அஸி. படையினர் ஆப்கானியர்களை கொன்றதாக விசாரணை அறிக்கை

ஆப்கானிஸ்தான் போரில் அவுஸ்திரேலிய படையினர் சட்டவிரோதமான முறையில் 39 பேரை கொலை செய்திருப்பது நம்பகமான ஆதாரங்கள் மூலம் உறுதியாகி இருப்பதாக நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்டு வந்த அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படையினரின் தவறான செயற்பாடுகள் குறித்து கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வந்த விசாணையின் அறிக்கையை அவுஸ்ரேலிய பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.

அதில் தற்போது பணியில் இருக்கும் மற்றும் முன்னாள் படையினர் 19 பேர் மீது இந்தக் கொலைகள் பற்றி பொலிஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் 2009 மற்றும் 2013 காலப்பகுதியில் ‘கைதிகள், விவசாயிகள் அல்லது பொதுமக்களை’ கொலை செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சில படையினர்களிடையே கட்டுப்பாடு அற்ற ‘போர்வீரர் குணத்துடன்’ குற்றங்கள் இடம்பெற்றதாக அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை குற்றம்சுமத்தியுள்ளது.

மேஜர் ஜெனரல் போல் பெரட் மூலம் நடத்தப்பட்ட இந்த விசாரணையின்போது, 400க்கும் அதிகமான சாட்சியங்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் நிகழ்ந்தனவா என்பதை அரச வழக்குத்தொடுநர்கள் விசாரிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய இராணுவத்தின் மூத்த அதிகாரி ஜெனரல் ஏங்கஸ் கேம்ப்பெல் பரிந்துரைத்துள்ளார். “சில இராணுவ வீரர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தனர். விதிகள் மீறப்பட்டன. பொய்கள் சொல்லப்பட்டன. கைதிகள் கொல்லப்பட்டனர்” என்று அவர் கூறினார்.  

ஆப்கானிய மக்களிடம் ஜெனரல் கேம்ப்பெல் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

ஆப்கானிஸ்தானில் 2007 முதல் 2013ஆம் ஆண்டு வரை சேவை செய்ததற்காகச் சிறப்புப் பதக்கம் பெற்ற சிலரிடமிருந்து அதனைத் திருப்பிப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வழக்குத் தொடர போதுமான ஆதாரம் உள்ளதா என்பதை நிர்ணயிக்கச் சிறப்பு விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார் என்று அவர் குறிப்பிட்டார்.

இதில் தமது முதல் கொலையில் ஈடுபட்டு பயிற்சி பெறுவதற்கு கைதிகளை கொல்ல கனிஷ்ட படையினரிடம் கோரப்பட்டுள்ளது. இந்தக் கொலைகளை மறைப்பதற்கு சடலங்களுக்கு அருகில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர கொடிய செயற்பாடுகளைக் கொண்ட இரு சம்பவங்கள் போர் குற்றங்களாக கருதப்பட வேண்டியவை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியா நீதியை நிலைநாட்டும் என்று நம்புவதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஏனைய கூட்டணி படையுடன் தற்போதைய அமைதிகாக்கும் நடவடிக்கைக்காக ஆப்கானில் சுமார் 400 அவுஸ்ரேலிய படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 
 

No comments: