அறிவுத்தாகம் - - நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்

.


 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து யாழ்பாணத்தில் பிரபலமான தொழில் அப்புகாத்து பிறக்கிறசி எனப்படும் Advocate, Procecutor. காணி கொடுக்கல் வாங்கல் உறுதி எழுதுவது மற்றும் பெரிய அளவிலான வழக்குகள் என பலவற்றிற்கும் மக்கள் இவர்களை நாடவேண்டி இருந்தது. பிருத்தானியர் எம்மை ஆண்டு வந்தமையால் அவர்களே நிர்வாகத்தை நடத்தும் பொழுது, தம்மிடம் தம் முறையில் படித்த சட்டத்தரணிகளை வைத்து வழக்குகளை தீர்க்கும் முறையை கையாண்டார்கள். அதாவது பிருத்தானிய நீதி முறையில் படித்து பட்டம் பெற்றவரே இதை செய்யும் தகுதி பெற்றவராக இருந்தனர். இதனால் பலர் இத்தொழிலை கற்றுத் தேறினர். பிருத்தானியர் வரவிற்கு முன்பே கைகொள்ளப்பட்ட சட்டங்கள் இலங்கைக்கே உரித்தானவை. இவற்றை பிருத்தானிய அரசு ஏற்றுக்கொண்டே செயல்பட்டது. இவற்றில் யாழ்பாணத்திற்கே உரிய தேச வளமை, முஸ்லிம் மக்களுக்கான முறைமைகள், கண்டி பிரதேசத்திற்கான முறைமைகள் யாவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 எம்மவர் பலர் மேற்படிப்பிற்காக பிருத்தானியா நோக்கி சென்றனர். இது எனக்கு ஆதார பூர்வமாக தெரியாது. இருந்தும் மேல் படிப்பிற்காக பிருத்தானியா சென்ற தமிழர்கள் பொன்னம்பலம் இராமனாதனின் குடும்பத்தவராகவே இருக்கலாம். இவருக்கு பின் பிருத்தானியாவிற்கு படிக்கச் சென்றால், ஊர் மக்களுக்கு அப்படி படிக்க சென்றவர் என்ன படிக்கப்போகிறார் என்பது புரியாது. ஊர் வழக்கிலே அவர் இராமனாதனுக்கு படிக்க போய் இருக்கிறார் என்றே கூறுவார்களாம். எனது பெரியப்பா 1934இல் பிருத்தானியாவிற்கு படிக்கப் போயிருந்தார். அப்பொழுது இவ்வாறு தான் கூறினார்களாம். எமது ஊர் ஆன திருநெல்வேலியில் இந்து வாலிபர் சங்கம் இயங்கி வருகிறது. எனது பெரியப்பா பிருத்தானியா செல்லுமுன் இந்து வாலிபர் சங்கம் அவருக்கு பிரியாவிடை நடத்தியுள்ளனர். பின் யாவரும் சேர்ந்து ஒரு படம் எடுத்துள்ளனர். அப்படத்திலே கரையில் இருவர் சயிக்கிளை பிடித்து கொண்டு நிற்கிறார்கள். ஒரு சமயம் ஊரிலே சயிக்கிள் ஒரு பிரமாதமான வாகனமாக கருதப்பட்டமையால் அவ்வாறு செய்தார்களோ என எண்ணத் தோன்றுகிறது. 

எமது நிலைமை இவ்வாறிருக்க இந்தியாவை நோக்குவோம். பிற்காலத்தில் மகாத்மா என போற்றப்பட்ட கரம்சந்த் மோகனதாஸ் காந்தியும் பிருத்தானியா சென்று கற்றவரே. இவ்வாறாக யாராவது வெளிநாடு சென்றால், அவரை அக்காலத்து மக்கள் ஜாதியில் இருந்து விலக்கி விடுவார்களாம். தம்மை தவிர மற்றவர்கள் யாவரும் இழி குலத்தோரே. அவர்களுடன் இருந்து உணவருந்துவது அவர்கள் ஆசாரத்திற்கு ஏற்புடையது அல்ல. இதற்காக காந்தி ஊர் திரும்பியதும் சில பிராயசித்தங்கள் செய்ததாக அவரது சுயசரிதையில் எழுதியிருந்தார். 


இங்கு சிட்னியில் வாழும் எனது தோழி ஒருத்தி கூறினார், தனது தந்தை பிருத்தானியா சென்று படித்து திரும்பியபோது அவரை வீட்டிற்குள் அழைப்பதற்கு முன் பிராயசித்தமாக கோமேதகம் அருந்த வைத்தார்களாம் அவர் உறவினர்கள். கோமேதகம் என்றால் உங்கள் சிலருக்கு தெரிந்திருக்கும் பலருக்கு தெரிந்திராது அதனால் கூறவேண்டியுள்ளது. கோ என்பது பசு, இந்த கோமேதகம் பசுவின் சிறுநீர். என்ன பயந்து விட்டீர்களா. மாட்டுசாணம் மாட்டின் சிறுநீர் யாவுமே இயற்கையாக கிடைக்கும் கிரிமி நாசினியே. அதுதான் அந்த பாவப்பட்ட மனிதரை சுத்தீகரிக்க அவரை குடிக்கச் செய்துள்ளார்கள். இவ்வாறாக அறிவைப் பெற்ற எம்மவர்கள் பட்டபாட்டை எல்லாம் அறிந்தோம். இவையெல்லாம் எதற்காக கல்வி மேல் கொண்ட தாகமே இதற்கு காரணமாகும். 

இந்த கல்விதான் யாது, இன்று எமது பிள்ளைகள் வயித்தியராக, பொறியியலாளராக சட்டதரனியாக கணக்காளராக என படித்து வரவேண்டும் என பெற்றோர் எண்ணுகிறார்கள். இவை யாவும் ஒரு தொழிலை கற்றுக் கொள்வதே அவரவர் தொழிலை செய்வதற்கான தொழில் கல்வியே இது. 

ஆனால் அறிவை தேடுவதற்காக நூல்களை படிக்க வேண்டும் அதன் பெறுமதியை உணரவேண்டும் அதனாலேயே ஔவைபிராட்டி 

நீரளவே ஆகுமாம் நீராம்பல்; தான்கற்ற 
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு 

என்றுள்ளார். அறிவை தேடும் தாகத்தால் உந்தப்பட்ட சிலரை பற்றி நாம் கேள்விபட்டிருக்கிறோம். இவர்கள்தான் பிற்காலத்தில் பெரிய அறிஞர்கள் ஆனவர்கள். பேராசிரியர் ராகுல் சாங்கிருத்தியாயன் எனும் அறிவுக்கடல் 14 மொழிகளை அறிந்தவர். இவர் பலராலும் அன்பாக ராகுல்ஜி என அழைக்கப்பட்டவர். பிள்ளைப் பருவத்திலேயே அறிவுத்தாகம் எடுத்து ராகுல்ஜி அறிவை சேகரிப்பதற்காக உலகின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி இருக்கிறார். காசி நகரிலே தொடங்கிய அறிவு சேகரிக்கும் முயற்சியை லெனின் கிராட் சர்வகலா சாலையில் பேராசிரியராக பதவியை பெற்ற பிறகும் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். ஆயுள் முழுவதும் உழைத்து சேகரித்த அறிவு பொக்கிஷத்தை அவருடைய நூல்களில் அள்ளி தந்துள்ளார். கேம்பிறிஜ் பல்கலை கழகம் தொட்டு உலகின் பல பல்கலைகழகங்களும் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளன. பௌத்த மதத்தால் கவரப்பட்ட இவர் பாலி மொழியும் அறிந்தவர். தமது ஆராய்ச்சியின் பொருட்டு இலங்கையிலும் சிலகாலம் தங்கியவர். ராகுல் - கௌதமரின் மகனின் பெயர். சாங்கிருத்தியாயன் ஜீரணித்து கொள்பவன் என பொருள்படும். அறிவை ஜீரணிப்பவனே என்பதாகும் “மனித சமுதாயம்” என்ற பாரிய நூலை எழுதியவர், அதையே சாதாரண மனிதனும் புரிந்து கொள்வதற்காக “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை எழுதினார். திரு. கண முத்தையா அவர்கள் இவரது “பொது உடமை தான் என்ன” என்ற நூலை மொழி பெயர்த்த பொழுது ராகுல் ஜீயிடம் உரிமை பெற ஆங்கிலத்தில் கடிதம் எழுதினாராம். ஒரு சில நாட்களில் தமிழிலே எழுதிய பிரதியை அனுப்பு. நான் காஞ்சிபுரத்தில் தங்கி தமிழ் கற்றவன் என தமிழிலே பதில் வந்ததாம். 

இவ்வாறான மேதை சிறுவனாக இருந்த போது இவர் வீட்டில் பஞ்சாங்கம் தான் ஒரு நூல்தான் இருந்ததாம். படிக்க வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டவர் புரட்டி புரட்டி பஞ்சாங்கத்தையே படித்ததாக தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். அறிவை தேடி அலைபவர்கள் யாவரும் ராகுல்ஜி ஆக வேண்டுமா? எம் மத்தியிலும் அறிவை தேடும் சிலரை நாம் காணமுடியும். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இவர் கத்தோலிக்க மதத்தவர். இவர் சிறுவனாக இருந்த பொழுது இவர் வீட்டில் கிறிஸ்தவ வேத நூலான பைபிள் மட்டும் தான் இருந்ததாம். சிறுவனாக இருந்த காலத்தில் அதையே புரட்டி புரட்டி படித்ததாக கூறினார். தானாக வீட்டை விட்டு போய் நூல்களை தேடும் வயது வரும் முன் இவருக்கு கிடைத்ததெல்லாம் பைபிள்தான். பிறகு தனது அறிவு பசியை தீர்க்க பல நூல் நிலையங்கள், பழய புதிய புத்தக கடைகள் என அலைந்ததாக கூறினார். இவருடன் பேசும்போது இவரது அறிவு விலாசத்தை எம்மால் உணர முடியும். இவரது நட்பு என்றும் எமது உள்ளத்தில் தனி இடத்தை பிடித்துள்ளது. 

தாம் முற்றாக கல்வி அறிவை பெறாதவராக இருந்தும் கல்வியின் அவசியத்தை புரிந்த சில பெற்றோர் இருந்துள்ளார்கள். இத்தகையவர்களில் ஒருவரே உலகம் போற்றும் நெல்சன் மண்டேலாவின் தாயார். நெல்சன் மண்டேலா வாழ்ந்த பிரதேசத்தில் இருந்த இவரின் மக்களில் நெல்சனை கவர்ந்தவர், நீண்ட கம்பை வேகமாக சுழட்டி பலரையும் ஒரே நேரத்தில் வெல்ல கூடியவரேதான். தான் பெரியவனாகி அவ்வாறு வரவேண்டும் எனவே விரும்பினாராம் நெல்சன். ஆனால் தந்தையை இழந்த இவரை கல்வி அறிவுடையவனாக ஆக்க தாயார் விரும்பினார். பத்து நாட்கள் கால்நடையாகவே நடந்து நகரத்தில் இருக்கும் சிறிய தந்தையாரிடம் நெல்சனை ஒப்படைத்தாராம். அன்று அந்த தாயார் மகனுக்கு கல்விபுகட்ட எடுத்த முயற்சியே பின் உலகம் போற்றும் நெல்சன் மண்டேலாவை உருவாக்கியது. 

நெல்சன் மண்டேலாவின் தாயார் போன்ற பிறிதொரு ஆபிரிக்க அமெரிக்க தாயார் இவரும் கல்வி அறிவற்றவரே. ஆனால் தன் பிள்ளைகளை நல்வழிபடுத்தும் அறிவையுடையவர் இவர் என்ன செய்தார் எனப் பார்ப்போம். அவரது மகன் கூறுவதை பார்ப்போம். 

எனது தமையன் கிறிஸ்தும் நானும் எமது தாயாருடன் அரசால் வசதி அற்றோருக்கு வழங்கப்பட்ட அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தோம். எமது வீடு மிக நெரிசலாக காணப்படும். தளபாடங்கள் குறைவாகவே இருக்கும். இருந்தாலும் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும். உணவு பற்றாக்குறை இருக்கவில்லை. இவற்றையெல்லாம் சமாளிக்க எமது தாயார் பட்ட தொல்லைகளை புரிந்து கொள்ளும் வயதல்ல எமக்கு. இவரோ இதையெல்லாம் சமாளிக்க மூன்று வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். 

நானும் கிறிசும் பாடசாலை போவது, பின் மாலை கால் பந்து விளையாடுவது இவற்றின் பின் வீடு திரும்புவோம். இரவானால் தொலைகாட்சி பார்ப்பதை தவிர எமக்கு வேறு எதுவும் செய்யவேண்டும் என்பது தெரியாது. நிகழ்ச்சி நிரல் எமக்கு அத்துப்படி. நமது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வரும் ஒலி வீடு முழுமையையும் ஆட்கொள்ளும். இந்த இரைச்சலுடன் நாமும் சேர்ந்து தாயாரின் படுக்கையில் இருக்கும் தலையணையை வைத்து குதிரை ஓடுவோம். நாம் விரும்பி பார்ப்பது Cowboy படங்கள். அந்த காட்சியில் வருவதுபோல நாமும் செய்து பார்ப்போம். எமக்கு தந்தை என்பவர் எம்மை விட்டு போய் பல காலமாகிவிட்டது. அதனால் கண்டிக்கவோ அடக்கவோ யாரும் இல்லா பாக்கியசாலிகள் நாங்கள். 

1961ம் ஆண்டு நான் ஐந்தாவது படித்து கொண்டிருந்தேன். எனது பரீட்டை பெறுபேறுகள் வெகு குறைவாகவே இருந்தது. இதை பற்றி நான் கவலைப் படவில்லை. ஒருநாள் எனது தாயார் எமது இந்த வாழ்க்கைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தார். எனது பரீட்டை பெறுபேறுகள் அவரை சுட்டிவிட்டது. இத்தனைக்கும் எனது தாயார் 3ம் வகுப்பு வரை தான் பாடசாலைக்கு சென்றுள்ளார். நாம் பையன்கள் எமது தாயாரை பற்றி தப்பு கணக்கு போட்டு விட்டோம். நாம் நினைத்ததைவிட அவர் புத்தி கூர்மை உடையவராகவே இருந்தார். அவர் வேலை பார்த்த வீடுகளில், அம்மா சுத்தப்படுத்தும்போது புத்தகங்களை கண்டிருந்தார். அவர் வீட்டிற்கு வந்த வேகத்தில் தொலைக்காட்சி வயரை பிடிங்கி எறிந்தார். எங்கள் இருவரையும் இருக்க சொல்லி “பிள்ளைகளே இன்றில் இருந்து நீங்கள் சில காரியங்களை செய்ய போகிறீர்கள். நீங்கள் இருவரும் வாரம் இரு புத்தகங்களை வாசித்து அவை பற்றி எனக்கு எழுதிகாட்ட வேண்டும்” என்றார். 

முதலில் நாம் சிறிது மிரண்டோம். “மற்ற பையன்கள் எல்லாம் T.V. பார்க்கிறார்கள். இப்படி செய்வது சரியில்லை” என்றெல்லாம் முணுமுணுத்தோம். அம்மா சில நாட்களில் இதை மறந்து விடுவார் என எண்ணி மன நிம்மதி அடைந்தோம். எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் வீட்டில் தான் புத்தகங்கள் கிடையாதே; அம்மாவின் பைபிளை தவிர என எண்ணினோம். அவரோ விடுவதாக இல்லை “மாலை வேலை முடிந்து நான் வந்ததும் உங்களை நூல் நிலையத்திற்கு அழைத்து செல்வேன்” என்றார். நாம் இருவரும் வேறு வழி இன்றி அவரது கடபுட என சத்தம் எழுப்பும் பழைய காரில் ஏறி அவருடன் பொது நூலகம் போகத் தொடங்கினோம். 

நான் சிறுவர்களுக்கான நூல்களை புரட்ட தொடங்கினேன். மிருகங்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதனால் அந்த நூல்களை வாசிக்க தொடங்கினேன். மெல்ல மெல்ல நூல்களிலே என்னை மறந்து ஈடபட்டேன். சிறிய மிருகங்கள் பற்றி அறிய தொடங்கிய எனக்கு டைனசோரில் ஈடுபாடு வளர்ந்தது. தொலைகாட்சியை பார்ப்பதைவிட இங்கு ஒரு புதிய அனுபவம் கிட்டியது. டைனசோர் எல்லாம் எனது மனக்கண்ணில் தோன்றின. எனது கற்பனையில் விரிந்தன. இவ்வாறு தொடங்கிய எனது பயணம் மிருகங்களில் இருந்து வேறு விஷயங்களுக்கு போயின. மொத்தத்தில் நூல் நிலையமே எனக்கு பிடித்த இடமாகிவிட்டது. இயற்கையின் இரகசியங்களை எல்லாம் அறிய துடித்த எனக்கு நூல் நிலையம் எனது சந்தேகங்களுக்கு விடை பகரும் இடமாக தோன்றியது. இந்த பாதையில் நான் பயணத்தை தொடர்ந்தேன். என்னை சுற்றி பல விஷயங்கள் மாறத்தொடங்கியது. எனது ஆசிரியர்கள் என்னில் ஏற்பட்ட மாறுதலை கவனிக்கத் தொடங்கினர். நானும் அண்ணாவும் இப்பொழுது அம்மா நூல் நிலையத்திற்கு கூட்டி செல்ல வேண்டும் என காத்திருப்பதில்லை. நாமே குறுக்கு வழியால் போகத் தொடங்கிவிட்டோம். அம்மாவும் முன்போல அல்லாது எம்மை சிறிது நேரம் தொலைகாட்சி பார்க்க அனுமதித்தார். நாமும் முன்போல தொலைகாட்சியே தஞ்சமென முழு நேரம் பார்க்கவில்லை, ஏதோ ஒரு பொழுதுபோக்காக கொஞ்சம் பார்த்தோம்.

 இவ்வாறு ஒரு வருடம் கடந்தபின்தான் எமக்குத் தெரியவந்தது நாம் படித்த நூல்களை பற்றி எழுதிய குறிப்பை வாசித்து அறியும் அளவு கூட எமக்கு தாயாருக்கு கல்வி அறிவு இருக்கவில்லை என்ற விஷயம். ஆனால் எமது தாயார் கல்வி அறிவு அற்றவராக வாழவிரும்பவில்லை. அவர் எழுத படிக்க கற்றதுடன் நிறுத்தவில்லை General Education Deploma வரை கற்றுவிட்டார். 

இன்று எனது அண்ணா ஒரு பொறியியல் பட்டதாரி. நான் Chief of Paediatric Neuro at Johns Hopkins Childrens Center என்கிறார் Dr. Ben Carson. இன்று என் வாழ்க்கையை என்னால் நம்ப முடியாமல் உள்ளது. பின்னோக்கி பார்க்கையில் பின்தங்கிய மாணவனாக Public Schoolஇல் இருந்தது. அதன்பின் Yale University Scholarships கிடைத்தது. பின் University of Michigan Medical School, கடைசியாக இன்று நான் வகிக்கும் பதவி, இந்த பதவியால் நான் உலகம் பூராவும் சுற்றி மிக நுட்பமான Surgery செய்வதுடன் அதை கற்பித்தும் வருகிறேன். 

ஆனால் எனக்கு தெரியும், இந்த நீண்ட பயணம் எங்கே ஆரம்பமானது என்று. எனது தாயார் தொலைக்காட்சி வயரை பிடுங்கிவிட்டு எம் இருவரையும் தனது பழைய காரிலே ஏற்றிக்கொண்டு நூல்நிலையம் அழைத்து சென்றதே, இந்த நீண்ட பயணத்தின் ஆரம்பம் என்கிறார் Dr. Ben Carson. 

தாய் என்பவள் கல்வி அறிவற்றவளாக இருந்தும் தனது பிள்ளைகளை முறையாக வழிநடத்த தெரிந்தவளாக வாழ்ந்ததைக் கண்டோம்.


No comments: