நியூசிலாந்தில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: அதிகாரி பலி
கொவிட்-19: ஆண்டிறுதியில் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய வாய்ப்பு
கறுப்பினத்தவரை கொன்ற அதிகாரி மீது குற்றச்சாட்டு
பீஜிங்கில் வைரஸ் பரவல் கட்டுக்குள்
ஆப்கானில் அமெரிக்க படையை 8,600 ஆக குறைப்பதற்கு திட்டம்
சீன அதிகாரிகளுக்கு தடை விதிக்க டிரம்ப் கையொப்பம்
நீருக்கடியிலான கேபிளிலும் சீனா – அமெரிக்கா பதற்றம்
உலகில் இடம்பெயர்ந்தோர் 80 மில்லியனை நெருங்கியது
நேபாளத்தின் புதிய வரைபடம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
ஜோர்தான் அமைச்சர் பலஸ்தீனம் விரைவு
தெற்கின் தூதர்களை வடகொரியா நிராகரிப்பு
நியூசிலாந்தில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: அதிகாரி பலி
Saturday, June 20, 2020 - 6:00am
நியூசிலாந்து ஒக்லாந்து நகரில் வழக்கமான போக்குவரத்து தரிப்பிடம் ஒன்றில் பொலிஸார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மற்றுமொரு பொலிஸார் காயமடைந்துள்ளார்.
வாகனத்தில் வந்திருக்கும் துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதோடு அவர் பிடிபட்டாரா என்பது பற்றி விபரம் வெளியாகவில்லை.
எனினும் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்று சுமார் நான்கு மணி நேரத்தின் பின் வீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் இருவரை கைது செய்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூசிலாந்து பொலிஸார் வழக்கமாக துப்பாக்கிகளை வைத்திருப்பதில்லை என்பதோடு, பணியின்போது அதிகாரி ஒருவர் கொல்லப்படுவது மிக அரிதான ஒன்றாக உள்ளது. கடைசியாக 2009 ஆம் ஆண்டே வீடொன்றில் தேடுதலில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸார் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளார். நன்றி தினகரன்
Saturday, June 20, 2020 - 6:00am
உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் கொவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்தை மில்லியன் கணக்கில் உற்பத்தி செய்யமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தடுப்பு மருந்துத் தயாரிப்பை 2 பில்லியனுக்கு அதிகரிக்க இலக்குகொண்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சௌம்யா சுவாமிநாதன் கூறினார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 3 வகையான தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதும் நிறுவனத்தின் இலக்கு.
சுமார் 10 வகையான தடுப்பு மருந்துகள் இப்போது மனிதர்களிடம் சோதிக்கப்படுகின்றன.
அவை வெற்றிபெற்றால், வைரஸ் தொற்றை நேரடியாக எதிர்த்துப் போரிடுவோர், எளிதில் பாதிக்கப்படக்கூடிய மூத்தோர், தாதிமை இல்லம் போன்ற வைரஸ் பரவும் சாத்தியம் அதிகமுள்ள இடங்களைச் சேர்ந்தோர் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள முன்னுரிமை தரவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது.
மலேரியா சிகிச்சைக்கான ஹைட்ரோசிகுளோரோக்குயின் மருந்துக்கு கொவிட்-19 நோயையோ, அதனால் ஏற்படும் மரணத்தையோ தடுக்கும் ஆற்றல் இல்லை என்பது தெளிவாகியிருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
பாதிப்பை முன்கூட்டியே அறிந்துகொண்டவர்களிடம் நோயின் தீவிரத்தைத் தடுக்கவோ, குறைக்கவோ அந்த மருந்து உதவுமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக அது குறிப்பிட்டது. நன்றி தினகரன்
Friday, June 19, 2020 - 6:00am
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கடந்த வாரம் கறுப்பின ஆடவரைச் சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி மீது கொலை, தாக்குதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவை நிரூபிக்கப்பட்டால் காரெட் ரோல்ப் எனும் பொலிஸ் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
ரேஷார்ட் புரூக்ஸ் என்ற கறுப்பின ஆடவர் தப்பியோடியபோது பொலிஸ் அதிகாரி காரெட் அவரைச் சுட்டார். அப்போது சம்பவ இடத்திலிருந்த டெவின் புரோஸ்னன் என்பவர் இந்த வழக்கின் சாட்சியாக விசாரிக்கப்படுவார் என்று அதிகாரிகள் கூறினர்.
பொலிஸ் அதிகாரி கறுப்பின ஆடவரைக் கொன்றதன் தொடர்பில் அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடத்தப்படும் வேளையில் அதிகாரி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதன் தொடர்பில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது விவாதித்து வருகின்றனர். நன்றி தினகரன்
Saturday, June 20, 2020 - 6:00am
சீனத் தலைநகர் பீஜிங்கில் அண்மையில் அதிகரித்த வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால்அந்நாட்டு நோய்க்கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் ஆங்காங்கே புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகலாம். இருப்பினும் வைரஸ் பரவல் அதிகரிக்கச் சாத்தியமில்லை என்று நிலையம் கூறியது.
சின்பாடி மொத்த விற்பனைச் சந்தையுடன் தொடர்பிலிருந்தோர் மூலம் வைரஸ் பரவுவதைக் குறைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வைரஸ் பரவல் மீண்டும் ஏற்பட்டதற்குக் குறைவான வெப்பநிலை, காற்றில் அதிகமான ஈரப்பதம் ஆகிய காரணங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுவரை 350,000க்கும் அதிகமானோரிடம் வைரஸ் தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
Saturday, June 20, 2020 - 6:00am
தலிபான்களுடன் கடந்த பெப்ரவரி மாதம் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையை அது 8,600ஆகக் குறைத்துக் கொள்ளும் என்று பிராந்தியத்தின் அமெரிக்க கடற்படைத் தளபதி பிரான்க் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்க துருப்புகள் எப்போது எவ்வாறான கட்டத்தில் மேலும் குறைக்கப்படும் என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை. பெப்ரவரியில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி அடுத்த மே மாதத்தில் அமெரிக்கா முழுமையாக வாபஸ் பெறவேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
எனினும் தலிபான்களின் நடத்தையை பொறுத்தே அது அமையும் என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டு யுத்தங்களில் பங்கேற்றிருக்கும் அமெரிக்கத் துருப்புகளை நாட்டுக்கு திருப்பி அழைக்கும் கொள்கையைக் கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆப்கானில் இருந்து துருப்புகளை வாபஸ் பெறுவது தொடர்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஆப்கான் யுத்தம் கடந்த 2001 ஒக்டோபரில் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
Friday, June 19, 2020 - 6:00am
உய்குர் முஸ்லிம்கள் விவகாரம்:
சீன அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்க வகைசெய்யும் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
சிறுபான்மை உய்குர் முஸ்லிம்களைப் பெருமளவு சிறையில் அடைப்பது தொடர்பில் சீன அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பது இனி எளிதாகும்.
உய்குர் மனித உரிமைச் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
சிறுபான்மை மக்களைச் சீனா நடத்தும் விதம் குறித்துக் கண்டனம் எழுந்துள்ள சூழலில், உய்குர் மனித உரிமைச் சட்டத்தை அமெரிக்க பாராளுமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
உய்குர்கள் உட்பட பிற சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுவதற்குப் பொறுப்பான சீன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், அவர்களை அடையாளம் காட்டச் சட்டம் வகைசெய்கிறது.
இதற்கிடையே, “உய்குர் மனித உரிமைச் சட்டம்” தொடர்பில் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கவிருப்பதாகச் சீனா மிரட்டியுள்ளது.
உய்குர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறப்படுவதை சீனா மறுத்துவருகிறது.
தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு அமெரிக்காவிடம் அது வலியுறுத்தியது. நன்றி தினகரன்
Friday, June 19, 2020 - 6:00am
சீனா தரவுகளை திருடும் என்ற அச்சத்தில் ஹொங்கொங் மற்றும் அமெரிக்காவை இணைக்கும் நீருக்கு அடியிலான தரவுக் கேபிள் திட்டத்தை அமெரிக்க அரசு நிராகரித்துள்ளது.
இணையதள வேகம் மற்றும் திறனை அதிகரிக்கும் வகையில் கூகுள் மற்றும் பேஸ்புக் ஆதரவுடனேயே பசிபிக் இலகு கேபிள் வலையமைப்பு என்ற இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எனினும் ‘தொலைத்தொடர்பு குழு’ என்று அழைக்கப்படும் அமெரிக்க அரசின் குழு ஒன்று இந்தத் திட்டத்தை நிராகரிக்க பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவு ஏற்கனவே வர்த்தகப் போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான மற்றொரு பதற்றத்திற்கு வித்திட்டுள்ளது.
இவ்வாறான கேபிள் திட்டம் ஒன்றை தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி நிராகரித்திருப்பது இது முதல் முறையாகும். நன்றி தினகரன்
Friday, June 19, 2020 - 6:00am
வன்முறை, பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக கடந்த ஆண்டு முடிவில் உலகெங்கும் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 80 மில்லியனை நெருங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
வரும் ஜூன் 20 ஆம் திகதி அனுசரிக்கப்படவிருக்கும் உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு, அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2019 இல் மேலும் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதோடு இது கடந்த தசாப்தத்தின் மொத்த எண்ணிக்கையை விடவும் இரட்டிப்பாகும்.
மொத்தம் 79.5 மில்லியன் பேர் உலகெங்கும் இடம்பெயர்ந்திருப்பதோடு, 26 மில்லியன் பேர் அகதிகளாகவும், 4.2 மில்லியன் பேர் புகலிடக் கோரிக்கையாளர்களாகவும், 45.7 மில்லியன் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகெங்கும் இடம்பெயர்ந்தவர்களில் ஆறில் ஒரு பங்கினர் யுத்தம் நிலவும் யெமன் மற்றும் சிரியா அதேபோன்று கொங்கோ நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். நன்றி தினகரன்
நேபாளத்தின் புதிய வரைபடம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
Friday, June 19, 2020 - 6:00am
இந்தியா கடுமையாக எதிர்க்கும்:
இந்தியாவின் கண்டனத்தை மீறி, சர்ச்சைக்குரிய புதிய வரைபட சட்டத்திருத்த சட்டமூலம் நேபாள பாராளுமன்ற கீழவையை தொடர்ந்து மேலவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய உரிமை கொண்டாடும் உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள லிபுலேக், கலபானி, லிம்பியாதுரா பகுதிகளை தங்கள் நாட்டுக்கு சொந்தமான பகுதியாக நேபாளம் கூறி வருகிறது.
இப்பகுதிகளை உள்ளடக்கிய வரைபட புதிய சட்டமூலம் தயாரித்து, நேபாள பாராளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையில் அந்நாட்டு அரசு அண்மையில் கொண்டு வந்து நிறைவேற்றியது.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இருப்பினும் நேபாள பாராளுமன்ற மேலவைக்கு அந்த சட்டமூலம் அனுப்பப்பட்டது. அந்த சபையிலும் சட்டமூலம் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபையில் இருந்த 57 எம்.பிக்களும் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். யாரும் சட்டமூலத்தை எதிர்க்கவோ அல்லது சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்கவோ இல்லை.
இந்த செயற்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா எல்லையை ஒட்டி இருக்கும் லிபுலெக்கில் 80 கி.மீ பாதை ஒன்றை இந்தியா கடந்த மாதம் ஆரம்பித்து வைத்த நிலையிலேயே முறுகல் தீவிரம் அடைந்தது. இந்தப் பாதை தமது நாட்டின் ஊடாகச் செல்வதாக நோபளம் எதிர்ப்பு வெளியிட்டது. இந்தப் பாதை நாட்டின் இறைமையை மீறுவதாக நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் கியாவாலி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேபாளத்தின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால் அது சட்டமாக அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
ஜோர்தான் அமைச்சர் பலஸ்தீனம் விரைவு
Friday, June 19, 2020 - 6:00am
இஸ்ரேலுடனான பதற்றம்:
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதிகளை இஸ்ரேல் தனது ஆட்புலத்திற்குள் இணைக்கும் பதற்றத்திற்கு மத்தியில் ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் ஐமன் சபாதி, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்துள்ளார்.
மேற்குக் கரையின் ரமல்லா நகரை நேற்று ஹெலிகொப்டரில் சென்றடைந்த சபாதி, பலஸ்தீன அதிகாரசபையின் தலைமையகத்தில் அப்பாஸை சந்தித்துள்ளார்.
மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்கள், அதேபோன்று மூலோபாயம் கொண்ட ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் பற்றி இந்தப் பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்பட்டது. அமெரிக்கா கடந்த ஜனவரியில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அமைதி முயற்சியிலும் இஸ்ரேலின் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டம் வரும் ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் ஜோர்தான் இஸ்ரேலுடனான உறவை மீளாய்வு செய்யப்போவதாக எச்சரித்துள்ளது.
ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய அரபு நாடுகள் மாத்திரமே இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது. நன்றி தினகரன்
தெற்கின் தூதர்களை வடகொரியா நிராகரிப்பு
Thursday, June 18, 2020 - 6:00am
வட கொரியாவுக்கு சிறப்பு தூதர்களை அனுப்ப தென் கொரியா முன்வந்ததை வட கொரியா நிராகரித்துள்ளது.
இரு கொரியாக்களுக்கும் இடையிலான அமைதி உடன்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர அது தீர்மானித்துள்ளது. அதை முன்னிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையாக, இராணுவமற்ற பகுதிக்குள் மீண்டும் தனது துருப்புகளை அனுப்பப்போவதாக வட கொரியா சூளுரைத்தது.
இரு கொரியாக்களின் கூட்டுத் தொடர்பு அலுவலகத்தை வட கொரியா கடந்த செவ்வாய்க்கிழமை வெடிவைத்துத் தகர்த்தது.
இரு நாடுகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்ததற்கு ஏற்ப 2018ஆம் ஆண்டு இராணுவமற்ற எல்லைப் பகுதியில் தொடர்பு அலுவலகம் உருவாக்கப்பட்டது.
வட கொரியாவிலிருந்து தென் கொரியாவுக்குத் தப்பிச் சென்றவர்கள், வட கொரியா மீது அவதூறு பரப்பும் நோக்கில் துண்டுப் பிரசுரங்களை அண்மையில் அனுப்பினர். அதையடுத்தே இரு கொரியாக்களுக்கும் இடையே பதற்றம் மூண்டது. நன்றி தினகரன்
இரு கொரியாக்களுக்கும் இடையிலான அமைதி உடன்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர அது தீர்மானித்துள்ளது. அதை முன்னிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையாக, இராணுவமற்ற பகுதிக்குள் மீண்டும் தனது துருப்புகளை அனுப்பப்போவதாக வட கொரியா சூளுரைத்தது.
இரு கொரியாக்களின் கூட்டுத் தொடர்பு அலுவலகத்தை வட கொரியா கடந்த செவ்வாய்க்கிழமை வெடிவைத்துத் தகர்த்தது.
வட கொரியாவிலிருந்து தென் கொரியாவுக்குத் தப்பிச் சென்றவர்கள், வட கொரியா மீது அவதூறு பரப்பும் நோக்கில் துண்டுப் பிரசுரங்களை அண்மையில் அனுப்பினர். அதையடுத்தே இரு கொரியாக்களுக்கும் இடையே பதற்றம் மூண்டது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment