அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 41 – தவளச்சங்கு - சரவண பிரபு ராமமூர்த்தி

தவளச்சங்கு  - ஊதுகருவி


சங்கு தமிழர் பண்பாட்டின் மிகத் தொன்மையான இசைக்கருவியாகும். இதை மனிதன் செய்வதில்லை மாறாக இயற்கை செய்துதரும் ஒரு அதிசயம். தவளச்சங்கு என்பது சங்கின் நிறத்தை குறித்து உருவானது. தவளம் என்பது வெண்மை. ”தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும்என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம்.

 

பழந்தமிழகத்தில், போர், திருவிழா என, எல்லாவற்றிலும் சங்கு இசை முழங்கி இருக்கிறது. வலம்புரி சங்குகள், நம் கடல்பகுதியில் மட்டும்


கிடைப்பவை. அவற்றுக்கு காந்த சக்தியும், ஆன்மிக சக்தியும் அதிகம் என்கிறார்கள். அவற்றை ஊதும் போது, மனதை ஒருநிலைப்படுத்தும், 'ஓம்' என்ற நாதம் ஒலிப்பதையும் நாம் கேட்கலாம். ஆதிதமிழன் சங்கை ஊதி வழிபட்டான், குடும்பச் சடங்குகளுக்கும் சங்கைப் பயன்படுத்திதான், சங்கு முழங்குவது மங்களமாக கருதப்பட்டது. கோயில்களிலும், அரண்மனைகளிலும் சங்கு ஊதுவது வழக்கம். அரண்மனைகளில் காலை வேளையில் முரசு கொட்டியும் சங்கு முழங்கியும் அரசரைத் துயிலெழுப்பினார்கள். அரண்மனையில் வலம்புரிச் சங்கு காலையில் முழங்கியதை சங்க இலக்கியம் நமக்குக் காட்டுகிறது.

 

 “தூக்கணங்குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப

ஒரு சிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி - புறநானூறு 

 

மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்

வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய

காலை முரசங் கனைகுரல் இயம்ப”     சிலப்பதிகாரம் – ஊர்காண் காதை

 


திருமுருகாற்றுப்படை, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்கள் சங்கு முழக்கத்தைப் பேசுகின்றன. “வயிரெழுந்திசைப்ப வால்வளை ஞரல” என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீர தேவ நாயனார் சங்கின் முழக்கத்தைப் பற்றி குறிக்கிறார். ஆண்டாள் “மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்றூத” என்று பாடியுள்ளது சங்கு இசைக்கருவி காலந்தோறும் தொன்றுதொட்டு பயன்பட்டு வருவதைக் காணமுடிகிறது.

 

தற்காலத்தில் வட தமிழ்நாட்டில் சங்கு பம்பையுடன் சேர்த்து இசைக்கப்டும் வழக்கம் உள்ளது.  நாட்டார் தெய்வ கோவில்களில் இம்மரபைக் காணலாம். திருப்போரூர் முருகன் திருக்கோயிலில் நடைபெறும் மாசி கிருத்திகைப் பெருவிழாவில் நகரெங்கும் காவடி மயமாக இருக்கும். அப்போது காவடி ஆட்டத்தில் காவடி ஆடுபவருக்குத் துணையாக உரத்த குரலில் திருப்போருர் கந்தனின் பெருமைகளை பாடி தவளச்சங்கு, தவண்டை, உடுக்கை, பம்பை, சேமக்கலம், வளவுபூரி ஆகியவை இசைக்கப்படுகிறது.

 

திருமண நிகழ்வுகளில் சங்கு இசைக்கும் வழக்கம் இப்பொழுது


தமிழ்நாட்டில் அருகிவிட்டது. மதுரை மாவட்த்தில் சில இடங்களில் திருமணத்தில் சங்கு இசைக்கும் வழக்கம் இப்பொழுதும் உள்ளது. சங்கும் சேமக்கலமும் இக்காலத்தில் இறப்பு வீடுகளுக்கு உரிய கருவிகளாக மாற்றப்பட்டுவிட்டன. இறப்பு வீடுகளில் இசைக்கப்படும் சங்கில் இருந்து கோவில் சங்கை வேறுபடுத்த சங்கிற்கு சில அலங்காரங்களைச் செய்தனர். நுனியில் வெள்ளி அல்லது வெங்கலத்தில் செய்த வால் என்ற அலங்கார பகுதியையும் வாய்ப் பகுதியில் அனசு என்னும் பாகத்தையும் பொறுத்தினர். அனசு பொருத்திய சங்கு இசைக்க சற்று எளிமையாக இருக்கும். அனசு பொருத்திய சங்கு தவிலுடன் சேர்ந்து இசைக்க ஏற்றது.

 

தமிழ்நாட்டுச் கோயில்களில் சாமி வழிபாட்டில் சேமக்கலத்துடன், சங்கொலியும் இசைக்கப்பட்து. சிவ வழிபாட்டில் சங்கு முக்கிய பங்கு வகித்து. கோவிலுக்கென்று சங்கு இசைப்போர் நியமிக்கப்பட்டனர். இச்செய்தியைக் கல்வெட்டுக்கள் நமக்குக் காட்டுகின்றன. காஞ்சி அடுத்த ஆனூரில் அட்டபுரீசுவரர் திருக்கோயில் என்னும் சிவன்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுச் செய்தியின் மூலம்


பல்லவமன்னன் கம்பவர்மன் ஆட்சியில் இக்கோவில் இறைவனுக்கு அமாவாசை நாளிலும், ஸ்ரீபலி வழிபாட்டின்போதும் மத்தளி-1, கரடிகை-1, கைமணி-1, சங்கு-1, காளம்-2, சேகண்டிகை ஆகிய இசைக்கருவிகளை வாசிக்க நரசிங்கபிரான் சிவன் என்பவர் நிலம் அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது. திருச்சி அருகே உள்ள சோழமாதேவியில் இருக்கும் கயிலாயமுடையார் திருக்கோவில் கல்வெட்டு மூலம் இக்கோவிலில் கரடிகை ஒன்றும், மத்தளம் இரண்டும், சங்கு இரண்டும், காளம் நான்கும் ஆக மொத்தம் ஒன்பது இசைக் கருவிகள், நாள்தோறும் இந்த ஆலயத்தில் இசைக்கப்பட்டதை அறிய முடிகிறது.

 

சென்ற நூற்றாண்டு வரை திருவொற்றியூர் கோவிலில் சங்கு இசைப்போர் தனியாக இருந்தனர். சென்னையை சேர்ந்த திரு விநோத்குமார் தம்பிரான் கூறுகையில்  சங்கிற்கு கெட்ட சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு. ஆகவே சிவன் கோவில்களில் சங்கு முக்கிய இசைக்கருவி. எனது தாத்தா திருவொற்றியூர் தியாகராசர் கோவில் மற்றும் தண்டையார்பேட்டை அருணாசலேச்வரர் கோவில்களில் தலைமை சங்கு இசைப்பவராக இருந்தார். தவலசங்கு என்பது நாங்கள் இசைக்கும் சங்கின் பெயர். முன்பு சங்கு தவிலுடன் சேர்ந்து இசைக்கப்பட்து. ஆகவே இதை தவில் சங்கு என்றனர். மருவி தவல சங்கு ஆகிவிட்டது. தவிலுடன் சங்கு சேர்த்து இசைக்கும் வழக்கம் பரவலாக இருந்தது. நந்தனார் மற்றும் வஞ்சிக் கோட்டை வாலிபன் போன்ற பழைய படங்களில் கானலாம். எனது முன்னோர் தான் அதில் சங்கு


இசைத்தனர். தற்காலத்தில் சங்கை சீண்டுவார் இல்லை. திருவொற்றியூர் கோவிலில் தியாகராசர் நடன புறப்பாட்டிற்கு மட்டும் இப்பொழுது நான் சங்கு இசைத்து வருகின்றேன். இவையன்றி காவடி பூசையில் சங்கு பம்பை உடுக்கையுடன் இசைக்கின்றோம். மதுரை வீரன் வழிபாட்டிலும் சங்கு இடம்பெறுகிறது” என்று சங்கின் நெடிய வரலாற்றை நம்முடன் பகிர்கிறார் இவர்.

 

தமிழகத்தில் வாழும் தாதர்/தாசர் சமூக மக்கள் சங்கு, சேமக்கலம், தாசரி தப்பட்டை ஆகிய கருவிகளை இசைத்து அழகு தமிழில் தெய்வங்களை வாழ்த்திப் பாடுகிறார்கள். பாடல்களைப் பாடி பிறகு நிறுத்தி சேமக்கலமும் சங்கினையும் குறிப்பிட்ட கதியில் இசைத்து நிறுத்தி மீண்டும் பாட தொடங்குகிறார்கள். இவர்கள் சங்கை இசைக்கும் முறை மிகவும் வித்தியாசமானது. தாதர்கள் பெரும்பாலும் வைணவர்களாக உள்ளனர். திருமலை, அழகர் கோவில், காரமடை, திருவரங்கம் ஆகிய கோவில் தெய்வங்களைப் போற்றி பாடுகிறார்கள். சேலம் மாவட்டம் இடைப்பாடியில் பல தாதர் குடும்பங்கள் வசிக்கிறார்கள். இவர்கள் திருமலையில் நிகழ்த்திய தாதர் பாடல் தொகுப்பை காணொளி பகுதியில் காணலாம். சைவ தாதர்களும் உள்ளார்கள். கால்நடையாக சேலத்தில் இருந்து பழனி செல்லும் 400 ஆண்டுகள் பழைமையான இடைப்பாடி பருவதராஜகுலம், வன்னியகுல சத்திரியர் காவடிகளில் தாதர்களும் உடன் செல்கிறார்கள். காவடி பூசையில் சேமக்கலம், சங்கு, தாசரி தப்பட்டை, துத்திரி ஆகியவற்றை இசைக்கிறார்கள். இப்பகுதி காவடிகள் இந்த இசைக்கருவிகள் இல்லாமல் பயணிப்பது இல்லை. காரமடை அரங்கநாதர் மற்றும் கரூர் தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணர் கோவில்களுக்கென்று பாத்தியபட்ட தாதர்கள் உள்ளனர். இவர்களின் பந்த சேவை என்னும் சடங்கில் சங்கும்/சேமக்கலமும் இசைக்கப்படுகிறது. வட தமிழகம்/புதுவை பகுதிகளில் ஆண்டி பண்டாரம் எனப்படும் சாதியார் சங்கு மற்றும் சேமக்கலம் ஆகிவற்றை பெரும்பாலும் இறப்பு வீடுகளில் இசைக்கிறார்கள். காரைக்குடியை சுற்றிய செட்டிநாடு பகுதிகளின் காவடி பூசைகளில் சங்கும் சேமக்கலமும் கண்டிப்பாக ஒலிக்கின்றது. பெண்களும் இங்கே இக்கலையை நிகழ்த்துவது வியப்பு. இவர்களின் குடும்ப நிகழ்வுகளிலும் சங்கு முழங்கும் என்கிறார்கள். இலங்கையில் சங்கு பயன்பாட்டில் இருந்தாலும் அங்கும் மறைந்து வரும் ஒரு இசைக்கருவியாகவே சங்கு உள்ளது.

 

அருணகிரிநாதர் சங்கின் ஒசை நடையுடன் ஒத்து அழகாக பாடும்படிசகுடமுந்துங் கடலடைந்துங்என்னும் நெடிய திருப்புகழ் பாடலை பாடியுள்ளார். சங்கின் இசையுடன் கேட்க இனிமையாக இருக்கும்.

 

சகுடமுந்துங் கடலடைந்துங்
     குளமகிழ்ந்துந் தோய்சங்கங்
          கமுகடைந்தண் டமுதகண்டந்
               தரளகந்தந் தேர்கஞ்சஞ்
                    சரமெனுங்கண் குமிழதுண்டம்
                         புருவெனுஞ்செஞ் சாபம்பொன் ...... திகழ்மாதர்…………………

 

சங்கு மங்கள இசைக்கருவியாக இருந்த காலம் போய் அது இன்றைய நிலையில் இறப்பு வீடுகளுக்கு உரியதாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் இதன் பயன்பாடு மிகவும் அருகி வருகின்றது. தமிழர் இசைக்கருவிகளை மீட்டுருவாக்கம் செய்யும் கோசை நகரான் அமைப்பினர் போன்றோர் சங்கு இசைப்பதற்கு இலவச பயிற்சி அளிக்கிறார்கள். கோவில்களிலும் இசைக்கிறார்கள். சங்கொலி மீண்டும் ஒலிக்கும் என்று நம்புவோம்.

 

பாடல்:

சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல்

பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ

அங்கணன் அருளால் அவை கொண்டு உடன்

பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார்…. திருமுறை 12.2101

 

காணொளி:

https://www.youtube.com/watch?v=AtGgKdfR8nA

https://www.youtube.com/watch?v=tLHqA9PwoL0

https://www.youtube.com/watch?v=f8rMJF-PLBc

 

-சரவண பிரபு ராமமூர்த்தி

 

நன்றி:-

1.     திரு வினோத்குமார் தம்பிரான் அவர்கள் ,பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை, பாரம்பரிய தமிழ் இசைக்கருவிகள் கலைஞர் மற்றும் தமிழ்வழி காவடி பூசகர், +919094147848 


No comments: