உலகச் செய்திகள்

 பெண்கள் மீது சோதனை; மன்னிப்பு கேட்டது கட்டார்

பொலிஸ் சூட்டில் மற்றொரு கறுப்பின இளைஞன் பலி

தாய்வானுக்கு ஏவுகணை விற்க அமெரிக்கா முடிவு

இஸ்ரேல் துருப்புகள் தாக்குதல்: பலஸ்தீன இளைஞர் உயிரிழப்பு

சிரியாவில் ரஷ்ய வான் தாக்குதலில் பலர் பலி

ஹொங்கொங்கில் மூன்று ஜனநாயக ஆர்வலர் கைது

அமெரிக்காவின் பாலியல் வழிபாட்டு குழு தலைவருக்கு 120 ஆண்டு சிறை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரம்

கொவிட்–19: ஐரோப்பாவெங்கும் தினசரி உயிரிழப்பு அதிகரிப்பு

கருணைக்கொலைக்கு நியூசிலாந்தில் ஆதரவு


பெண்கள் மீது சோதனை; மன்னிப்பு கேட்டது கட்டார்

விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தாயைக் கண்டறிய அவுஸ்திரேலியா செல்லவிருந்த கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாயப் பரிசோதனை நடத்திய விவகாரத்தில் கட்டார் மன்னிப்புக் கோரியுள்ளது.

பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை நடத்திய விவகாரத்துக்கு அவுஸ்திரேலிய அரசு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்ததன் பின்னணியில் கட்டார் மன்னிப்புக் கோரியுள்ளது.

இதன்போது பெண்களின் ஆடையை கழற்றி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இப்பெண்கள் ஆம்புலன்சுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களது உள்ளாடையை நீக்கிய பிறகு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள், அவுஸ்திரேலிய அரசிடம் மருத்துவ ரீதியான உதவிகளைப் பெற்றதாக அதனை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரவித்தார்.

ஒக்டோபர் 2ஆம் திகதி கட்டார் விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத குறைமாதத்தில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் தாயை உடனடியாகக் கண்டுபிடிப்பதற்காக விமான நிலையத்தில் வெளிநாடு செல்லத் தயாராக இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை செய்து யாருக்கேனும் குழந்தை பிரசவித்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை கண்டறிய முனைந்துள்ளனர்.

இதுபோன்றதொரு பரிசோதனை பாலியல் வன்கொடுமைக்கு இணையானது என்று மனித உரிமை காப்பாளர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குழந்தையைப் பெற்றெடுத்த தாயைக் கண்டறிந்து உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கவே சோதனை நடத்தப்பட்டதாக கட்டார் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க பெண் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த உடனடியாக எவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

நன்றி தினகரன்  


பொலிஸ் சூட்டில் மற்றொரு கறுப்பின இளைஞன் பலி

பிளடெல்பியாவில் பதற்றம்

அமெரிக்காவின் பிளடெல்பியா மாநிலத்தில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து நீதி கேட்டு இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 27 வயதான வோல்டர் வொல்லஸ் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்த இளைஞன் வைத்திருந்த கத்தியை கீழே போட மறுத்ததை அடுத்தே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸார் மற்றும் தேசிய காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். முதல் நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 30 பொலிஸாருக்கு காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதற்றத்திற்கு இடையே ஆர்ப்பாட்டக்காரர்கள் வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் வொல்லஸ் மீது சூடு நடத்துவதற்கு முன்னர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அவரது மனைவி அந்த பொலிஸாரிடம் கூறி இருந்ததாக அந்த இளைஞனின் குடும்பத்தினர் சார்பான வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் பிடியில் இருந்த ஜோர்ஜ் பிளொயிட் என்ற கறுப்பினத்தவர் மரணமடைந்த சம்பவத்தை அடுத்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் பிளடெல்பியாவின் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

தாய்வானுக்கு ஏவுகணை விற்க அமெரிக்கா முடிவு

அமெரிக்கா 2.4 பில்லியன் டொலர் மதிப்புள்ள 100 ஹார்பூன் கடலோரத் தற்காப்பு ஏவுகணை அமைப்பைத் தாய்வானுக்கு விற்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

அந்த ஒப்பந்தம் சீனாவுக்கு மேலும் சினமூட்டக்கூடும். ஹார்பூன் ஏவுகணை அமைப்பு தாய்வானின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, அதன் அரசியல் நிலைத்தன்மை, இராணுவச் சமநிலை ஆகியவற்றை நிர்வகிக்க உதவும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள அறிக்கை குறிப்பிட்டது.

125 கிலோமீற்றர் தூரம் வரை பாய்ச்சக் கூடிய ஏவுகணைகளை அந்த அமைப்பு உள்ளடக்கியிருக்கும்.

போயிங் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் அந்த ஏவுகணைகளை கனரக வாகனங்களிலோ, நிலையான தளங்களிலோ பொருத்தலாம்.

ஜனநாயக முறையில் இயங்கும் தாய்வானைச் சீனா தொடர்ந்து தனது அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியாகவே பார்க்கிறது. அதனால் தாய்வான் தொடர்ந்து சீனாவின் ஆதிக்க அச்சுறுத்தலை எதிர்நோக்கிவருகிறது.

தாய்வானுக்கு ஆயுத விற்பனை செய்யும் அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மீது தடைகளை விதிக்கப்படும் என்று சீனா கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.   நன்றி தினகரன் 


இஸ்ரேல் துருப்புகள் தாக்குதல்: பலஸ்தீன இளைஞர் உயிரிழப்பு

வடகிழக்கு ரமல்லாவின் துர்முஸ் அய்யா நகருக்கு அருகில் இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் காயமடைந்த பலஸ்தீன இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கழுத்துப் பகுதியில் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் ஆமர் அப்தல் ரஹீம் ஸ்னோபர் என்ற அந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அந்தக் காயம் காரணமாக அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. “பலஸ்தீனராக இருக்கின்ற ஒரே குற்றத்திற்காக பாதுகாப்பற்று இருக்கும் இளைஞர்கள் மீது இஸ்ரேலிய துருப்புகள் கொடிய முறையில் தாக்குகின்றன” என்று பலஸ்தீன விடுதலை அமைப்பு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ரமல்லா பகுதியில் இராணுவ வாகனத்தின் மீது கல்லெறிந்தது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.   நன்றி தினகரன் 

சிரியாவில் ரஷ்ய வான் தாக்குதலில் பலர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் மாகாணத்தில் ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் 50க்கும் அதிகமான துருக்கி ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்திருக்கும் இந்தத் தாக்குதல் அந்தப் பிராந்தியத்தில் மீண்டும் வன்முறைகள் அதிகரித்திருப்பதை காட்டுவதாக உள்ளது.

இஸ்லாமியவாத குழுவான பைலன் அல் ஷாம்மின் பயிற்சி முகாம் ஒன்றே தாக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் இத்லிப்பில் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்கு இந்தத் தாக்குதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் 78 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இத்லிப்பின் வட மேற்கு பிராந்தியமான ஹரேமில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதல் கடந்த மார்ச் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதலாகும்.

சிரியாவின் ஒன்பது ஆண்டு சிவில் யுத்தத்தில் அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜிஹாதிக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியாகி இத்லிப் உள்ளது. மார்ச் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது சிரிய ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தினால், தங்களுக்கு பதில் தாக்குதல் நடத்தும் உரிமை உண்டு என்று துருக்கி அரசு கூறியது.

ரஷ்யா சிரியா அரசையும், துருக்கி கிளர்ச்சியாளர்களையும் ஆதரிக்கின்றன.   நன்றி தினகரன் 


ஹொங்கொங்கில் மூன்று ஜனநாயக ஆர்வலர் கைது

ஹொங்கொங்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிவினைவாதத்தைத் தூண்டும் கருத்துகளைச் சமூக ஊடகங்களில் அவர்கள் வெளியிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. கைதானவர்களில் 19 வயது டோனி சுங்கும் ஒருவராவார். அவர் அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கு அருகே கைது செய்யப்பட்டார்.

துணைத் தூதரகத்தில் புகலிடம் கேட்டுச் சென்ற ஆர்வலர்கள் நால்வர் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை அடுத்து ஹொங்கொங்கில் இருந்து புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஹொங்கொங் அகதிகளுக்கு தாம் முன்னுரிமை அளிப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.   நன்றி தினகரன் 


அமெரிக்காவின் பாலியல் வழிபாட்டு குழு தலைவருக்கு 120 ஆண்டு சிறை

அமெரிக்காவில் பாலியல் வழிபாட்டு குழுவின் தலைவர் ஒருவருக்கு 120 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெக்சியம் என்று அழைக்கப்படும் அந்தக் குழுவின் தலைவரான கீத் ரேனியர் மோசடி, பாலியல் கடத்தல், சிறுவர் ஆபாசப்படங்களை வைத்திருந்தது மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளில் கடந்த ஆண்டு குற்றங்காணப்பட்டார்.

அந்தக் குழுவின் தலைவராக அவர் பெண்களை அடிமையாகப் பணியமர்த்தி அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வழிபாட்டு முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளவிட முடியாத இழப்புகளை ஏற்படுத்திய 60 வயதான அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசதுறை வழக்கறிஞர்கள் கேட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை புரூக்ளைனில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில் ரேனியருக்கு 1.75 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து நெக்சியம் குழு பற்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

நியூயோர்க்கின் அலபாமா நகரைத் தலைமையகமாகக் கொண்டு 1998 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் குழு தமது வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை கருத்தரங்குகளை நடத்தி வந்துள்ளது.

இதில் ரேனியர் தமக்கென பெண்கள் மட்டுமான குழு ஒன்றை செயல்படுத்தி வந்ததாகவும் அந்தக் குழுவினர் அவருடனான சந்திப்பின்போது நிர்வாணமாக இருக்க வலியுறுத்தப்பட்டதாகவும் குழுவில் இருந்து வெளியேறிய பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.

5 ஆயிரம் டொலர் கட்டணத்தில் சேரும் பெண்களுக்கு ஆரோக்கிய உணவை கொடுப்பதுடன், அவர்களது உடலில் தனது முதலெழுத்துகளை முத்திரை குத்தி பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாக ரேனியர் மீது குற்றம்சாட்டப்பட்டது.   நன்றி தினகரன் 


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமும் இல்லாத நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் பதவியில் உள்ள ஜனாதிபதியான குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இறுதிக் கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசு கட்சி ஆதரவு மாநில ங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பைடன், டிரம்பை ஏமாற்றுக்காரர் என்று சாடியுள்ளார். டிரம்ப் கொரோனா வைரஸிடம் சரணடைந்திருப்பதாக ஜோர்ஜியாவில் அவர் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு தாம் வெற்றிபெற்ற ஆனால் தேர்தலில் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மாநில ங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப், பைடன் வெற்றிபெற்றால் பொருளாதாரம் பாதிப்படையும் என்று மிச்சிகனில் குறிப்பிட்டார்.

கருத்துக்கணிப்புகளின்படி டிரம்ப்பை விடவும் பைடன் முன்னிலையில் உள்ளார்.

எனினும் அரிசோனா, புளோரிடா மற்றும் வடக்கு கரோலினா போன்ற தீர்க்கமான மாநிலங்களில் தொடர்ந்தும் கடும் போட்டி இருந்து வருகிறது.

ஏற்கனவே 69 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் முன்கூட்டியே தேர்தலில் வாக்களித்துள்ளனர். கொரோனா தொற்றுக் காரணமாக முன்கூட்டி வாக்களிப்போர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் ஜோர்ஜியா மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரது தன்னம்பிக்கையை அது காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். 1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜோர்ஜியா மாநிலம் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியை ஆதரித்ததில்லை.

ஆனால் இம்முறை அங்கு கடுமையான போட்டி நிலவும் என்று கருத்துக் கணிப்புகள் முன்னுரைத்துள்ளன.

மிச்சிகன், விஸ்கோன்சின், நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்களில் ஜனாதிபதி டிரம்ப் தமது பிரசாரத்தை வலுப்படுத்தியுள்ளார்.

பென்சில்வேனியா மாநிலத்தில் ஜனாதிபதியின் துணைவியார் மெலானியா டிரம்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தனியாகப் பிரசாரத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறையகும்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.   நன்றி தினகரன் 


கொவிட்–19: ஐரோப்பாவெங்கும் தினசரி உயிரிழப்பு அதிகரிப்பு

ஐரோப்பாவில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதில் மூன்றில் ஒரு சம்பவங்கள் பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன், நெதர்லான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் பேச்சாளர் டொக்டர் மார்க்ரேட் ஹரிஸ் தெரிவித்தார்.

“மோசமாக சுகவீனமுற்றவர்களால் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வருவது கவலை அளிக்கிறது” என்று அவர் கூறினார்.

ரஷ்யாவில் தினசரி உயிரிழப்பு 320 ஆக உச்சம் பெற்ற நிலையில் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 26,589 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியிலும் கடந்த 24 மணி நேரத்தில் 221 உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. ஆஸ்திரியாவின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த செவ்வாயன்று ஆயிரத்தை தாண்டியது. அமெரிக்கா, இந்தியா, பிரேசிலுக்கு அடுத்து உலகில் அதிக கொவிட்–19 சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நாடான ரஷ்யாவில் கடந்த செவ்வாய் அன்று 16,550 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் அங்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இத்தாலியிலும் நோய்த் தொற்று வேகம் தீவிரம் அடைந்து கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 22,000 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எனினும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பெல்ஜியத்தில் சுகாதார கட்டமைப்பு நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் நிலையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானாலும் தொடர்ந்து பணியில் ஈடுபடுவதற்கு அந்நாட்டு மருத்துவர்கள் கோரப்பட்டுள்ளனர்   நன்றி தினகரன் 


கருணைக்கொலைக்கு நியூசிலாந்தில் ஆதரவு

நியூசிலாந்தில் கருணைக்கொலையை சட்டமாக்குவதற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளன.

இதன்படி வாழ்வை முடித்துக் கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவாக 65.2 வீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டத்தின்படி ஆறு மாதங்களுக்கு குறைவான காலமே உயிர்வாழ வாய்ப்பு இருக்கின்ற நோய்வாய்ப்பட்டவர்கள் இரு மருத்துவர்களின் ஒப்புதலோடு மருத்துவர் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும் இந்த சட்டத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை என்று அதனை எதிர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான முடிவுகள் நேற்று வெளியானபோதும் இதன் உத்தியோகபூர்வ முடிவு வரும் நவம்பர் 6 ஆம் திகதியே வெளியாகவுள்ளது.

இது வரும் 2021 நவம்பர் மாதமே சட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி நெதர்லாந்து, கனடா உட்பட ஒருசில நாடுகளின் வரிசையிலேயே கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் நாடாக நியூசிலாந்து மாறவுள்ளது.   நன்றி தினகரன் No comments: