக்குக் கொடுக்கலாம் என்று அள்ளிக் கொண்டு வருவதுண்டு.
எங்கள் வீட்டின் எதிர்ப்புறம் இருக்கும் ஒவ்வொரு வீடாகத் தட்டிக் கொண்டிருந்தார்கள் அந்தப் பையன்கள். சிலர் கதவைத் திறந்தனர் ஏதோ கொடுத்தனர். இவர்கள் கும்மாளமிட்டுக் கொண்டே அடுத்ததுக்குப் போனால் அதிஷ்டம் இருந்தால் கதவு திறக்கும்.
"பெடியங்கள் எங்கள் வீட்டுப் பக்கமும் வரப் போகிறார்கள்
சொக்கிளேற் பக்கற்றுகளை எடுத்து ஆயத்தமாக வச்சிருங்கோ"
என்று மனைவியிடம் நின்ற இடத்திலேயே சொல்லி விட்டு மீண்டும் வேடிக்கை பார்த்தேன். அந்தச் சிறுவர்கள் எதிர்ப்பக்க வீடுகள் ஒவ்வொன்றாகத் தட்டித் தட்டிப் போனவர்கள் இந்தப் பக்கம் வராமலேயே தம் வீடு இருக்கும் திசை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
ஏமாற்றத்தோடு ஜன்னல் பக்கத்திலிருந்து திரும்பினேன்.
000000000000000000000000000000
"படார்....."
சரியாக இரண்டு தினங்களுக்கு முன்பு தான் அந்த சம்பவம் நடந்தது.
மகளைப் பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து வந்து கொண்டு வந்து வீதியின் முடக்கில் கார் திரும்பிய போது முன்பக்கச் சக்கரத்தடியே ஒரு வெடிப்போசை. கொஞ்சம் நிலைகுலைந்தாலும் கார் முன்னோக்கிப் போக,
"என்ன நடந்தது?" என்று அந்தக் குலுங்கல் கொடுத்த அதிர்ச்சில் மனைவி கேட்டார்.
ஓடிக் கொண்டே கார்க் கண்ணாடி வழியே பார்த்தேன். வீதியில் ஹாலோவீன் பூசணிக்காய் போலப் பிதுங்கி உடைந்திருந்தது ஒரு பெரிய கால்ப்பந்து. அந்தக் கணப் பொழுது அதிர்ச்சியில் அந்தச் சிறுவர்கள் பார்த்துக் கொண்டு பறக்கிறார்கள் வீட்டுப் பக்கமாக.
இந்த அதிர்ச்சியில் கொஞ்சம் கோபமும் எட்டிப் பார்க்கிறது உள்ளூர.
காரை வீட்டுக்குள் நிறுத்தி விட்டுச் சக்கரத்தைப் பார்க்கிறேன். எல்லாம் சரியாக இருக்கிறது.
வீட்டு முற்றத்தின் மதில் ஓரமாக மறைந்து நின்று அந்தச் சிறுவர்களின் வீட்டுத் திசை நோக்கிப் பார்க்கிறேன். என்னுடைய கார் மறைந்து விட்ட தெம்பில் வெளியே வந்து உடைந்து போயிருந்த பந்தின் சில்லுகளைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
"பாவமாக் கிடக்கு, நான் என்ன ஏதென்று கேட்டு விட்டு வரவா?
என்று நான் சொல்லவும்,
"அவங்கள் ஏற்கனவே பயந்து போய் ஓடினவங்கள்
இப்ப காருக்கு ஏதோ நடந்து விட்டதெண்டு விளக்கம் கேட்க
நீங்கள் வாறியளாக்கும் எண்டு இன்னும் ஓடப் போறாங்கள்"
என்று மனைவியார் திருப்பி விட்டார் என் மனதை.
ஆனாலும் மனசு கேட்கவில்லை. ஒரு புதுப் பந்து வாங்கித் தருகிறேன் என்றாவது சொல்லி விட்டு வரலாம் என்று தூரத்தே முன் பக்க கேற்றைத் திறக்கிறேன்.
என்னைக் கண்டு விட்டார்கள்.
பதற்றத்தோடு தங்களுக்குள் எதோ குசுகுசுத்துக் கொண்டே ஓடுகிறார்கள் தம் வீடு நோக்கி.
கானா பிரபா
No comments:
Post a Comment