விழிப்புணர்வை கடைப்பிடித்து கொரோனாவை வெல்வோம்!

2019 டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகின் அனைத்து கண்டங்களிலும் பரவி விட்டது. உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் தொற்றாக கொவிட்-19 காணப்படுகின்றது. இவ்வைரசை கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்குமாக உலகளாவிய ரீதியில் வல்லரசு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் முயற்சித்து வருகின்றன. அது போலவே உலக சுகாதார ஸ்தாபனமும் முயற்சித்து கொண்டு வருகிறது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் உட்பட்ட பல நாடுகளிலும் மிக அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல நாடுகள் கடும் சிக்கலில் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. இனிவரும் காலங்களில் மக்களே தங்களை தாங்கள் தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டும் சுகாதார நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாய சூழ் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சார்ஸ்-சி.ஓ.வி.2 என அதிகாரப் பூர்வமாகக் குறிப்பிடப்படும் இந்த கொரோனா வைரஸ் மனித உடலில் நுழைந்து நோயாக எவ்வாறு உருவாகின்றது என்பதை துறைசார்ந்தோர் குறிப்பிடுகின்றனர். உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் உடல் நிலையை கொண்டு வரும். இவ்வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது, யாராவது இருமிய பிறகு சுவாசத்தின் மூலம் இந்த வைரஸ் உடலில் நுழைகிறது. இதுபோன்று பல்வேறு மனித செயற்பாடுகளின் போது, சமூக நடவடிக்கைகளின்போது, சுகாதாரத்துறையினரால் பரிந்துரைக்க ப்படுகின்ற சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமில்லாமல் செயற்படுகின்ற மனித செயற்பாடுகள் மூலமாக மிக இலகுவாக மனித உடலை கொரோனா வைரஸ் ஆட்கொள்கின்றது.

இவ்வாறு உட்செல்லும் இவ்வைரஸ் முதலில் தொண்டை அருகே உள்ள செல்களில் தொற்றிக் கொள்ளும். பின்னர் சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அதன் பின்னர் உடலில் கொரோனா வைரஸ்கள் அதிகம் உருவாகி, பெரும் எண்ணிக்கையில் புதிய வைரஸ்களையும் உருவாக்கி உடலில் செலுத்தி, அதிக செல்களில் தொற்று ஏற்படுத்தும். இந்நிலையில் இத்தொற்றின் ஆரம்ப காலத்தில் ஒருவர் நோயுற நேராது. மேலும் சிலரின் உடலில் ஒருபோதும் அறிகுறிகள் தோன்றாது. இது நோயாக உருவாகின்ற காலம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடலாம். ஆனால் கணிப்பீட்டின்படி சராசரியாக இது ஐந்து நாட்களாகும். இவ்வாறு இருக்கின்ற நிலையில் சில வேளைகளில் தொண்டை வரட்சி, உடல் நோவுகள், , தலைவலி என்பன வரலாம். சில வேளைகளில் இந்நோய் அறிகுறிகள் தோன்றாமலும் விடலாம். இவ்வாறு உருவாகும் வைரஸ் தீவிர நிலையை அடையும்போது மரணம் வரை உடலை கொண்டு செல்கிறது.

எல்லாப் பக்கமும் கடலால் சூழப்பட்ட சிறிய தீவான இலங்கை ஆரம்பக் கட்ட கொரோனா காலத்தில், இலங்கை அரசாங்கமும் சுகாதார அமைச்சும், பாதுகாப்பு முப்படைகளும் மிகத் தீவிராக செயற்பட்டதனால் மிகக் குறைந்த மரணம், தொற்றாளர்கள் என கொரோனா அபாய நிலை இருந்தது பாராட்டத்தக்கதே. ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தகவல்களின்படி, இலங்கையில் 18.11.2020 வரை நிச்சயப்படுத்தப்பட்டுள்ள நோயா ளர்களின் எண்ணிக்கை -18075 ஆகவும், பி.சீஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்கள்-516 ஆகவும், தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்-5799 பேர்களாகவும், 12210 பேர் இந்நோயிலிருந்து சுகம் பெற்றுள்ளதுடன் அதிக மரணங்கள் இலங்கையில் சம்பவித்துள்ளன.

பொதுமக்கள் தொடர்ந்தும் தேவையற்ற விதத்தில் வீடுகளை விட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பேணி கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் பெரும்பாலான மக்கள் இதன் பாதிப்பு உயிராபத்து விளங்கியிருந்தும் அலட்சியமாக இருப்பதனால்தான் இன்று கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டும் மக்களின் நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டும் வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள 2 வது அலையான கொரோனா தொற்று காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இந்நோயின் தாக்கம் அதிகரித்து வருவதனையே காண முடிகின்றது. இலங்கை அரசு இது தொடர்பில் முதலாவது கொரோனா தாக்கத்தில் செயற்பட்டது போன்று தற்போதும் செயற்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் சிறந்த செயற்பாட்டினால் கொரோனாவை கட்டுப்படுத்தும் பாரிய வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டும் சட்டம் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றன. ஆனாலும் மக்களின் பூரணமான ஒத்துழைப்புக்கள் கிடைக்குமிடத்து நாட்டை விரைவில் வழமை நிலைக்கு கொண்டுவர முடியும்.

இந்த கொடிய நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில் இந்த நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுடன், உயிரிழப்புகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.

எனவேதான் இலங்கை மக்களின் பூரண ஒத்துழைப்புடனேயே கொரோனா தொற்றி லிருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை கவனத்தில் எடுத்து மக்கள் செயலாற்ற முன்வர வேண்டும்.

எஸ்.அஷ்ரப்கான்
(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)

 நன்றி தினகரன் 

No comments: