மழைக்காற்று - ( தொடர்கதை ) அங்கம் 59 முருகபூபதி


தமயந்தி, மகன் உதயசங்கரை அழைத்துச்செல்ல வந்தபோது,  அவன் தன்னிடத்தில் சொன்ன   கனவுபற்றி சொல்லுவோமா..? என்றும் அபிதா ஒரு கணம் யோசித்தாள். 

தாயிடம் அதுபற்றி சொல்லவேண்டாம் என்று அவன் கெஞ்சியிருக்கையில், சொல்வது தவறு,  பிஞ்சுமனதில் வாக்கை மீறும் எண்ணங்களை விதைப்பது மகா தவறு என்ற தீர்மானத்துடன், களைத்து திரும்பியிருந்த தமயந்திக்கு தண்ணீரும் அருந்தக்கொடுத்துவிட்டு,  “ ரீயா…? கோப்பியா..? ஏதும் குளிர்பானமா..?   “ என்று அபிதா கேட்டாள்.  

“ தண்ணீரே போதும் அபிதா.  டேய் வாரியா போவோம்.  இனிப்போய்த்தான் சமைக்கவும் வேணும்.  “   தொலைக்காட்சியில் கார்டுன் பார்த்துக்கொண்டிருந்த மகனை தமயந்தி தட்டி எழுப்பினாள். 

“  பிளீஸ் அம்மா.. கொஞ்சம் பொறுங்களேன்.  உங்களுக்கு அவசரம் என்றால் போங்கோ… நான் பிறகு வாரன்.   “    “  இல்லை… இல்லை… வீட்டுப்பாடம் எல்லாம் இருக்கு.  ஸ்கூல் இல்லை என்பது உனக்கு


ஒரு சாட்டாகிப்போச்சுது… எழும்பு… எழும்பு… “ தமயந்தி அவனை துரிதப்படுத்தினாள்.  

“ சரி… சரி… விடுங்க.  இன்னும் சில நிமிடங்களில் அந்த கார்டுன் முடிந்துவிடும்.  நீங்க வாங்க , வந்து இருங்க…. “ அபிதா, தமயந்தியை அழைத்துச்சென்று சமையலறை மேசைக்கு அருகில் ஆசனத்தை இழுத்துப்போட்டு அமரச்செய்துவிட்டு, கேத்திலில் தண்ணீர் கொதிக்கவைத்தாள்.  

“ தமயந்தி… எனக்கு ஒரு உதவி.. உங்களுக்கு ஒரு அண்ணன் அவுஸ்திரேலியாவிலிருக்கிறார் என்று சொன்னீங்கதானே…?  அவர்  இங்குள்ள பேப்பர்களிலெல்லாம் கதை, கட்டுரை எழுதுபவர் என்றும் முன்பு ஒரு தடவை சொல்லியிருந்தீங்க… நானும் படித்திருக்கிறேன்.  ஜீவிகாவும் சொல்லியிருக்கிறா… அவை வெளியான பழைய பேப்பர்களை கொடுத்துவிட்டோம்.  

எனக்கு அவருடைய போன் நம்பரும், அவருடைய மின்னஞ்சலும் தெரிந்தால் அதனையும் தரமுடியுமா..?  “ அபிதா கேட்டதும்,  “ வெரி சொறி அபிதா, அவருடைய டெலிபோன் இலக்கம்தான் இருக்கிறது. வேண்டுமென்றால் தாரன்.  

அவர்தான் இடைக்கிடை வைபர், வாட்ஸ் அப்பில் எடுக்கிறவர். நானும் ஏதும் அவசரம் என்றால் மாத்திரம் அவருக்கு எடுப்பேன். நேரங்களும் வித்தியாசம்தானே… ஒரு நாள் அங்கத்தைய நேரம் நடுச்சாமத்தில் எடுத்துப்போட்டு நல்லா ஏச்சும் வாங்கிக்கட்டியிருக்கிறன்.  


ஒரு மிஸ்கோல் கொடுக்கிறன். அண்ணர்  எடுப்பார். தாரன் நீங்களே பேசுங்க… “   தமயந்தி தனது கைப்பையைத் திறந்து கைத்தொலைபேசி எடுத்து அவுஸ்திரேலியா அண்ணனுக்கு  மிஸ்கோல் கொடுத்துவிட்டு அணைத்தாள்.   “ மாமா, திருப்பி எடுக்க நேரமாகும் அம்மா. 

அதுவரைக்கும் நான் கார்ட்டுன் பார்க்கிறனே…. “ என்று உதயசங்கர் குரல் கொடுத்தான்.  அதனைக்கேட்டு தமயந்தியும் அபிதாவும் சிரித்தனர்.  “ பார்த்தீங்களா அபிதா.. இந்த வாண்டுப்பயல் எப்போதும் இப்படித்தான். ரீ.வி.யில்தான்  கண்ணிருக்கும், ஆனால், காது எலிக்காது.  “ என்றாள் அபிதா. “  அவனை விடுங்க தமயந்தி. அவனுக்கும் பொழுது போகத்தானே வேண்டும்.  அடுத்த தடவை கொழும்பு போகும்போது, அவனையும் கூட்டிப்போகட்டுமா… அந்த ரி.வி. ஷோ ஒளிப்பதிவு செய்வதை பார்க்கவேணுமென்கிறான். 

அதுதான் என்னுடைய அபிதா அறுசுவை நிகழ்ச்சி.. “   “ ஏன்… இவனும் சமையல் கற்றுக்கொள்ளப்போகிறானா…?  சரி பார்ப்போம்.  நானும் வரலாமா அபிதா. எனக்கும் பார்க்க விருப்பம்தான். அடுத்தது எப்போது..?  “ தமயந்தி ஆர்வத்தோடு கேட்டாள்.  “ எனக்கு கோல் வரும்.  இப்போது இந்த கொரொனாவால் பல நிகழ்ச்சிகளில் மாற்றம் வந்துவிட்டதாம். கோல் வந்ததும் சொல்கிறேன்.  அந்த நேரம் நீங்களும் சங்கரும் ஃபிரியா இருந்தால் சரி.  

“  “  அபிதா,  கேட்கவேண்டும் என்றிருந்தேன். இந்த வீடு விசயம் என்னவாயிற்று.  யாருக்கும் முற்றாகிவிட்டதா..?  “ தமயந்தி கண்களை சுழற்றி ,  வீட்டை பார்த்தவாறு கேட்டாள். சுவரில் படமாக


காட்சியளிக்கும் வீட்டின் பூர்வீக சொந்தக்காரி ராஜேஸ்வரி ,  தன்னைப் பார்த்து சிரிப்பதை கண்டு முகத்தை திருப்பினாள். அபிதா உதட்டை பிதுக்கினாள்.    

“ ஒரு முடிவும் வரவில்லை.  தினமும் வீட்டை துப்பரவு செய்து ஊதுவத்தி கொளுத்திவைப்பதிலேயே எனக்கு பொழுது போய்விடுகிறது.  அந்த லண்டன்காரரும் அடிக்கடி கோல் எடுத்து கேட்பார். ஆனால், அவருடைய மகள் அந்த தர்ஷினி மாத்திரம் இப்போது எடுப்பதில்லை. 

அன்றைக்கு என்னோடு வீணாக கொழுவிக்கொண்டா. நல்லா நாலுகேள்வி கேட்டேன். அதுக்குப்பிறகு அவ கப்.. சிப்…. “ தனக்கும் தர்ஷினிக்கும் இடையில் வெடித்த மோதலை தமயந்தியிடம் அபிதா விபரித்துக்கொண்டிருந்தபோது, தமயந்தியின் கைத்தொலைபேசி சிணுங்கியது. மறுமுனையில் அவளுடைய அண்ணனின் அழைப்பு அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தது.  

அண்ணன் நிகும்பலையூர் கொரோனா புதினங்களை விசாரித்தார்.  எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் இருக்குமாறு சொல்லிக்கொண்டிருந்தார்.  சவூதியிலிருக்கும் மச்சானுடனும்  தான் அடிக்கடி  பேசிக்கொண்டிருப்பதையும் சொன்னார். அபிதா, அவர்கள் பேசுவதைக்கேட்டுக்கொண்டு,  தன்னிடமும் அவரை பேசச்சொல்லுமாறு  தமயந்தி கேட்கவேண்டும் என்று மனதிற்குள் வேண்டினாள். 

 தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் அபிதாவை ஒரு கணம் திரும்பிப்பார்த்துவிட்டு,  “ அண்ணா… ஒரு செக்கண்ட்… இங்கே நான் இப்போது அபிதா… உங்களிடம் சொல்லுவேனே… அவவின்ர வீட்டில் நின்றுதான் பேசுறன்.  

அவவுக்கு உங்கட மின்னஞ்சல் வேணுமாம்… எதுக்கும் நீங்களே பேசுங்க….”  தமயந்தி, கைத்தொலைபேசியை தனது சேலை முந்தானையில் துடைத்துவிட்டு கொடுத்தாள்.  “ அங்கிள் வணக்கம்.  நான் அபிதா… உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறன்.  

உங்களுடைய கதைகளும்   படித்திருக்கிறேன்.  உங்களுடைய மின்னஞ்சல் தேவைப்படுது. தாரீங்களா… ?   “  “ சொல்கிறேன். குறித்துக்கொள்ளுங்க….அல்லது, தமயந்திக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புகிறேன். வாங்கி எழுதிக்கொள்ளுங்க.  

“    “ பரவாயில்லை அங்கிள்.  நீங்களே சொல்லுங்க… எழுதிக்கொள்கிறேன்.   “  தமயந்தியின் அண்ணன்  ஒவ்வொரு எழுத்தாகச்சொல்லச்சொல்ல, அபிதா தனது டயறியில் குறித்துக்கொண்டாள்.  “ அபிதா.. நீங்கள் முகநூல் கணக்கு வைத்திருக்கீங்களா… ?  “  “ இல்லை அங்கிள்.  எனக்கு விருப்பம் இல்லை.  

நான் இன்றைக்கே ஒரு மின்னஞ்சல் அனுப்புறன்.  பார்த்துவிட்டு பதில் எழுதுங்க. தேங்ஸ் அங்கிள்.  “  மீண்டும் கைத்தொலைபேசியை தமயந்தியிடம் நீட்டினாள்.  “ சரி அண்ணா…அங்கே எல்லாம் கட்டுப்பாட்டில்தானே..? இங்குதான் வர வர நிலைமை மோசம்.  

தினமும் இரவில் ஊரடங்கு.  இம்முறை  நவராத்திரி திருவிழாவும் இல்லை. ரதங்களும் போகவில்லை.   “   சிறிது நேரத்தில் தமயந்தியும் மகனும்  அபிதாவிடமிருந்து விடைபெற்றனர். மகன் செல்ல மனமின்றி, முகத்தை நீட்டிக்கொண்டு,  திரும்பியும் பார்க்காமல் வாசலுக்குச்சென்றான்.  

“ தமயந்தி… அவன் பாவம்… நளைக்கு அனுப்பிவிடுங்க.  வரும் போது வீட்டுப்பாடங்களையும் எடுத்துவரட்டும். நான் சொல்லிக்கொடுக்கிறன்.  ஹலோ பெரியவர்… மூஞ்சிய நீட்டாமல் போம்.  நாளைக்கு வரலாம்.   

“  உதயசங்கர் சிரித்தவாறு அபிதாவுக்கு கையசைத்துக்கொண்டு சென்றான்.  அபிதா கேட்டருகில் வருவதற்கு எத்தனித்தபோது, “ அன்ரி… நீங்கள்  நில்லுங்கள். நான் கேட்டை மூடிக்கொண்டு போறன் “  என்றான்.  அவனது முகத்தில் கண்ட பரவசத்தால் அபிதா நெகிழ்ந்தாள். இவனுக்கு அப்படி என்னதான் நான் செய்துவிட்டேன்.  

இப்படி ஒட்டிக்கொண்டானே. அபிதா வாசல் கதவை சாத்திவிட்டு, தனது அறைக்குச்சென்று மடிக்கணினியை திறந்தாள். அவளது மின்னஞ்சலுக்கு  சுபாஷினியின் திருமண அழைப்பிதழ் வந்திருந்தது.   பொருத்தமான வாழ்த்து மடலை இணையத்தில் தேடி எடுத்து, பதிலுடன் இணைத்து அனுப்பினாள். தன்னால் வீட்டை விட்டுவிட்டு வரமுடியாது.  

நாட்டு நிலைமை சீரடைந்ததும் புதுமணமக்கள் நிகும்பலையூருக்கும் வரவேண்டும். தனது கையால் விருந்து படைத்து உபசரிக்கவேண்டும் என்றும் எழுதினாள். கைத்தொலைபேசியை எடுத்து சுபாஷினியை தொடர்புகொண்டு, அழைப்பிதழ் வந்த செய்தியையும்  தனது வாழ்த்து மடலை பார்க்குமாறும் சொன்னாள்.  “ தேங்ஸ் அபிதா.  என்ன செய்வது..?   அம்மா அவசரப்படுறாங்க…  அதுக்கு அவுங்கட சுகவீனமும் ஒரு முக்கிய காரணம். தற்போது நீண்டநேரம் பேசமுடியாது அபிதா.  

கலியாண வேலைகள் இருக்கு.  நாட்டு நிலைமைகளினால் கண்டியிலிருந்து  மஞ்சுவோ, நீங்களோ, ஜீவிகாவோ, யாழ்ப்பாணத்திலிருந்து கற்பகம் ரீச்சரோ வரமுடியாதிருப்பதுதான் பெரிய கவலை.  எல்லோருடைய வாழ்த்தும் எனக்கு கிடைக்கவேண்டும். முக்கியமாக உங்கட அபிதா.  நான் உங்களை மிகவும் மிஸ்பண்ணுறன்.  பாருங்க இறுதியில் என்ற கலியாணம் இந்த நெருக்கடியான காலத்தில்தான் நடக்கவேண்டியதும் விதியாகிப்போச்சுது.  

“ சுபாஷினி விசும்பிக்கொண்டு சொன்னதும், அபிதா தேறுதல் சொன்னாள்.   “ கலியாணப்பெண் அழக்கூடாது. சந்தோசமாக இருக்கவேண்டிய நேரம் சுபா.  எல்லோரையும் கேட்டதாகச்சொல்லும்.  மஞ்சுவையும் பேசச்சொல்லுறன்.  அவளின்ட கலியாணமும் கெதியா முடிந்தால் நல்லது.  இனி எல்லாம் நன்றாக நடக்கும் மஞ்சு. இருந்து பாரும் உம்முடைய கலியாண காட்சியை கண்டதும் உம்முடைய அம்மா உஷாராக எழுந்திடுவா. 

அடுத்து உம்மட தம்பிக்கும்  மஞ்சுவுக்கும் நடக்கவேணும்.  அதுக்காக பிரார்த்திக்கின்றேன். கண்ணை துடைச்சுக்கொண்டு பார்க்கவேண்டிய அலுவல்களை பாரும்.   “ அபிதா, சுபாஷினியை உற்சாகப்படுத்திவிட்டு கைத்தொலைபேசியை அணைத்தாள். அணைத்த மறுகணம் லண்டனிலிருந்து சண்முகநாதன் இணைப்பில் வந்தார்.   

“  என்ன அபிதா… நீண்டநேரமாக உன்னை தொடர்புகொள்ளப்பார்க்கிறேன்.  நீயும் இப்போது மிகவும் பிஸியாகிவிட்டியோ….  “  அவரது குரலில் தொனித்த எகத்தாளம் அபிதாவுக்கு எரிச்சலூட்டியது.   “  எங்கட சுபாஷினிக்கு கலியாணம் வருது.  அவள்தான் பேசிக்கொண்டிருந்தாள் அய்யா. வெரி சொறி.  சொல்லுங்க…. அதுக்குப்பிறகு வீடு பார்ப்பதற்கு எவரும் வரவில்லை அய்யா.  

நீங்க சொல்வதுபோலத்தான் வீட்டை எப்போதும்  கூட்டித்துப்பரவாக்கி வைத்திருக்கிறன் . இப்போது சமைப்பதும் குறைவு.  நானும் ஜீவிகாவும் மாத்திரம்தானே… அதனால் சமையலறையும் எப்போதும் கிளீன்தான் அய்யா…  “   “  அதற்காக பட்டினி கிடந்திட வேணாம்.  

அபிதா… இன்றைக்கு என்ன நாள் என்பது தெரியும்தானே..?   “ “ ஓம் அய்யா. நல்லா  ஞாபகம் இருக்கிறது. கலண்டரிலும் குறித்துவைத்திருக்கிறேன்.  அம்மாவுடைய தினம்.  படையல் போடவேணும். அவ்வளவுதானே… அதுக்குத்தான் தயாராகின்றேன்.  

நீங்கள் எதற்கும் யோசிக்காதீங்க அய்யா.  இங்கே கொரோனா பிரச்சினை படிப்படியாக கூடிவிட்டது.  அம்மாவுக்கு படைத்துவிட்டு,  இரண்டு மூன்று சாப்பாட்டுப்பார்சலை எடுத்துக்கொண்டு பிச்சைக்காரர்களைத்தான் தேடிப்போக முடியாது.  

இங்கே இப்போது பிச்சைக்காரர்களும் வீடு தேடி வந்து பிச்சை எடுப்பதும் குறைந்துவிட்டது அய்யா.  இனி அவுங்களும் முகத்தில்  மாஸ்க் போட்டுக்கொண்டுதான் அலையவேண்டும்.  பணக்காரர் முதல் ஏழைகள் வரையில் இன்றைக்கு அதுதான் பிரதான தேவை.  

ஜனாதிபதியும் மாஸ்கோடதான் இருக்கிறார். தெருக்குப்பை எடுக்க வரும் முனிஸிப்பல் வேலைகாரர்களும் மாஸ்கோடதான் வாராங்கள். காலம் எப்படி மாறிப்போய்விட்டது பார்த்தீங்களா  அய்யா….  “ சண்முகநாதன் மறுமனையிலிருந்து சிரித்தார். 

“ உன்னைப்பேசவிட்டால் பேசிக்கொண்டேயிருப்பாய்.   சரி… சமையலுக்கு ஆயத்தம் செய்து அம்மாவின் படத்துக்கு படையல்போட்டுவிட்டு, காகத்துக்கும் வைச்சிடு.   மறந்திடாதை சரியா.. “ “ ஓம் அய்யா. காகங்கள் மாஸ்க் போடுவதில்லை. அதுகளுக்கு பிரச்சினை இல்லை  “    “ நல்லது உனது ஜோக்கிற்கு கொஞ்சம் சிரிக்கிறன். “  அபிதா,  சுவரில் மாட்டியிருக்கும் சண்முகநாதனின் மறைந்துவிட்ட மனைவியின் படத்தை பார்த்து சிரித்தாள். 

“ அம்மா… உங்கட உத்தம புருஷன்தான்.  உங்களுடைய மறைவு தினம் இன்றாம். லண்டனிலிருந்து நினைவுபடுத்துறார்.  உங்களுக்கு படையல் போடட்டுமாம்.  நீங்கள் சாப்பிடமாட்டீங்க என்பது தெரியும். அதனால் பிதிர்களுக்கு கொடுக்கட்டுமாம்.  இந்த வீட்டைச்சுற்றிப்பறக்கும் காகங்களில் ஒன்றாக நீங்களும் பிதிராகியிருப்பீங்களா அம்மா.  உங்களுக்கு என்ன என்ன பிடிக்கும் என்பது எனக்குத் தெரியாது அம்மா.  ஆனால், என்னைப்பெற்று வளர்த்த என்ர  அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என்பது தெரியும்.  அவவுக்கு  சாம்பார் சாதம் மிகவும் விருப்பம்.  

அதற்கு மிளகாய், பப்படப்பொரியலும் வேண்டும். இன்றைக்கு அதனையே செய்யிறன்.  உங்கட உத்தம புருஷனின் கோல் முதலிலேயே வந்திருந்தால்,  வீட்டுக்கு வந்திருந்த தமயந்தியையும் அவவின்ர மகனையும் மறித்திருக்கலாம்.  அம்மா மன்னித்துக்கொள்ளுங்கள். நான் உண்மையிலேயே மறந்துவிட்டேன். அய்யாவுக்கு சும்மா பொய்க்கு நினைவிருக்கிறது. 

கலண்டரில் குறித்து வைத்திருக்கிறேன் என்று சொன்னேன். நீங்கள் கோவிக்காதீங்க, சரியா அம்மா.... “   வெறிச்சோடிப்போயிருக்கும் வீட்டில் அபிதாவுக்கு ,  சுவரில் தொங்கும் படத்தில் மாறாத புன்னகையுடன் காட்சிதரும் ராஜேஸ்வரி மாத்திரம்தான் தற்போதைக்கு பேச்சுத்துணை.  சமையலைச்செய்துவிட்டு, குளித்து முழுகிவந்து கூந்தல் ஈரம் சொட்டச்சொட்ட படையலை ஒழுங்குசெய்த அபிதா, சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்தாள். 

அவளது குழந்தை தியானத்துக்குள் வந்து சிரித்தாள்.  “ எனக்கு படையல் இல்லையாம்மா..? “  என்று கேட்பது போலிருந்தது.  திடுக்கிட்டு கண்விழித்தாள். விழியோரங்களில்  கசிந்திருந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு எழுந்து, வீட்டின் பின்புறம் காகங்களுக்கு படையலை பிசைந்து வைத்துவிட்டு,  “ கா… கா… கா…“ – குரல் எழுப்பினாள்.  ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக நான்கு ஐந்து என்று காகங்கள் வந்து கரைந்தவாறு தத்தம் பங்கினை உண்பதை அபிதா பார்த்து ரசித்தாள். 

உள்ளே வந்து ராஜேஸ்வரியின் படத்தை பார்த்துக்கொண்டே தானும் சாப்பிட்டாள்.    “  அம்மா… இதுதான் இந்த வீட்டில் நான் உங்களுக்குப்போடும் கடைசிப்படையல் அம்மா.  இந்த வீட்டை விற்கப்போகிறார்கள். அதன் பிறகு நான் எங்கே… உங்கள் படம் எங்கே இருக்கும் என்பது தெரியாது…. நீங்கள் ஆசையோடு வாங்கி, பார்த்து பார்த்து திருத்த வேலைகள் செய்த வீடு என்று அய்யா அடிக்கடி சொன்னார்.  நீங்களும் போய்விட்டீங்க… அய்யாவும் லண்டனோடு போய்விட்டார்.  

இங்கே  உங்கள் பெறாமகள் ஜீவிகாவுடன்  இருந்தவர்களும்  ஒவ்வொருத்தராக காலியாணம் காட்சி, தொழில், இடமாற்றம் என்று போய்விட்டாங்க…. இப்போது இங்கே எஞசியிருப்பது நானும் ஜீவிகாவும்  சுவரில் நகரும் பல்லிகளும்,  மறைந்து மறைந்து ஓடித்திரியும் எலிகளும்,  இடைக்கிடை குளியலறையில் எட்டிப்பார்க்கும் கரப்பான் பூச்சிகளும், வீட்டை சுற்றிப்பறக்கும் காகம் குருவிகளுமதான் அம்மா…. எங்கிருந்தோ இங்கே வந்து,   நீங்கள் நேசித்த வீட்டையும் பராமரித்து, உங்களுக்கு படையல் போட்டுக்கொண்டிருக்கிறன் .  

இந்தக்கதைகளையெல்லாம் என்னுடைய டயறியில்தான் எழுதிவைக்கலாம்.  எனக்குப்பிறகு அந்த டயறியை யார்தான் பார்க்கப்போகிறார்களோ..? என்னம்மா…? நான் சொல்றது..? “ அபிதா ஆயாசத்துடன் எழுந்தாள். ( தொடரும் )  


No comments: