க்ரியா ராமகிருஷ்ணன்

17/11/2020    க்ரியா ராமகிருஷ்ணன்

தமிழ்நாட்டின் முன்னோடி பதிப்பாளர்களில் ஒருவரான 'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனா தொற்றிலிருந்து அவர் விடுபட்ட நிலையிலும், நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.

சென்னை லயோலா கல்லூரியில் படித்த அவர் ஆரம்பத்தில் விளம்பரத் துறையில் பணியாற்றினார். பிறகு, தமிழில் தரமான தயாரிப்பில் - தொழில்நுட்ப ரீதியாகவும் மொழி ரீதியாகவும் - புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் 1974ஆம் ஆண்டில் நண்பர்களோடு இணைந்து 'க்ரியா' பதிப்பகத்தைத் துவங்கினார்.

சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்', அம்பை எழுதிய 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை', இமயத்தின் 'கோவேறு கழுதைகள்', பூமணியின் 'அஞ்ஞாடி', ந. முத்துச்சாமியின் 'மேற்கத்திக் கொம்பு மாடுகள்' உள்ளிட்ட மிகச் சிறந்த புனைவுகளையும் ஆல்ஃபர் காம்யுவின் 'அந்நியன்', காஃப்காவின் 'விசாரணை', எக்ஸ்பரியின் 'குட்டி இளவரசன்' போன்ற மொழிபெயர்ப்புகளையும் இவரது மேற்பார்வையின் கீழ் க்ரியா வெளியிட்டது.

ஐராவதம் மகாதேவனின் ஆய்வு நூலான Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. புத்தகத்தை ஹாவர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிட்டது இவருடைய சாதனைகளில் ஒன்று.

க்ரியா ராமகிருஷ்ணன்

க்ரியாவின் தற்கால தமிழகராதி, எஸ். ராமகிருஷ்ணனின் வாழ்நாள் சாதனைகளில் ஒன்று.

தற்கால பொது எழுத்துத் தமிழில் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுத்து, அவற்றுக்குப் பொருள் அளிக்கும் நோக்கில் க்ரியா அகராதி திட்டம் உருவாக்கப்பட்டது.

1985ல் இந்த அகராதிக்கான பணிகள் துவங்கப்பட்டு, 1992ல் முதல் பதிப்பு வெளிவந்தது. 12 முறை மறு அச்சாக்கம் செய்யப்பட்ட பிறகு, விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 2008ல் வெளியானது. அந்த அகராதியின் மேலும் விரிவாக்கப்பட்ட மூன்றாம் பதிப்பு எஸ். ராமகிருஷ்ணன் மருத்துவமனையில் இருக்கும்போது, அவர் மறைவுக்கு சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது.

சென்னையிலுள்ள ஆய்வு நூலகமான ரோஜா முத்தையா ஆய்வு நூலக உருவாக்கத்திலும் எஸ். ராமகிருஷ்ணன் பங்குவகித்தார். கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியாரின் நூல் சேகரிப்புகளை வாங்கிக்கொண்ட சிகாகோ பல்கலைக்கழகம், அதனை சென்னையில் வைத்து பராமரிக்க சரியான நபர்களைத் தேடிக்கொண்டிருந்தது.

க்ரியா ராமகிருஷ்ணன்

"அந்தத் தருணத்தில் எஸ். ராமகிருஷ்ணன், சங்கரலிங்கம், நாராயணன், தியோடர் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து மொழி அறக்கட்டளையை நடத்திக்கொண்டிருந்தனர். புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான ஏ.கே. ராமானுஜன், இவர்களை அணுகும்படி சிகாகோ பல்கலைக்கழகத்திற்குப் பரிந்துரைத்தார். அதனைப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. ரோஜா முத்தையா நூலகத்தின் முதல் தலைவராக சங்கரலிங்கம் பொறுப்பேற்றார். இப்படியாக இந்நூலகத்தின் ஆரம்ப கட்டத்தில் எஸ். ராமகிருஷ்ணனுக்கு முக்கியப் பங்கிருந்தது" என்கிறார் அந்நூலகத்தின் தற்போதைய இயக்குநரான சுந்தர் கணேசன்.

அதை ஆமோதிக்கிறார் ஆய்வாளரும் எழுத்தாளரும் எஸ். ராமகிருஷ்ணனுடன் மொழி அறக்கட்டளையில் செயல்பட்டவருமான தியோடர் பாஸ்கரன். "1989ல் மொழி அறக்கட்டளையை ஆரம்பித்தோம். பதிப்புத் துறையில் தொழில்நுட்ப ரீதியாகவும் மொழி ரீதியாகவும் புதிய புதிய அம்சங்களைக் கொண்டுவர வேண்டுமென நினைத்தார்.

ஆகவே, தமிழ்மொழிக்கு புதிய சாதனங்களை அளிக்கும் நோக்கத்தோடு இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டது. எல்லோருமே க்ரியா அகராதி குறித்துத்தான் பேசுகிறார்கள். ஆனால், மொழி அறக்கட்டளையில் சார்பில் அவரை நிர்வாக ஆசிரியராகக் கொண்டு, வெளிவந்த தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதியும் மிக முக்கியமான ஒரு பணி" என்கிறார் தியோடர் பாஸ்கரன்.

அவர் தமிழ் பதிப்புலகின் மிகச் சிறந்த எடிட்டர். புத்தக ஆசிரியரை அருகில் வைத்துக்கொண்டு அவர் பிரதிகளைச் செம்மையாக்கம் செய்வது ஒரு பெரிய துன்புறுத்தலைப் போலத் தோன்றும். ஒவ்வொரு வார்த்தையாக எடுத்துக்கொண்டு, அந்த இடத்தில் அது சரியான பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று விவாதிப்பார் என நினைவுகூர்கிறார் தியோடர் பாஸ்கரன்.

ஃப்ரெஞ்ச் மொழியிலிருந்து வெ. ஸ்ரீராம் மொழிபெயர்ப்பில் நேரடியாக பல படைப்புகளை க்ரியா கொண்டு வந்திருக்கிறது. "ஒரு மொழிபெயர்ப்பு வரும்போது அதில் துல்லியமும் செம்மையும் காக்கப்பட வேண்டுமென்பதில் அவரைப்போல கவனமாக இருந்தவர்கள் யாரும் கிடையாது. 1980ல் ஆல்ஃபர் காம்யூவின் அன்னியன் பதிப்பிக்கப்பட்டபோது, அதன் முதல் மொழிபெயர்ப்பை ஆறு முறை செம்மை செய்தோம். அவருடனான என்னுடைய உறவு 1980ல் துவங்கி இப்போதுவரை நீடித்தது. அவருடைய மறைவு தமிழுக்கு இலக்கிய ரீதியிலும் மொழி ரீதியிலும் பெரிய இழப்பு" என்கிறார் வெ. ஸ்ரீராம்.

தமிழ் குறித்தும் தமிழ்க் கலாசாரம் குறித்தும் பல ஆய்வு நூல்களை எழுதிய இஸ்ரேலியப் பேராசிரியர் டேவிட் ஷுல்மன், எஸ். ராமகிருஷ்ணனின் மறைவு மிகப் பெரிய பேரிழப்பு என்கிறார்.

"உலகம் முழுவதுமே பண்பாடு, அறிவு, கலைரீதியான முயற்சிகள் எல்லாம் ஒரு நூலில்தான் தொங்குகின்றன. அந்த நூல், மிகச் சிறந்த ரசனை, புரிதல், கற்பனை, நிஜத்தில் எதையும் சாதிக்கும் வலிமை கொண்ட சிலரிடம்தான் இருக்கிறது. அந்த சிலரில் எஸ். ராமகிருஷ்ணனும் ஒருவர். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக அவரும் அவருடைய பதிப்பகமான க்ரியாவும் சென்னையில் தமிழ் இலக்கியம் மற்றும் அறிவுசார்ந்த படைப்புகளின் மையமாக இருந்தனர். சிங்கப்பூர், இலங்கை, ஃபிஜி, டொரன்டோ போன்ற பரந்துபட்ட தமிழ் வாசிப்புலகிலும் அவரது தாக்கம் இருந்தது. ராம் உருவாக்கிய க்ரியா தற்காலத் தமிழகராதி, நவீன தெற்காசிய மொழிகளில் தற்போது வெளிவந்துள்ள மிகச் சிறந்த அகராதிகளில் ஒன்று. ராம் எனக்கு நல்ல நண்பர். எனக்கு மட்டுமல்ல, தமிழோடு தொடர்புடைய எல்லோருக்கும் நண்பர். அவருடைய மறைவு, கற்பனைக்கெட்டாத பேரிழப்பு" என்கிறார் டேவிட் ஷுல்மன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: