எழுத்தும் வாழ்க்கையும் -- அங்கம் 15 இலக்கியத்திற்காக தெருவெங்கும் அலைந்த காலமும் பொற்காலம்தான் ! “ பிச்சை எடுக்குமாம் பெருமாள் , அதை பிடுங்கித்தின்னுமாம் அநுமார் “ முருகபூபதி


இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1974 ஆம் ஆண்டு கொழும்பில் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை நடத்திமுடித்த பின்னர் தீவிரமாக இயங்கியது. அவ்வேளையில் பதவியிலிருந்த கூட்டரசாங்கம் பல முற்போக்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியதுடன் உள்நாட்டு உற்பத்திகளுக்கும் முக்கியத்துவம் வழங்கியது. 

அக்காலத்தை மரவள்ளிக்கிழங்கு காலம் என்றும் எதிரணியினர் எள்ளிநகையாடினர். வடக்கில் மிளகாய், வெங்காயம் பயிர்ச்செய்கையில் விவசாயிகளுடைய பொற்காலம். 

உள்நாட்டில் திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனம் தோன்றியது. எமது சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் அயராத பணியாளர்.  தன்னை முன்னிலைப்படுத்தாமல் பல ஆக்கபூர்வமான பணிகளுக்கு பின்னின்று உழைத்தவர்.  

அத்துடன் மும்மொழியிலும் சரளமாகப்  பேசுவார்.  எந்தப்பெரிய அரசியல் தலைவர்களையும் பெயர் சொல்லி அழைப்பார். அவர் ஶ்ரீமாவை மாத்திரம் பி. எம். என்பார். இடதுசாரித்தலைவர்களை தோழர்


என்றோ, Comrade என்றோ அழைப்பார்.  

சங்கம் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தை மீண்டும் இயங்கவைக்கப்போவதாகவும் அதன் பணிகளுக்கு ஒரு முழுநேர ஊழியர் தேவை என்று சொன்ன அவர்,  என்னை அதற்கு எவ்வாறு தெரிவுசெய்தார் என்பது தெரியாது. 

வேலை இல்லாமல் நான் சிரமப்படலாகாது என்ற நல்லெண்ணம் மாத்திரம் அவரிடமிருந்ததை அறிந்தேன். சங்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர்  நண்பர் காவலூர் இராஜதுரை அச்சமயத்தில் இலங்கை வானொலியில் பணியாற்றினார். 

அவரும் சிறுகதை எழுத்தாளர்தான். அவரது இல்லம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்தது. அதன் முகவரி: 51/9 ஹட்சன் வீதி,   கொள்ளுப்பிட்டி.  சங்கத்தின் முகவரியாக அதனையே பயன்படுத்தினார்கள். 

அந்த இல்லத்திலும் சங்கத்தின் கூட்டங்கள் அடிக்கடி நடக்கும்.  காவலூர் இராஜதுரையின் மைத்துனர் இராஜசிங்கம் ஆரம்ப  முதலீட்டை வழங்க ,  திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் மானிய உதவியுடன்  தனது கதையான பொன்மணியை திரைப்படமாக்குவதற்கு   நண்பர் தயாரானார். 

சங்கத்தின் கூட்டுறவுப்பதிப்பகம் தோன்றிய கதையை பிரேம்ஜி  என்னிடம் விஸ்தாரமாக எடுத்துச்சொன்னார்.  கேரளா எழுத்தாளர்களும் அத்தகைய அமைப்பினை நடத்தி சிறந்த நூல்களை வெளியிட்டு வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். 


அதற்கென அங்கத்தவர்களை திரட்டி,  வருடாந்தம்  பல  நூல்களை அங்கத்தவர்களுக்கு  சந்தா முறையில் வழங்கும் அது போன்றதொரு திட்டத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற எண்ணம்தான் பிரேம்ஜியிடம் இருந்தது.   

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம், திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் உள் நாட்டு  தமிழ் திரைப்படத் தயாரிப்புக்கு   ஆதரவு வழங்குதல் ,  தென்னிந்திய வணிக சஞ்சிகைகள் மீது இறக்குமதிக்  கட்டுப்பாடுகளை விதித்து, உள்நாட்டு இலக்கிய இதழ்களுக்கு ஊக்கமளித்தல் முதலான பல முற்போக்கான விடயங்களின் பின்னணியில் பிரேம்ஜி ஒரு ராஜதந்திரியாகவும் சூத்திரதாரியாகவும் இயங்கியவர். 

அதனால் அவர் விமர்சனங்கள், கண்டனங்களுக்கும் ஆளானார். ஆனால், எதற்கும் கலங்கமாட்டார்.     தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டில் சங்கம் முன்மொழிந்த 12 அம்சத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அரசியல் கட்சித்தலைவர்களையெல்லாம் அணுகினோம். அந்தச்சந்திப்புகளுக்கு பிரேம்ஜி என்னையும் அழைத்துச்செல்வார். 

இந்த வேலைத்திட்டத்தின் பின்னணியில்தான் கம்பகா மாவட்டத்தில் முழுக்க முழுக்க  பௌத்த சிங்கள மக்கள்  வாழும் கொரஸ என்ற கிராமத்தில்  தேசிய ஒருமைப்பாட்டு கருத்தரங்கும் நடத்தினோம். அக்கருத்தரங்கில் பல சிங்கள ஆசிரியர்களும் பௌத்த பிக்குகளும் பொதுமக்களும்


கலந்துகொண்டனர்.  

எம்மிடம் தமிழ் கற்ற உடுகம்பொல கொரஸ ஶ்ரீ சுதர்மானந்த விகாரையின் பிரதம குருவானவர்  பண்டிதர் எம். ரத்னவன்ஸ தேரோ அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கொழும்பிலிருந்து பிரேம்ஜி, சோமகாந்தன், மல்லிகை ஜீவா, எஸ்.வி. தம்பையா, மு. கனகராஜன், டொக்டர் வாமதேவன், ஆகியோரையும் மினுவாங்கொடையிலிருந்து மு. பஷீரையும் அழைத்துச்சென்றேன்.  


தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டில் சிங்கள அரசியல் தலைவர்களின் பேச்சை தமிழிலும் தமிழ் எழுத்தாளர்களின் பேச்சை சிங்களத்திலும் மொழிபெயர்த்தவரான ராகுலன் எமது அழைப்பினை ஏற்று வந்தார். இவர்  கொழும்பில் பல  மேடை ,  வானொலி நாடகங்களிலும் நடித்திருப்பவர். 

இந்த ராகுலன்தான்  பின்னாளில் இலங்கை அரச அதிபர்கள், பிரதமர்களின் உரைகளை தமிழ்ப்பிரதேசங்களில் மொழிபெயர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. சிங்கள கிராமத்தில் தமிழ் எழுத்தாளர்கள் நிகழ்த்திய உரைகள் வீரகேசரியில் தலைப்புச்செய்தியாகவும் அதனையடுத்து ஆசிரியத்தலையங்கத்திலும் இடம்பெற்றது. 

தினகரன் வாரமஞ்சரியும் விரிவான செய்தியை வெளியிட்டது. சங்கம் கொழும்பில் மாதாந்த  கருத்தரங்குகளையும் நடத்தத் தொடங்கியது.  அனைத்திற்கும் சென்று சங்கத்திற்காகவும் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்திற்காகவும்  முழுநேரத்தையும் செலவிட்டேன்.  

மாதம் 150 ரூபா அலவன்ஸ் தந்தார்கள்.  தமிழ்நாட்டில் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் தீரர்


சத்தியமூர்த்தியின் மகள் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி வாசகர் வட்டம் என்ற அமைப்பின் ஊடாக பல சிறந்த நூல்களை வெளியிட்டுவந்தவர்.  

அதற்காக தமது வீட்டைக்கூட அடமானம் வைத்து  தமிழ் பதிப்புத்துறைக்கு வளம் சேர்த்தவர்.  நான் எழுத்துலகில் பிரவேசித்த காலப்பகுதியில்  லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம் வெளியிட்ட பல நூல்களையும் படித்திருந்தேன். தி. ஜானகிராமன், லா.ச.ரா, கி.ரா, சா. கந்தசாமி , நீலபத்மநாதன் ஆகியோரின் படைப்புகளையும் வாசகர் வட்டத்தின் வெளியீடுகளில்தான் படித்திருந்தேன். 

அவற்றின் முகப்பு அனைத்தும் ஒரே விதமாகவும் எளிமையாகவும் அதேசமயம் கச்சிதமாகவும் இருக்கும். அவ்வாறே எமது சங்கத்தின் கூட்டுறவுப்பதிப்பகத்தின் நூல்களின் முகப்பினையும் வடிவமைக்கவேண்டும் என்று பிரேம்ஜி விரும்பினார்.  

எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இலங்கை வானொலி கலையகத்திற்கு அருகில்  அமைந்திருந்த அரசாங்க கட்டிடத்திணைக்களத்தில் பட வரைஞராக பணியாற்றிக்கொண்டிருந்தார். 


அத்துடன் அவரும் கோட்டோவியங்கள் வரைவதில் ஆற்றல் மிக்கவர்.   சாந்தனை தொடர்புகொண்டு எமது கூட்டுறவுப்பதிப்பக வெளியீடுகளுக்கான முகப்பினை வரைந்து பெற்றுக்கொண்டோம்.   அக்காலப்பகுதியில் அதன் தரம் சிறப்பாகவும் இருந்தது.  

தேர்ந்த வாசகர்களை தெரிவுசெய்து உறுப்பினர்களாக்கி, வருடம் ஒரு முறை மூன்று நூல்களை தருவதாக உறுதியளித்து  சந்தா திரட்டி எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தை வளர்த்தோம்.   காவலூர் இராஜரையின் ஒருவகை உறவு கதைத் தொகுதி  சாவகச்சேரியில் திருக்கணித அச்சகத்திலும் மேமன்கவியின் யுகராகங்கள் புதுக்கவிதைத் தொகுதி நீர்கொழும்பில் சாந்தி அச்சகத்திலும், செ. யோகநாதனின் மூன்று குறுநாவல்கள் அடங்கிய காவியத்தின் மறுபக்கம் யாழ்ப்பாணத்தில் செங்கை ஆழியானின் பொறுப்பிலும்   அச்சாகியது.  

மல்லிகை ஜீவா, இந்நூல்களுக்கான வெளியீட்டு அரங்கை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்


ஒழுங்கு செய்துவிட்டு தெரிவித்தார். நானும் மேமன்கவியும் யாழ்ப்பாணத்திற்கு காலை யாழ்தேவியில்  புறப்பட்டோம். அன்றைய தினத்தையும் மறக்கமுடியாது. 

அவ்வேளையில்தான் மரைக்கார் ராமதாஸின் கோமாளிகள் திரைப்படம் வெளியாகியிருந்தது.  ராமதாஸின் கலைக்குழுவினரும் எம்முடன் பயணித்தார்கள்.  அவர்களின் கலைநிகழ்ச்சி அன்றைய தினம் மாலை  கிளிநொச்சியில் ஏற்பாடாகியிருந்தது. 

பொப்பிசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ மனோகரன், உபாலி செல்வசேகரன், நடிகை மணிமேகலை


ஆகியோருடன் ராமதாஸ் தமது மனைவி குழந்தையுடன் வந்திருந்தார். அன்று தவழும் பருவத்திலிருந்த குழந்தை நாகப்பிரியாவுக்கு தற்போது சென்னையில்  பேரக்குழந்தைகளும் இருக்கலாம்.  

ராமதாஸ் கொழும்பில் பிரேம்ஜியின் வீட்டுக்கு பக்கத்தில் குடியிருந்தவர்  கொழும்பு கொம்பனித்தெருவில் கொலனியல் மோட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவாறே மேடை, வானொலி நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார்.  

இலங்கையில் தமிழ் த்திரைப்படங்களை தயாரிப்பதிலிருக்கும் சிரமங்களையும் சவால்களையும் அவர் அன்று அந்த ரயில்பயணத்தில் விபரித்தார். ஏ.ஈ. மனோகரனை ரயிலில் வந்த பயணிக்கள சூழ்ந்துகொண்டு பாட்டுப்பாடச்சொன்னார்கள்.   

அவரும் அவர்களை உற்சாகமூட்டி  பாடினார்.  அந்தப்பயணம் குதூகலமாக அமைந்தது. மல்லிகை இதழுக்காக கோமாளிகள் திரைபட விளம்பரமும் பெற்று ஜீவாவுக்கு கொடுத்தேன்.  அத்துடன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சிங்கள மூத்த எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்காவுக்காக மல்லிகை சிறப்பிதழ் வெளியிட்டபோது, ராஜாங்க அமைச்சின் செயலாளர் சரத் அமுனுகமவை நேரில் சந்தித்து மார்டின் விக்கிரமசிங்காவின்  மகள்  தெகிவளையில் நடத்திக்கொண்டிருந்த அச்சகத்தின் விளம்பரமும் பெற்றுக்கொடுத்தேன்.  

இவ்வாறு சங்கத்துக்கும் கூட்டுறவுப்பதிப்பகத்திற்கும் வேலைசெய்துகொண்டே மல்லிகை ஜீவாவுக்கும்


சேவை செய்ய நேர்ந்தது. சில சமயங்களில் பஸ்போக்குவரத்துக்கு நான் சிரமப்படுவதை பார்க்கும் ஜீவா, எனது  சேர்ட்  பொக்கட்டில் இரண்டு ரூபாவை திணித்துவிட்டுச்செல்வதுமுண்டு. அச்சமயத்தில் அவரும் தெருத் தெருவாக அலைந்து மல்லிகைக்கு சந்தா சேர்த்தார்.  

ஜீவா அவ்வாறு எனக்கு இரண்டு ரூபா தரும்போது,  எனது பாட்டி சொல்லும் மூதுரைதான் நினைவுக்கு வரும். பிச்சை எடுக்குமாம் பெருமாள் , அதை பிடுங்கித்தின்னுமாம் அநுமார்.  யாழ்ப்பாணத்தில் நடந்த எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தின் நூல்களின் வெளியீட்டு நிகழ்வுக்கு காவலூர் இராஜதுரையும் செ. யோகநாதனும் வரவில்லை.   

செ.யோகநாதன் பூநகரியில் உதவி அரசாங்க அதிபராக இருந்தார்.  காவலூர் தமது பொன்மணி திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் மூழ்கியிருந்தமையால் வரமுடியாது போய்விட்டது. பொன்மணி   படத்தின்     இயக்குநர்    தர்மசேன  பத்திராஜா             மற்றும்   அதில் நடித்த   டொக்டர் நந்தி  -  பொறியிலாளர்    திருநாவுக்கரசு  -  திருமதி சர்வமங்களம்   கைலாசபதி  -  மௌனகுரு  -  சித்திரலேக   மௌனகுரு  - கமலா தம்பிராஜா   -


சுபாஷினி   ( திரைப்பட நடிகை)  முதலானோருடனும்   ஒளிப்பதிவாளருடனும்   யாழ்             குடாநாட்டில்     படப்பிடிப்பு   வேலைகளில்  அவர் மூழ்கியிருந்தார். தனது    சிறுகதைத் தொகுதியை  நாம்  எப்படியும்  அச்சிட்டு வெளியிட்டுவைப்போம்  என்ற  திடமான  நம்பிக்கை அவரிடம் இருந்தமையால்தான் அவர்   வீரசிங்கம்   மண்டபத்தின்   பக்கமே வரவில்லை  என்றும் பொன்மணி  திரைப்படவேலைகளில்    தான்உடனிருந்தால்தான்    இயக்குநருக்கும்    நடித்தவர்களுக்கும்   உற்சாகத்தை தரும்   என்றும்   பிறிதொரு  சந்தர்ப்பத்தில்   சொன்னார்.   

பிரேம்ஜி  ஏனையோரின் நூல்களை வெளியிடுவதற்கு தனது நேரத்தை அதிகம் செலவிட்டார். ஆனால், அவரது நூல் பிரேம்ஜி கட்டுரைகளை வெளியிடுவதற்கு பின்னாளில் பல சிரமங்களையும் நோக்கினார் என்பதும் கசப்பான செய்தி. அதனை  கனடாவில்  நான்காவது பரிமாணம் இதழ் ஆசிரியர் க. நவம் கணினியில் பதிவுசெய்து, 2007 இறுதியில் நான் கனடா சென்றபோது என்னிடம் அதன் இறுவட்டை தந்துவிட்டார். அதனை சென்னையில் தோழர் தாமரை மகேந்திரனிடம் சேர்ப்பித்தேன்.  

எனினும் அந்த நூல்  பின்னர் நீண்ட தாமதத்தின் பின்னர்தான் கனடாவில் வெளியானது.   பிரேம்ஜியின்


உந்துதல்தான் வீரகேசரி பிரசுரங்கள் வெளிவருவதற்கும் பின்னணியிலிருந்தது. வீரகேசரி பொதுமுகாமையாளர் எஸ். பாலச்சந்திரன்  நிருவாகத்தின் மேலிடத்துடன் உரையாடி வீரகேசரி பிரசுரமாக மாதம் ஒரு நாவல் வெளியிடும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பாலச்சந்திரன் பிரேம்ஜியின் நெருங்கிய உறவினர். இது  எனக்கும் தெரியாது. ஆனால்,  பிரேம்ஜி அதனை என்றைக்கும் என்னிடத்தில் சொன்னதுமில்லை.  வடபகுதிக்கான ஒரு ரயில்பயணத்தில்தான் அவர்கள் இருவரும் புத்தக வெளியீடு தொடர்பாக ஆலோசித்துள்ளனர். 

வீரகேசரி பிரசுரம், அக்காலப்பகுதியில் இருந்த அரசின் முற்போக்கான திட்டங்களினால், பல  நாவல்களை வெளியிட்டு ஈழத்து எழுத்தாளர்களுக்கு சன்மானமும் வழங்கியது. தென்னிந்திய வணிக இதழ்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டினால், இலங்கையில் பல  இலக்கிய இதழ்கள் வெளிவந்தன.  நூல் வெளியீடுகள் இடம்பெற்றன. இந்த விபரங்களை நீங்கள் நூலகம் ஆவணகத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். 


ஆனால், அன்று எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தீர்க்கதரிசனமான பணிகளை கடுமையாக விமர்சிக்கவும் ஒரு கூட்டம் இருந்தது.  நாம் அறிவுக்குத் தடைபோடுகிறோம் என்று மேடைகள் தோறும் கண்டித்தார்கள்.  வீரகேசரி பிரசுரங்கள் -  ஒரு  பொது மதிப்பீடு  என்ற நூலை            ( தற்போது கனடாவில் வதியும்  ) பேராசிரியர்  சுப்பிரமணிய அய்யரும் விரிவான நூல் எழுதியுள்ளார்.  கோகிலம் சுப்பையா,  செங்கை ஆழியான், டானியல்,  தெணியான்,  சொக்கன், வ. அ. இராசரத்தினம், அ. பாலமனோகரன்,  அருள் . சுப்பிரமணியம்,  ஜோன்ராஜன்,  கே.ஆர் டேவிட், நா. பாலேஸ்வரி, தாமரைச்செல்வி, அன்னலட்சுமி இராஜதுரை, செ. கதிர்காம நாதன், தெளிவத்தை ஜோசப், கமலா தம்பிராஜா உட்பட பலரது நாவல்களை நாம் வீரகேசரி பிரசுரத்தின் ஊடாக கண்டிருக்கின்றோம். 

1977 இல் தார்மீக சமுதாயம் அமைக்கப்போவதாக வந்த ஜே.ஆர் ஜெயவர்தனாவின் அரசு


அனைத்தையும் கவிழ்த்துக்கொட்டி திறந்த பொருளாதாரம் என்று ஏதோவெல்லாம் செய்யத் தொடங்கியது. 1977 – 1981 – 1983 ஆகிய வருடங்களில் நாம் ஜே.ஆர். கண்ட தார்மீக சமுதாயத்தின் இலட்சணத்தை பார்த்தோம்தானே..?  இந்தப்பதிவில் இடம்பெற்ற பலர் இன்றில்லை.  அவர்கள் பற்றிய அஞ்சலிக்குறிப்புகளை எழுதி எழுதித்தான் அவர்களுடன் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். ( தொடரும் )  letchumananm@gmail.com 


No comments: