பிளேட்டோ என்ற கிரேக்க தத்துவாசிரியர் பற்றி அறிந்திருப்பீர்கள். இவர் சோக்ரடீஸின் மாணவர். அரிஸ்டோட்டலின் குரு.
இரண்டு பெரும் ஆளுமைகளுக்கு இடைப்பட்ட இவரும் ஒரு எழுத்தாளர்தான். தத்துவஞானிதான்.

எழுத்தாளர்களின் குணாதிசயம் எத்தகையது..? என்பதை சமகால முகநூல் எழுத்தாளர்களிலிருந்தும் எடைபோடமுடியும்.
எழுத்தாளர்களிடையே கருத்தொற்றுமையை தோற்றுவிப்பதும் சிரமம் என்பதையும் அறிவீர்கள். இந்த பாரம்பரிய அலகை சிவபெருமான் – நக்கீரர் தொடக்கம், கவிச்சக்கரவர்த்தி கம்பன் – ஒட்டக்கூத்தர் முதலாக மட்டுமல்ல, இன்றைய நவீன உலகின் எழுத்தாளர்கள் வரையில் பார்க்கமுடியும்.
ஷாம்பூ கண்டுபிடிக்கப்படாத சீயக்காய்பொடி காலத்திற்கு முற்பட்ட காலத்தில், பெண்களின் கூந்தலின் மணம் செயற்கையா…? இயற்கையா..? என்ற பட்டிமன்றத்தில் மோதுண்டபோது, சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத்திறந்து நக்கீரனை எரித்தார். அதே நெற்றிக்கண்ணினால்தான் ஆறுமுகனையும் படைத்தார். அவரது பிள்ளைகள் விநாயகருக்கும் ஆறுமுகனுக்கும் நெற்றிக்கண்ணிருந்திருந்தால், அவர்களுக்கும் பிள்ளைப்பாக்கியம் கிடைத்திருக்குமா…? ஆனால், அவர்களும் போயும் போயும் ஒரு மாம்பழத்திற்காகத்தான் சண்டை பிடித்தார்கள்!
ஏ.பி. நாகராஜனின் திருவிளையாடல் – கந்தன் கருணை திரைப்படங்களையும் எனது பாட்டி தையலம்மாவுடன் ( அம்மாவின் தயார் ) சென்று பார்த்தபோதுதான் இதுபற்றி ஒருநாள் அவரிடம் துடுக்குத்தனமாக கேட்டேன். பாட்டி முருகபக்தை. கதிர்காமம் சென்று மொட்டை அடித்து காவடி எடுத்து ஆடியவர். எனது கேள்விக்குப் பாட்டி, , “ எம்பெருமான் சிவனால், ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் “ என்றார்.
சிறுவயதில் அயலில் வாழ்ந்த சிறுவர்களுடன் சேர்ந்து நான் குழப்படிகள் செய்தபோது, பாட்டி - நான் ஏதோ அவருடைய நல்ல உத்தமமான பேரன் என்ற நினைப்பில், அந்த நண்பர்களை துஷ்டர்களாக கருதி, “ டேய் தம்பி துஷ்டனைக்கண்டால் தூர விலகு “ என்று புத்திமதியும் சொல்வார்கள்.
எனினும் நான் பாட்டியின் அந்தப்புத்திமதிகளை கேட்டதில்லை. ஆனால், பாட்டிதான் எனது வாழ்வின் ஆதர்சம். எனது பாட்டி சொன்ன கதைகள் நூல் அதற்குத்தக்க சான்று.
எழுத்தாளனாகவும் ஊடகவியலாளனாகவும் வளர்ந்த பின்னர் பத்திரிகை மற்றும் இலக்கிய உலகில் கசப்பான அனுபவங்களைச் சந்தித்த சந்தர்ப்பங்களில், “ எழுத்தாளன் என்றால் எட்டத்தில் நில் “ என்றும் மனதுக்குள் எச்சரித்துக்கொண்டதுண்டு.

அத்தகைய எழுத்துக்களில் ஒரு சொல் வாழும் ஒரு சொல் கொல்லும் என்பார்கள். நெப்போலியன் கூட, போர்வீரனின் வாளை விட எழுத்தாளனின் பேனா கூர்மையானது என்றுதான் சொல்லியிருக்கிறார்.

எமது இலங்கை – இந்தியா உட்பட உலகெங்கும் ஊடகவியலாளர்கள் அரசியல் அதிகாரத்தினால் அச்சுறுத்தப்படுவதும், நாடு கடத்தப்படுவதும், கொலைசெய்யப்படுவதும், காணாமலாக்கப்படுவதும் இன்றளவும் நடந்துவருகிறது.
அண்மைக்காலத்தில் கொழும்பில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் சுமந்திரன் அவர்களின் கருத்து, ஒரு சிங்கள தொலைக்காட்சி ஊடகத்தில் வெளியாகியதையடுத்து, எதிர்தரப்பு அவரை கழுவிக்கழுவி ஊற்றியதையும், வடக்கிலும் தமிழகத்திலும் அவருடைய படத்திற்கும் உருவபொம்மைக்கும் செருப்பு மாலை அணிவித்தும்,செருப்பால் அடித்தும் படத்தையும் உருவப்பொம்மையையும் தீயிட்டு எரித்ததையும் ஊடகங்களில் அவதானித்திருப்பீர்கள்.
அவர் ஒருசமயம் மெல்பனுக்கு வருகைதந்து ஒரு கூட்டத்தில் பேசியபோது, இலங்கைத் தமிழ் மக்களின் நீண்ட கால போராட்டத்தை சில வரிகளில் சுருக்கமாகச்சொன்னார்.
அந்த வைரவரிகள்:
“ நீடித்த தமிழர் பிரச்சினைகளுக்காக ஒரு காலத்தில் அகிம்சைப்போராட்டம் நடத்தினோம்.
பின்னர், இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் நடந்தது. இரண்டிலும் தோல்வியை மட்டுமல்ல அனுபவங்களையும் பெற்றோம்.
தற்போது நாம் இராஜதந்திரப்போரில் ஈடுபட்டுள்ளோம். “
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது!
1970 இற்குப்பின்னர் படிப்படியாக துளிர்த்த ஆயுதப்போராட்டத்தில், ஆயுதம் தூக்கிய தமிழ் இளைஞர்களையும், அவர்கள் சார்ந்து நின்ற விடுதலை இயக்கங்களையும் நிரந்தரமாக மௌனிக்கச்செய்துவிட்டு, முழு ஈழப்போராட்டத்தையும் தமது கையில் எடுத்தவர்கள் விடுதலைப்புலிகள்.
சுருக்கமாகச்சொன்னால், ஈழவிடுதலை என்பது அவர்களை மாத்திரமே சார்ந்திருக்கவேண்டும் என்ற நிலைக்கு ஈழத்தமிழ்ச்சமூகம் மட்டுமல்ல, முன்னர் புலிகளினால் வேட்டையாடப்பட்ட விடுதலை இயக்கங்களின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் அழுத்தத்தினால், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கினார்கள். தற்போது இந்த அமைப்பின் தோற்றமும் வரலாறும் எழுதப்படுகிறது.
இன்று, இந்த கூட்டமைப்பின் பிரதிநிதியும் பேச்சாளருமான சுமந்திரன் அவர்கள்தான், மேற்குறிப்பிட்ட சமகால இராஜதந்திரப்போர் பற்றி அன்று மெல்பனில் திருவாய் மலர்ந்தருளினார்.
விடுதலைப்புலிகள், வெறுமனே ஆயுதப்போரில் மாத்திரம் ஈடுபடவில்லை. காலத்துக்குக் காலம் இராஜ தந்திரப்போர்களிலும் ஈடுபட்டவர்கள்தான். அந்த வரலாற்றை திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து, ராஜீவ் – ஜே.ஆர், இந்திய – இலங்கை ஒப்பந்தம் மற்றும் பிரேமதாச - அன்டன் பாலசிங்கம் மற்றும் நோர்வேயின் மத்தியஸ்தம் வரையில் அவ்வப்போது நடத்திய சமாதானப்பேச்சுவார்த்தைகளிலும் நாம் காணமுடியும்.

அவதந்திரம் தனக்கந்தரம் என்று எமது முன்னோர்கள் சொன்ன வார்த்தைகள் வெற்றுப்பேச்சு அல்ல என்பதையும் அத்தருணங்களில் உணர்ந்திருக்கின்றேன்.
ஆயுதப்போராட்டம் குறித்த தனது கருத்து சிங்கள – ஆங்கில – தமிழ் மொழிகளில் திரிக்கப்பட்டுவிட்டதாக சுமந்திரன் மீண்டும் மீண்டும் உரத்துச்சொல்லி, தனது கருத்தின் பக்கத்திலிருந்த நியாயங்களை தொடர்ந்து பேசவேண்டியதாகியது.
இந்த ஊடகவியலாளர்கள் எப்பொழுதும் மக்களிடம் பரபரப்பினை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை எழுதுவதும் வழக்கம். தமது பத்திரிகை நன்கு விலைபோகவேண்டும் என்பதும் அவர்களது உள்நோக்கம்.

அக்காலப்பகுதியில் அந்தப்பிரதேசத்தில் இயங்கிய நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையம், அரச மருத்துவமனை மற்றும் பொதுக்கூட்டங்கள், சமயம், சமூகம் சார்ந்த பொது நிகழ்ச்சிகளுக்கும் சென்று செய்திகள் சேகரித்து எழுதி பத்திரிகைக்கு அனுப்புவேன்.
அவ்வேளையில் எங்கள் ஊர் இந்து இளைஞர் மன்றத்தில் தமிழ்நாட்டிலிருந்து சமயத்துறவியும் சிறந்த ஆன்மீகப்பேச்சாளருமான சாயிமாதா சிவபிருந்தாதேவி அவர்கள் உரையாற்ற வந்திருந்தார்.
இவர்தான் தமிழ்நாட்டின் முதலாவது பெண் மடாதிபதி. புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் மடாதிபதியாக இருந்த பெண்துறவியாவார். பல ஆன்மீக நூல்களும் எழுதியிருப்பவர்.
எங்கள் ஊர் மன்றம் தமிழ்நாட்டிலிருந்து கிருபானந்தவாரியார், கி.வா. ஜகந்நாதன், எழுத்தாளர்கள் கு. அழகிரிசாமி, தொ.மு.சி. ரகுநாதன், பாரதியாரின் பேத்தி விஜயபாரதி உட்பட பலரையும் அழைத்துப்பேசவைத்துள்ளது.
சாயிமாதா சிவபிருந்தாதேவியின் உரையைக்கேட்டு அதனை பத்திரிகையில் எழுதுவதற்காக நானும் அன்றைய தினம் சென்றிருந்தேன்.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சொன்ன வரிகளை தலைப்பாகக்கொண்டு விலாவாரியாகப்பேசினார்.
அக்காலப்பகுதியில்தான் ஶ்ரீமா – என்.எம். பெரேரா- பீட்டர் கெனமன் கூட்டரசாங்கம் உருவாகியிருந்ததுடன், புதிய அரசியலமைப்பும் முன்மொழியப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து தமிழ்த்தலைவர்கள் போராடி கைதாகியதையடுத்து அவர்களுக்காக அதுவரையில் எதிரும் புதிருமாக இருந்த தந்தை செல்வா – ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆகியோர் ஒன்றிணைந்து ட்ரயல் அட்பார் நீதிவிசாரணையில் தோன்றி அந்த வழக்கில் வென்றனர்.
இவர்கள் இருவரும் சிரேஷ்ட வழக்கறிஞர் மு. திருச்செல்வமும் ஒன்றாக இணைந்து நீதிமன்றப்படிகளில் இறங்கி வந்தபோது எங்கள் வீரகேசரி அலுவலக படப்பிடிப்பாளர் ரொட்றிகோ எடுத்த படத்தை வீரகேசரியில் பார்த்துவிட்ட மெய்கண்டான் ஸ்தாபனத்தினர், அதனை வாங்கி கலண்டர் அச்சடித்து விற்று காசாக்கியுமிருந்தனர்.
எமது படப்பிடிப்பாளருக்கு ரோயல்டி கிடைத்ததா…? என்பதை அறியேன் !

பத்திரிகையாளனாகிய எனக்கு மெல்லுவதற்கு ஒரு பிடி அவல் கிடைத்துவிட்டது. அவர் பேசி முடிந்ததும் சிலர் அவரிடம் ஓட்டோகிராஃப் வாங்கினார்கள்.
அந்த அமளிமுடிந்ததும் நான் அவரிடம் சென்றேன்.

“ இல்லை … இல்லை…. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை... நீங்கள் எந்தப்பத்திரிகை …? “ எனக்கேட்டார்.
எனது கேள்வி துடுக்குத்தனமானதுதான். கிண்டிக்களியெடுப்பவர்களின் வர்க்கத்தை சேர்ந்தவன் அல்லவா..? அந்த பெண்துறவியின் முகம் கலவரமடைந்துவிட்டது.
தென்னாட்டில்தான் அனைத்து நாயன்மார்களும் தோன்றியிருக்கிறார்கள். தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, திருவிசைப்பா , திருப்புகழ் என்பன தோன்றின. சிவனை வழிபட்டு முக்தி எய்திய பலர் தோன்றியது தென்னாடுதான்.. அந்த அர்த்தத்தில்தான் சொன்னேன் “ என்று விளக்கம் கூறத்தொடங்கிவிட்டார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை கொழும்புக்கு அழைத்துச்செல்லவேண்டும். அதற்கு முன்னர் மன்ற மண்டபத்திற்கு முன்பாகவிருந்த மன்றத்தின் ஸ்தாபகர் ( அமரர் ) எஸ்.கே. விஜயரத்தினம் அவர்களின் இல்லத்தில் அவருக்காக ஒழுங்குசெய்யப்பட்ட இராப்போசன விருந்திலும் அந்த அம்மையார் கலந்துகொள்ளவேண்டும்.
நான் செய்திக்குறிப்புடன் வீடு திரும்பிவிட்டேன்.
சாயிமாதா சிவபிருந்தாதேவி, அந்த இல்லத்திற்குச்சென்ற பின்பும் பதட்டத்துடன் இருந்தார். விருந்தை உண்ண மறுத்தார்.
மன்றத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், திருமதி விஜயரத்தினம் அம்மையார் உட்பட பலருக்கும் அவரது பதட்டத்திற்கான காரணம் விளங்கியது.
“ சாயிபாபா மாதிரி தலைமுடிவளர்த்த ஒரு பத்திரிகையாளர் வந்து கேட்ட கேள்வியினால் பதறிவிட்டேன். நான் இந்தியா திரும்பவேண்டும். எனது உரை திரிக்கப்பட்டு, பத்திரிகையில் வெளியாகிவிட்டால், பெரும் பிரச்சினையாகிவிடும். உடனடியாக அந்த ஆளை இங்கே அழைத்துவாருங்கள். அதன்பிறகுதான் சாப்பிடுவேன் “ என்று சொல்லிக்கொண்டு அந்த இல்லத்தின் மூலையில் சோகத்துடன் அமர்ந்துவிட்டார்.
அக்காலத்தில் எனது தலைமுடி அடர்த்தியானது. நான் நடக்கும்போது எழுந்து மடிந்து பறக்கும். சாயிபாபா முடிதான். எனக்கு அப்போது ஊரில் சடையப்பவள்ளல் என்றும் ஒரு பட்டப்பெயர் இருந்தது.
எனது தாய் மாமனார் சுப்பையாவும் மன்றத்தின் உறுப்பினர். அவருக்குமட்டுமல்ல, அங்கிருந்த அனைவருக்கும் என்னையும் எனது பத்திரிகைப்பணியும் நன்றாகத் தெரியும்.
மாமா, தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு விரைந்து வந்தார்.
“ என்னப்பா… நீ… அந்த அம்மையாரிடம் அப்படி என்ன கேள்வி கேட்டாய். அந்த அம்மையார் மிகவும் பதட்டத்துடன் இருக்கிறார்கள். என்னுடன் வா… “ எனச்சொல்லி அழைத்துச்சென்றார்.
நானும் தலைமுடி காற்றில் பறக்க அவர்கள் அனைவரின் முன்னிலையில் ஒரு குற்றவாளியைப்போன்று தோன்றினேன்.
சாயிமாதா சிவபிருந்தாதேவி, என்னை அமரச்செய்துவிட்டு, எழுந்து முன்பின்னும் நடந்தவாறு, “ தம்பி, எனது விளக்கத்தை மீண்டும் கேள். இப்போது நான் சொல்லப்போவதை மாத்திரம் எழுது. அதுதான் உனது பத்திரிகையில் வரல்வேண்டும் “ என்று சொல்லிவிட்டு, தென்னாட்டின் மகிமைக்கும் அது பிரிந்து செல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாயன்மாரும் திருப்பதிகங்களும் தோன்றி, சிவனை போற்றிய நாடு தென்னாடு. அதுபற்றித்தான் மாணிக்கவாசகர் சொன்னார் என நான் பேசியதாக எழுது “ என்று விளக்கமளித்தார்.
அவர் சொல்லச்சொல்ல எழுதினேன்.
பின்னர் என்னையும் அருகே அமரச்செய்து அன்றைய இராப்போசனவிருந்தில் கலந்துகொண்டு, சிரித்த முகத்துடன் விடைபெற்றார்.
ஊடகத்துறையில் பிரவேசித்த அக்காலப்பகுதியில் நடந்த அச்சம்பவத்தை கடந்த நாற்பத்தியெட்டு வருடகாலமாக நினைத்துக்கொண்டிருக்கின்றேன்.
அதுபோல் மதியாபரணம் சுமந்திரனும் அண்மைக்காலமாக அவர் மீது வைக்கப்பட்டுவரும் விமர்சனத்தை கடந்து செல்ல நெடுநாட்களாகலாம்.
இனிஎன்ன சொல்கிறீர்கள்..?
அறிஞர் பிளேட்டோ அன்று சொன்னது சரிதானா…?
----0---
No comments:
Post a Comment