அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 38 –நாழிமணி, பாரிமணி, கைமணி, கொத்துமணி – சரவண பிரபு ராமமூர்த்தி


நாழிமணி, பாரிமணி, கைமணி, கொத்துமணி – கஞ்சக்கருவிகள் நாழிமணி: வென்கலத்தால் ஆனது நாழிமணி. ஒரு நாழி நெல் பிடிக்கும் அளவுடையது. 
கனமாக இருக்கும். 

வீரசைவ மரபைச் சார்ந்த தெலுங்கு பேசும் கண்ட ஜங்கம் என்கிற சமூக மக்கள் இதை இசைப்பார்கள். நாழிமணிக்காரர் ,நாழிக்காரர், சித்தேச பண்டாரம், மணியாட்டிக்காரர், சித்தூசி பண்டாரம் ஆகிய பெயர்களும் இவர்களுக்கு உண்டு. 

இச்சமூகத்தினர் திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் குறைந்த அளவில் வசிக்கிறார்கள்.  இவர்கள் சைவ பாடல்கள், நெல் பாடல் ஆகிவற்றைப் பாடி நெல்லை யாசகமாக பெறுவர். 

அறுவடை மாதங்களில் இவர்கள் ஊர்களுக்கு யாசகம் பெற வருவர்(பட்டிக்கு போதல்). வெள்ளையான நீள அங்கியை அணிந்திருப்பார்கள். தலையில் வெள்ளைத் தலைப்பாகை அதில் பித்தளை சூரிய/சந்திர பிறை இருக்கும். 

பிறையின் நடுவில் மயிலிறகு செருகப்பட்டிருக்கும். தோளில் நெல்லை வாங்குவதற்கு பெரிய


பையை வைத்து இருப்பார்கள். இன்னொரு கையில் கம்பு இருக்கும். கையில் வைத்திருக்கும் மணியை ஆட்டிக் கொண்டே வீடு வீடாகப் போவார்கள். 

வீட்டு வாசலில் நின்று மணியை ஆட்டியவாறு பாடத் தொடங்குவார்கள். அந்தப் பாடல் வாழ்த்துவது போலிருக்கும். ‘பொலி பெருக… பட்டி பெருக… களம் பொலிக…’ என்று, எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும்; குடியானவர்களுக்கு நல்ல மகசூல் காண வேண்டும் என அவர்கள் வேண்டுவது கேட்பவர்களுக்கு மன நிறைவு தரும். நெல் கொண்டு வந்தால் நாழி அளவு நெல் பிடிக்கும் மணியைக் கவிழ்த்துப் பிடித்து இரு தடவைகள் நெல்லை வாங்கிக் கொள்வார்கள். 

நெல்லுக்கு பதில் பணமும் பெறுவர்.  நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக்கட்டியினால் அந்த வருடத்தைக் குறிக்கும் அடையாளக் குறியை கிறுக்கி விட்டுப் போவார்கள். இதை காணும் அடுத்து வரும் நாழிமணிக்காரர் திரும்பவும் அவ்வீட்டில் யாசகம் வாங்க மாட்டார். 


இவர்கள் தெலுங்கு பேசினாலும் தமிழில் தான் இவர்கள் பாடும் பாடல் இருக்கின்றது. இவர்கள் பாடும் நெல் பாடலில் அழிந்து போன நமது பாரம்பரிய நெல் வகைகளின் பெயர்களைக் காணலாம். திருச்செந்தூரில் இவர்களுக்கென்று பாத்தியப்பட்ட மடம் இருக்கிறது. 

தைப்பூசம், வைகாசி விசாகம், ஆவணிமூலம் ஆகிய நாட்களை ஒட்டி கிராமங்களில் பயணிப்பார்களாம். பிறகு திருச்செந்துர் மடத்திற்கும் கோவிலுக்கும் காணிக்கை செலுத்தும் வழக்கம் இவர்களிடத்தில் இருந்தது.   

நெல் பாடல்: அறிய நெல்லு பெரிய நெல்லு ஆனக்குருவ நெல்லு மிளகி  சிறு முளகி


நெல்லுல நாழி பெரு முளகி நெல்லுல நாழி குப்பிச் சம்பா டப்பிச் சம்பா டோரிச் சம்பா நெல்லுல நாழி சின்னச் சம்பா சீக்கிச் சம்பா சின்னமனூரு  சீரகச் சம்பா   வண்ணச் சம்பா சன்னச் சம்பா சோழவந்தான் டொப்பி சம்பா ஆங்குருவ நெல்லுமிளகி ஆடுதொடை நெல்லுல நாழி  ஐஆர் இருபது 20 நெல்லுல நாழி ஐஆரெட்டு நெல்லுல நாழி ஒண்டிச் சம்பா நெல்லுல நாழி உய்யகுண்டான் நெல்லுல நாழி  நீல வர்ண நெல்லுல நாழி நேரிச் சம்பா நெல்லுல நாழி  அன்னச் சம்பா சன்னச் சம்பா வரிகுருவ நெல்லுல நாழி  அத்தனையும் நெல்லம்மா பை நிறையப் போடம்மா பட்டி பெருக வேண்டும் பால் பானை பொங்க வேண்டும்  தற்காலத்தில் இவர்களுக்கு நெல் கொடுப்பவர்களும் இல்லை, இந்த நெல் வகைகளும் இல்லை. 


இன்று நாழிமணிக்கார்களும் அருகிவிட்டார்கள் நாழிமணியும் தனது இசையை நிறுத்திக்கொண்டது.  பாரிமணி: மிகப்பழமையானது பாரிமணி. தேக்கால் ஆன நீளமான ஒரு கட்டை. அதன் இருபுறமும் நன்கு நாதம் வெளிப்படுத்தும் கனமான மணிகள். மணியின் அகண்ட வாய்ப்பகுதி, ஓசையின் வீரியத்தை அதிகப்படுத்துவதற்காக சற்று நசுக்கப்பட்டுள்ளது. இதை இசைக்க நுட்பம் தேவையில்லை. 

தோளில் வைத்துக்கொண்டு நடந்தாலே நடைக்கேற்ப கணீர் ஒலி வெளிப்படும். இப்போது திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. இரவு பூசை முடிந்தபிறகு, கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பாரிமணி, பாரிமத்தளம், தாளம் இசைத்தபடி இசைக்கலைஞர்கள் ஊர்வலம் வருவர். 

இதற்கு ‘பாரிவலம்’ என்று பெயர். ‘பெருமாள் சயனமடைந்து விட்டார்’ என்ற செய்தியை


ஊருக்கு அறிவிப்பதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சி இது. அதன்பிறகே உறங்கச் செல்வார்கள். பாரி மத்தளத்தின் இசையும், பாரிமணி, தாளத்தின் கணீர் ஒலியும் திருவரங்கத்தின் வீதிகளின் இரவைச் சில்லிட வைக்கும். மணிக்கு நாத அமைப்பு முக்கியம். 

மேற்பகுதியோடு வளையமிட்டு இணைக்கப்பட்ட கனத்த நாக்கே நாதத்தின் வீரியத்தைத் தீர்மானிக்கும். பாரிமணியில் கனத்த நாக்கு இணைக்கப்பட்டுள்ளது.   பாரிவலம் போகும் முன்பாக பாரிமணிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இப்போது இக்கருவியை வெங்கடேசன் என்ற கலைஞர் இசைக்கிறார். ‘‘பல்லாண்டுகளாக நடந்துவந்த பாரிவலம் அண்மைக்காலமாக நடைபெறுவதில்லை’’ என்கிறார் வெங்கடேசன். 

‘‘கோயிலுக்கு கூட்டம் அதிகமாக வருவதால் நடை அடைக்க காலதாமதம் ஆகிறது. மேலும், தெருவில் நாய்கள் அதிகமாகி விட்டன. பாரிவலம் போகும்போது கடிக்க வருகின்றன. அதனால் இந்த வீதிவலம் நடப்பதில்லை.’’ என்கிறார்.  


கைமணி: இன்று கோவில்களிலும் வீடுகளிலும் நாம் பயண்ப்படுத்தும் மணியும் ஒரு இசைக்கருவி தான். கைமணி இசைப்பாருக்கு நிவந்தம் விட்ட செய்திகள் கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. 

மற்ற இசைக்கருவிகளுடன் சேர்த்து இது இசைக்கப்பட்டுள்ளது. திருவிடைமருதூரில் உள்ள 151 கல்வெட்டுகளில் 14 கல்வெட்டுகள் அங்கு நடைபெற்ற ஆடல், பாடல், இசை பற்றி பேசுகின்றன. முதலாம் பராந்தகச் சோழனின் 30 ஆட்சியாண்டு{கி.பி.937} கல்வெட்டு இக்கோயிலில் இருந்த வரகுண விடங்கர் என்ற உற்சவமூர்த்திக்கும், இசைக் கருவிகளை இசைத்த உவச்சர்களுக்கும் வழங்கப்பட்ட நில நிவந்தத்தைக் குறிப்பிடுகின்றது. இக்கோயிலில் நடைபெற்ற வைகாசித் திருவிழாவில் வரகுண விடங்கர் என்ற இறை மூர்த்தத்திற்கு மூன்று பொழுதிற்கும், மற்றும் பள்ளி எழுச்சி எழவும் இவ்வூர் உவச்சர்கள் (இசைக் கலைஞர்கள்) செண்டை நான்கும், கைமணி ஒன்றும், திமிலை ஒன்றும் வாசிக்க ஒப்புக்கொண்டனர்.  

செண்டை வாசிக்கும் நால்வருக்கு ஒரு வேலியும், திமிலை வாசிக்கும் நபருக்கு 1/2 வேலியும், கைமணி வாசிக்கும் கலைஞருக்கு 1/4 வேலியும் ஆக அறுவர்க்கும் மொத்தமாய் ஒன்றே முக்கால் வேலி நிலம் நிவந்தமாக வழங்கப்பட்டது என்று அறிகின்றோம். 

ஆக, ஒரு காலத்தில் கைமணி இசைப்பவர்கள் தனியே இருந்ததையும், பிறகு அந்தத் தொழிலையும் பூசகர்கள் தமது வசமாக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதையும் நாம் அறிகின்றோம். செங்கல்பட்டு அடுத்த ஆனுர் திருவம்பங்காட்டு மகாதேவர் (பசுபதீசுவரர்) ஆலயக் கல்வெட்டு ஒன்றில் ராஜராஜன் காலத்தில் படகம், திமிலை, கரடிகை, காளம், கைமணி, சேகண்டி போன்ற இசைக் கருவிகள் இந்த ஆலயத்தில் இசைக்கப்பட்டது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

கைமணி மட்டும் வைத்து பாடல்கள் பாடும் வழக்கம் தமிழக மலையாளி பழங்குடிகள் மத்தியில் காணப்படுகிறது. இம்மக்களின் முக்கிய தெய்வமான கதவநாச்சியம்மன் கோவில் விழாக்களில் 1-3 பேர் மணி இசைத்து ராமாயணம்/மகாபாரத பாடல்களைப் பாடும் வழக்கம் இவர்களிடத்தில் இன்றும் உள்ளது.   நாழிமணிக்கார்கள் போன்று கைமணி இசைத்து பாடல்கள் பாடி சன்மானம் பெறுபவர் வம்சராஜ் (பிச்சகுண்ட்லா, முடவாண்டுலு, பிச்சிகுண்டா) பிரிவினர். மேற்கு தமிழகத்தின் சில இடங்களில் (அந்தியூர், குருவரெட்டியூர், புரவிபாளையம்) வசிக்கும் நாட்டுப்புற பாணர்கள் இவர்கள். 

தெலுங்கு பேசும் தொட்டிய நாயக்கர், ராஜகம்பளம், கொண்டாரெட்டி போன்ற இனமக்களின் வீடுகள்தோறும் அறுவடை காலங்களில் சென்று அவர்களின் மூதாதையர் வரலாறு, குலப் பெருமை ஆகியவற்றைத் தெலுங்கில் பாடி சன்மானம் பெறும் சமூகத்தினர் இவர்கள். தங்களது வென்கல மணிகளை இசைத்தபடி கதைப்பாடலைப் பாடும் இவர்களது இசையானது வரலாற்றின் பக்கங்களைக் காட்சியாக நம் கண்முன்னே காட்ட வல்லது. தங்களது சமூகத்தினருக்கான சன்மானம் வழங்கும் சமூகக் குடிமக்கள் எங்கெல்லாம் வசிக்கின்றனரோ அங்கெல்லாம் இவர்களது வெண்கல மணி இசையும் பாடல்களும் வரலாற்றை இசைத்துக் கொண்டு இருந்தது. 

இவர்களும் இன்றைய கால சூழலில் அருகி வருகிறார்கள்.   கொத்துமணி: ஐந்தலைமணி என்றும் இதற்கு பெயர். கோவில்களில் இசைக்கப்படுவது. ஐந்து மணிகள் கொத்தாக பிணைத்து தொங்கவிடப்பட்டு இசைக்கப்படும். பெரும்பாலும் யானையின் துதிகையிலிருந்து மணிகள் தொங்குவது போல் இருக்கும். இசைக்கும் பொழுது இனிய நாதம் உண்டு பண்ணும். தற்பொழுது இதை செய்பவர்கள் அருகி வருகிறார்கள். அரிதாகவே இந்த மணியை நாம் காணமுடிகிறது.  

-சரவண பிரபு ராமமூர்த்தி  

நன்றி: 

1. பாணர் வரைவியல், பக்தவத்சல பாரதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 

2. பண்பாட்டு பதிவுகள், ஒ. முத்தையா, காவ்யா பதிப்பகம், சென்னை 

3. வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்

 

No comments: