ஜீவிகா, வீட்டு வாசலுக்குப்போவதும் திரும்பி வருவதுமாக இருந்தாள். இதுவரையில் எத்தனைமுறை அவ்வாறு நடந்திருப்பாள் என்று அபிதா மனக்கணக்குப்போட்டவாறு வெங்காயம் நறுக்கினாள்.
வரப்போவது யாராக இருக்கும்…? இன்னமும் ஜீவிகா சொல்லவில்லை. வரப்போகும் விருந்தினரின் பெயரும் தெரியாது! ஆணா, பெண்ணா என்பதும் தெரியவில்லை.
“ என்னம்மா… கால் வலிக்கவில்லையா…? குட்டிபோட்ட பூனையைப்போன்று அங்கும் இங்கும் நடந்துகொண்டிருக்கிறீர்கள்…? அப்படி யார்தான் வரப்போகிறார்கள்…? “ அபிதா கேட்டாள்.
“ கொஞ்சம் பொறுங்க. வந்துவிடுவார். ஜா- எல கடந்துவிட்டதாகச் சொன்னார். “
“ அப்படியென்றால், கொழும்பிலிருந்துதான் வருகிறரா…? “
“ இல்லை, அதற்கும் அப்பால் பம்பலப்பிட்டியிலிருந்து வருகிறார். அவர் ஒரு கெமராமேன். எங்கள் அலுவலகத்தின் படப்பிடிப்பாளர். நான் செல்லும் ஊடகச்சந்திப்புகளுக்கெல்லாம் வாரவர்தான். அபிதா, உங்களைப்பற்றியும் அவரிடம் சொல்லியிருக்கின்றேன். உங்கள் கைப்பக்குவத்தையும் அவர் ருசி பார்த்திருக்கிறார். இன்றைக்கு உங்களை நேரிலேயே பார்க்கப்போகிறார். மற்றது அபிதா, அவர் வந்ததும், நான் அவருடன் வெளியே போய்வரவேண்டியிருக்கும். இந்த நிகும்பலையில் கடற்கரைப்பக்கம், டுவரிஸ்ட் ஹோட்டல் பக்கம் எல்லாம் அவரை அழைத்துப்போகவேண்டியிருக்கும். படங்கள் எடுக்கவேண்டும் என்றார் “
“ அப்படியா…? காரில் வருகிறாரா..? “
“ இல்லை… அவரிடம் மோட்டார் சைக்கிள் இருக்கிறது. அதில்தான் வருவார். “
“ என்னம்மா சொல்கிறீங்க… இந்த கொரோனா காலத்தில் இடைவெளி பேணச்சொல்லும்போது, எப்படி ஒரு பைக்கில் இரண்டுபேர் போவீங்க…? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் “ அபிதா மிகுந்த அக்கறையுடன் ஜீவிகாவுக்கு நினைவுபடுத்தினாள்.
“ எதற்கும் அவர் வரட்டும், கேட்டுப்பார்ப்போம். இல்லையென்றால், எங்கட ஓட்டோ ரிஸ்வானை அழைக்கவேண்டியதுதான். “ என்றாள் ஜீவிகா.
இந்த வீடு மாதாந்தம் அந்த ஓட்டோகாரனுக்காக செலவிடும் பணத்தையும் அபிதா மனக்கணக்கில் கூட்டிப்பார்த்தாள்.
அன்றைய சமையலுக்கு உதவுவதாகச்சொன்ன ஜீவிகா, அதனைமறந்து, தனது அறைக்குள் சென்று சீவி சிங்காரித்துக்கொண்டு வந்ததை பார்த்ததும் அபிதாவுக்கு சிரிப்புவந்தது. அவளது சுடிதார் உடையிலிருந்து மேல்நாட்டு வாசனை எழுந்து பரந்தது.
லண்டன்காரர் வரும்போது எடுத்து வந்து கொடுத்திருக்கலாம். ஜீவிகாவின் அறையை அபிதா சுத்தம் செய்யப்போகும் தருணங்களில் அங்கே அலங்காரம் செய்வதற்காக நிற்கும் நிலைக்கண்ணாடி மேசையில் அபிதா, பல தரத்திலான வாசனைக் குப்பிகளை பார்த்திருக்கிறாள்.
அபிதாவிடம் அந்தப்பழக்கம் இல்லை. என்றைக்கோ எங்கிருந்தோ தனக்குக்கிடைத்ததை அவளது பார்த்திபன் கொண்டு வந்து கொடுத்தபோது, கேட்ட கேள்விதான் நினைவுக்கு வருகிறது.
“ உங்கட பெண்போராளிகளும் களத்தில் போராடப்போகும்போது, இந்த குப்பிகளினால் ஸ்பிரே செய்துகொண்டா போவார்கள்…? “
“ இல்லை. அவர்களின் கழுத்தில் சயனைற் குப்பிதான் இருக்கிறது. உமக்கு வேண்டாமென்றால் திருப்பித்தாரும். வேறு யாருக்கும் கொடுக்கலாம். “ என்றான் பார்த்திபன்.
“ நீங்கள் என்னை நினைத்து வாங்கி வந்தது. திருப்பித்தந்தால், அது உங்களை அவமதிப்புக்குள்ளாக்கும் செயலாகிவிடும் அப்பா, என்னிடமே இருக்கட்டும். “ அபிதா அன்று வாங்கிவைத்திருந்த பெர்ஃபியூம் குப்பியும் போர்க்கால இடப்பெயர்வில் எங்கோ தொலைந்துவிட்டது.
வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து நிற்கும் சத்தம்கேட்டது. ஜீவிகா விரைந்துசென்றாள். அவளது முகத்தில் மலர்ந்த பரவசத்தை அபிதா அவதானித்தாள்.
கேட் திறக்கும் சத்தமும் கேட்டது. அபிதா வீட்டு வாசலுக்கு வந்து பார்த்தாள். மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கிய ஒரு இளைஞன் தனது ஹெல்மெட்டை ஜீவிகாவிடம் நீட்டியவாறு அவளை இழுத்து அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.
அபிதா, முகத்தை திருப்பிக்கொண்டு சமையலறைக்குள் புகுந்தாள்.
“ அபிதா…. இவர்தான் நான் சொன்னவர். ஜெயசீலன். எங்கட ஒஃபீஸ் கெமராமேன். டொக்கியூமன்றி எல்லாம் எடுப்பார். சீலன், இதுதான் எங்கட அபிதா…. “ ஜீவிகா அறிமுகப்படுத்தினாள்.
அபிதா, கையைத்துடைத்துக்கொண்டு முன்னே வந்து, கரம்கூப்பி வணங்கி, “ வாங்கோ… உங்களைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாங்க. வாசலுக்கு நடந்து நடந்து, அவுங்கட பாதமும் தேய்ந்து, தரையும் தேய்ந்துபோய்விட்டது “ என்று சொன்னாவாறு சிரித்து வரவேற்றாள்.
“ அப்படியா… வழிமேல் விழி வைத்துப்பார்த்தாவா…? “ ஜெயசீலன் தோளை குலுக்கிக்கொண்டு கேட்டான்.
சீலன் கையோடு எடுத்துவந்திருந்த கெமராவை ஸ்டுலில் வைத்துவிட்டு, குளியலறையை கேட்டுத் தெரிந்துகொண்டு சென்றான்.
ஜீவிகா துவைத்து உலரவைத்திருந்து தனது துவாயை எடுத்துக்கொண்டு பின்தொடர்ந்தாள். “ சரி சரி போதும் “ என்று ஜீவிகா மென்மையாக சிணுங்கிய குரல் வெளியே கேட்டது.
அபிதாவுக்கு வந்திருப்பது யார்…? என்பது ஓரளவுக்கு புரிந்தது.
சுருள்கேசம், சிவந்த திரேகம். கட்டுமஸ்தான் உடல். சமகால இளைஞர்களின் குறுந்தாடி. ஜீவிகாவுக்கு பொருத்தமாகத்தான் இருப்பதாக அபிதாவின் மனதிற்குப்பட்டது.
முதலில் ஜீவிகாதான் குளியலறையிலிருந்து வெளிப்பட்டு வந்து, “ சீலன்… ரீயா… கூல் ட்ரிங்ஸா… என்ன வேணும். காலையில் என்ன சாப்பிட்டீங்க… சாண்ட்விச் செய்து தரட்டுமா…? “ உரத்துக்கேட்கிறாள்.
“ அம்மா… பட்டர் கேக்கும் இருக்கிறது. வேண்டுமா..? என்று கேட்டுப்பாருங்கள் “ எனச்சொன்ன அபிதா, அன்றைய மதிய வேளை உணவுக்கான வேலையில் மூழ்கினாள்.
சீலன் முகத்தை துடைத்துக்கொண்டு வந்து ஜீவிகாவிடம் அந்த மஞ்சள் நிற துவாயை நீட்டிவிட்டு அமர்ந்தான்.
“ உம்மட துவாயிலிருந்தும் நல்ல வாசம் வருது ஜீவிகா. “
‘துவாயிலிருந்து மட்டுமா…? ‘ வந்த சிரிப்பை அபிதா அடக்கிக்கொண்டாள்.
அவர்கள் இருவரும் அமர்ந்து பேசத்தொடங்கினர். அபிதாவிடம் சீலன் தனக்கு இஞ்சித்தேனீர் கேட்டு வாங்கிப்பருகினான்.
“ உங்கட சமையலை நானும் சாப்பிட்டிருக்கிறேன் அபிதா. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. தினமும்தான். இப்ப கொஞ்ச நாளாகத்தான் சாப்பிட முடியவில்லை. அதுதான் தேடிக்கொண்டே வந்துவிட்டேன். “ என்றான்.
‘ மகனே என்னைத் தேடி வந்தாயா… இல்லை உன்ர நாயகியைத் தேடிவந்தாயா..? ‘ அபிதா மனதிற்குள் சிரித்தவாறு அன்று சமைக்கவிருந்த புரியாணிக்காக இறைச்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டத்தொடங்கினாள்.
" அபிதா, நான் உங்கட சாம்பார் சாதம், தயிர் சாதம், இட்டிலி, தோசை, இடியப்பம், நூடில்ஸ், சப்பாத்தி எல்லாம் சாப்பிட்டு ருசி பார்த்திருக்கின்றேன் “ என்று சீலன் சொன்னபோதுதான், ஜீவிகா தினமும் வேலைக்குப்புறப்படும்போது மேலதிகமாகவே உணவு எடுத்துச்செல்வதன் தாற்பரியம் காலம் கடந்து இப்போது புரிந்தது.
இந்த ஆளைத்தான் காதலிக்கின்றேன் என்று ஒருநாளும் ஜீவிகா அபிதாவிடமோ, மஞ்சுளா, சுபாஷினி, கற்பகம் ரீச்சரிடமோ சொன்னதில்லை. சில வேளை லண்டலிருந்து வந்திருக்கும் பெரியப்பாவிடமாவது சொல்லியிருப்பாளா..? சரிபோகட்டும். இவளுக்கும் வயது ஏறிக்கொண்டிருக்கிறது. காலா காலத்தில் நல்ல துணையொன்று தேடத்தானே வேண்டும். லண்டன் பெரியப்பா வந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இவளுக்கும் திருமணமாகிவிட்டால், அதன்பிறகு சீலனுடன் கொழும்பு வாசியாகிவிட்டால், தனது கதி என்னவாகும்…?
அபிதாவுக்கு பலவாறு யோசனைகள் அடுத்தடுத்து வந்துகொண்ருக்கின்றன.
சீலனும், ஜீவிகாவும் தங்கள் அலுவலக புதினங்களையும் நாட்டு நடப்புகளையும் பேசிக்கொண்டிருந்தனர். சீலன் அவிழ்த்துவிடும் முகநூல் மீம்ஸ் சராசரி நகைச்சுவைகளுக்கும் ஜீவிகா கலகலவென சிரித்துக்கொண்டிருந்தாள்.
இன்று அவள் மிகவும் உற்சாகமாக இருப்பதாக அபிதா உணர்ந்தாள். ஜீவிகா இதற்கு முன்னர் இப்படி கலகலப்பாக உரத்துச்சிரித்ததை அபிதா பார்த்ததில்லை. வீட்டில் தன்னைத்தவிர வேறு எவரும் இல்லாதிருப்பதனால் வந்துவிட்ட சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறாள் போலும்.
“ அபிதா, ஓட்டோ ரிஸ்வானுக்கு ஒரு கோல் எடுக்கிறீங்களா..? “ ஜீவிகா கேட்டபோது அபிதா வெட்டிய இறைச்சித்துண்டங்களை கழுவிக்கொண்டிருந்தாள்.
“ அம்மா, கை ஈரம். நான் நம்பர் சொல்றன். நீங்களே எடுங்க “ என்றாள்.
“ என்னுடைய பைக்கிலேயே போகலாம். ஜீவிகாவுக்கு மோட்டார் சைக்கிளெண்டா, பயம் அபிதா… உங்களுக்குத் தெரியுமா…? “ சீலன் புறப்படத்தயராக எழுந்து நின்று கண்ணை சிமிட்டிச்சொன்னபோது, “ அப்படி ஒரு பயமும் இல்லை ஐஸே… ஆளைப்பாரு…. “ என்று சொன்னவாறு அவனது தலையில் செல்லமாக குட்டினாள் ஜீவிகா.
அவர்களின் சரசம் அவர்களிடையே நீடிக்கும் காதலை அபிதாவுக்கு மேலும் உணர்த்தியது.
ஓட்டோ வரவும், இருவரும் புறப்பட்டனர்.
“ இன்னும் இரண்டு மணிநேரத்தில் வந்துவிடுவோம் அபிதா. இந்த ஆள் பசி பொறுக்காது. அதற்குள் சமையல் முடிந்துவிடும்தானே..? “ சீலனின் கெமராவைத்தூக்கிக்கொண்டு சென்ற ஜீவிகாவுக்கு, “ ஓம் அம்மா… கெதியா வந்திடுங்க…. “ என்று அபிதா குரல் கொடுத்தாள்.
‘ என்னமோ… சமையலறைக்கு வந்து ஏதோ வெட்டுவன் பிடுங்குவன் என்று சொன்னா, காதலனை கண்டவுடன் எல்லாத்தையும் மறந்திட்டு, சிட்டாகப்பறந்துவிட்டாள். அதற்கிடையில் வருங்கால புருஷனின் வயிற்றுப்பசியையும் நினைவுபடுத்திவிட்டுப்போறாள். இவள் வருங்காலத்தில் சமைப்பாளா… அல்லது கொழும்புக்கு தனிக்குடித்தனம் சென்ற பிறகாவது சமைப்பாளா…? ‘ - அபிதாவுக்கு நுவரேலியா சென்றிருக்கும் சுபாஷினியுடன் பேசத்தோன்றியது.
இன்று வீட்டுக்கு வந்துள்ள கதாநாயகன் பற்றி, சொல்லிவிடவேண்டும் என்று மனம் பரபரத்தது. மஞ்சுளாவிடம் சொல்லலாம். ஆனால், அவள் வங்கியில் வேலையில் மூழ்கியிருப்பாள். கற்பகம் ரீச்சர் ஒரு சிடுமூஞ்சி. “ என்ன மற்றவர்களின் பூராயம் பார்க்கிறாயா… இதுதான் இப்பொழுது உன்ர வேலையா..? என்றும் கேட்கக்கூடும்.
அபிதா, சமையலில் துரிதம் காண்பித்தாள். வானொலியையும் இயக்கிவிட்டாள். பாடல்களை கேட்டாள். அவற்றோடு இணைந்து முணுமுணுத்து தானும் பாடினாள்.
அப்போது சாப்பாட்டு மேசையிலிருந்த அவளது கைத்தொலைபேசி சிணுங்கியது.
‘ இந்த நேரத்தில் யார் எடுப்பார்கள்…? ‘ கையைத்துடைத்துக்கொண்டு, எடுத்து, “ ஹலோ “ சொன்னாள்.
மறுமுனையில் மஞ்சுளாவின் தாய் சிவகாமசுந்தரி.
“ என்னம்மா…? எப்படி இருக்கிறீங்க…. ? ஏதும் அவசரமா..? கையில் கொஞ்சம் வேலையாக இருக்கிறன். உங்கட மகள் வேலைக்குப்போயிட்டா… இங்கே விசிட்டர்ஸ் வந்திருக்கினம். சமைச்சுக்கொண்டிருக்கிறேன். சொல்லுங்க..என்ன விசயம்…? “
“ எனக்கு மகளை பார்க்கவேண்டும்போல இருக்குது அபிதா. சொல்லிப்பார்த்தீங்களா…? “
“ அவ இன்னமும் கோபத்தில்தான் இருக்கிறா…? நானும் அவவின்ட கோபத்தை தணிக்கத்தான் பார்க்கிறன். கொஞ்சம் ரைம் எடுக்கும்போலத் தெரியுது. “
“ எனக்கு ஒரு கோல் எடுக்கச் சொல்லமுடியுமா…? அவசரம். அவளுடைய வேலை நேரத்தில் பேசமுடியாது. வீட்டில் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில்தான், முதலில் உங்களிட்ட பேசிவிட்டு, அவள் என்ன மூடில் இருக்கிறாள் என்று பார்ப்பதற்கு எடுத்தேன். அவள் வேலையால் வந்தபிறகு ஒருக்கா சொல்றீங்களா…? “ என்றாள் சிவகாமசுந்தரி. பெற்றமனதின் பரிதவிப்பைக்கேட்ட அபிதா, ‘ இந்தத் தாயும் – சேயும் எப்போது இணையப்போகிறார்கள்..? ‘ என்று மனதிற்குள் யோசித்தாள்.
“ ஏனம்மா, இப்பத்தான் பஸ், ரயில் போக்குவரத்தெல்லாம் படிப்படியாகத் தொடங்கிட்டுதே… ஒரு தடவை நீங்களே இங்கே வரலாம்தானே. நேரில் மனம்விட்டுப்பேசி ஒரு நல்ல தீர்வுக்கு வரலாம்தானே….? “ என்றாள் அபிதா.
“ நானும் அதற்குத்தானே முயற்சிக்கிறன். என்னுடைய குரலைக்கேட்டாலே எரிந்து விழுகிறாள். என்னிடத்தில்தான் பெரிய பிழை இருக்கிறது. ஒத்துக்கொள்கிறேன். அதுக்காக அவளின்ட காலில் விழுந்து மன்னிப்புக்கேட்கவும் நான் தயார் அபிதா. “ மறுமுனையிலிருந்து விசும்பலும் ஒலித்தது.
“ அழாதீங்க அம்மா. காயங்கள் மாறும். கவலைகளும் போகும். இப்போது கையில் கொஞ்சம் வேலையாக இருக்கிறன். பின்னேரம் உங்களுடன் பேசட்டுமா… வெரி சொறி அம்மா. சமையல் பாதியில் நிற்கிறது “
“ சரி… அபிதா, நீங்க உங்கட வேலையை பாருங்க. பிறகு பேசுவோம். “
அபிதா கைத்தொலைபேசியை அணைத்துவிட்டு, நேரத்தைப்பார்த்தாள். வெளியே காகம் ஒன்று கரைந்துகொண்டிருந்தது.
ஜெயசீலன் சாப்பிட்டு மீதமாயிருந்து பட்டர்கேக்கை எடுத்துவந்து வெளியே பின்முற்றத்தில் வீசினாள். அந்தக்காகம் அதனை கவ்விக்கொண்டு பறந்து சென்று மரக்கிளையில் வைத்து சாப்பிட்டது. அதிலும் ஒரு பாதியை கால்களுக்கிடையில் வைத்தவாறு விட்ட இடத்திலிருந்து மீண்டும் குரலெடுத்து கரைந்தது.
மற்றும் ஒரு சிறிய காகம் எங்கிருந்தோ பறந்து வந்தது. மரக்கிளையிலிருந்து கீழே விழுந்த அந்தக்கேக் துண்டத்தை அச்சிறிய காகம் கொத்தித்தின்று தானும் கரைந்து நன்றி தெரிவித்தது.
இரண்டு காகங்களும் தாயும் சேயுமாக இருக்கலாமோ.? தாய் காகத்தின் குரல்கேட்டுத்தான் சேய் காகம் பறந்து வந்ததோ..?
‘ உனக்கும் தீணி வைத்திருக்கின்றேன் . விரைந்து வா. ‘ என்ற குரல்தான் உருவத்தில் சற்றுப் பெரிதாக இருந்த அந்தக் காகத்தின் குரலின் சமிக்ஞையோ.
அபிதா, உள்ளே வந்து சமைத்துவைத்திருந்து சோறும் கறியும் கரண்டியால் கிள்ளி எடுத்து, ஒரு வாழை இலையில் வைத்து வெளித்திண்ணையில் வைத்தாள். அந்த இரண்டு காகமும் மேலும் உரத்து கரைந்தன. அடுத்தடுத்து இரண்டு காகங்கள் வந்தன.
“ உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்… காக்கா கூட்டத்தை பாருங்க…. அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க ஒண்ணா இருக்க கத்துக்கணும்…. “
பழைய திரைப்படப்பாடல் அபிதாவின் நினைவுப்பொறியில் தட்டியது.
அவள் அந்தப்பாடலை முணுமுணுத்தவாறு சமையலறைக்குத் திரும்பினாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment