றோசாப்பூக் கொத்து

   


          ............பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி 



கன்னியவள் மயக்குவிழிப் பார்வை தாக்கிக்

     காதலிலே வயப்பட்டுப் பித்துப் பிடிக்கத்

தன்வசமே இழந்தகண்ணன் தனியாய் அவளைச்

    சந்திக்க வேண்டுமென மெதுவாய்க் கேட்டான்

பொன்நிறத்தாள் புன்முறுவல் பூத்து "நாளை

    பூங்காவிற் காலைநேரம் பத்து மணிக்குக் 

கன்னிநானும் வந்திடுவேன் காத்தி ருப்பீர்!

    காதலியின் அன்பழைப்பு" எனவாய் மலர்ந்தாள்.



கன்னியவள் மயக்குவிழிப் பார்வை தாக்கிக்

     காதலிலே வயப்பட்டுப் பித்துப் பிடிக்கத்

தன்வசமே இழந்தகண்ணன் தனியாய் அவளைச்

    சந்திக்க வேண்டுமென மெதுவாய்க் கேட்டான்

பொன்நிறத்தாள் புன்முறுவல் பூத்து "நாளை

    பூங்காவிற் காலைநேரம் பத்து மணிக்குக் 

கன்னிநானும் வந்திடுவேன் காத்தி ருப்பீர்!

    காதலியின் அன்பழைப்பு" எனவாய் மலர்ந்தாள்.   


பூக்கொத்தைக் கையேந்திச் செல்லும் வழியில் 

      புலன் குன்றி ஏழ்மையிலே வாடுமோர் கிழவன்

ஏக்கத்தோ டொருவேளை சோற்றிற் காக

     இருகைகொண் டேயிரங்கிப் பிச்சை கேட்கப்

பாக்காது முகந்திருப்பிக் காணா தவன்போல்

     பாவையவள் காதலியாள் சொன்ன பூங்கா

நோக்கியவன் நாடியங்கு விரைந்து சென்று

     நோட்டமிட்டு மரநிழலிற் காத்தி ருந்தான்.


எண்ணமெலாம்  அவள்பருவ  எழிலை எண்ணி

    எத்தனையோ கற்பனைகள் அலைய லையாய்

கண்ணனவன் மனத்திரையில் எழுந்து வண்ணக்

    காதல்மா ளிகையொன்றைக் கட்டி முடிக்க,

பெண்மயிலாள் தொலைபேசி ஒலிக்கக் கேட்டான்

    பெருமகிழ்வோ டதற்குதட்டால் முத்தங் கொடுத்துக்

"கண்மணியே வருவதற்கேன் தாமதம்? அன்பே!

   காத்திருந்து களைத்துவிட்டேன் ஓடிவா" என்றான்.

  

"அச்சச்சோ நண்பாநான் உனக்கு அன்று

    அவசரத்தில் ஒன்றுசொல்ல மறந்தேன்! இன்னோர்

மைச்சானுடன் இணைந்துபல இடங்கள் சென்று

    மாலையொரு சினிமாவும் பார்க்கப் போவோம்

இச்சையுடன் உன்னோடு நாளைக் கழிக்க

    ஏற்றதொரு திகதியைநான் விரைவிற் சொல்வேன்

|சிச்சீநீஷ கவலையின்றி வீடு செல்வாய்

   சேர்த்திடுவேன் முத்தமொன்றை ஏற்பாய்" என்றாள்.

 

கட்டிவைத்த மாளிகையும் இடிந்து வீழக்

   கன்னிசொன்ன வார்த்தையெலாம் நெஞ்சைத் தைக்கத்

தொட்டுநானும் பேசமுன்பு அவளின் உண்மைச்

   சுபாவந்தனைத் தெரிந்துவிட்டேன் கடவுள் எனைக்கை

விட்டுவிட வில்லையென்று மனந்தெ ளிந்து

    வீடுசேர வந்தவழி நடக்கும் போது

கட்டியதோர் கந்தலொடு வீதியில் உறங்கும்

    காலையிற் கண்டபிச்சைக் காரனைக் கண்டேன்.


மண்டியிட்டு அவனைமெல்ல எழுப்பி விட்டென்

    மலர்க்கொத்தைக்  குலைத்தெல்லா மலர்களை அவன்முன்

கண்ணிமைக்கும் நேரத்தில் அடுக்கி வைத்தேன்!

    கையாலொரு மலரெடுத்து அதனுட னேநான்

பெண்ணணங்கை மகிழ்விக்கக் கொணர்ந்த காசைப்

    பிரியமுடன் சேர்த்தவனின் கையில் இட்டேன்

எண்ணியொரு நாளும்நான் காணா அன்பின்

    இன்பவெளிப் பாட்டையவன் சிரிப்பிற் கண்டேன்.

   

   அவனுக்கு எதிர்ப்பக்கம் சென்றோர் வாங்கில்

      அமர்ந்திருந்தென் சலனத்தை எண்ணி வருந்திச்

   சிவனாரின் அருளினாலோ என்னவோ அந்தச்

        "சிருங்காரக் கன்னி'யையென் மனதிருந்து நீக்கி 

   எவனுக்கும் இல்லையென்று சொல்லாத நானும்

        இன்றைக்குக் காதல்மேல் வைத்தமோ கத்தால்

   கவனிக்க மறந்தவந்தப் பிச்சைக் காரனைக்

       கண்ணாலே அடிக்கடிநான் நோக்கி நின்றேன்.


   அருகிருந்த  கோவிலுக்குச் செல்வோர் சிலரை

      அடுக்கிவைத்த றோசாப்பூ ஈர்க்கக் கண்டு

   ஒருவரொரு பூவாக எடுத்து மெத்த

       உவகையொடு பிச்சைக்கா ரனுக்குப் பணத்தைத்

   தருவதைநான் பார்த்தின்பம் கொள்ள என்றன்

       சஞ்சலங்கள் நீங்கிநீங்காச் சாந்தியும்; மனமதிற்

   பெருகுவதை உணர்ந்தேயென் பேதமை நீக்கிய

       பெம்மானைத்  துதித்தவண்ணம் வீடு சென்றேன். 


மாதங்கள்  பலகழிந்த பின்னர் ஒருநாள்

    மாலையிலே அக்கோயில் சென்ற போது

பூவெங்கும் தொங்குமொரு கடையைக் கண்டேன்

    புதுக்கடையோ வெனநினைந்து எட்டிப் பார்த்தேன்

ஆதங்கப் பட்டுநின்றேன்! அநாதை போலே

    அன்றிருந்த பிச்சைக்கா ரனாவென நினைக்குமுன்

பாதங்களில் வீழ்ந்து "ஐயா நீயிட்ட பிச்சை

    பாவிக்கோர் வாழ்வாயிற்" றெனவாழ்த்தி நின்றான்.



"அன்றுநீயோ தந்தபணத் துடனே றோசா

    அத்தனையும் வாங்கினோரின் பணமுஞ் சேர்த்து

நன்றுறோசா விற்றிடலாம் நாலு காசு

    நாளுஞ்சேரும் எனநினைந்தே பூவிற் றுவந்தேன்

வென்றுவிட்டேன்! வறுமைதனைப் போக்கவுன் உதவி

    வித்திட்ட தையாநீ வாழ்க" வென்றான்

"இன்றெனக்கு உன்பெயரைக் கூறு வாயோ?

   இக்கடைக்கு அதைச்சூட்ட ஆசை" என்றான்


என்விழிகள் குளமாக அவன்கை பற்றி

   என்னெஞ்சில் அழுத்திநின்றே அவனைத் தழுவி

"பொன்மனத்தோய் எல்லாமவன் செயலே அன்றிப்

   புல்லனெனைப் போற்றாதே ஏழைக் கிரங்கி

நன்மைசெயக் கிளர்த்தேயெழும் மனமகிழ்ச் சிக்கு

   நானிலத்தில் ஈடேது மில்லை என்று

உன்செயலால் உணர்த்திவிட்டாய் நீயே பெரியோன்

   உணர்ந்திட்டேன்" எனவாழ்த்தி வீடு சென்றேன்.


No comments: