உலகச் செய்திகள்

டிரம்ப்புடன் முரண்பட்ட தேர்தல் பாதுகாப்பு அதிகாரி பணி நீக்கம்

இஸ்ரேல் வான் தாக்குதலில் சிரியாவில் 3 படையினர் பலி

ஆப்கான், ஈராக்கில் அமெரிக்க படைகளை குறைக்க அறிவிப்பு

ஜோர்ஜியாவில் மறுவாக்கு எண்ணிகையிலும் பைடன் வெற்றி: டிரம்புக்கு மேலும் பின்னடைவு

இஸ்ரேல் குடியேற்ற பகுதிக்கு மைக் பொம்பியோ பயணம்

கொவிட்–19: பயோடெக் தடுப்பூசி விநியோகம் கிறிஸ்மஸிற்கு முன்


டிரம்ப்புடன் முரண்பட்ட தேர்தல் பாதுகாப்பு அதிகாரி பணி நீக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் மோசடிக் குற்றச்சாட்டுடன் முரண்பட்ட அந்நாட்டு உயர்மட்ட தேர்தல் அதிகாரி ஒருவரை டிரம்ப் பதவி நீக்கியுள்ளார்.

வாக்குப் பதிவின் நேர்மை பற்றிய ‘மிகவும் தவறான’ கருத்து காரணமாக இணையப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ் க்ரெபக் பதவி நீக்கப்பட்டார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கத் தேர்தலில் தனது தோல்வியை ஏற்க மறுக்கும் டிரம்ப், பாரிய அளவில் தேர்தல் மோசடி இடம்பெற்றதாக ஆதாரம் இன்றி குற்றம்சாட்டி வருகிறார்.

எனினும் இந்தத் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகப் பாதுகாப்பானதாக இருந்தது என்று தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தனது தோல்விக்குப் பின் டிரம்பினால் பதவி நீக்கப்படும் இரண்டாவது அதிகாரியாக க்ரெபக் உள்ளார். முன்னதாக பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் டிரம்ப் விடைபெறும் முன்னர் சி.ஐ.ஏ உளவுப் பிரிவு பணிப்பாளர் ஜினா ஹாஸ்பல் மற்றும் எப்.பி.ஐ பணிப்பாளர் கிறிஸ்டோபர் வ்ரேய் ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன.

ஏனையவர்கள் போன்று டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவின் மூலமே க்ரெபக்கிற்கு தாம் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனினும் அதற்கு தாம் வருந்துவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.    நன்றி தினகரன் 



 



இஸ்ரேல் வான் தாக்குதலில் சிரியாவில் 3 படையினர் பலி

சிரியாவில் உள்ள ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு எல்லைப் பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஈரானிய குத்ஸ் படை மற்றும் சிரிய ஆயுதப் படைகளுக்கு சொந்தமான இலக்குகள் மீது நேற்று அதிகாலை நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

கிடங்கு வசதி, தலைமையகங்கள் மற்றும் இராணுவ வளாகங்கள் இதன்போது இலக்கு வைக்கப்பட்டிருப்பதோடு சிரியாவின் தரையில் இருந்து வானைத்தாக்கும் ஏவுகணை அமைப்பு தாக்கப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டது.

இந்தத் தாக்குதலில் தமது படையினர் மூவர் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் காயமடைந்ததாக சிரியாவின் அரச செய்தி நிறுவனமான சானா குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் 2011இல் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தது தொடக்கம் அந்நாட்டை இலக்கு வைத்து இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

சிரிய அரசுக்கு ஆதரவளிக்கும் ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா படைகளை இலக்கு வைத்தே பெரும்பாலும் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.   நன்றி தினகரன் 







ஆப்கான், ஈராக்கில் அமெரிக்க படைகளை குறைக்க அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியில் இருந்து வெளியேறுவதற்கு முன் ஆப்கானில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை 4,500இல் இருந்த 2,500 ஆக குறைக்கவுள்ளதாக பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.

ஈராக்கில் இருக்கும் அமெரிக்க துருப்புகளையும் குறைக்கும் அறிவிப்பை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ளது. இதன்படி அந்நாட்டில் இருக்கும் 3,000 துருப்புகள் 2,500 ஆக குறைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 15 இல் ஆப்கானில் இருந்து 2,000 துருப்புகளும் ஈராக்கில் மேலும் 500 துருப்புகளும் வாபஸ் பெறப்படும் என்ற பதில் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ் மில்லர் தெரிவித்துள்ளார். ‘ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போர்களை வெற்றிகரமான மற்றும் பொறுப்புடைய வகையில் நிறைவு செய்து துணிச்சலான படையினரை நாட்டுக்கு அழைத்துவரும் டிரம்பின் கொள்கையை பிரதிபலிப்பதாக இந்த நடவடிக்கை உள்ளது’ என்று மில்லர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மைக் எஸ்பர் பதவி நீக்கப்பட்டு ஒரு சில நாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதே நேரம் ஆப்கான் அரசுக்கு ஆதரவாக அங்கு துருப்புகளை தக்கவைத்துக் கொள்ளும் நிலைப்பாட்டில் எஸ்பர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 






ஜோர்ஜியாவில் மறுவாக்கு எண்ணிகையிலும் பைடன் வெற்றி: டிரம்புக்கு மேலும் பின்னடைவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை மறுத்து டொனால்ட் டிரம்ப் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஜோர்ஜியா மாநில மறு வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றியீட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜோர்ஜியாவில் பைடன் 12,284 வாக்குகள் வித்தியாசத்தில் பதவியில் உள்ள ஜனாதிபதி டிரம்பை தோற்கடித்திருப்பதாக அந்த மாநிலம் குறிப்பிட்டுள்ளது.

இதனை அடுத்து டிரம்பை ‘நம்ப முடியாத அளவுக்கு பொறுப்பற்றவர்’ என்று சாடிய பைடன், தாம் தோற்றிருப்பதை டிரம்ப் தெரிந்தே இருக்கிறார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும் என்றார்.

ஜோ பைடன் வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு தயாராகி வருகிறார்.

கடந்த நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பைடன் மொத்த வாக்கு எண்ணிக்கையில் டிரம்பை விடவும் 5.9 மில்லியன் அதிக வாக்குகளை வென்றிருப்பதோடு, வெற்றிக்கு 270 தேர்தல் சபைகள் தேவையாக இருக்கும் நிலையில் அவர் 306 இடங்களை கைப்பற்றி இருப்பது கணிப்பகள் மூலம் உறுதியாகிறது. டிரம்பினால் 232 இடங்களையே வெல்ல முடிந்துள்ளது. எனினும் ஜோர்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகவும், அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை.

எனினும் ஜோர்ஜியா மாநிலத்தில் டிரம்புக்கும், பைடனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் இருந்ததால் மறு வாக்கு எண்ணிக்கைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன.

இந்நிலையில் கைகளால் எண்ணப்பட்ட வாக்குகளும் பைடனின் வெற்றியை மாற்றவில்லை என்று ஜேர்ஜியாவின் மாநிலச் செயலாளர் பிரெட் ரபன்பேர்க்ர் குறிப்பிட்டுள்ளார். வெற்றியாளரை இயந்திர வாக்கு எண்ணிக்கை துல்லியமாக தெரிவித்ததை, மறு வாக்கு எண்ணிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்மூலம், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜோர்ஜியா மாநிலம் ஜனநாயக கட்சியின் வசம் சென்றுள்ளது. 30 ஆண்டுகளில் முதல்முறையாக வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் என்ற பெருமையை ஜோ பைடன் பெற்றுள்ளார்.

எனினும் தேர்தலில் மோசடி இடம்பெற்றதான நிலைப்பாட்டில் டிரம்ப் உதவியாளர்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளனர். டிரம்பின் பிரத்தியேக வழக்கறிஞர் ரூட் கிலியன் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, டிரம்பின் வெற்றியை புரட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். எனினும் தமது கூற்றை உறுதி செய்வதற்கு உறுதியான ஆதாரங்களை முன்வைக்க டிரம்ப் தரப்பு மீண்டும் ஒருமுறை தவறிவிட்டது.     நன்றி தினகரன் 





இஸ்ரேல் குடியேற்ற பகுதிக்கு மைக் பொம்பியோ பயணம்

அமெரிக்க உயர் அதிகாரி ஒருவரின் முதல் விஜயமாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் யூதக் குடியேற்றம் ஒன்றுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்கா நீண்டகாலம் பேணி வந்த நிலைப்பாட்டை மாற்றி, யூதக் குடியேற்றங்கள் சர்வதேச சட்டங்களுடன் முரண்படவில்லை என்று பொம்பியோ குறிப்பிட்டு ஓர் ஆண்டுக்கு பின்னரே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பிரகடனம் பலஸ்தீனர்களின் கோபத்தை தூண்டியிருந்தது. இந்த யூதக் குடியேற்றங்கள் இருக்கும் பகுதிகள் தமது எதிர்கால சுதந்திர நாட்டைச் சேர்ந்தவை என்று பலஸ்தீனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பொம்பியோ தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதிக்கும் இதேபோன்று பயணம் மேற்கொண்டார். 1967 மத்திய கிழக்கு யுத்தத்தில் சிரியாவிடம் இருந்து இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டு 1981இல் இஸ்ரேலின் ஆட்புலத்திற்குள் இணைக்கப்பட்ட கோலன் குன்றில் இஸ்ரேலின் இறைமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.     நன்றி தினகரன் 







கொவிட்–19: பயோடெக் தடுப்பூசி விநியோகம் கிறிஸ்மஸிற்கு முன்


Friday, November 20, 2020 - 6:00am

பைசர், பயோடெக் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் கொவிட்–1 தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் அடுத்த மாதம் அவசர அங்கீகாரம் வழங்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் தடுப்பு மருந்தின் அவசரப் பயன்பாட்டை அமெரிக்க உணவு, மருந்து ஆணையம் அனுமதிக்கக்கூடும் என பயோடெக் தலைமை நிர்வாகி உகுர் சஹின் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஐரோப்பிய ஒன்றியம், அடுத்த மாதத்தின் பிற்பாதியில் அனுமதி அளிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். அவ்வாறு ஒப்புதல் பெற்றுவிட்டால், கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னரே தடுப்பு மருந்து விநியோகத்தைத் ஆரம்பித்துவிடலாம் என அவர் குறிப்பிட்டார்.

அந்தத் தடுப்பு மருந்தின் இறுதிக்கட்டச் சோதனை முடிவுகளில், அது 95 வீதம் வெற்றிகரமாகச் செயல்படுவதாகத் தயாரிப்பாளர்கள் கூறினர். அந்த வீதம் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எதிர்பார்த்ததைவிட அதிகம்.

தடுப்பு மருந்தில் எந்த அபாயகரமான பின்விளைவுகளும் இல்லை எனக் கூறப்படுகிறது.     நன்றி தினகரன் 







No comments: