அழிவடையும் சிறுவர்நலம் ஆண்டவனே பாராயோ !



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 



வளரும் தளிர்கள் வாடி வதங்குவதா
இளமை உடைந்தால் நிலமை சிதைவடியும்
எழுமின் எனவழைக்கும் இளமை தனைவதைத்தல்
முழுமை வாழ்வினுக்கும் முடங்க லெனவமையும் 

வறுமை ஒருபக்கம் வாட்டும் போரொருபக்கம் 
அடிமை ஒருபக்கம் அனாதை நிலையோர்பக்கம் 
உலகெங்கும் இளந்தளிரகள் வாடி வதங்குகிறார்
கூட்டமிட்டுப் பேசிடினும் குறைமட்டும் அகலவில்லை

அரக்கரென இருக்கின்றார் அதிகலாபம் தனைக்கருதி
அரைகுறையில் பணியமர்த்த ஆள்பிடிக்க அலைகின்றார்
கலியாணத் தரகர்போல் பலருலவி நாட்டினிலே
கருகிவிடச் செய்கின்றார் சிறுவர்களைக் காசாக்க

போதைவஸ்து வியாபாரம் காசளிக்கும் பொக்கிஷமே
ஆசாட பூபதியாய் அதில்பலரும் திகழுகிறார்
அவர்பொருளை விற்பதற்கு இளசுகளைப் பலியாக்கி
பிஞ்சினிலே நஞ்சுதனை ஊட்டுகிறார் நாட்டினிலே 

மாடிமனை வாகனங்கள் வசதியொடு வாழ்ந்திடுவார்
ஏழ்மைதனை மனமிருத்தி இளசுகளைச் சிதைக்கின்றார்
வீட்டுவேலை தோட்டவேலை வெளிவேலை பலவேலை
அத்தனையும் செய்வதற்கு அடிமையாய் ஆக்குகிறார் 

படிக்கின்ற வயதினிலே பலவேலை பார்ப்பதற்கு
பிடித்துமே போகின்றார் பிய்த்துமே வீசுகிறார்
ஆட்சியிலும் மாற்றமில்லை காட்சியிலும் மாற்றமில்லை
அழிவடையும் சிறுவர்நலம் ஆண்டவனே பாராயோ 


 



No comments: